என் மலர்
நீங்கள் தேடியது "பறவைகள்"
- சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
- பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஜி.ராஜ சரவணன் இந்த சின்னஞ்சிறு குருவியை மீட்டெடுப்போம் எனக் கூறி இலவசமாக சிட்டுக்குருவிக் கூண்டை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.
ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினமாக உலகம் எங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இனத்திற்குப் பிறகு இந்த குருவிகள் ஆனது தனது இனத்தை பெருக்கும் கால சூழலுக்கு வருகிறது.
அதனால் இந்த தேதியை தொடங்கி நம் சிட்டுக்குருவி தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.
இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை மீட்டெடுப்பதற்கான ஒரு முறையை கண்டுபிடித்து அந்த முறையில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையே இந்த சின்னஞ்சிறு குருவிக்கு கூடு அமைத்து கொடுக்கும் முறையாகும்.
இந்த முறையை பயன்படுத்தி கடந்த ஓராண்டாக ஸ்ரீ ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுக்கான கூண்டு அமைத்து அதில் அந்த குருவி இனங்கள் குடியேறி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
நாகப்பட்டினத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆறுவடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இதன் இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக ஸ்ரீ அறுபடை பசுமைச் சிறகுகள் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம்.
இந்த அமைப்பின் மூலமாக சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
இதில் 60% க்கு மேலான கூண்டுகளில் இந்த குருவிகள் குடியேறிய தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உள்ளது.
தன்னார்வலர்கள் எங்களை அணுகி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்த சின்னஞ்சிறு குருவிக்கான கூட்டினை பெற்று செல்லலாம். 10 ஆயிரம் கூண்டுகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
வரும் கோடை காலத்தை மனதில் கொண்டு சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைப்பதற்கு என மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.
இந்த பாத்திரம் வழங்குவதில் மூன்று விதமான உள்நோக்கம் எங்களுடன் உள்ளது ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல். குருவி இனங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏதுவாக இந்த பாத்திரங்களை அமைத்தல்.
அழிந்து வரும் ஒரு தொழிலான மண்பானை செய்யும் தொழிலே ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று விதமான கருத்துக்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.
இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு சிட்டுக்குருவிக்கான கூண்டு, பறவைகளுக்கான நீர் வைக்கும் பாத்திரம் தேவையெனில் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது முகவரியினை பதிவு செய்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.
இந்த சின்னஞ்சிறு குருவினை மீட்டெடுப்போம்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் நகரில் கடந்த 17 ஆண்டுகளாக நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனம் உலக அதிசயங்கள் மற்றும் பல்வேறு அதிசயங்களை தத்ரூபமாக வடிவமைத்து, குமரி மாவட்ட மக்களை அதிசயிக்க வைத்து வருகிறது.
இந்த நிறுவனம் 18-வது ஆண்டாக இந்த ஆண்டு "பனி உலகம் (ஸ்னோவேர்ல்டு)-ஆஸ்திரேலிய பறவைகள்" என்ற பெயரிலான பொழுது போக்கு பொருட்காட்சியை, நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அமைத்துள்ளது.
பனிமலைக்கு சென்று வந்ததை நினைவுபடுத்தும் வகையில் பனிக்கட்டிகளால் ஆன மலையை உருவாக்கியும், ஆஸ்திரேலியாவில் உள்ள பறவைகள், விலங்குகளை தத்ரூபமாக வடிவமைத்தும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த பொருட்காட்சியின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர் அவர்கள் பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டு இருந்த ஜில்லென்ற பனிமலை, ஆஸ்திரேலிய பறவைகள் மற்றும் விலங்குகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டீனா கோகிலவாணி, கவுன்சிலர்கள் ராணி, ரமேஷ், ஸ்ரீலிஜா மற்றும் கவுன்சிலர்கள், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், வக்கீல் சதாசிவன், நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனத்தை சேர்ந்த ஏ.பாரூக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட் காட்சி நிறுவன பாரூக் கூறியதாவது:-
மக்களின் பேராதரவை பெற்ற ராட்டினங்களுடன் கூடிய "ஸ்னோ வேர்ல்டு-ஆஸ்திரேலிய பறவைகள்" பொருட்காட்சி 20-ந்தேதி தொடங்கி வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறும். இந்த பொருட் காட்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருட்கள், சமையலறை சாதனங்கள், சிறுவர்க ளுக்கான விளை யாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பெண்களுக்கு தேவையான அழகு சாதனப்பொருட்கள், நாற்காலி, ஷோபா கம் பெட்டுகள், டிரஸ்சிங் டேபிள், பெட்ஷீட்டுகள், தரைவிரிப்புகள், நிலம் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கல்வி சார்ந்த நிறுவனங்கள் இந்த பொருட்காட்சியில் அரங்கு கள் அமைத்துள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நாவிற்கு சுவையான பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், சோலாப்பூரி, பானிபூரி, டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், டீ-காபி, மதுரை பேமஸ் ஜிகர்தண்டா உள்ளிட்ட சிற்றுண்டி கடைகளும் இடம் பெற்றுள்ளன.
குடும்பத்தோடு விளையாடி மகிழ ஜெயிண்ட் வீல், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், கோஸ்டர், பேன்சி கார்கள், மினி ரெயில், ஹெலிகாப்டர் மற்றும் பல விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. இரவை பகலாக்கும் மின்ஒளியில் நடைபெறும் இந்த பொருட்காட்சி கோடை கால விடுமுறை முழுவதும் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்திடும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இயற்கையிலேயே பறவைகளை ரசிக்கும் ஆர்வம் கொண்ட சேகர் வீட்டு மொட்டை மாடியில் நின்று பறவைகளுக்கு தண்ணீர், உணவு பொருட்களையும் வைத்துள்ளார்.
- பறவைகள் எல்லாம் சேகர் வீட்டுக்கு வந்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரத் தொடங்கி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை பாரதி தெருவில் பொழுது சாயும் நேரத்தில் ஒரு வித்தியாசமான காட்சியை பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் பார்த்து வந்தார்கள்.
கிரீச்... கிரீச்... என்ற சத்தத்துடன் பறந்து செல்லும் ஒன்றிரண்டு பச்சைக் கிளிகளை பார்த்தாலே மனம் பரவசப்படும். அதுவே நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்தால்...
அதேபோல் புறாக்கள், சிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள் என்று பல வகை பறவைகளும் நூற்றுக்கணக்கில் சிறகடித்து பறந்து வந்தால்...
பார்ப்பது கண் கொள்ளா காட்சியாக இருக்குமே. அப்படித்தான் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் கண்கொள்ளா காட்சியாக மக்கள் பார்த்து ரசித்து வந்தார்கள்.
இனி அந்த பறவைகளை பார்க்க முடியாது. ரசிக்க முடியாது. என்ன ஆச்சு அந்த பறவைகளுக்கு? என்ற எண்ணம் எல்லோரிடமும் எழுவது இயல்புதான்.
தனி ஒரு மனிதனுக்கு வந்த சோதனை ஆயிரக்கணக்கான பறவைகளையும் பிடித்துக் கொண்டதுதான் சோகத்திலும் சோகம்.
சேகர். 40 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இருந்து குடும்பத்தை பிரிந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
படித்திருந்தது 6-ம் வகுப்பு என்ன வேலை கிடைக்கும்? அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. என்ன வேலை கிடைத்தாலும் பார்க்க தயார் என்று டி.வி., ரேடியோ பழுது பார்க்கும் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
வேலை பார்த்துக்கொண்டே மின்னணு பொருட்கள் பழுதுபார்க்கும் 2 ஆண்டு பட்டய படிப்பையும் படித்து முடித்தார்.
மின்னணு தொழில் நுட்பத்தில் கேமராக்கள் அறிமுகமான அந்த கால கட்டத்தில் பழுது நீக்கும் தொழில் தெரிந்த சேகருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. நல்ல வருவாயும் கிடைத்தது.
அப்போதுதான் ராயப்பேட்டை பாரதி தெருவில் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார். இயற்கையிலேயே பறவைகளை ரசிக்கும் ஆர்வம் கொண்ட இவர் வீட்டு மொட்டை மாடியில் நின்று பறவைகளுக்கு தண்ணீர், உணவு பொருட்களையும் வைத்துள்ளார்.
இதனால் ஆரம்பத்தில் ஒன்றிரண்டாக வந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி இருக்கிறது. சேகரும் அதற்கேற்ப உணவு பொருட்களையும் அதிக அளவில் வாங்கி போட தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்துள்ளன.
வந்த பறவைகள் எல்லாம் சேகர் வீட்டுக்கு வந்தால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரத் தொடங்கி உள்ளது. தினமும் மாலையில் 4 ஆயிரம் பறவைகள் வந்து சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளது.
இந்த மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் 25 ஆண்டுகளாக அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்றுவிட முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து வீட்டை விட்டு காலி செய்தவர் வழக்கம்போல் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பறவைகள் உணவுக்காக தவித்தபடி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததை பார்த்து வேதனை அடைந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இயற்கையிலேயே எனக்கு பறவைகளின் மீது ஈர்ப்பு அதிகம். எனவே நான் தங்கி இருந்த வீட்டின் மாடியில் பறவைகளுக்கு நீரும், இரையும் வைக்கத் தொடங்கினேன். தினமும் 4 ஆயிரம் பறவைகள் இரை தேடி வருகின்றன. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றுள்ளனர்.
நான் 25 ஆண்டுகளாக தங்கி இருந்த கட்டிடத்தை உரிமையாளர் விற்க முயன்ற நிலையில் இயற்கை ஆர்வலர்கள் பலர் அதை வாங்கி எனக்கு வழங்க விரும்பினர். ஆனால் உரிமையாளர் எங்களிடம் விற்க முன்வரவில்லை. அதனால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
எனது குடும்பத்துக்கு செலவிடுவதைவிட இந்த பறவைகளுக்குக்காகவே எனது வருவாயில் பெருமளவு செலவிட்டு வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் மாலை நேரத்தில் இரைதேடி வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை பார்க்கும்போது மனம் வேதனைப்படுகிறது.
இவ்வாறு கூறிய அவர், பூட்டிய வீட்டின் முன்பு கலங்கிய கண்களுடன் வானத்தை வெறித்து பார்த்தபடி நின்றார்.
- சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
- பறவைகள் சிறகடித்து பறப்பது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு
ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது காலநிலை மாற்றுவதனாலும் ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்கவும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே ஆயிரக்க ணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது.
தற்போது சரணால யத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் ள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரைதேடுவதையும் ,பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு , நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும் , படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
- சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
- நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.
வேதாரண்யம்:
கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.
- அனைத்து வகை வெளிநாட்டு பறவைகளும் வந்து உள்ளதால் பள்ளிக்கரணை ஏரி பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
- அக்டோபர் முதல் வாரத்திற்கு மஞ்சள் வாலாட்டி குருவி வருகை தரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் வந்து உள்ளது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக பள்ளிக்கரணை சதுப்புநில ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் வெளிநாட்டு பறவைகள் பள்ளிக்கரணை ஏரிக்கு வருவது வழக்கம். தற்போது ஏரியில் நீர் நிரம்பி காணப்படுவதால் பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. நீலச்சிறகு வாத்து, சாம்பல்லை, தட்டைவாயன், மஞ்சள் வாலாட்டி, கிருவைததாரா வாத்து உள்ளிட்ட பறவைகள் வந்து உள்ளன. முதல் கட்டமாக வரும் அனைத்து வகை வெளிநாட்டு பறவைகளும் வந்து உள்ளதால் பள்ளிக்கரணை ஏரி பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
இதேபோல் சிவப்பு கழுத்து பருந்து, விரால் அடிப்பான் பருந்து மற்றும் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு போன்றவைகளும் காணப்படுகின்றன. வெள்ளை வாலாட்டி, கொடிக்கால் வாலாட்டி ஆகியவை இன்னும் 10 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பறவைகள் நலஆர்வலர் ஒருவர் கூறும்போது, செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து அக்டோபர் முதல் வாரத்திற்கு மஞ்சள் வாலாட்டி குருவி வருகை தரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் வந்து உள்ளது. இவை எதிர்பார்த்த நேரத்தில் வந்து சேர்ந்து உள்ளன. வழக்கமாக ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் 72 புலம்பெ யர்ந்த பறவைகள் உட்பட 196 வகையான பறவைகள் கடந்த சில ஆண்டுகளாக வருவது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது என்றார்.
- வெளிநாடுகள்-பல்வேறு மாநிலங்களில் இருந்து வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன.
- கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேட்டங்குடி பறவை கள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணால யத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாத இறுதிவரை சுமார் 5 மாதங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முக்குளிப்பான், கூழைக்கடா, பெரிய நீர்காகம், பாம்பு தாரா, குளத்துக் கொக்கு, மடையான், உண்ணிக் கொக்கு, பக்கா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரி நீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், மார்களியன், ஊசிவால் வாத்து, புள்ளி அழகு வாத்து, நீலச்சிறவி, பூனைப்பருந்து, வெண்மார்பூ மின் கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை இனங்கள் பருவமழை காலங்களில் இச்சரணாலயத்திற்கு இன பெருக்கத்திற்காக வருகை புரிவது வழக்கமாகும்.
தற்சமயம் இந்த ஆண்டு முதல் கட்டமாக வெளி மாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, முக்குளிப்பான், குளத்து கொக்கு போன்ற பறவை இனங்களே வருகை தந்துள்ளது. இதுகுறித்து வன அலுவலர் தெரிவிக்கையில். பொதுவாக இங்கு இனப்பெருக்கத்திற்காக வருகைபுரியும் பறவை இனங்கள் உடனடியாக தங்களது சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக தட்பவெப்ப சூழ்நிலை, இறைதேடல், மற்றும் தங்குமிடம் அமைத்தல் போன்றவற்றை தேர்வு செய்து அதன் பின்னரே அடைகாக்கும் நிலைக்கு செல்லும். இந்த ஆண்டு பருவமழை காலம் சற்று காலதாமதமாக தொடங்கியுள்ள காரணத்தினால் வெளி மாநில பறவைகள் மட்டும் தற்சமயம் வருகை புரிந்து அதற்கான சூழ்நிலையை தேர்வு செய்து வருகிறது. மேலும் வர இருக்கின்ற ஓரிரு வாரங்களில் வெளிநாடு களில் இருந்து வரும் பறவை இனங்களின் வருகை முழுமையாக வரக்கூடும் என்றார்.
சிவகங்கை மாவட்டத்தி லேயே ஒரே ஒரு சரணாலயமாக இருக்கக்கூடிய இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றிலும் தற்சமயம் சீமை கருவேலை மரங்களும், நாட்டு கருவேலை மரங்களும் இருந்து வருகிறது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி வரும் காலகட்டங்களில் இங்கு வரும் பறவை இனங்கள் தங்களின் இரைக்காக வெகு தூரம் செல்லாமல் இருப்பதை தவிர்க்க பறவைகளுக்கு பலன் தரக்கூடிய பழ வகை மரக்கன்றுகளையும், குறுங்காடுகள், அடர்ந்த வனங்கள் போன்ற வற்றை இப்பகுதிகளில் அமைத்து ஒரு சாதக மான சூழ்நிலையை இப்பறவை இனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கூறி வருகின்றனர். கடந்த 1977 முதல் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக இருந்து வரும் இந்த இந்த சரணாலயத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இதனை மேம்படுத்தி அவர்களின் வருகையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யாக இருந்து வரு கிறது என்பது குறிப்பி டத்தக்கது.
- எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது.
- எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை.
சென்னை:
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் புயல் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக எண்ணூர் முகத்துவார பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் தேங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளன.
கடந்த 10-ந் தேதி முதல் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதிகளில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த பணிகள் முடிவுக்கு வந்து உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சுற்றுச் சூழல் துணை செயலாளர் சுப்ரியா சாகு, எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் தேங்கிய பகுதிகளை நேற்று பார்வையிட்டார். பின்னர் ரெட்டுக்குப்பம் பகுதியில் நடை பெற்ற ஆய்வுக் கூட் டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் சுப்ரியா சாகு இதை தொடர்ந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எண்ணூர் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் 4 பகுதிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியை உள்ளூர் மீனவ மக்களின் துணையுடன் சுமார் 900 பேர் மேற்கொண்டனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான மாநில குழுவினர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றது.
128 படகுகள், 7 ஜே.சி.பி., 2 டிராக்டர்கள், 8 கல்லி சக்கர்ஸ், 6 பொக்லைன்கள், 3 ஹைட்ராக்ரான்கள், 4 பிக்கப் டிரக்குகள், 8 ஆயில் பூமர்கள், 6 ஆயில் ஸ்கிம்மர்கள் மற்றும் 15 டிப்பர்கள் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டன. மொத்தமாக 105.82 கிலோ லிட்டர் எண்ணெய் படர்ந்த நீர் மற்றும் 393.5 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இப்படி எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக சுற்றுச் சூழல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதி மீனவர்கள் தாங்கள் பயன்படுத்தும் முகத்துவார பகுதிகளில் சிறிய அளவில் தேங்கி காணப்படும் எண்ணெய் கழிவுகளை தொடர்ந்து தாங்களாகவே அகற்றி வருகிறார்கள்.
எண்ணெய் கழிவுகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் முகத்துவார பகுதியில் வசித்து வந்த பறவைகளையும் முடக்கி போட்டுள்ளது. எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பெலிக்கான் பறவைகள் ஏராளமாக காணப்படும். இவைகள் தவிர மேலும் பல்வேறு வகையான பறவை இனங்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
எண்ணூர் முகத்துவார பகுதியில் உள்ள அவை யாத்தி காடுகள் மற்றும் பறவையினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறையினரும், பறவைகள் நல ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆய்வின் போது அவர்கள் கண்ட காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. வெள்ளை வெளேர் என காட்சி அளிக்கும் பெலிக் கான் பறவைகள் உள்பட பல்வேறு பறவை இனங்கள் தங்களது தோற்றத்தை இழந்து எண்ணெய் தோய்ந்த உடலுடன் பொலிவிழந்து காணப்பட்டன.
இதே போன்று 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வனத்துறையினரும், சுற்றுச்சூழல் துறையினரும் கண்டறிந்து உள்ளனர்.
பறவைகளின் உடலில் ஒட்டியுள்ள எண்ணெய் கழிவுகள் 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டதால் உடலோடு உடலாக ஒட்டி காணப்படுகிறது. இப்படி எண்ணெய் பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை. தாழ்வாகவே பறந்து செல்கின்றன.
எண்ணூர் முகத்துவார பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவுகளால் ஏராளமான மீனவர்களும், கடல் வாழ் உயிரினங்களும் செத்து மடிந்தன.
இப்படி விஷமாகிப் போன மீன்களை ஏதும் அறியாத பறவை இனங்கள் சாப்பிட்டுள்ளன. பின்னர் அந்த மீன் உணவுகள் ஒத்துப் போகாமல் பறவைகள் வாந்தியும் எடுத்துள்ளன. இந்த காட்சிகளையும் வனத் துறையினர் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எண்ணெய் கழிவுகளால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு, விஷமாகிப் போன மீன்களால் உடல்நிலை பாதிப்பு என பறவை இனங்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அவை யாத்தி காடுகளில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை அதிகாரிகள் இன்று தொடங்கியுள்ளனர்.
- கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன.
- உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 6 கூழைக் கடா பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவொற்றியூர்:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையின் போது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மணலியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய்கழிவு பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து முகத்துவாரத்தில் கடலில் பரவியது. மேலும் வெள்ளத்தின் போது வீடுகளிலும் படிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த எண்ணெய்கழிவால் கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன. அதன் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதனை வனத்துறையி னர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். பறவைகளின் இறக்கைகளில் இருந்த எண்ணெய்கள் 'பிரஷ்' மூலம் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டன.
இதற்கிடையில் எண்ணெய் கழிவால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 6 கூழைக் கடா பறவைகள் மீட்கப்பட்டு கிண்டி பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுவதும் நல்ல நிலையில் உள்ள அந்த பறவைகள் காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளது.
எண்ணூர் கடல் பகுதி மற்றும் முகத்துவார பகுதிகளில் எண்ணெய்கழிவின் பாதிப்பு தற்போது குறைந்து இருந்தாலும் மேலும் பல பறவைகள் பாதிக்கப்பட்டு காட்டுப்ப குதி மற்றும் நீர்நிலையில் இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து கொசஸ் தலை ஆற்று பகுதியில் மேலும் ஒரு வாரத்திற்கு கண்காணிப்பு மற்றும் பறவைகள் மீட்பு பணிகள் நடைபெறும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட கூழைக்கடா பறவைகள் எண்ணெய்கழி வில் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவை மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. கடந்த வாரத்தில் எங்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட 11 பறவைகளை நேப்பியர் பாலம் மற்றும் அடையாறு ஆற்று ஓரத்தில் கண்டனர்.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. எனினும் பறவைகள் கண்காணிப்பு மேலும் ஒரு வாரத்திற்கு இருக்கும் என்றார்.
- கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும்.
- ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாப்பதன் மூலம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பறவைகள் வாழிடமாக மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள நிலையில், அந்தச் சூழலை சீர்கெடுக்கும் வகையிலான நிகழ்வுகள் அப்பகுதியில் பெருமளவில் நடந்து வருவது கவலையளிக்கிறது.

கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டிய பல பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பதை பல தருணங்களில் நானே பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும். ஆனால், இந்தக் கொடையை தக்கவைத்துக் கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதை அழிப்பதற்கான செயல்கள் தான் அதிக அளவில் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறை பயன்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
- பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.
உடுமலை:
தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட என். மருள்பட்டிகுளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம்குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர்குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
உடுமலை வனச்சரகத்தில் உள்ள செங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியளாளர் மகேஷ் குமார், ஆரண்யா அறக்கட்டளை கார்த்திகேயன்,ரவிக்குமார், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் மாங்குயில், நீல தாளை கோழி, நீர்காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன்கொத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பணியானது இன்றும் நடைபெற்றது.
- பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.
- பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் குடிதாங்கிகுளம், பத்மநேரி குளம், கங்கணாங்குளம், சிங்கிகுளம் மற்றும் பச்சையாறு அணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.
கணக்கெடுப்பு பணியுடன் பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில குளங்களில் கழிவுநீர் கலப்பதால் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாகவும், குழுவினர் தெரிவித்தனர்.
கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.