search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மரணம்"

    • உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
    • சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 10 பேர் ஷவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கும் சவர்மாவை பார்சல் வாங்கிச் சென்றனர். இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் இரவு 10 மணியளவில் சவர்மாவை சாப்பிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென 6 மாணவிகள், 7 மாணவர்கள் என மொத்தம் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் ஓட்டலில் என்ன உணவை சாப்பிட்டார்கள் என கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து, கடைக்கு நோட்டீஸ் வழங்கி 'சீல்' வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சனிக்கிழமை மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் ஓட்டலுக்கு சென்று பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர். அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டில் இருந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு மாணவி சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவி உடலை பார்த்து அவரது தாய் சுஜாதா கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

    இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது, மாணவி வீடு திரும்பும்போது அவரது உடல் நிலை எவ்வாறு இருந்தது, என டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்படியே தனக்கு முன்பு இருந்த சுடு தண்ணீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்துள்ளார்.
    • ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மேலசேர்ந்தபூமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்தி ஆசிரியை ஆக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் கவுசல்யா (வயது 18).

    இவர் அப்பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

    சில நாட்களாக சளி பிடித்து இருந்ததால் வெந்நீரில் மருந்தை போட்டு ஆவி பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்படியே தனக்கு முன்பு இருந்த சுடு தண்ணீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்துள்ளார்.

    ஆவி பிடித்துக் கொண்டிருந்த தன் மகள் திடீரென அசைவற்று கிடப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு உடனடியாக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளார்.
    • 12 வயது சிறுமி மூச்சுத்திணறலில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பைபாலம் கிராமத்தை சேர்ந்தவர் லகபதி. இவருடைய மனைவி வசந்தி. தம்பதியின் மகள் ஸ்ரவந்தி.

    இவர் மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை வீட்டில் தனது தோழிகளுடன் ஸ்ரவந்தி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு லேசாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனது பாட்டியிடம் கூறியுள்ளார்.

    சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்தார். உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

    12 வயது சிறுமி மூச்சுத்திணறலில் பலியானது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    தேனி மாவட்டம் குப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகள் மகேசுவரி (வயது 25). இவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கினார்.

    விடுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள அறையில் இருந்த மகேசுவரி நேற்று இரவு நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவில் 2-வது தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் மகேசுவரி படுகாயமடைந்தார்.

    விடுதியில் இருந்த சக மாணவிகள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சு மூலம் மகேசுவரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகேசுவரி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
    • காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.

    போரூர்:

    மதுரவாயல் வேல்நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மூத்த மகள் பூஜா (வயது 13). விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றனர். அப்போது பூஜாவுக்கு லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மகளுக்கு டெங்கு காய்ச்சலா? பன்றி காய்ச்சலா ? அல்லது எச்1 என் 1 ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பா? என எந்தவிதமான உரிய விளக்கமும் டாக்டர்கள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மண்டல சுகாதார அதிகாரி பிரபாகரன் கூறும்போது:-

    சிறுமியின் மருத்துவ அறிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதன் பின்னரே சிறுமி இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் மேலும் 144-வது வார்டுக்கு உட்பட்ட அந்த பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வழக்கமாக கொசு மருந்து அடிப்பது, மற்றும் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • சமூக ஊடகங்கள், பத்திரிக்கை, காட்சி ஊடகங்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களை வெளியிடுகின்றன.
    • ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ புலன்விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு, மேற்படி இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கின் புலன்விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.

    சமூக ஊடகங்கள், பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொளி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மேலும் இது சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் அமைகின்றது.

    இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் அலைப்பேசி எண்.9003848126 க்கு நேரடியாக பகிரும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது
    • பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை ஆகும்.

    கள்ளக்குறிச்சி:

    தனியார் பள்ளியில் மாணவிகளின் மர்ம மரணம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதுதான் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை ஆகும். அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    மர்மமான முறையில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அவரது இறப்புக்கு காரணமானவர்களுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    • மாணவி ஹரிணிகாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
    • தங்கி இருந்த மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    திருவாரூரை சேர்ந்தவர் ஹரிணிகா (வயது16). இவர் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்

    கடந்த 3 நாட்களாக மாணவி ஹரிணிகாவுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்து வந்தது. இந்தநிலையில் அவருக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.

    இதையடுத்து அவரை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி ஹரிணிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது உடன் தங்கி இருந்த மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி ஹரிணிகாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவியின் திடீர் சாவு குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×