search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டி"

    • கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.
    • அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

    அரியலூர், அக்.27-

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். மனைவி லலிதா (46).

    கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் ஒரு வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை கொடுத்துள் ளார்.

    வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையி லிருந்து லலிதாவுக்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி காப்பீடு செய்து கொடுத்திருந்தனர்.

    கடன் தவணையை முறை யாக செலுத்தி வந்த லலிதா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி உயிரிழந்தார்.

    கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிக ளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.

    ஆனால் அந்த இன்சூ ரன்ஸ் நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்த வில்லை.

    ஆனால் வாங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு கேட்டு தொடர்ந்து கட்டாயப் படுத்தியதால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணை தொகையை செலுத்தி விட்டனர்.

    இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரிய லூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தமிழ் செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    இதில் வங்கியும், காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.

    சட்டவிரோதமாக பெற்ற 11 மாத தவணை தொகை ரூ.1.35 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

    • கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.
    • முதல் 1000 யூனிட் வரை சலுகை வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஏற்ற, இறக்கத்துடன் கூடிய சந்தை நிலவரம், மூலப்பொருட்களான பஞ்சு, நூல் ரகங்கள் விலையில் தினமும் ஏற்படும் மாற்றங்கள், உரிய ஒப்பந்தக்கூலி கிடைக்காமை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது விசைத்தறி தொழில்.

    கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டது. முதல் 1000 யூனிட் வரை சலுகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசைத்தறியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விசைத்தறிகளை இயக்கினர்.

    கடந்த 9 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பில்கள் வந்துள்ளன.அதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துடன் அபராதத்தொகை மற்றும் வட்டியும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த தயாராக உள்ளதாகவும், நிலுவைத் தொகையை கட்ட தவணை வேண்டும்.வட்டியை ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 6 தவணைகளில் நிலுவைத்தொகையை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    வட்டி குறைப்பு குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், குறைக்கப்பட்ட மின் கட்டண அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். ஆனால், அதுகுறித்தும் வட்டியை ரத்து செய்வது குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதனால் ஒவ்வொரு விசைத்தறியாளர்களுக்கும் மின் கட்டண தொகை சுமையாக மாறியுள்ளது.மின் துறை அமைச்சர், மின் வாரிய சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. என்ன செய்வது என புரியவில்லை என்றனர்.

    • கூடுதல் வட்டிகேட்டு பெண் மீது தாக்குதல் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேனைத்தலைவர் திருமண மண்டபம் தெருவை சேர்ந்தவர் சித்தாயி (வயது 45), இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சித்தாயியிடம் இசக்கியம்மாள் மேலும் வட்டி கேட்டுள்ளார். ஆனால் சித்தாயி தரவில்லை. இந்த நிலையில் இசக்கியம்மாள் கூடுதல் வட்டி கேட்டு சித்தாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் சித்தாயி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் இல்லை.
    • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது.

    புதுடெல்லி

    சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது.

    இந்தநிலையில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மாற்றி அமைத்தது. அதன்படி, வட்டி விகிதம் 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு, 123 மாதங்களில் முதிர்வடையும்வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. அது, 120 மாதங்களில் முதிர்வடையும்வகையில், 7.2 சதவீத வட்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 7.1 சதவீதம் ஆகிறது. தேசிய சிறுசேமிப்பு சான்றிதழ் வட்டி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்து 7 சதவீதம் ஆகிறது.

    அஞ்சலகங்களில் ஓராண்டு டெபாசிட் திட்ட வட்டி 6.6 சதவீதமாகவும், 2 வருட டெபா சிட் வட்டி 6.8 சதவீதமாகவும், 3 ஆண்டு டெபாசிட் வட்டி 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட் வட்டி 7 சதவீதமாக வும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வட்டி, 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வருமானவரி சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயத்தில், பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது, 7.6 சதவீதமாக நீடிக்கும். அதுபோல், பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் 7.1 சதவீதமாக நீடிக்கும்.

    வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.

    தொடர்ந்து 2-வது காலாண்டாக சிறுசேமிப்பு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.

    பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 தடவை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி உள்ளன.

    அந்த வரிசையில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுய உதவிக்குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்புகொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக்கடன்கள் பெற்று பயனடையலாம்.

    கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

    சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    ×