என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து அமைப்புகள்"

    • ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி நடத்தினர்.
    • பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமியைக் கொண்டாடும் போது, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர், காவி கொடிகளை ஏந்தியவாறு மசூதியின் மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.

    ராமநாமியை முன்னிட்டு காவிக்கொடிகளுடன் அங்கு பைக் பேரணி சென்ற இந்துத்துவாவினர் அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்காவில் கபளீகரம் செய்துள்ளனர்.

    சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், இந்துத்துவாவினர், சையத் சலார் காஜி தர்காவில் ஏறி காவி கொடிகளை அசைப்பதும், பின்னணியில் உரத்த இசைக்கு மத்தியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுவதும் இடம்பெற்றுள்ளன.

    முன்னதாக கடந்த மார்ச் 26 அன்று மகாராஷ்டிராவின் ரஹுரி மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் நுழைந்து மேலே ஏறி பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றிய காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
    • அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

    இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.
    • பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் பின்னலாடை, பஞ்சாலை, விசைத்தறி, கிரைண்டர் உற்பத்தி, கட்டட கட்டுமானப்பணி, சென்ட்ரிங் மற்றும் டைல்ஸ், கைத்தறி, நுால்தயாரிப்பு, தங்கநகை தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதில் வடமாநிலத்தவர்களுடன், வங்கதேசத்தவர்களும் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்கின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டையோ, பாஸ்போர்ட், விசா என்று எந்த ஆவணங்களும் இல்லை. இங்குள்ள பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர். அதோடு துப்பாக்கி கலாசாரம், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கண்காணிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, அனுமன்சேனா, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.  

    • செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், சார்மினார் கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா?
    • மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

    மசூதியில் கோவில் உள்ளதாக வழக்குப்போடுவது வட மாநிலங்களில் டிரண்ட் ஆகி வரும் நிலையில் செங்கோட்டை, தாஜ் மகால், சார்மினாரையும் இடிப்பீர்களா என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

    சமீபத்தில் உத்தரப் பிரதேச சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்குள் கோவில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய அதிகாரிகளை மக்கள் எதிர்த்ததால் கலவரம் ஏற்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் பகுதியில் உள்ள மசூதியிலும் ஆய்வு செய்ய சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.

    இந்த சூழலில் மசூதிகளை சர்வே செய்யும் பணிகளை விமர்சித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் அரசியலமைப்பைக் காப்போம் பேரணியில் பேசிய கார்கே பாஜக 1991 வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினார்.

    முஸ்லிம்களால் கட்டப்பட்ட செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், ஐதராபாத் சார்மினார் போன்ற கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.

     

    2022 ஆம் ஆண்டில், ராம் ஜென்மபூமி இயக்கத்திற்குப் பிறகு சங்கம் எந்த ஒரு போராட்டத்தையும் தொடங்க விரும்பவில்லை என்றும்  மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

    ஆனால் அவர்கள் அதன்படி நடக்கவில்லை. ஆர்எஸ்எஸ் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக ஆர்எஸ்எஸ் சொல்வதை ஏன் கேட்கவில்லை?. 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட  மத வழிபாட்டுத் தலங்களின் தற்போதைய நிலையைப் பராமரிக்க 1991ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நீங்கள் அதையும் பின்பற்றவில்லை. மாறாக நீங்கள் அவற்றை மீறுகிறீர்கள். வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு  சட்டம் ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த மதத் தலங்களின் தன்மையை மாற்றுவதைத் தடை செய்வதை  வர சுட்டிக்காட்டினார்.

     

    மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை நிராகரிப்பது அல்ல, மாறாக அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதைக்கான கிடைப்பதற்காக இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்துவதே ஆகும், நான் பிறப்பால் இந்து, ஆனால் மதச்சார்பின்மையுடன் மத பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புகிறேன் என்று தெரிவித்தார். 

    • ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
    • இந்தக் கூட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஜெகதீசன், இந்து முன்னணி காடேஸ்வர் சுப்பிரமணி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்து அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்தக் கூட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    • பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
    • பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசிய ஒரு கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

    'பொது சிவில் சட்டம் அரசியலமைப்பு அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்றிய சேகர், இது ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தானில் (இந்தியா) வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

    இதுதான் சட்டம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு இப்படி சொல்கிறீர்களே என்று நீங்கள் கேட்க முடியாது. உண்மையில், பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது. குடும்பம் அல்லது சமூகத்தின் பின்னணியில் பாருங்கள், பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

     

    மேலும் மதத்தை குறிப்பிடாமல் பல மனைவிகள், ஹலாலா மற்றும் முத்தலாக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நடைமுறையை விமர்சித்த அவர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    நீதிபதியின் பெரும்பான்மையினர் கருத்துக்குப் பரவலாகக் கண்டனம் எழுந்த நிலையில், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்ட முடியாது என விஷ்வ ஹிந்து பரிஷத் [விஹெச்பி]  தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் இதே போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது என்று தெரிவித்தார். இதற்கிடையே உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. 

    • இந்து அமைப்புகளை திரட்டி மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • சென்னை மாநகர் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்து அமைப்புகளை திரட்டி மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக 63 இந்து அமைப்புகளின் கூட்டு அமைப்பான இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டனர்.

    இதற்காக சென்னை மாநகர் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மெரினா நோக்கி திரண்டு வாருங்கள் என்கிற கோஷங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிலையில் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் உள்ள இந்து பரிவார் அலுவலகத்துக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்த மாநில தலைவர் வசந்தகுமாரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த அமைப்பினர் மறியலிலும் ஈடுபட்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடிக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் முருகன், வள்ளி மற்றும் விநாயகர் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. 9-ம் நாள் நடைபெறும் தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுப்பார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடிக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் வடம் பிடித்தால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் குமாரகோவில் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. தேர் திருவிழா நாளில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு தேர் திருவிழா நாளான இன்று (சனிக்கிழமை) குமார கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் காணப்பட்டது. என்ன நடக்குமோ? என பக்தர்கள் அச்சப்பட்டனர்.

    இந்தநிலையில் இன்று காலையில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் முருகன்-வள்ளி ஒரு தேருக்கும் விநாயகர் ஒரு தேருக்கும் எழுந்தருளினர். காலை 8-30 மணிக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அப்போது திடீரென போலீசார் பாதுகாப்பையும் மீறி இந்து அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் உள்பட இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கோஷமிட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தேரோட்ட நாளில் நடைபெற்ற போராட்டத்தால் இன்று குமாரகோவில் பகுதியில் பதட்டமான சூழல் காணப்பட்டது.

    காந்தி படத்தை சுட்டு அவமரியாதை செய்த இந்து அமைப்புகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #Congress

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலத்தில் காந்தியின் உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடியது.

    இந்த சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்புகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #congress

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான அலுவலகத்தை இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #mutharasan #keralagovernmentoffice

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான சுற்றுலா அலுவலகத்தின் மீது நேற்று நள்ளிரவில் இந்துத்துவ அமைப்பினர் கல்வீசி தாக்கி உள்ளனர்.

    இத்தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக தகவல்கள் உள்ளன.

    இத்தாக்குதல் சம்பவத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #mutharasan #keralagovernmentoffice

    சபரிமலையை போர்க்களமாக்க சில இந்து அமைப்புகள் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். #Sabarimala #KeralaCM #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று முழு அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது. போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன.

    இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில்,  சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, இதை நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்தார். மேலும், சபரிமலையை போர்க்களமாக்க சில இந்து அமைப்புகள் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


    இதற்கிடையே அரசாங்கத்தின் நடவடிக்கையை பந்தளம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பிஜிஎஸ் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    “வழிபாடுகளுக்கு இடையூறு செய்வதற்காக யாரையாவது அனுப்ப தினமும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பண்டிகை காலம். இந்த காலத்தில் தினமும் 2 லட்சம் பக்தர்கள் வரை கோவிலுக்கு வருவார்கள். ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கையால் அது குறைந்துள்ளது. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர்’’ என்றார் வர்மா. #Sabarimala #KeralaCM #PinarayiVijayan
    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. #KeralaShutdown #SabarimalaHartal
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



    முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #KeralaShutdown #SabarimalaHartal
    ×