search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232927"

    • அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வேதாரண்யம்:

    வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வனதுர்க்கை அம்மன் கோவில்

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்க ளால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    மாணிக்கவாசகர் மடம்

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன சித்தர் பீடம் இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறும். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் ஆகியவை படையல் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, பக்தர்கள் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்கள். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    • பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை போல் கிரிவலத்தில் புகழ் பெற்று விளங்கும் கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தோறும் கிரிவலம், ஊஞ்சல் உற்ச வம் ஆகியவை நடந்து வரு கிறது. வைகாசி பவுர்ணமி தினமான நேற்று இரவு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சாமி, அம்மன், உற்சவர் தனி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர். தொடர்ந்து மாலை 7 மணி அளவில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகாசி மாத பவுர்ணமி உற்சவதாரர் காடாம்புலியூர் ஏவிகுமரன், ஏவி சுரேஷ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணி அளவில் தொடங்கியது. திருவண்ணாமலையில் நேற்று 105.8 டிகிரி வெயில் பதிவாகியது. இதனால் வெயில் சுட்டெரித்தது. எனினும் பக்தர்கள் பலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாலை வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இருந்து ராஜகோபுரம் அருகில் வரை சித்ரா பவுர்ணமியை போன்று இந்த பவுர்ணமிக்கும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலின் உட்பிரகாரத்திலும் பக்தர்கள் வந்து செல்லும் பாதையிலும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மாலைக்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.34 மணி வரை உள்ளது. இதனால் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.
    • பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும். வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும்.

    ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

    புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதி கரிக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.

    கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    மார்கழி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும்.

    மாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும்.

    பங்குனி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.

    பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்து அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.

    உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம். வைகாசி மாத பவுர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பாயாசம் நைவேத்தியம் படைத்து பவுர்ணமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

    பவுர்ணமியில் முருகன் வழிபாடு

    திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதராகக் காட்சி அளிக்கும் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரா பவுர்ணமி அன்று சங்காபிஷேகமும், வைகாசி விசாக விழாவும் பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பானது. பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறுவதுடன் இங்குள்ள மூலிகையான விராலிச் செடியின் மனத்தைச் சுவாசிக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் மறைந்து ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும்.

    பவுர்ணமியில் காமாட்சி தேர்

    சிவனின் சொல்லை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதியைத் தட்சன் அவமதித்ததால் அந்த யாகத்தில் குதித்து விடுகிறாள். யாகத்தில் எரிந்து கொண்டிருந்த பார்வதியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதைக்கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் நாரதன் முதலானோர் பிரம்மனிடம் முறையிட இந்தப் பிரச்சினையை மகாவிஷ்ணுவால்தான் தீர்க்க முடியும் என்று விஷ்ணுவை வேண்ட, அவரும் தனது சக்ராயுதத்தால் அன்னையின் உடலை ஐம்பத்தோரு துண்டுகளாக வெட்டி வீச, அதில் பார்வதியின் தொப்புள் வீழ்ந்த இடம் காஞ்சி சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

    பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று. ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

    இதில் கலந்து கொள்ளும் பக்தர் களுக்குக் காமாட்சியின் அருட்கடாட்சம் பூரணமாகக் கிட்டும். சகல நன்மைகளும் ஏற்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமியன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
    • கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11.16 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9.11 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.

    காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ‘சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம்.
    • தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.

    சுக முனிவர் அறிந்த சோதிடக் கலை

    துன்பத்தில் உழல்வது மானிடப் பிறப்பு. நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப நமக்கு சுக, துக்கங்கள் நிகழ்கின்றன. பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவும் நமது தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. நம்முடைய வாழ்வைக் கட்டுப்படுத்துபவை நவகிரகங்கள். பன்னிரண்டு ராசியிடங்களில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்தி மனிதனை ஆட்டிப் படைக்கின்றன அந்த நவகோள்கள்.

    கோள்களின் விளையாட்டு மானிட வாழ்வு. அந்தக் கோள்களுக்கு எப்படிப்பட்டவர்களும் ஆட்பட்டே தீர வேண்டும்.

    'முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்

    பொதிவறு திருவொடு பொலிவ ராயினும்

    மதியின ராயினும் வலியின ராயினும்

    விதியினை யாரே வெல்லும் நீர்மையார்?

    என்று தனது கந்த புராணத்தில் கேட்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

    'சோதிடம் பொய்க்கா தென்று

    சாற்றுவர் பெரியோர்'

    என்பது வில்லிபுத்தூர் ஆழ்வாரின் கூற்று.

    எனவே விதியினை யாராலும் வெல்ல இயலாது. இருப்பினும் விதியின் விளையாட்டை முன்கூட்டியே அறிய முடியுமா?

    இந்தக் கேள்வி முதன்முதலாக சுகமுனிவரின் மனத்திலே எழுந்தது.

    சிவனை எண்ணி ஐந்தெழுத்தை ஓதினார்.

    சிவனார் காட்சி தந்தார்.

    தனது கேள்வியை ஆண்டவனிடம் வைத்தார்.

    'சுகப் பிரம்மனே! விதியை வெல்வது கடினம். விதியை வென்றவன் ஒருவன் இருக்கிறான். அவன் என் அன்பு மகன் மார்க்கண்டேயன்! அவனை அடைந்து தெளிவு பெறுவாய்!' என்றார் இறைவன்.

    சிவனுரை ஏற்ற சுக முனிவன் செண்பக காட்டை அடைந்து மார்க்கண்டேயரைப் பணிந்தான்.

    மார்க்கண்டேயர் சொன்னார்: 'சுகமே! விதியை வெல்வது கடினமே! என் அப்பனின் அருளால் அதை வெல்ல முடியும். அதே போல விதியை முன்கூட்டியே அறியவும் வழியுண்டு. நவக்கிரகங்களைப் படைத்து அவைகளைக் கட்டப்படுத்துபவள் ஆதிபராசக்தி. அந்த ஆதிபராசக்தி திருவேற்காட்டிலே கருமாரியாகக் கோவில் கொண்டு விளங்குகிறாள். அவளைப் பணிந்து இதற்கொரு வழி காண்போம்' என்றார்.

    இருவரும் வேற்காடு அடைந்தனர்.

    பனைத்தாயை வாழ்த்தி, அகத்தியரைப் பணிந்து, புற்றுருகுற்று கருமாரியைப் போற்றினர்.

    தேவி சிங்க வாகனம் மீதமர்ந்து காட்சி தந்தாள். நாடி வந்த காரணத்தை உரைத்தார் சுகர்.

    'மகனே! நாடி வந்து நாடியைப் பற்றிக் கேட்கின்றாய்! திருநீற்றைப் பூசி சிவாய நம என்று சொல்லிப் பவுர்ணமி நாளில் ஐம்புலனை அடக்கி காத்த வீரனைப் பணிவாய்! பெரிய நாடி, கலைநாடி, இடை நாடி ஆகிய நாடிகளின் நிலையறிந்து பெருமைமிக்க சோதிடக் கலையை ஓதாது உணர்வாய்' என்று திருவாய் மலர்ந்தருளினாள் தாய்.

    அன்றிலிருந்து கலைகளின் தாயாம் கருமாரியின் வாக்கினால் சோதிடக்கலை இப்பூவுலகில் நிலைபெற்று விளங்குகிறது.

    • மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர்.
    • நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

    ஸ்ரீ சங்கர நயினார் திருக்கோவில் உள்ள சங்கரன்கோவில் திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் ஆகும். நெல்லை மாவட்டத்திற்கு தலைநகரம் திருநெல்வேலி. அதற்கு அடுத்த பெரிய நகரம் சங்கரன்கோவில் ஆகும். ஆடித்தபசு என்றால் உடனே நினைவுக்கு வருவது சங்கரன் கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும்.

    மற்ற தலங்களைப் போன்றே இந்த திருத்தலத்திற்கும் ரசிக்கும்படியான, சுவையான புராணக்கதைகள் உண்டு. இந்து சமயத்திலே பல பிரிவுகள் உண்டு. வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் ஒற்றுமை இருப்பதாலே உலகிலேயே மிகவும் தொன்மையான பெரிய சமயம் ஆக இருக்கின்றது.

    வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் வாதங்கள் உண்டாயிற்று. மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். இருவரும் ஒன்றே என்பதை உணர்த்த சங்கரனாகவும், நாராயணராகவும் இணைந்து தோன்றி, ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை புரிய வைத்தனர்.

    இங்குள்ள பெருமானார் பாதி உருவம் சந்தனம், பாம்பு, மான் ஆகியவற்றுடன் சிவபெருமான் ஆகவும், மறு பாதி உருவத்தில் சங்கு, சக்கரத்துடனும் நாராயணராகவும் காட்சி தருகிறார். ஆனாலும், இதை ஒப்புக்கொள்ளாத வைணவர்கள் இந்த தலத்திற்கு வந்து வழிபடுவதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

    ஒரு காலத்தில் தேவர்களில் ஒருவரான மாணிக்கிரீவன் என்பவர் பார்வதி தேவியின் சாபத்தினாலே பூமியிலே மானிடனாகப் பிறந்து ஒரு தோட்டத்தில் தோட்டக்காரானாக வேலை செய்து வந்தார். அந்த தோட்டத்தில் இருந்து மலர்கள் அரண்மனைக்கு தினமும் அனுப்பப்பட்டு வந்தது.

    வன்மீகநாதன் பெயர் எப்படி?

    ஒரு நாள் தோட்டத்தில் ஒரு பாம்பு புற்று இருப்பது கண்டு அதை அகற்ற மாணிக்கிரீவன் முயன்றபொழுது அதில் இருந்த பாம்பின் வால் வெட்டப்பட்டது. அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்து அரண்மனைக்கு வந்து மன்னனிடம் கூறினார். அப்பொழுது அரசனாக இருந்த மன்னன் உக்கிரம பாண்டியன் இது சிவபெருமானின் இருப்பிடம் தான் என்று தீர்மானித்து, அந்த லிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலை நிர்மாணித்தார்.

    அந்த புற்று வன்மீகம் என்று அழைக்கப்பட்டதால் அந்த இறையனாருக்கு வன்மீகநாதர் என்று பெயரிட்டனர். அந்த புற்றை இப்பொழுதும் கோவிலிலுள்ள ஒரு பெரிய தொட்டியில் வைத்துள்ளனர். அந்த புற்று மண்ணை சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பூசி வருகின்றனர். பாம்பு கடித்தல், தோல் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

    சிவபெருமானின் துணைவியார் பார்வதி தேவி சிவபெருமானையும், தன் அண்ணன் மஹாவிஷ்ணுவையும் ஒன்று சேர காண விரும்பி, அதற்காக புங்கவன யாத்திரை சென்றாராம். ஆடி மாதம் ஒன்பது நாட்கள் விரதமிருந்து பூஜைகள் செய்தார். பவுர்ணமி அன்று அவர் விருப்பம் நிறைவேற பூஜையின் முடிவில் சங்கரரும், மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நாராயணராக காட்சி அளித்து ஆசி கூறியதால், இந்த இடம் சங்கர நாராயணர் கோவில் ஆயிற்று.

    சிவபெருமான்-விஷ்ணுவை வழிபட்ட நாக அரசர்கள்

    நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இருவரும் போட்டியில் யாருடைய இறைவன் பெரியவர் என்று வினா எழுப்பியதற்கு விடை தரும் வகையில் சிவனும் மஹாவிஷ்ணுவும் இணைந்து, சங்கர நராயணராக காட்சி அளித்ததாகவும் மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

    உக்கிர பாண்டிய மன்னன் யானை மீது ஏறி, மீனாட்சி அம்மனை தரிசிக்க புறப்பட்டபொழுது யானை ஒரு குழியில் விழுந்து அதனால் அந்த குழியில் இருந்து எழ முடியவில்லை. அதுசமயம், ஒரு குடியானவன் அரசனிடம், காட்டில் உள்ள ஒரு எறும்பு புற்றின் மேல் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும் அந்த லிங்கத்தை ஒரு பாம்பு சுற்றி இருப்பதாகவும் கூறினான். அங்கு விரைந்து சென்று அந்த அதிசயத்தை கண்ட மன்னன், இது இறைவனின் ஆணை என்று தீர்மானித்து கட்டியது தான் இந்த தலம் என்றும் கூறுகின்றனர்.

    இப்படி பல புராண கதைகள் இத்தலத்தை பற்றி உள்ளது.

    இத்திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.

    புற்று மண்ணே அருள் பிரசாதம்

    இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.

    இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாகதேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டியதாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது.

    இங்குள்ள அம்மன் விரதம், பூஜைகள் செய்து அமைந்த கோவில் என்பதால் இந்த அம்மன் மிகவும் சக்தி பெற்றவள் என்கின்றனர். அம்மன் கருவறைக்கு முன்பு சக்கரம் போன்ற ஒரு சிறிய குழி இருக்கின்றது. மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் இந்த இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்பது உண்மை ஆகும்.

    ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.

    சித்திரை பிரம்மோத்சவம் ஏப்ரல் மாதம் 10 நாட்களும், ஆடித்தபசு ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களும், தெப்பத்திருவிழா தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு விழா சமயத்தில் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலுமிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கி பக்தர்களுக்கு வசதி செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக கூடுவர்.

    வளர்ந்து வரும் பெரிய நகரம்

    சங்கரன் கோவில் வளர்ந்து வரும் ஒரு பெரிய நகரம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, மிளகாய் வத்தல், நெல், வாழை, கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் இதை சுற்றி, நூற்பாலைகளும், 4000 விசைத்தறி ஆலைகளும், கைத்தறி நெசவுத் தொழிலும் இருக்கிறது.

    இங்கு உற்பத்தி ஆகும் பருத்தி சேலைகள், பாலி பருத்தி சேலைகள், துண்டுகள், டெரிதுவாலை துண்டுகள் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதால் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

    நிலவு லாவிய நீர்மலி வேணியன்

    அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

    மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

    சென்னையில் இருந்து தினமும் வரும் பொதிகை விரைவு ரெயில் மூலம் வரலாம். இங்கு ரெயில் நிலையம், பேருந்து நிலையமும் உண்டு.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து ஆகம பூஜைகளும் பக்தர்களுக்காக தவறாமல் செய்யப்பட்டு வருகின்றது.

    • தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
    • தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

    கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

    சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

    தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    • இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.
    • கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று மாலை கிரிவலத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    இரவு வரை பக்தர்கள் கிரிவலப் பாதையை சுற்றி வந்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியில் உள்ள சின்ன கடை தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.50 கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது. சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கூடுதலாக தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல பக்தர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் சீராக செய்யப்படவில்லை.

    இன்று பக்தர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சிறப்பு ரெயில், பஸ் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது.
    • இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரகுப்தருக்கு சன்னதி உள்ளது.

    சித்ரா பவுர்ணமியன்று மட்டும் சிதிரகுப்பருக்கு எருமை பால் அபிஷேகம் செய்யபடும். அதன்படி சித்ரா பவுர்ணமியான இன்று அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர குப்தருக்கு எருமை மாட்டு பால் அபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.***திருவண்ணாமலை, மே.5-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் நேற்று இரவு முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப் படவில்லை. அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர். மேலும் ஆட்டோக்களும் இயக்கப் பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

    14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பாதுகாப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.* * *திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.* * *சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.* * *திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரை வசந்த உற்வசத்தையொட்டி மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது.

    • பவுர்ணமி இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு பவுர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×