என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேரோட்டம்"
- வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
- விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. வழக்கமாக தை மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.
இந்தநிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனமும், 6 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த கருடசேவையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, பூந்தமல்லி, ஊத்து க்கோட்டை, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 21-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லாக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
- மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் தேர்த்திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
- வாழப்பாடியில் இருந்து சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மன்னாயக்கன் பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளும், தேரோட்டமும் நடத்துவது மரபாக தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி – மன்னாயக் கன்பட்டி கிராமங்களில் கோயில் தேர்த்திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற பிறகு, வாழப்பாடியில் இருந்து சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மன்னாயக்கன் பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளும், தேரோட்டமும் நடத்துவது மரபாக தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி திரவுபதியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் நடைபெற்றது. இதனையடுத்து, மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் தேர்த்திருவிழா நடத்திட முடிவு செய்தனர்.
கடந்த 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், அம்மன் திருத்தேர் ரதமேறுதல் மற்றும் பக்தர்கள் அலகுகுத்தி, கரகமெடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்றும் நேற்று முன்தினமும், ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.
மன்னாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
- மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.
- 12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் இடையப்பட்டியில் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் கள் அமைந்துள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் தேர்த்திருவிழாவிற்கு ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் மாவிளக்கு சுமந்து, அம்மனுக்கு துதி பாடிச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, சேலம் லட்சுமணூர் கோடங்கி நாயக்கனூர் கிராமிய கலை குழுவினரின் தேவராட்டம் நடைபெற்றது. வெண்ணிற வேட்டி சட்டை அணிந்து, தாரை தப்பட்டை, உறுமிமேள இசைக்கேற்ப நடனமாடிய கலைஞர்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.
புதன்கிழமை மகா சக்தி மாரியம்மன் ரதம் ஏறுதல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல், உருளைத்தண்டம் போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விமான வாகனம், ரதத்தேர் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் அலகு குத்தி ஊர்வலமாக வந்து பக்தர்கள் பரவசத்தை ஏற்படுத்தினர்.
நேற்று (வியாழக்கிழமை) கிராமிய தோல் இசைக்கருவி கள் முழங்க மகாசக்தி மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்து. ராஜவீதியில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
- வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உலகப் பிரசித்தி பெற்றது. அத்தி வரதர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.
ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் தேரோட்டம் தொடங்கியது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர்.
இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியில் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேராட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நாளை அறுபத்து மூவர் விழா நடக்கிறது.
- 6-ந்தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடக்கிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி கிராம தேவதை பூஜை, கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு நடந்தது.
28-ந்தேதி பங்குனி பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்பகாம்பாள், கபாலீசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பங்குனி பெருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது.
காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன் பிறகு கபாலீசுவரர் தேர் புறப்பட்டது. இந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.
அதன் பிறகு கற்பகாம்பாள் தேர் வந்தது. இதை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் தேர் ஆகியவை வலம் வந்தன.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வந்தது. தேர் வலம் வந்த போது பக்தர்கள் கபாலி.. கபாலி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வந்தது.
தேர் வலம் வந்தபோது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 மாட வீதிகளின் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் கார்னரில் இருந்து மயிலாப்பூர் மாட வீதிகளுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தேர்த்திருவிழா காரணமாக மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
நாளை (4-ந்தேதி) பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
வருகிற 5-ந்தேதி ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. 6-ந்தேதி பகலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
- சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்திற்கு முன்பு நடக்கும் பிராட்டியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிராட்டியம்மனை வழிபட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்திற்கு முன்பு நடக்கும் பிராட்டியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தினை முன்னிட்டு பிராட்டியம்மன் கோவில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 25-ந் தேதி அம்மன் உற்சவம் நடந்தது.
தேரோட்டம் நேற்று இரவு 8.20 மணிக்கு தொடங்கி சென்னிமலை நான்கு ரத வீதிகளில் வலம் வந்து 8.55 மணிக்கு நிலை சேர்ந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிராட்டியம்மனை வழிபட்டனர்.
- சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
- இன்று காலை உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. கடந்த 2 ந் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. தினமும் காலை 6 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் பூசி தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். 7-ந் தேதி இரவு தலவுமலை மற்றும் வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். 8 -ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் வந்து வழிபாடு நடந்தினர்.
நேற்று இரவு காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது. அதைதொடந்து கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதன்பின்பு காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினர்.
இன்று காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைதொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பழி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
பின்னர் மாலை 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5.20 மணிக்கு தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.
நாளை மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொட–ர்ந்து முருங்கத்தொழுவு சுற்று பகுதியில்உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்க–ளில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
- வருகிற 31-ந் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- சுவாமி நெல்லை மாநகருக்கு எழுந்தருளல் வைபவம் நடைபெறாது.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், உள் திருவிழாவாக கோவிலில் உள்ளே மட்டும் நடைபெறும்.
சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம், சுவாமி நெல்லை மாநகருக்கு எழுந்தருளல் ஆகிய வைபவங்கள் நடைபெறாது.
இந்த தகவலை. கோவில் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
- வரதராஜ பெருமாள் கோவில் கட்டியதில் இருந்து இதுவரை தேரோட்டம் நடந்ததில்லை.
- தற்போது தான் முதல் முறையாக கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 5-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் திருப்பல்லக்கு மற்றும் வெண்ணெய்தாழி உற்சவமும், வேடுபரி உற்சவமும் நடைபெற்றது. தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி அளவில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்ததும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோபுர வாசலில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வரதராஜ பெருமாள் கோவில் கட்டியதில் இருந்து இதுவரை தேரோட்டம் நடந்ததில்லை. தற்போது தான் முதல் முறையாக கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
- ஓலைப்பிடாரி அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலி கொடுத்து வழிபட்டனர்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருச்சி தாராநல்லூரில் பிரசித்தி பெற்ற செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருத்தேர் உற்சவ விழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் இரவில் சிம்மம், அன்னம், யானை, குதிரை, பூத வாகனங்களிலும், முத்து பல்லக்கிலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் முதல் தேரில் செல்லாயி அம்மனும், 2-வது தேரில் ஓலைப்பிடாரி அம்மனையும் எழுந்தருளச்செய்து வீதி உலா நடந்தது. தங்களது வீடுகளுக்கு முன்பாக தேர் வந்தபோது செல்லாயி அம்மனுக்கு பூ, பழங்களை வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
ஓலைப்பிடாரி அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலி கொடுத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்