search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனிவேல் தியாகராஜன்"

    • தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுமியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தூக்கிலிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும்.

    தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க.வினர் கூட்டணி இல்லாததால் மத்தியில் மைனாரிட்டி அரசாக உள்ளது.

    பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் அ.தி.மு.க 20, பா.ஜ.க 15 என 35 தொகுதிகள் பிடித்திருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக வரவேண்டும் என்பதற்கு அ.தி.மு.க பாடுபட முடியுமா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

    பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது. மற்ற மாநிலங்களில் குறைவாக கொடுக்கிறது. மக்களின் பணத்தை ஏமாற்றியதற்கு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

    தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல இருக்கிறார்.
    • தொழில்நுட்பத்திற்கு நமக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 120 கோடி தான்.

    தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்ல இருக்கிறார். தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், தலைவர்கள், தொழில் நுட்பத்தை உருவாக்குபவர்கள் என அந்த துறையில் உள்ளவர்களை சந்திக்க உள்ளார்.

    நான் சட்டசபையில் கூறியது போல் 100 சதுர அடியில் கட்டிடமும், இணையதள வசதியோ, மின்சாரமும் இருந்தா தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரானா முடிந்து 2 வருடங்களில் உலகளாவிய திறன் மையங்கள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்படியென்றால் பல 10,000 வேலைகள் உருவாக்கி உள்ளனர்.

    கடந்த ஆண்டு நான் கூறியது போல 40 லட்சம் சதுர அடியில் புதிய ஐடி பார்க் அலுவலகம் குத்தகைக்கு எடுக்கப்படும் என்று சொன்னேன். ஆனால் சென்ற ஆண்டு 110 லட்சம் சதுரஅடி புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சட்டமன்றத்தில் கூறியது போல் தொழில்நுட்பத்திற்கு நமக்கு ஒரு ஆண்டுக்கு 100 முதல் 120 கோடி தான். ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 800 முதல் ஆயிரம் கோடி ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது.

    ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் நாம் தான் முதலிடத்தில் "இருந்தோம்.. ஆனால்., இப்போது ஐதராபாத், பெங்களூரு அளவுக்கு நாம் இல்லை என்றே கூற வேண்டும்.

    அதேபோல் நாம் மாநிலத்திற்கு வெவ்வேறு தொழில்கள் உள்ளன. அனைத்து துறைகளில் முன்னேறி இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப துறையை பொருத்தவரை கடந்த ஆண்டு என்னால் முடிந்த முன்னேற்றங்களை கொடுத்து வருகிறேன். இன்னும் சிறப்பாக என் துறையை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

    • எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம்.
    • தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

    கொழும்பு:

    கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இலங்கை சென்றார். அங்கு அவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பின்னர் 'வீரகேசரி' பத்திரிகைக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: 2022-ம் ஆண்டு இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் நீங்கள் நிதி நிர்வாகத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா?

    பதில்: இந்த விஷயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ, கல்வியையோ தாண்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆதரவும், பொறுப்பும்தான் இதற்கு காரணமாகும். 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் நான் அங்கம் வகித்தேன். அப்போது கிடைத்த அனுபவம்தான் எனக்கு கை கொடுத்தது. அதேபோல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. அதனால் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் 2 ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது.

    கேள்வி: நீங்கள் சமூக நீதி குறித்து பேசுகிறீர்கள். பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகிறீர்கள். இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?

    பதில்: எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம். தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்தபோதே அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த கட்சியும் பின்வாங்கியதில்லை.

    கேள்வி: பெங்களூரு, ஐதராபாத் போல் தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் எப்போது முதன்மை இடம் பெறும்?

    பதில்: கருணாநிதி ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை. அதில் தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.

    கேள்வி: 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். இது சாத்தியமா?

    பதில்: இது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கு. அதை அடைவதற்காக நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

    கேள்வி: தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்த முடியுமா?

    பதில்: இது விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மூலமே முன்னெடுக்கப்பட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கலாசார தொடர்புகளின் அடிப்படையில் இதனை முன்னெடுக்கலாம்.

    கேள்வி: கச்சத்தீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. இது மத்திய அரசின் விஷயம் என்றாலும், மாநில அரசின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற முறையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. தற்போது இதை அரசியலுக்காக பேசுகிறார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது.

    கேள்வி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமா?

    பதில்: சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. உலகளவில் இதை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பொருளாதார விளைவுகள் என்ன? செலவு என்ன என்பது முக்கியமாகும். பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். பொறியியல் மற்றும் கட்டிடக்கலை அடிப்படையில் சாத்தியமானதுதான்.

    இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.

    • தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?
    • இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க.வின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நாட்டின் நிலையைப் பார்த்தால் மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வந்து விட்டதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி தேர்தலை சந்திக்க இயலாத நிலை உள்ளது.

    தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? புதிய சட்டத்தின் படி 2 தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஒரு சார்பான நடத்தையையே காட்டுகிறது.

    இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? 543 தொகுதிகளில் ஒரு தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.

    ஜாமின் கொடுக்காமல், வழக்கு விசாரணை நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல் டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார மன்னர் லண்டனில் இருந்தார் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.

    தமிழகத்துக்கு கடன் உதவி கிடைக்காத வகையில், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகத்துக்கு நிதி அளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக வரிப்பணத்தை மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசு, பேரிடர்களுக்கு 1 ரூபாய் கூட தருவதில்லை. நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள்.

    நாங்கள் சொல்லும் திட்டத்தின் கீழ் கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் நடத்தும் நீட் தேர்வை எழுதுங்கள் என கூறுகின்றனர். அரசியலமைப்பு கொடுத்த மாநில உரிமைகளை பறித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா எம்.எல்.ஏ. கோட்டாவில் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தார்
    • உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன்

    கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலையும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் நேற்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, "அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா எம்.எல்.ஏ. கோட்டாவில் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தார். ஆனால், நான் எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை.. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை. தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன் என் பேசினார்.

    அண்ணாமலையின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் இது தொடர்பாக பேசிய சிங்கை ராமச்சந்திரன், எனது தந்தையான சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் இறந்தபோது எனக்கு 13 வயது. அவர் எப்படி எனக்கு, எம்.எல்.ஏ. கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கி தரமுடியும். எனது தந்தை குறித்த பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்" என வலியுறுத்தினார்.

    இந்நிலையில் அண்ணாமலையின் 5 வருட பொறியியல் படிப்பு தொடர்பாக ஸ்ரீராம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "அண்ணாமலை விசித்திரக் கதைகளின் உலகத்திற்கு சென்று பொறியியல் படித்தாரா?. அவர் 4 ஆண்டு பொறியியல் படிப்பிற்கு பதிலாக ஏன் 5 வருட பொறியியல் படிப்பை படித்துள்ளார்?. ஒருவேளை அவர் மாயாஜால பொறியியல் சமன்பாடுகளின் பிரமையில் தொலைந்து போயிருக்கலாம். ஆமாம் அவர் குறிப்பிடும் இந்த மர்மமான எம்.எல்.ஏ. கோட்டா என்றால் என்ன? என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

    "பொறியியல் பட்டப்படிப்பு 1984 இல் 5 வருடத்திலிருந்து 4 வருடமாக மாற்றப்பட்டது. 1987 இல் REC திருச்சியில் (இப்போது NITT) 4-ஆண்டு B.Tech (Hons) பட்டம் பெற்றேன். பி.எஸ்.ஜி கல்லூரியில் 2002-ல் 5 வருட பொறியியல் பட்டப்படிப்பை எப்படி வழங்கியது?. ஒருவேளை இது ஒருங்கிணைந்த B.Tech & M.Tech பட்டபடிப்பா?. அப்படியென்றால்... அது 5 ஆண்டு பட்டபடிப்பாக இருக்கலாம்?

    அந்த படிப்பிற்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லையா? மேலும் "எம்எல்ஏ கோட்டா" என்றால் என்ன, அது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? நான் ஓபன் கோட்டாவின் கீழ் REC திருச்சியில் சேர்ந்தேன். 1987 இல் நான் அமெரிக்காவிற்குச் செல்லும் வரை இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    • வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது
    • அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது

    வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அனந்த நாகேஸ்வரனின் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார். 

    • பட்டியலில் உள்ளவர்களில் விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை என ஆய்வு செய்யப்படுகிறது.
    • முன்னுதாரணமான இந்த திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தமிழக  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளை பெறுவதில், யாருக்கு எந்த சூழல் இருக்கிறது என்று கண்டறிந்து அரசு திட்டங்களை சரிபார்க்கலாம் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த துறையுடன் இணைந்து பணிசெய்து இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    அந்த தகவல் பல திட்டங்களுக்கு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் டிஎன்இஜிஏ என்ற நிறுவனத்தில்தான் அந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆய்வு அந்த பட்டியலில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டறிந்து, விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை, என ஆராய்ச்சி செய்கிறோம். எனவே தமிழ்நாடு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக என் துறை சார்பாக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை சந்தித்து முன்மாதிரியான சேவைக்கு நன்றி கூறினேன்.

    அதன் பலன்களை பகிர்ந்துகொள்கிறோம், இந்த முன்னுதாரணமான திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறினேன். அதற்கு சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தொடர்ந்து என்ன தேவையோ கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்துகொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

    • தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமராவை சந்தித்தனர்.
    • தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான விரிவான கொள்கைகள் குறித்து தமிழக குழுவினர் கேட்டறிந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாட்டிலேயே தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கி வருகிறது.

    தெலுங்கானா உருவான பிறகு ஐதராபாத்தில் தகவல் தொழில் நுட்பதுறை புதிய வேகத்தை எட்டியுள்ளது.

    தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் 3 நாள் சுற்றுப் பயணமாக ஐதராபாத் சென்றனர்.

    பின்னர் தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமராவை சந்தித்தனர்.

    அப்போது தெலுங்கானாவில் ஒரு வலுவான தகவல் நுட்பத்தை உருவாக்க உதவிய கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனிடம் விளக்கம் அளித்தனர்.

    மேலும் கிராமப்புற தொழில்நுட்ப மையங்கள், கண்டுபிடிப்புகள், மின்னணுவியல், கேமிங், மற்றும் அனிமேஷன், சைபர் பாதுகாப்பு, புதுமையான கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான விரிவான கொள்கைகள் குறித்து தமிழக குழுவினர் கேட்டறிந்தனர்.

    ஐதராபாத் போல சென்னையில் தகவல் நுட்ப துறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக இந்த ஆய்வு நடந்ததாக தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    • பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது.

    மதுரை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது.

    தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும்.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது.

    நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.
    • புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    சென்னை:

    அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும், பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் சமர்ப்பித்துள்ளேன்.

    முந்தைய ஆட்சியின் விளைவாக உச்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத்திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச்சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

    நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.

    உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான துறையாக விளங்கும் தகவல் தொழில் நுட்ப இலாகாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன்.

    தொழில்நுட்பமே எதிர் காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.

    தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்த போதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம்.

    எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிர்வகித்த மனோ தங்கராஜ் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

    15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிர்வகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். தொழில் துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

    இன்று பொறுப்பேற்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார்.
    • முன்னதாக 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது கூட அமைச்சர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் நாளை வரை தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் முதலில் இடம் பெற்றிருந்தன. ஆனால் மதுரை சிம்மக்கல் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் பேச செல்லவில்லை.

    அவருக்கு பதில் திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்.

    இதனால் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவருக்குப் பதில் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் பேசியதாக வெளியான ஆடியோ அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து விளக்கம் அளித்து விட்டு வந்திருந்தார்.

    இதன் பிறகு இப்போது கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுவதால் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்தும் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவருகின்றன.

    வருகிற புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைக்க கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்படலாம் என்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கு முன்னதாக 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது கூட அமைச்சர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.

    அந்த சமயத்தில் பட்டியலின அரசு அலுவலர் ஒருவரை சாதி பெயரை சொல்லி விமர்சித்ததாக எழுந்த புகாரில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது.

    அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது.

    அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, முத்துசாமி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், காந்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகிய 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டதே தவிர யாரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை.

    ஆனால் இப்போது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் கட்சித் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

    சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லாத நிலையில் பால்வளத்துறை அமைச்சராக உள்ள ஆவடி நாசர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதில் 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அப்போது புதுமுகங்கள் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    • இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என அமைச்சர் தெரிவித்தார்.
    • ஆற்றல்மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன்? என கேள்வி

    சென்னை:

    திமுக அரசின் ஊழல் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது.

    இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையாக இயங்கி வருகிறோம்.

    சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. ஆடியோ ஜோடிக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

    முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன்?

    திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் சாதனைகள் செய்யும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டி, ஆலோசகர், உறுதுணையாக இருப்பவர் சபரீசன். அமைச்சர் உதயநிதி, சபரீசன் மீது களங்கம் சுமத்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை விட, இரண்டே ஆண்டுகளில் நாங்கள் அதிகம் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×