என் மலர்
நீங்கள் தேடியது "டிஆர் பாலு"
- பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
- மதவாதம் குறித்து பேசும் பா.ஜ.க. இந்த விவகாரத்தை மத ரீதியாக அணுகாமல் நியாயமான முறையில் அணுக வேண்டும்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, மற்றும் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு கூறியதாவது:-
* பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு ஆதரிக்கிறது.
* பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
* நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவில்லை.
* அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினோம்.
* மதவாதம் குறித்து பேசும் பா.ஜ.க. இந்த விவகாரத்தை மத ரீதியாக அணுகாமல் நியாயமான முறையில் அணுக வேண்டும் என்று தெரிவித்தார்.
- அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.
- பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* காங்கிரஸ் கட்சி மீது அமலாக்கத்துறை சோதனையை ஏவிவிடுவது வெட்கித் தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல்.
* அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.
* குஜராத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு பற்றிய கருத்துருவாக்கம் பா.ஜ.க.வை மிரள வைத்திருக்கிறது.
* ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டின்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது பா.ஜ.க.
* ஆட்சிக்கு வந்ததிலிருந்து ED-யை தனது கூட்டணி கட்சியாக சேர்த்துக்கொண்டு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது பா.ஜ.க. அரசு.
* பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க வுக்கும் இடையே தான் போட்டி என்கிற அறிவிப்பை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் விஜய் தெரிவித்து உள்ளார்.
- விஜய் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யும் களம் கண்டுள்ளார்.
மத்தியில் பா.ஜ.க.வையும், தமிழகத்தில் தி.மு.க.வையும் மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க வுக்கும் இடையே தான் போட்டி என்கிற அறிவிப்பை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் நிலையில் அந்த கட்சியைப் பற்றி எதுவுமே பேசாமல் தி.மு.க.வை மட்டுமே போட்டியாளராக கருதி விஜய் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.-வை சேர்ந்த தலைவர்கள் விஜய் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தி.மு.க.வை மன்னராட்சி என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசிய குறித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜயின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
- கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மனு ஒன்றை தயார் செய்து வருகிறார்கள்.
- மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோவை கார் வெடிப்பு குறித்தும் கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதையடுத்து கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மனு ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். அந்த மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பில் அவர் கூறி இருப்பதாவது:-
கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட உள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட அழைக்கிறோம்.
3-ந்தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து அந்த மனுவை படித்து பார்த்து கையெழுத்திட கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
- காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம்.
- 'வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
சென்னை:
தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் கவர்னர் ஆர்.என்.ரவி.
எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல.
வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார்.
'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்து, இதுபோன்ற அபத்தங்களைப் பேசட்டும். அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட-அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.
சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தரபிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது-தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம். ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 சதவீதம். ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம். கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம். தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம். கல்வியில் இரண்டாவது இடம்!-இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது.
இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தான். தேசிய சராசரி பண வீக்கமானது 6.2 சதவீதத்தில் இருந்து 7.79 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் தமிழ் நாட்டின் பணவீக்கமானது 5.37 சதவீதமாக குறைந்தது. வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது தமிழகத்தில்.
சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்தது தான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்து உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டி இருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த வெற்றியானது, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம். அதில் ஒருவராக கவர்னர் இருப்பது தான் அதிர்ச்சியைத் தருகிறது.
இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் கவர்னர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது?
'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்.
இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக்கூடாது என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். தொடக்கூடாத சாதி, கண்ணில் படக்கூடாத சாதி, மூச்சுக்காற்று படக்கூடாத சாதி என பிரித்தது திராவிடமல்ல, ஆரியம்.
சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தை, மூலையில் முடக்கி இழிவுபடுத்தியது திராவிடமல்ல, ஆரியம். எனவே, பிரிவினைக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல.
காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம். தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம்.
'வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இந்த ஐம்பதாண்டு கால உண்மையை, தனக்கு ஏதோ மேடை கிடைத்து விட்டது என்பதற்காக மாற்ற முனையக் கூடாது.
அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசி வருகிறார் கவர்னர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மை தான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா?
அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணா சிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமா? வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளைக் கையில் வைத்துக்கொண்டு தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது. அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை.
தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கவர்னர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் கவர்னராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக கவர்னர் ரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம்.
- வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
சென்னை:
தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதற்கு முன்பு இருந்த கவர்னர்கள், கவர்னர் உரையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படிப்பார்கள். ஆனால் கவர்னர் உரையில் உள்ள வரிகளை இப்போதைய கவர்னர் படிக்கவில்லை. பேராவை நீக்கினார். சில வரிகளை அவரே சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்தும், சில வரிகளை நீக்கியும் படித்தது தவறு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
கவர்னர் உரையில் எது அச்சிடப்பட்டுள்ளதோ? எதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளாரோ அது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தான் நடந்த உண்மைகள்.
இதை விளக்கமாக குடியரசு தலைவரிடம் எடுத்து கூறியுள்ளோம். மிக மிக கூர்ந்து கவனித்த குடியரசு தலைவர் எங்கள் கடிதத்தை படித்து பார்த்தார். படித்து முடித்ததும் அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம். வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
கவர்னர் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
அந்த கடிதத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது. ஏனென்றால் இந்த கடிதத்தை தமிழக முதல்-அமைச்சர், ஜனாதிபதியிடம் கொடுக்க சொல்லி சீலிடப்பட்ட உறையில் எங்களிடம் கொடுக்கப்பட்டது.
அது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளே என்ன எழுதி இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது.
கேள்வி: நீங்கள் ஜனாதிபதியிடம் என்ன கருத்தை முன் வைத்தீர்கள்?
பதில்: இதை மொத்தமாக படித்து பார்த்து சரி என்று என்ன தோன்றுகிறதோ? என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களோ அதை எடுங்கள் என்று கூறியுள்ளோம்.
கேள்வி: அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?
பதில்: ஜனாதிபதியை பார்க்கும் முன்பு அவரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. ஜனாதிபதியை பார்ப்பது தான் எங்கள் நோக்கம். அவரை பார்த்து விட்டோம். எனவே அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறீர்களா?
பதில்: இது அரசியலில் நெளிவு சுளிவாக, மிகவும் கவனமாக எடுக்கக்கூடிய முடிவுகள். ஜனாதிபதி என்ன முடிவு எடுப்பார் என்பதை நான் சொல்ல முடியாது.
தேசிய கீதம் பாடும் முன்பு கவர்னர் எழுந்து போனதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கேள்வி: கவர்னர் ஏன் தொடர்ந்து தமிழக அரசுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்?
பதில்: அவரது நோக்கம் என்பது மொத்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சனாதன கொள்கைகளை புகுத்த வேண்டும் என்பது தான். இதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. இது பெரியார், அண்ணா, கலைஞரின் தேசம். இதில் யாரும் புதிதாக ஒரு செடியை வளர்த்து விட முடியாது. 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் இருந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மாறான கொள்கைகளை யாரும் திணிக்க முடியாது.
கேள்வி: இந்த பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்படுமா?
பதில்: நிச்சயமாக தி.மு.க. சார்பில் இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
- நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஆலந்தூர்:
தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொண்ட குழுவினர் அளித்தனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது.
சமூகநீதி குறித்து நாங்கள் 100 ஆண்டு காலமாக செய்து வருகிறோம். சமூகநீதி பற்றி பேசும்போது, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், உச்சநீதி மன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றால் சேது சமுத்திர திட்டம் வந்துவிடும். எனவே முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வந்து, அது பற்றி பேசட்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு உண்மையில் இருக்குமேயானால், முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.
திராவிடமாடல் என்பது இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் இருக்கிறது. இதுபற்றி எல்லாம் புரியாதவர்கள் ஏதாவது பேசுவார்கள், உளறுவார்கள். அவர்களுடைய உளறல்களுக்கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
- 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
புதுடெல்லி:
காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயலை மறுநாள் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் டி.ஆர்.பாலு, மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு அது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
- தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது.
- கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார்.
புதுடெல்லி:
தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. பிறகு அது கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பல நாட்களாக இந்த மசோதா மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் மேலும் பலர் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்தனர். எனவே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 8-ந்தேதி திடீரென ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பியபோது கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், ஒரு மாநில அரசால், திறமையான விளையாட்டை ஒழுங்குப்படுத்த மட்டுமே முடியும். அதை முற்றிலும் தடை செய்ய முடியாது. இவ்விஷயத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திய பின்னும், மாநில அரசு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்களையே, சட்டமாக நிறைவேற்றி மீண்டும் அனுப்பி உள்ளது.
இதைமீறி, இந்த சட்டத்தை நிறைவேற்றினால், இது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அமையும். இதற்கு பதிலாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
- அண்ணாமலை இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளார்.
சென்னை :
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவித்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.50 கோடி முதல் ரூ.500 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நோட்டீஸ் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அண்ணாமலை ஏற்கனவே பதில் அனுப்பி இருந்தார். அந்த பதிலில், மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை, இழப்பீடு தர முடியாது, சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திக்க தயார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில், டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீசுக்கு வக்கீல் பால் கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. நிர்வாகிகளின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தி.மு.க.வினரின் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அண்ணாமலை இதை வெளியிட்டுள்ளார்.
யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. எனவே அவதூறு சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
அதேபோன்று, பல நிறுவனங்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இருப்பதற்கும் ஆவணங்கள் உள்ளன. உரிய ஆதாரங்களுடன் தான் டி.ஆர்.பாலு மீது அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
எனவே மன்னிப்பு கேட்க முடியாது, இழப்பீடும் தர முடியாது. அண்ணாமலை இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளார்.
இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டு உள்ளது.
- கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
- மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் பிற துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர்வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம், செயல்படுத்தும் திட்டங்கள், மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மழைநீர் வடிவதற்காக செயல்படுத்தும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்த டி.ஆர்.பாலு எம்.பி. மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
- எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது.
- 21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள்
பம்மல் :
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மண்டல குழு தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது:-
பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் என்னைப் பற்றி கூறிய அவதூறு செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. அவதூறுகள் குறித்து நான் அவருக்கு நோட்டீஸ் அளித்தேன். தற்போது வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 48 மணி நேரம் அவருக்கு கொடுத்தேன். அதுவும் முடிந்து விட்டது.
21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள். ஆனால் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. தேர்தலில் நிற்கும் போதே சொத்து கணக்குகள் அனைத்தும் கொடுத்திருக்கிறேன் அதை பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எது சொந்தம் எது சொந்தமில்லை என்பது மக்களுக்கு தெரியும்.
ஒரு வன்மம் நோக்கத்தோடு செய்திருக்கிறார். அதற்காக நான் வழக்கு தொடராமல் இருக்க முடியாது. வருகிற 8-ந் தேதி அவர் மீது வழக்கு தொடர போகிறேன். அதற்கு பிறகு சட்டபூர்வமாக சிவில் வழக்கு தொடருவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.