என் மலர்
நீங்கள் தேடியது "தாளவாடி"
- ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வெளிவருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
சில நேரங்களில் மனித உயிருக்கும் ஆபத்தை விளை விக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இரவு நேர காவலில் இருந்த விவசாயியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றிய விபரம் வருமாறு:- தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு சாமி (வயது 55). விவசாயி.
இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. தற்போது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இக்கலூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரத்தில் தங்களது தோட்டங்களில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவு பிரபு சாமி தனது கரும்பு தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்துள்ளார். அப்போது அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் பிரபுசாமி கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது.
திடீரென யானை தோட்டத்திற்குள் வந்ததால் அதிர்ச்சியடைந்த பிரபு சாமி அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் ஒற்றை யானை அவரை தாக்கியது. இதில் இரு கால்களில் பலத்த காயம் அடைந்த பிரபு சாமி வலியால் அலறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
பின்னர் யானை தாக்கி படுகாயம் அடைந்த பிரபு சாமியை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபு சாமி கோவை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது.
- குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை மற்றும் குண்டேரிப்பள்ள ம்அணை, பெரும்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம் அணை, மற்றும் பல்வேறு குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இதன் காரணமாக திம்பம், தாளவாடி, பர்கூர் மலை பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. பச்சை போர்வை விரித்தாற் போல் மலை பகுதிகள் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
நேற்றுமழை நின்றுவிட்டதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது. குறிப்பாக தாளவாடி, திம்பம், பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் கடுங்குளிரும், கடுமையான பனியும் நிலவியது.
இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மலை கிராமங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர். குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.
மலை பகுதிகளில் இருந்து சமவெளி பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
- தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.
சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.
அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.
அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 110 டிகிரிக்கு மேல் வெயில் கூட்டெரித்து வந்தது.
- திடீரென மழை பெய்தது இதனால் மக்கள் மகழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, ஆசனூர் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதியில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து பசுமையாக காணப்பட்டு வருகிறது.
இங்கு யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி எப்போதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இந்த வனப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இந்த வனப்பகுதி வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த வழியாக இயற்கை ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.
இந்த நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் கூட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு அவதி அடைந்து வருகிறார்கள்.
இதே போல் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வெயில் வாட்டுவதால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து கிடக்கிறது.
இந்த நிலையில் தாளவாடி, ஆசனூர், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் மக்கள் மகழ்ச்சி அடைந்தனர்.
இதே போல் நேற்று பகல் நேரத்தில் சத்தியமங்கலம், தாளவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் வழக்கம் போல் வெயில் வாட்டியது. இதை தொடர்ந்து நேற்று மாலை சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மேக மூட்டமாக காணப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், தொட்டகாஜனூர், தலமலை உள்பட வனப்பகுதிகளில் நேற்று மாலை திரென பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. வனப்பகுதிகளில் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இரவு முழுவதும் குளிந்த காற்று வீசியது.
தொடர்ந்து வெயிலின் தாக்கத்தால் அவதி பட்டு வந்த மக்கள் பலத்த மழை பெய்ததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதே போல் புளியம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக கொட்டியது. பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமாகின.
மேலும் நம்பியூர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது.
- மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
- ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைகிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்ப்பது, கூலி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இங்கு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி மாவநத்தம் கிராமத்தில் மாரம்மா (40) , தடசலட்டி கிராமத்தில் கடந்த கவுரியம்மாள் (65), ரங்கன் (75), மாதி (85) என 4 பேர் வாந்தி பேதியால் திடீரென உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 5-ந் தேதி மாரே (67) என்பவரும், இட்டரை கிராமத்தில் கேலன் (60) என்பவர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கடந்த வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து வயதானவர் உயிரிழந்தது மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று கிராமங்களில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆகியோர் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மேலும் பஞ்சாயத்து மூலம் குளோரின் பவுடர்கள் போடப்பட்டுள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீரை பயன்படுத்துவதன் மூலமும், குட்டை நீரை குடிநீராக குடித்ததாலும், மேலும் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதாலும் இங்குள்ள வயதானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வாந்தி பேதி ஏற்பட்டு மேற்கண்ட நபர்கள் இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தடசலட்டி கிராமத்தை சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இட்டரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் சத்தியமங்கலம் தனியார் மருத்துவ மனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செல்போன் தொடர் சேவை கூட இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் மற்றவர்களை தொடர்பு கொள்ளாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த மலைகிராமத்தில் மருத்துவ குழு கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், 108 ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைப்பட்டது. மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகு தியில் மின்சாரம் இல்லாமல் 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.
மலை கிராமம் கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளிதிம்பம், தடசலட்டி என 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.
மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகிலுள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரை குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
- குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மலை கிராமங்களுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அதனை த்தொடர்ந்து மின்சாரமின்றி இந்த மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இன்று 6-வது நாட்களாக அவதி பட்டு வருகின்றனர்.
மலைகிராமம் கேர்மாளம், ஒசட்டி, காட ட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளபுரம் என 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.
மின்தடையால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட ஜார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது.விவசாயிகள் பயிர்களுக்கு நீர்பாச்ச முடியாமலும், பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக வேதனையாக தெரிவித்தனர்.
தொடர்ந்து 6-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் அளித்து பயணில்லை என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, பாம்புகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் தாளவாடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதி பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனால் வனவிலங்குகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அடுத்த செசன் நகர் அருகே டி.எம்.எஸ். தோட்டம் பகுதி யில் சுமார் 10 அடி நீள முள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை கவனித்த தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது. இந்த மலைப்பாம்பு கோழிகள், ஆட்டை மிகவும் சுலமாக விழுங்கி விடும் அளவிற்கு பெரிதாக இருந்தது.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்து உள்ளனர்.
- வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தாளவாடி, திம்பம் மலைப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் அருள்வாடி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு வந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் 40 யானைகள் ஊருக்குள் வந்து விடும் என அச்சத்தில் இது குறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்பொழுது யானைகள் இடம்பெறும் காலம் என்பதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வருகின்றது. அதே
போன்றுதான் கர்நாடக மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தாளவாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம். வனப்பகுதி ஒட்டி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளதால் மலை கிராம மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரம் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். சாலையோரம் முப்புதர்களில் யானைகள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.
- தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
- நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 49) என்பவர் 2 ஏக்கரில் ராகி பயிர் செய்துள்ளார். நேற்று இரவு தோட்டத்தில் புகுந்த 4-க்கும் மேற்பட்ட யானைகள் ராகி பயிரை சேதாரம் செய்துள்ளது.
காலையில் மாதேகவுடா தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ராகி பயிர் சேதாரம் ஆனாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையால் ஒரு ஏக்கர் ராகி பயிர் சேதாரம் ஆகியுள்ளது. சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்தில் புகாதவாரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
யானைகள் தொடர்ந்து ராகி தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து யானை கூட்டங்கள் இடம் பெயர்ந்து தாளவாடி மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.
எனவே தாளவாடி வனப்பகுதி செல்லும் கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.
- தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
- 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வன சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
சமீப காலமாக கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்திற்கு கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். யானை கூட்டங்கள் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரம் ஏற்படும் என்பதால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக் கூட்டங்கள் அருள்வாடி கிராமத்திற்குள் புகாதவாறு கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலை கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன் குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் முட்டைக்கோசை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் தற்போது தாளவாடி மலைப்பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ ரூ.2-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து தாளவாடி விவசாயிகள் கூறும்போது, வெளி மார்க்கெட்டில் முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகும் நிலையில் வியாபாரிகள் எங்களிடமிருந்து முட்டைக்கோஸ் ரூ.2-க்கு கொள்முதல் செய்வதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் முட்டைகோசை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.