என் மலர்
நீங்கள் தேடியது "பக்தர் பலி"
- கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
- உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக , 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று காத்திருந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இந்நிலையில், "பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு" என இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
சென்றிருந்த போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்ட போது, "திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்" என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப்படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு!
திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.
திண்டுக்கல்:
விருதுநகர் அருகே உள்ள சத்திரப்பட்டி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 45). இவர் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.
நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிதறி ஓடினர். ரெங்கராஜன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெங்கராஜன் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தைப்பூசத்திருவிழா நெருங்கி வரும் நிலையில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் கொட்டிக் கிடப்பதாலும் பக்தர்கள் வாகனங்கள் செல்லும் சாலையிலேயே செல்கின்றனர்.
இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பக்தர்கள் ஆபத்தான முறையில் பாத யாத்திரை செல்கின்றனர். போலீசார் இது போன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிய நாராயணனை மீட்டனர்.
- 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாராயணனை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை காண தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் இன்று காலை புதுச்சேரி மாநிலம் முருக்கம்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்த நாராயணன்(45), மலை அடிவாரத்தில் உள்ள முடி காணிக்கை அளிக்கும் இடத்தில், முடி காணிக்கை அளித்துவிட்டு, அங்குள்ள குளத்தில் குளிக்க இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்த பக்தர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கிய நாராயணனை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் பலியான நாராயணன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர்.
- மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது.
வடவள்ளி:
கோவை கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தேவராஜ்(வயது49).
இவர் அந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலாஜி தேவராஜ் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அப்போது தென் கயிலாய பக்தி பேரவை அமைப்பினர் மலைஏறுவதற்கு சிறப்பு அனுமதி பெற்றிருந்ததை அறிந்தார்.
உடனடியாக அவர்களுடன் அந்த குழுவில் இணைந்து கொண்டார். நேற்று காலை அந்த குழுவினருடன், பாலாஜி தேவராஜூம் மலையேறினார்.
3-வது மலையில் ஏறிகொண்டிருந்த போது பாலாஜி தனக்கு நெஞ்சுவலிப்பதாக தன்னுடன் வந்தவர்களிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் மயங்கியும் விட்டார்.
இதனால் அதிர்ச்சியான அவருடன் வந்தவர்கள், பாலாஜி தேவராஜை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பாலாஜி தேவராஜை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாலாஜி தேவராஜ் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர்:
கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 47 பேர் உள்பட 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டனர். இவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.
அதன்படி கர்நாடக பக்தர்கள் குழுவினர் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்று இரவு ராமேசுவரத்திற்கு பஸ்சில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புல்லந்தை நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது கர்நாடக பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பெல்லாரியை சேர்ந்த கண்ணப்பா என்பவரின் மகன் சந்தீப்(வயது25) என்பவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 ஐயப்ப பக்தர்களை அந்தப்பகுதியினர் மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் புதுவை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே தாயுமானவர் தெரு உள்ளது. இந்த தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் மின்கம்பம் பழுதாகி நின்றது.
இந்த மின் கம்பம் உள்ள இடத்தில் புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. ஆனால் பழுதான மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இந்த கோவிலையொட்டி சிறிய விநாயகர் கோவிலும், வள்ளலார் மடமும் உள்ளது. இந்த மடத்துக்கு வள்ளலார் பக்தர்கள் இரவு நேரம் தங்குவார்கள். அதன்படி விழுப்புரம் கல்லூரி நகரை சேர்ந்த மணி (வயது 55), கடலூர் முதுநகரை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் சிலர் அங்கு தூங்கினர்.
இன்று காலை திடீரென மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் மணி, ராமலிங்கம் ஆகியோர் இடிபாடுக்குள் சிக்கினர். அவர்கள் உயிருக்கு போராடினார்கள். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு ஆரோக்கியதாஸ், போலீஸ்காரர் கலைக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த ராமலிங்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தேனி அருகே போடி டி.வி.கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் புளுகுசாமி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வக் குமார், தர்மராஜ், மாரியம்மாள் உள்பட சிலருடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு மீண்டும் ஆட்டோவில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். தோப்புப்பட்டி அருகே வந்த போது ஆட்டோவில் இருந்து புளுகுசாமி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 38). பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று வசூல் செய்ய சின்னமனூர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த கார் பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த செல்வன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சின்னமனூர் போலீசார் கார் டிரைவர் புலிக்குத்தியைச் சேர்ந்த மணிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சாத்தூர்:
சிவகாசி நாரணாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 42) கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மகனுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக குழுவினருடன் நேற்று புறப்பட்டார். நள்ளிரவு சாத்தூர் ஓடைப்பட்டி வந்த பாதயாத்திரை குழுவினர் அங்குள்ள விநாயகர் கோவிலில் தங்கினர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
சுப்புராஜ் தனது மகனுடன் நடந்து சென்றனர். சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டியபட்டி விலக்கில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டெம்போ வேன் எதிர் பாராத விதமாக சுப்புராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புராஜ் ரத்த வெள்ளத்தில் மகன் கண் முன்பே பரிதாபமாக இறந்தார். சுப்புராஜ் உடலை பார்த்து மகன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
விபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தி சென்ற வேன் டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பையா என்பவர் கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.