search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன அதிபர்"

    • பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • 5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    மாஸ்கோ:

    இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்று தொடங்கியது.

    இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதினிடம், உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வுகாண உதவுவதற்கு தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.

    பின்னர் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானை சந்தித்து பேசினார். மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலமும் தூதரக ரீதியிலும் அணுக மோடி அழைப்பு விடுத்தார்.

    அப்போது மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்தார்.

    பின்னர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இரு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் எல்லை விவகாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தார். அப்போது சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

    2022-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.

    ஆனால் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    இதற்கிடையே எல்லையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தனது ரோந்து பணிகளை மீண்டும் தொடங்க உள்ள நிலையில். மோடி-ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார்.
    • சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    பீஜிங்:

    மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், சீனாவுக்கு 5 நாள் பயணமாக சென்று உள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் சீனா-மாலத்தீவு இடையே சுற்றுலா, பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம் உள்பட பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மாலத்தீவு அரசுக்கும், சீன அரசுக்கும் இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இப்போது இரு நாட்டு அதிபர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று தெரிவித்துள்ளது.

    மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். அவர் பதவி ஏற்றதும் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்றதை மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் விமர்சனம் செய்தனர். இதையடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டது.

    இவ்விவகாரத்தால் இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு சென்று அந்த நாட்டுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் மாலத்தீவுக்கு சீனாவில் இருந்து சுற்றுலாவாக அதிகம் பேர் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    மாலத்தீவு சுற்றுலா செல்வதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது பிரதமர் மோடியை விமர்சித்ததால் மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் பலர் ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாட்டு மக்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 2023ல் தெரிவித்திருந்தார்
    • மக்களின் உணர்வை பொறுத்தே சீன உறவு நிர்ணயிக்கப்படும் என ட்சாய் இங்-வென் தெரிவித்தார்

    சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தீவு நாடான தைவான், சுயாட்சி பெற்ற தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டாலும், அதை பல வருடங்களாக ஏற்று கொள்ளாமல் சீனா அந்நாட்டின் மீது உரிமை கொண்டாடி வருகிறது.

    2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். ஜி ஜின்பிங், தனது உரையில், "தைவான், சீனாவுடன் இணைக்கப்படும்" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    கடந்த வருடம் ஜி ஜின்பிங் ஆற்றிய புத்தாண்டு உரையில், "தைவான் தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்" என அறிவித்திருந்தார்.

    ஆனால், இவ்வருடம் திட்டவட்டமாக இணைப்பை குறித்து அவர் பேசியிருப்பது புதிய சச்சரவிற்கு வழிவகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கடந்த 8 வருடங்களாக தைவான் நாட்டை ஆண்டு வரும் ஜனநாயக வளர்ச்சி கட்சியை (Democratic Progressive Party) சேர்ந்த அதிபர் ட்சாய் இங்-வென் (Tsai Ing-wen) தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில், "மக்களின் உணர்வை பொறுத்தே சீனாவுடனான உறவு நிர்ணயிக்கப்படும்" என அறிவித்தார். தைவானின் மற்றொரு முக்கிய கட்சியான குவோமிண்டாங் கட்சி (KMT) சீனாவுடன் நட்பு ரீதியான உறவை மேற்கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ராணுவ நடவடிக்கை மூலம் தைவானை தன் நாட்டுடன் இணைக்க சீனா முயலுமா என்பதும் அவ்வாறு நடந்தால் அமெரிக்கா தலையிடுமா என்பதும் வரும் மாதங்களில் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இரு நாட்டு உறவை பலப்படுத்த ஜின்பிங் அமெரிக்கா சென்றார்
    • ஜின்பிங்கின் காரை கண்டு "அழகான கார்" என்றார் பைடன்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.

    2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் நிலைமை மேலும் சிக்கலானது. இதில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் அதிக பாதிப்புக்குள்ளானது.

    இதன் காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே உயர்மட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

    தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், சீன அதிபர், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் பயணிக்கிறார். அவர் அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார்.

    "இது மிக அழகான கார்" என ஜோ பைடன் பாராட்டினார்.

    அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், "ஆம், இதன் பெயர் ஹாங் கி" என பதிலளித்தார்.

    மீண்டும் ஜோ பைடன், "இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது. சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று" என கருத்து தெரிவித்தார்.

    இதனையடுத்து இருவரும் கைகுலுக்கி கொண்டனர். பின் சீன அதிபர் விடை பெற்றார்.

    இரு நாட்டு அதிபர்களும் தங்கள் கார்களை குறித்து சில நொடிகள் தங்கள் மொழியில் பேசுவதும், அவற்றை இருதரப்பு மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கும் காட்சிகளும் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கடினமான சிக்கல்களை தீர்க்க இரு நாட்டு அதிபர்களும் முயன்று வரும் போது, இது போன்ற மென்மையான தருணங்கள் இணைய தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் பயணிக்கும் கேடிலாக், 8 ஆயிரம் கிலோ எடையுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே பகிரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் சீன அதிபர் பயணிக்கும் ஹாங் கி, 6-லிட்டர் வி12 (V12) எஞ்சின் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தாலும், இவை குறித்த தகவல்களும் வெளியே பகிரப்படுவதில்லை. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும்.

    புதுடெல்லி:

    தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. தென் ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசின் அழைப்பின் பேரில் மோடி அங்கு செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும்.

    உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நடைபெறுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் குழுவானது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 5 பொருளாதார நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர்.
    • கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார்.

    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜின்பிங் அதிபராக தேர்ந்தெடுக்கபட்டார். அதன்பிறகு 2வது முறையாக அவர் அதிபராக பதவி வகித்து வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் அவர் சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சீனா கம்யூனிஸ்டு கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத அளவில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் முறையாக ஜின்பிங் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அனைத்து உயர் மட்ட குழுவினரும் சேர்ந்து அவரை தேர்ந்தெடுத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்று சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். மேலும் அவர் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

    சீன வரலாற்றில் இதுவரை யாரும் தொடர்ந்து 3 முறை அதிபராக பதவி வகிக்கவில்லை. அந்த சாதனையை ஜின்பிங் பெற்று இருக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவர் சீன அதிபராக பதவி வகிப்பார். தற்போது 69 வயதாகும் அவர் கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து இப்போது ஜின்பிங் மீண்டும் சீன அதிபராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.
    • எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    பீஜிங் :

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப் படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும்கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.

    இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுவரை 17 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின. ஆனாலும் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. சீனப்படையினர் அங்கு அத்துமீறி கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதும், அவர்களை இந்தியப்படையினர் துரத்தியடிப்பதும் தொடர்கதையாக நீளுகிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கில் உள்ள சீன ராணுவ தலைமையகத்தில் இருந்தவாறு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப்படையினரின் போர் தயார் நிலையை நேற்று காணொலிக்காட்சி வழியாக திடீரென ஆய்வு செய்தார். அப்போது எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதி தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது சீன ராணுவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சீனப்படையினரிடம் விசாரித்தார். இதற்கு சீனப் படைவீரர் ஒருவர் பதில் அளிக்கையில், "நாங்கள் தற்போது 24 மணி நேரமும் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

    அவர்களது அன்றாட பணி நிலைமை பற்றி ஜின்பிங் கேட்டதோடு, விருந்தோம்பல் தன்மையற்ற நிலப்பரப்பில் சாப்பாட்டுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கின்றனவா என பரிவுடன் விசாரித்து அறிந்தார்.

    இதையொட்டி சீன அரசு தரப்பு ஊடகம் கூறுகையில், "எல்லையில் உள்ள படைவீரர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வருகிற ரோந்துப்பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றி அதிபர் ஜின்பிங் கேட்டறிந்தார். சீனப்படை வீரர்கள் எல்லைப் பாதுகாப்பின் மாதிரிகள் என பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சிகளில் ஈடுபடவும், புதிய பங்களிப்புகளை வழங்கவும் ஊக்கம் அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனாவுக்கும், கனடாவுக்கும் ஏற்கனவே பிரச்சினைகள் உண்டு.
    • இது தொடர்பான வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலி :

    இந்தோனேசியாவின் பாலித்தீவில் 'ஜி-20' நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 15, 16-ந் தேதிகளில் நடந்தது.

    இந்த மாநாட்டின்போது, மூடிய அறையில் நடந்த விவாதத்தில் தங்கள் நாட்டின் தேர்தல்களில் சீனா தலையிட்டதாகவும், உளவு பார்த்ததாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிப்பேசினார். இது தொடர்பாக அவரும் சீன அதிபர் ஜின்பிங்கும் பேசிக்கொண்டவை, அங்குள்ள நாளேடுகளில் செய்திகள் ஆகின. அவற்றை கண்டு சீன அதிபர் ஜின்பிங் அதிர்ந்து போனார். இந்தத் தகவல்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதான் ஊடகங்களில் கசிய விட்டுள்ளார் என அவர் முடிவுக்கு வந்தார்.

    இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சீன அதிபர் ஜின்பிங் நேருக்கு நேர் மோதினார். குறிப்பாக அவர், " ஜி-20 உச்சி மாநாட்டில் பேசப்பட்ட இந்த தகவல்கள் வெளியே கசிந்தது சரியல்ல, இந்த நடத்தை பொருத்தமற்றது" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் மாண்டரின் என்னும் சீனப்பேச்சு வழக்கு மொழியில் கூறினார். அதை அவரது மொழி பெயர்ப்பாளர் மொழிபெயர்த்தும் சொன்னார்.

    ஒரு நாட்டின் அதிபர், இன்னொரு நாட்டின் பிரதமரை நோக்கி நேருக்கு நேர் கூறிய இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனாலும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிரித்தவாறு தலையாட்டிக்கொண்டு, " கனடாவில் நாங்கள், சுதந்திரமான, வெளிப்படையான, மனம் திறந்த பேச்சில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்," என பதிலடி கொடுத்தார்.

    மேலும், "நாம் ஆக்கப்பூர்வமான வகையில் பணியாற்றுவது பற்றி தொடர்வது குறித்து ஆராய்வோம். ஆனால், நாங்கள் உடன்படாத விஷயங்களும் அவற்றில் இருக்கும்" என குறிப்பிட்டார்.

    ஆனால் அவர் இதைச் சொல்லி முடிக்கும் முன்பாக சீன அதிபர் ஜின்பிங் குறுக்கிட்டு, "முதலில் அதற்கான சூழலை நீங்கள் உருவாக்குங்கள்" என்று கூறி விட்டு ஜஸ்டின் ட்ரூடோவுடன் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சீனாவுக்கும், கனடாவுக்கும் ஏற்கனவே பிரச்சினைகள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

    • தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
    • 3வது முறையாக சீன அதிபரான பிறகு ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார்.

    வாஷிங்டன்:

    இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் 3வது முறையாக சீன அதிபரான பின்பு, ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார். அப்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க செரீப் திட்டம்.
    • பாகிஸ்தான் பிரதமருடன், அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம்

    பெய்ஜிங்:

    சீன அதிபராக ஜி ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு செரீப் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டு அமைச்சர்கள் பிலாவல் பூட்டோ சர்தாரி,இஷாக் தார், அக்சன் இக்பால், மரியம் ஔரங்கசீப்,சாத் ரபீக் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பங்கேற்றுள்ளது. தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் செரீப்பை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

    தமது பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள், அந்நாட்டுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    குவாதார் துறைமுகத்தை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

    • ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.
    • நம் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வானதை அடுத்து ஜின்பிங் மீண்டும் சீன அதிபராக பதவியேற்கிறார். இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங்கிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின், ஜின்பிங்கிடம் கூறியுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் தெரிவித்துள்ளது.

    மேலும், ஜின்பிங் செழிப்பாகவும், புதிய வெற்றிகளை பெற விரும்புகிறேன். நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று புதின் தெரிவித்துள்ளார்.

    • பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • பொது குளியலறை சுவர்களில் ஜின்பிங்குக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

    சீனாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. அதிபராக ஜி ஜின்பிங் உள்ளார். ஆளுங்கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    இதற்கிடையே ஜின்பிங் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீஜிங் நகரில் சீன அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிராக பேனர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிபர் ஜின்பிங்குக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பீஜிங்கை போல் மற்ற நகரங்களிலும் மக்களின் போராட்டம் பரவியுள்ளது.

    பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள பொது குளியலறை சுவர்களில் ஜின்பிங்குக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழக வளாகங்களில் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடந்தது.

    ×