என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி"

    • தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. சாலைகள், தெருக்களில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்துள்ளது.

    காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 66.9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 60.70 செ.மீ. மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், பாளையங்கோட்டையில் 42.0 செ.மீ. மழையும, அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    • கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
    • இதன் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

    திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்தன. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், ஜங்ஷன், ரெயில் நிலையம் சாலை போன்று ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை மழை வெள்ளத்துடன் தாமிரபரணி ஆற்று நீரும் சேர்ந்து மூழ்கடித்தன. இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

    மீட்புப்படையினர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். திருநெல்வேலி புறநகர் பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல் சென்றது.

    இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளத்தின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.

    நேற்று காலை ஆற்றை மூழ்கடித்து சென்ற வெள்ளம் இன்று சுமார் 15 அடி குறைந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்யாவிடில், மாலைக்குள் நீர் வடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பல இடங்கள் தீவு போல் மாறியுள்ளது. அந்த இடங்களில் இருந்து மீட்புப்படையினர் படகு மூலம் மக்களை வெளியேற்றினர். இரவு பகலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    • பொதுவாக எல்லா வெங்கடாஜலபதி கோவிலில்களிலும் மூலவர் பெருமாளாக இருப்பது தான் வழக்கம்.
    • இதற்கு காரணம் இந்த விக்கிரத்தில் சுவாமி உயிரோட்டத்துடன் இருப்பது தான் காரணம் என்கிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் தாமிரபரணி நதியின் தென்கரையில் கரி சூழ்ந்த மங்கலம் என்ற ஊர் உள்ளது.

    முன்னொரு காலத்தில் இந்த கிராமத்தைச் சுற்றிலும் கரும்புத் தோட்டங்கள் இருந்ததாகவும் அதை சாப்பிடுவதற்காக

    எப்பொழுதும் யானைக் கூட்டம் இக்கிராமத்தைச் சுற்றி வந்தபடியால் கரி சூழ்ந்த மங்கலம் என்று பெயர்

    பெற்றதாகவும் சொல்கிறார்கள்.

    தாமிரபரணி கரையில் இருக்கும் இந்த ஊரில் சக்கரத்தாழ்வார் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலின் சிறப்பம்சம் மூலவர் தான்.

    பொதுவாக எல்லா வெங்கடாஜலபதி கோவிலில்களிலும் மூலவர் பெருமாளாக இருப்பது தான் வழக்கம்.

    ஆனால் இவ்வூரில் உற்சவர் அலமேலுமங்கா சமேதமாக வெங்கடாஜலபதி உள்ளார்.

    மூலவராக சக்கரத்தாழ்வார் இருக்கிறார்.

    ஒரே சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும் பின்புறம் நான்கு திருக்கரத்திலும் சக்கரம் ஏந்திய நிலையில் யோக நரசிம்மராகவும் மூலவர் காட்சி அளிக்கிறார்.

    ஆதிகாலத்தில் இக்கோவிலில் கேரள நம்பூதிரிகளின் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டது.

    இக்கோவிலில் மூலஸ்தானத்திற்கு அருகில் செல்லும் பக்தர்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது அந்த வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.

    இதுவும் கேரள பாரம்பரியத்தில் இக்கோவில் பூஜிக்கப்பட்டதற்கு சான்றாக அமைகிறது.

    மூலஸ்தான விக்கிரகத்திற்கு மாதத்திற்கு பத்து நாட்கள் வரை எண்ணெய் சாத்தி அபிஷேகம் நடைபெறுகிறது.

    எண்ணெய் சாத்தி அபிஷேகம் செய்த சில மணி நேரங்களில் மூலவர் விக்கிரகத்தின் மேல் எண்ணெய் பசையே இல்லாமல் போய் விடும்.

    இதற்கு காரணம் இந்த விக்கிரத்தில் சுவாமி உயிரோட்டத்துடன் இருப்பது தான் காரணம் என்கிறார்கள்.

    இக்கோவில் மூலவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கருதப்படுகிறது.

    கி.பி 1514ல் இக்கிராமத்துக்கு வந்த அப்பய்யங்கார் என்பவர் தாமிரத்தால் மூடிய கொடி மரம் நிறுவி, கருட வாகனம் அமைத்து, பதினோரு ஆழ்வார்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    கல்வெட்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழி எழுத்துக்களும் இந்த கோவிலில் இடம் பெற்றுள்ளது.

    இந்த கோவிலின் அருகே தென்னக்கத்தின் காளகஸ்தி என்றழைக்கப்படும் துருவாச முனிவர் அமைத்த

    சிவன் கோவிலிலும், துருவாச முனிவரின் தீர்த்த கட்டமும் உள்ளது.

    நடை காலை 7 மணி அளவில் இருந்து 10 மணி வரைக்கும் மாலை 4 மணியில் இருந்து 7 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

    இந்தக் கோவிலுக்கு நெல்லை புது பஸ்நிலையத்தில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் அனைத்து பஸ்களிலும் வரலாம்.

    பத்தமடை என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் கோவிலை அடையலாம்.

    நெல்லை சந்திப்பு மற்றும் சேரன்மாதேவியில் இருந்து கரி-சூழ்ந்த மங்கலத்திற்கு டவுண் பஸ் வசதி உண்டு.

    கோவில் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் காலை முதல் 3 மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. ஓட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த 2 வாரங்களுக்கு பிறகு திடீரென பெய்த கனமழையால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 45 மில்லிமீட்டரும், மணியாச்சியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கயத்தாறு ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது. கடம்பூரில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. அங்கு 14 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும், மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை ஆற்றங்கரையோர மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லாமல் இருக்கவும் கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சேர்வலாறு, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. அதிக பட்சமாக மணிமுத்தாறு அணை பகுதியில் 29 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 22 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.52 அடியாகவும் உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,273 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,524 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 114.19 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2,962 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,540 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக களக்காடு மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் அதிகமாக இருப்பதால் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அம்பை, நாங்குநேரி, களக்காடு, கன்னடியன் மற்றும் நெல்லை, பாளையிலும் நேற்று மிதமான மழை பெய்தது. இன்று காலை முதலே பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிவகிரி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தென்காசி நகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சற்று கனமழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 12 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அந்த 2 அணைகளும் இன்று காலை மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டின. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்மட்டம் 66.28 அடியை எட்டியுள்ளது.

    குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பமாக வந்து குளித்து சென்றனர். அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.

    வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறானது நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    சமீப காலமாக தாமிரபணி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் வி.கே.புரம் நகராட்சியில் தொடங்கி நெல்லை மாநகர பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வரையிலும் சுமார் 60 இடங்களில் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், குடிக்கும் வகையில் இருந்த அந்த தண்ணீர் மாசுபட்டுவிட்டது.

    இதனால் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு முத்தாலங் குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    அதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், படித் துறைகள், கல்மண்டபங் களை சீரமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு இன்று தாமிரபரணி நதியை நேரில் பார்வையிட வருவதாகவும், அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மதுரையில் இருந்து நெல்லை வந்தனர்.

    நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட நீதிபதிகள் சந்திப்பு சிந்துபூந்துறை நதிக்கரை, உடையார்பட்டி நதிக்கரை, ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.

    பின்னர் டவுன் குறுக்குத்துறை பகுதியில் ஆய்வு செய்த நீதிபதிகள், கல்லணை பள்ளி அருகிலும், முருகன்குறிச்சி பாளையங் கால்வாய் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தலைமையில் சுற்றுலா மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணியில் ஆய்வு செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

    மேலும், நிதி ஒதுக்கீடு, கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்கான பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

    இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நீர்வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    • ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர், களக்காடு, அம்பை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்சவல் பத்தமடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    முக்கூடல் பகுதியில் இருந்து கடையம் நோக்கி செல்லும் சாலையில் இடை கால் அருகே சாலையில் முழங்கால் அளவுக்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    24 மணி நேரமாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந் துள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை 2 நாட்களாக பெய்து வருவதால் களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை சுற்றுவட்டாரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதே போல் பாப்பாக்குடி, இடைகால், சீதபற்ப நல்லூர், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வீரவநல்லூர் பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் சரகம் புதூர் அருகே நான்கு வழி சாலையில் உள்ள முதியோர், பெண்கள் காப்பகம் ரோட்டின் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழை தண்ணீர் சூழ்ந்தது. முதியோர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    நெல்லை மாநகரப் பகுதியில் நெல்லையில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாநகரில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக டவுன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    டவுன் முகமது அலி தெருவில் நேற்று நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் தெரு, செண்பகம் பிள்ளை தெரு உள்ளிட்ட ஏராளமான தெருக்களில் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    காட்சி மண்டபம் அருகே உள்ள ஊசி மாடன் கோவில்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கி கிடந்தது. நெல்லையப்பர் கோவிலில் வடக்கு மண்டபம் பகுதியில் தண்ணீர் புகுந்தது.

    டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பாளையங்கோட்டை பகுதியிலும் மனக்காவலம் பிள்ளை நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அதிகாலையில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தங்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்துக்கு இடையே பொதுமக்கள் வெளி யேறினர்.

    இதேபோல் கே.டி.சி நகரில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகரின் விரிவாக்க பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கிடப்பதால் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சுமார் 2000 வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று இரவு வரை பெய்த மழையிலேயே பஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சிந்து பூந்துறை தெருவில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர். அங்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வங்கி கட்டிடத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பேட்டை பழைய பேட்டை இணைப்பு சாலையில் வெள்ளநீர் கரை புரண்டு வருவதால் அங்குள்ள ஆதாம் நகர் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    இதேபோல் மாநகரின் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அவற்றை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று அப்புறப்படுத்தி னர். ஒரு சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலும் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவற்றை சரி செய்தனர்.

    டவுன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் அந்த சாலை ஆனது துண்டிக்கப்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைய ஆரம்பித்த நிலையில் ஏராளமான பொது மக்கள் தரைபாலத்தை பார்வையிட்டனர்.

    இதே போல் ஆபத்தை உணராமல் வண்ணார் பேட்டை கொக்கிரகுளம் ஆற்று பாலம், வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலங்களில் நின்றபடி வெள்ளத்தை கண்டு ரசித்தனர். ஏராளமானார் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டதையும் காண முடிந்தது.

    கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை இடை விடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கோவில்பட்டி நகர் முழுவதும் சாலை களில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள கார் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

    அப்பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மழை நீர் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து இருந்துள்ளனர். தங்களது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர்.

    பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குறிஞ்சான் குளத்திற்கு செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இ.எஸ்.ஐ.மருந்தக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்து வரும் சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் தெரு பகுதியில் உள்ள 20 வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், கியாஸ் சிலிண்டர் அனைத்துமே மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் புது ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பலத்த மழையின் காரணமாக இனாம் மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் இளையரசனேந்தல் சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியாமல் உள்ளன. மேலும் அண்ணா பஸ் நிலையத்திற்குச் சென்ற அரசு பஸ் மழைநீரில் சிக்கி வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளது.

    அதேபோன்று அப்பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க், லாரி செட்டுகள், தனியார் நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை இன்று காலை 9 மணி வரையிலும் பரவலாக பெய்தது. சிறிது நிமிடங்கள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் வறண்டு கிடந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அந்த குளங்களில் 70 சதவீதம் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    ஏற்கனவே குறைந்த அளவு தண்ணீர் கிடந்த குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளது.

    பல ஆண்டுகளாக நிரம்பாத குளங்கள் கூட நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு சில இடங்களில் கோவில்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நேர் புகுந்தது. 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது. அங்குள்ள புது குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் மறுகால் பாய்ந்ததால் மெயின் ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    ஆலங்குளம் பஞ்சாயத்து அலுவலக தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் தெருக்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்ததன் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியது. முக்கிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இது தவிர தென்காசி மாவட்டம் ராமநதி, கடனாநதி அணைகளில் இருந்தும் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் மூலமாகவும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வருவதால் இன்று காலை நிலவரப்படி 60 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தி உள்ளார். 

    • முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

    நெல்லை:

    தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகஅர்ச்சுனன். மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வேளார்குளத்தில் உள்ள தங்களது நண்பர் வீட்டுக்கு நேற்று வந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். முத்துமாலையம்மன் கோவில் அருகே ஆற்றில் 3 பேர் குடும்பத்தையும் சேர்ந்த சுமார் 15 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் சிறுமிகள் உள்பட 6 பேர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்களும், அவர்களது உறவினர்களும் அவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில் 4 பேரை மீட்டனர்.

    இதில் நாகஅர்ச்சுனன் மகள் வைஷ்ணவி (வயது 13), அய்யப்பன் மகள் மாரி அனுஷியா (16) ஆகிய 2 பேரையும் காணவில்லை. அவர்கள் ஆழமான பகுதியில் மூழ்கினர். இதுகுறித்து உடனடியாக முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரவநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர்.

    மாயமான 2 சிறுமிகளையும் ஆற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டாள். தொடர்ந்து மாரி அனுஷியாவை தேடி பார்த்தனர். ஆனால் இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை முதல், மாயமான மாரி அனுஷியாவை தேடும் பணியில் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது மாரி அனுஷியா மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.

    சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருந்தது.

      இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பு அணை கட்டினால் கடல் நீர் புகுவது தடுக்கப்படுவதோடு, குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் மாறுவதும் தடுக்கப்படும் எனக்கூறப்பட்டது.

      இதையடுத்து தமிழக அரசு புதுக்கடையை அடுத்த பரக்காணி பகுதியில் ரூ.15.37 கோடியில் தடுப்பு அணை கட்ட முடிவு செய்தது.

      பரக்காணியில் தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்பிடிப்பு சங்கம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

      அதில் முறையான ஆய்வு மற்றும் அனுமதியின்றி தடுப்பணை கட்டப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

      இந்த மனுவை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பரக்காணி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பு அணை கட்ட தடை விதித்துள்ளது.

      கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை இப்பணிகளை நிறுத்த வேண்டும், ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனுதாரர் தரப்பு மனு அளித்திருந்தால் அதனை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பணையால் ஏற்படும் பாதிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர்களிடம் அறிக்கை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.  

      • தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்வது வழக்கம் பின் தாமிரபரணி ஆற்றில் நீராடி மகாதேவர் கோவில் சென்று செல்வது வழக்கம்.
      • தேவையான அளவு தண்ணீர் அணையிலிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட வேண்டும்

      கன்னியாகுமரி :

      ஆடி அமாவாசை வரும் 28-ந்தேதி அனுஷ்டிக்கப்படு கிறது.

      அன்று பொதுமக்கள் இறந்து போன தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்வது வழக்கம் பின் தாமிரபரணி ஆற்றில் நீராடி மகாதேவர் கோவில் சென்று செல்வது வழக்கம்.

      கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பலி தர்ப்பணத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பலி தர்ப்பணம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

      கடந்த 10 நாட்களாக போதுமான மழை பெய்யா ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் மிகக் குறைவாக பாய்ந்தது.ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது கீழ் பகுதியில் உள்ள சகதி தண்ணீ ரோடு கலந்து தண்ணீர் சகதியாக மாறவாய்ப்பு உள்ளது.

      எனவே தேவையான அளவு தண்ணீர் அணையிலிருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட வேண்டும் என்று குழித்துறை கோவில் கமிட்டி தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பிரதீப் ஆகியோர் அமைச்சர் மனோ தங்கராஜியிடம் நேரில் வலியுறுத்தினர்.

      இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் பேச்சி பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. குழித்துறை சப் பாத்து அளவில் தண்ணீர் பாய்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      • தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன.
      • தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன.

      செய்துங்கநல்லூர்:

      தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயல் கடலில் கலக்கிறது.

      இந்த நதி பாய்ந்தோடும் ஆற்றுக்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமத்து தெய்வங்கள் உள்ளது. குறிப்பாக சுடலைமாடன், பேச்சியம்மன், முண்டன் என 18 பரிவார தேவதைகளுடன் கிராம தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.

      இந்த கிராம தெய்வங்கள் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் பல நூறாண்டு பழமையையும், பெருமையையும் சொல்லும் ஒரு மரம் கண்டிப்பாக இருக்கும்.

      இந்த தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்களில் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மரங்கள் தற்போது கம்பீரமாக நிற்க காரணம் இந்த18 கிராம தெய்வங்கள் தான்.

      தெய்வங்கள் என்றாலே பொதுமக்களுக்கு எப்போதும் பயபக்தி தான். இந்த பயபக்தியின் காரணமாகவே இந்த மரங்கள் அனைத்தும் வானுயர வளர்ந்து நிற்கிறது.

      தாமிரபரணிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த ஆலமரங்கள் பல இடங்களில் வளர்ந்து நிற்கின்றன. இதற்கு காரணம் அதனை யாரும் வெட்டுவது கிடையாது. வெட்டினால் அந்த பகுதியில் உள்ள கிராமத்து தெய்வம் கண்ணை குத்திவிடும். தெய்வம் வீடு தேடி வந்துவிடும் என்ற ஒரு பயத்திலேயே இந்த மரங்களை மக்கள் வெட்டுவதில்லை.

      மேலும் அந்த மரங்கள் சாய்ந்து விழுந்தாலோ அதில் இருந்து யாரும் ஒரு கம்பை கூட எடுத்துச்செல்ல மாட்டார்கள்.

      தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் வளர்ந்துள்ள மரங்கள். ஆலமரங்கள் அனைத்தும் விழுதுகள் விட்டு, அந்த விழுதுகள் அனைத்தும் வேராக வளர்ந்து மரங்கள் அனைத்தும் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

      இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:-

      எங்கள் பகுதியில் தாமிரபரணிக்கரையில் ஏராளமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதில் இருந்து விழும் ஒரு மரத்தின் துண்டுகளை கூட நாங்கள் எடுத்துச் செல்வது கிடையாது.

      கோவில் திருவிழா நாட்களில் விறகிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். இல்லை என்றால் கீழே விழுந்த மரக்கிளைகள் அனைத்தும் அங்கு தான் கிடக்கும் என்று தெரிவித்தனர்.

      • கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
      • நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

      செய்துங்கநல்லூர்:

      நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் தரக்கூடிய நதியாக விளங்குகிறது.

      தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் கூறுவார்கள். அகத்திய பெருமான் இன்று தான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

      இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.

      இதற்காக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் நின்று நதியை காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

      தொடர்ந்து நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ×