search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழு அடைப்பு போராட்டம்"

    • பெங்களூரு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது.
    • எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு நாளை மறுநாள் (29-ந் தேதி) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்துக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்குகிறார்.

    இது குறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-

    நாங்கள் வருகிற 29-ந் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் பெங்களூருவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். பெங்களூரு முழு அடைப்பு வேண்டாம் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை நடத்தியவர்கள் ஏற்கவில்லை. பெங்களூரு மட்டுமே கர்நாடகம் இல்லை. எங்களின் குரல் டெல்லியில் உள்ள பிரதமருக்கு கேட்க வேண்டும்.

    இந்த போராட்டத்தில் 2,000 அமைப்புகள் பங்கேற்கும். திரைத்துறை, உற்பத்தி துறை, ஓட்டல், போக்குவரத்து உட்பட அனைத்து துறையினர், விமான நிலைய ஊழியர்கள் பந்த்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    நேற்று பெங்களூரில் இவ்வளவு பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பந்த் நடத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிட்ட 58-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    நாளை மறுநாள் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவுவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. எனவே வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே செல்லும்.

    எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
    • கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

    ஆனால் கடலூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.

    கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இயல்பு நிலை காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

    கடலூரில் கடைகள் திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என்று ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    மேலும் கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும்.
    • போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கொச்சி:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

    மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருக்கும் நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் போராட்டம் சட்ட விரோதமானது எனவும், அரசியல்சாசனத்துக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்தது.

    வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை மீறிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் மற்றும் மாநிலக்குழுவே பொறுப்பு என குறிப்பிட்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.
    • ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    புதுடெல்லி :

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) பல்வேறு அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தன.

    ஆனால் இந்த போராட்டத்துக்கு பிரதான கட்சிகள் எதுவும் முறைப்படி ஆதரவு அளிக்காததால், ஓரிரு பகுதிகளை தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்டத்தால் பாதிப்பு இல்லை. அதேநேரம் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஏராளமான ரெயில்கள் எரிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் நேற்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக பீகாரில் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

    ஒட்டுமொத்தமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 612 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதில் 223 ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகும். இதைத்தவிர மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கியும், ஒரு வழியில் ரத்து செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

    அக்னிபாத் போராட்டம் மற்றும் வன்முறையின் முக்கிய களமாக திகழ்ந்த பீகாரில் நேற்றைய பாரத் பந்த், போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. இதைப்போல சில இடங்களில் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் போக்குவரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

    முழு அடைப்பையொட்டி ரெயில் நிலையங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சில மாவட்டங்களில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.

    மேற்கு வங்காளத்தில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ரெயில் மற்றும் சாலை போக்குவரத்திலும் எவ்வித இடையூறும் இல்லை. அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹவுரா பாலம் மற்றும் ரெயில் நிலையம் உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் இந்த முழு அடைப்பு லேசான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அங்கும் வன்முறை சம்பவங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அரியானா மற்றும் பஞ்சாப்பின் பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. அரியானாவின் பதேகாபாத், ரோத்தக் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனினும் இதில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. இரு மாநிலங்களிலும் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தலைநகர் டெல்லியில் அக்னிபாத் திட்டம் மற்றும் ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணை ஆகிய இரட்டை பிரச்சினையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சிவாஜி பாலம் ரெயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் ½ மணி நேரத்துக்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதைப்போல ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாடு தழுவிய முழு அடைப்பையொட்டி டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த போலீசார், பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்தனர். அத்துடன் தீவிர வாகன சோதனையும் நடந்தது. இதனால் தலைநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நொய்டா மற்றும் குருகிராமில் இருந்து டெல்லி நோக்கி வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதேநேரம் டெல்லியில் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின. முழு அடைப்பால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.

    ×