search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகக்கவசம்"

    • நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.
    • இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தல்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொதுஇடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துகொள்ள பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும். இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
    • தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோ தனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம் மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு 'ஓசல்டா மிவிா்' எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 'ஓசல்டாமிவிா்' உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம்.
    • நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
    • முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    இதுநாள் வரை மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சை கோட்டத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முகாம் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), பட்டுக்கோட்டை கோட்டத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் எலும்பு முறிவு டாக்டர், காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர், மன நல மருத்துவர் மற்றும் கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் மேற்படி தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம்.
    • முககவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும்

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலுக்கு கடிவாளம் போடும்வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக முககவசம் அணிவது மேலும் சில இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம். வெளியே கட்டாயம் செல்லவேண்டும் என்றால் அவசியம் முககவசம் அணிந்து செல்லவேண்டும். மேலும் அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும். வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அவர்களை வெளியே அழைத்துச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு முககவசம் அணிந்து அழைத்துச்செல்லவேண்டும். காற்றோட்டத்துடன் திறந்தவெளி அரங்கமாக இல்லாமல் மூடப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும். முககவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே முககவசம் அணியவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்

    காரைக்கால்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
    • முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    இதனை வரவேற்கிறோம். 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு அதிகளவில் பக்தர்கள், கூற்றுலுா பயணிகள் வருவர். இவர்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக வேளாங்கண்ணியில் அதிகளவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன்தலைமையில் நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் செல்வகுமார் மற்றும் சிவசேனா கட்சி, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் தன்னார்வளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
    • எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றனர்.

    கோவை,

    கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய ெகாரோனா தொற்று பரவல் காரணமாக கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், உருமாறிய ெகாரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக தொழில் நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

    இதுகுறித்து கோவை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:-

    மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து முகக்கவசம் அணிந்து பணியாற்றுவது, சமூக இடைவெளி பின்பற்றுதல்,அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொழிலாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளோம் என்றார்.

    குறு, சிறு வார்ப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறும்போது,

    உருமாறிய ெகாரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். கோவையில் உள்ள வார்ப்பட தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    முன்பு சிறப்பு முகாம்கள் நடத்தியதை போல பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அலட்சியம் காட்டினால் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் தொழில் நிறுவனத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றனர்.

    • முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
    • கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது.

    சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஊடுருவியபோது மக்கள் உயிர் பயத்தில் முககவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை தாரக மந்திரம் போன்று கடைபிடித்தனர். ஒரே நேரத்தில் சிலர் 2 முககவசங்களை பயன்படுத்தினர்.

    முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டியவர்களிடம் அரசாங்கம் அபராத நடவடிக்கைகளை கையில் எடுத்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கொரோனாவின் கொட்டம் அடங்கிப்போனாலும், இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினந்தோறும் இந்த தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.

    இந்த தொற்று உயிர் பலி அதிகம் வாங்கிய நேரத்தில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் நிறைந்திருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து போனதால் மக்கள் மத்தியில் அச்சமும் விலகி விட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்கள், தியாகராயநகர் உள்பட கடை வீதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களில் முககவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடுகள் கானல்நீராய் போனது. அரசின் அபராத நடவடிக்கைகளும் அடங்கிப்போனது. இதனால் முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சிலர் மட்டும்தான் முககவசம் அணிந்து செல்வதை காண முடிகிறது.

    கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில் எச்-1 என்-1 இன்புளுயன்சா வைரசும் மிரட்டுகிறது. இந்த நோய் கிருமியில் இருந்து தப்பிக்கும் கேடயமாகவும் முககவசம் இருந்தாலும், இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் அலட்சிய போக்குடன் உள்ளனர்.

    தற்போது முககவசம் அணிபவர்கள், அணியாதவர்கள் மனநிலை என்ன என்பதை பார்ப்போம்.

    சென்னை கோயம்பேடு பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ராஜேஷ்:-

    கொரோனாவுக்கு பின்னர் முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்த நேரத்தில் அதை அணிவது சற்று சிரமமாகதான் இருந்தது. ஆனால் நோய் கிருமிகள் நம் உடலுக்கு செல்வதை தடுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது என்பதை உணர்ந்து அணிய தொடங்கினேன். தற்போது முககவசம் அணிவது என் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. புது புது வைரஸ்கள் பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் வெளியே செல்லும்போது முககவசம் அணிவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

    முககவசம் அணிவது நம்மை மட்டுமின்றி நம் வீட்டில் உள்ள பெரியவர்களையும் நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சுகன்யா:-

    கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில் முககவசம் அவசியம் தேவைப்பட்டது. தற்போது இந்த தொற்று பாதிப்பு பெரிதளவில் இல்லை. எனவே முககவசம் தேவைப்படவில்லை. முககவசம் அணிந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மூச்சு முட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறது. எனவே நான் முககவசம் அணிவதை நிறுத்திவிட்டேன். தற்போது நன்றாக சுவாசிக்க முடிகிறது.

    மேலும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது முகத்தில் 'மேக்-அப்' போட்டு செல்வோம். முககவசம் அணிந்தால் 'மேக்-அப்'பை கலைத்து முகத்தை அலங்கோலமாக்கி விடுகிறது.

    அயனாவரத்தை சேர்ந்த இல்லத்தரசி லில்லி:-

    சாலையில் செல்லும்போது தூசுகள், வாகன புகைகள் உடலுக்கு பகையாகிறது. எனவே முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

    எனவே முககவசம் அணிவதன் மூலம் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். வீட்டில் சமையல் செய்யும்போது நெடி ஏற்படும்போது தும்மல் வருவதை தடுக்கிறது. பூ அணிவது போன்று முககவசம் அணிவதை நான் பழக்கப்படுத்தி கொண்டுள்ளேன். பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதில் தனிகவனம் செலுத்துகிறேன்.

    சென்னை வில்லிவாக்கம் பகுதியில் துணியிலான முககவசங்கள் விற்பனை செய்து வரும் முருகேசன்:-

    கொரோனா பரவலுக்கு முன்பு நான் பல்வேறு வியாபாரங்கள் செய்து வந்தேன். கொரோனா பரவலுக்கு பின்னர் முககவச வியாபாரத்தில் ஈடுபட்டேன். இந்த தொற்று வேகமாக பரவிய நேரத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட முககவசங்கள் விற்பனை ஆகும். தற்போது ஒரு நாளைக்கு 5 முககவசங்கள்தான் விற்பனை ஆகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நீங்கி விட்டது என்பதையே இது காட்டுகிறது. ஆரம்பத்தில் லாபகரமாக இருந்த இந்த தொழில் தற்போது நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தீபாவளி நேரத்தில் மக்கள் வாங்கும் புதிய உடைக்கு ஏற்ப முககவசங்கள் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அதிக முககவசங்களை வாங்கி உள்ளேன். இந்த முககவசங்கள் விற்பனையாகாவிட்டால் இந்த தொழிலை ஓரங்கட்டி விடுவேன்.

    சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் மருந்தகம் நடத்தி வரும் சங்கர்:-

    கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது. அதேபோன்று கைகளை சுத்தம் செய்யக்கூடிய 'சானிடைசர்' போன்ற கிருமி நாசினிகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.

    இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனாவா? அப்படின்னா? என்று கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். எனவே முககவசம் அணிவது, கிருமி நாசினிகள் பயன்படுத்தும் பழக்கத்தை பலர் கைவிட்டுவிட்டனர். இதனால் முககவசம், கிருமி நாசினி விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆரம்பத்தில் உயிர்க்கொல்லி நோயாக கருதப்பட்ட கொரோனா இன்றைக்கு சாதாரண காய்ச்சல் போன்று உடனடியாக குணப்படுத்த கூடிய நோயாக மாறி இருப்பதால், கொரோனா பற்றிய கவலை போய்விட்டது. எனவே முககவசம் அணிவது இல்லை என்பது பெரும்பாலான மக்களின் மனநிலையாக உள்ளது.

    கொரோனா வைரஸ் கிருமி உருமாறும் தன்மை கொண்டது. இந்த தொற்று வீரியம் அடைந்தால் அசுர வேகத்தில் பரவும் ஆபத்து உள்ளதாக ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கொரோனா கிருமி இந்த பூமியில் இருந்து ஒழிந்துவிட்டது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் முக்கியம் என்பது டாக்டர்களின் அறிவுரையாக உள்ளது.

    • டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முககவச அபராதம் நீக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் உத்தரவின்படி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
    • பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும்.

    தமிழக அரசின் உத்தரவின்படி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசமின்றி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கவோ பொருட்கள் வழங்கவோ கூடாது.

    கடைகளின் நுழைவு வாயிலில் கட்டாயம் கிருமி நாசினி அல்லது சோப்பு வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அதனை கட்டாயம் பயன்–படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்கள் சுமார் 6 அடி சமூக இடைவெளியை கடை–பிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

    பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நகராட்சி அதிகாரிகளின் ஆய்வின்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதோடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொண்டி அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேல்டு விசன் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் மற்றும் ஊழியர்கள் செய்தி ருந்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வட்டாணம் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தேன்மொழி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு பூமிநாதன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாணம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தாஹினி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நோய்கள் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கும் தலா 10 முகக்கவசம், 200 மில்லி சானிட்டைசர் இலவசமாக வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேல்டு விசன் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×