என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைரஸ் காய்ச்சல்"
- இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் ஏராளமானோருக்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் 3 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இருமல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஒரு மாதம் வரை நீடிக்கிறது.
இந்த காய்ச்சல் எதனால் வருகிறது என்று மருத்துவர்கள் ஆராய்ந்த போது 75 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பலருக்கு இன்புளூயன்சா ஏ வைரஸ் காரணமாகவும், சிலருக்கு இன்புளூயன்சா பி வைரஸ் காரணமாகவும் காய்ச்சல் பரவி உள்ளது. இன்னும் சிலருக்கு டெங்கு காய்ச்சலும் பரவி இருப்பது தெரியவந்து உள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும் சிலருக்கு அடினோவைரஸ் மற்றும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் பிற வைரஸ் தொற்றுகளும் பரவி இருப்பதை மாநில பொது சுகாதார ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
பருவமழை தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையிலும் அதிகம்பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது.
குழந்தைகள் பள்ளி அல்லது பயிற்சி மையங்களுக்கு செல்லும் போது தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவுகிறது. நாங்கள் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்கிறோம். குழந்தைகளுக்கு இருமல் சிரப் சிறிய அளவில் நிவாரணம் தருகிறது.
பெரும்பாலானவர்கள் தொற்று நோய் அறிகுறிகளுக்கு மருந்து சாப்பிடாததால் தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதனால் அவர்களுக்கு தடுப்பு ஊசிகளை எடுக்க நாங்கள் அறிவுறுத்துகிறோம். கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் முககவசம் அணிய வேண்டும்.
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இருமல், தும்மல் அல்லது பேசும்போது இந்த வைரஸ், சுவாச துளிகள் மூலம் பரவுகிறது. முககவசம் அணிவதால் தொற்று பரவுவது குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
- மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஈரோடு:
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் சளி, காய்ச்சல் பாதிப்புடன் ஏராள மானோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
குறிப்பாக மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தற்போது சுகாதாரத் துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.கார்த்திகேயன் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் 11 நகர்புற சுகாதார நிலையம், 17 நகர்புறநல வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் மாநகராட்சி பகுதியில் நான்கு மண்டல பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் போதுமான மருந்துகள் இருக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு உள்ளதா என கண்டறியும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் கொசு மருந்து ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவு தான். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பனி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் முடிந்த அளவு வீடுகளில் தண்ணீர் தேங்கி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் இரும்பல், சளி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் அருகில் இருக்கும் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து மருத்துவர்கள் கூறும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அதிகரித்து வரும் காய்ச்சல்களை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பருவகால மாற்றத்தால் தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் ஆஸ்பத்திரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்று அதிகரித்து வரும் காய்ச்சல்களை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெங்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் தேவையில்லா இடங்களில் தண்ணீர் தேங்குதல், கண்ட இடங்களில் குப்பை கொட்டுதல் போன்றவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையிலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு புற நோயாளிகளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் உள்நோயாளியாக இருந்து வருகின்றனர். அந்தவகையில், உள்நோயாளிகளாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 56 பேர் காய்ச்சலாலும், 5 பேர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 14 பேர் காய்ச்சலுக்கும், 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளியாக யாரும் சிகிச்சை பெறவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைவரும் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 'இன்புளூயன்ஸா' வைரஸ் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் டாக்டா்கள் தொிவித்தனர்.
- தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது.
- அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் பரவலாக மழை பெய்து வருவதால் சளி, இருமல், கை-கால் வலியுடன், காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பெரிய அளவில் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் வருகின்ற பருவமழை காலத்தில் டெங்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சுகாதாரத்துறை கருதுகிறது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் தொடங்கி கண்காணிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. 30 முதல் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை. காய்ச்சல், உடல் சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இல்லை. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
ஆனால் டெங்கு பாதிப்பு குறிப்பிடும் படியாக இல்லை என்று மருத்துவ மனை முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பொது மருத்துவத் துறை தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:-
வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தான் அதிகளவில் வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் 5 நாட்கள் இருந்து பின்னர் படிப்படியாக குறையும். காய்ச்சல் குறைந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க கூடாது. அந்த நேரத்தில் தான் வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டு உடலில் தட்டணுக்கள் குறைய தொடங்கும்.
எனவே தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
டெங்குவை பொறுத்த வரை காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தான் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கும்.
வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்திருந்தால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பகலில் கடிக்கும் 'ஏடீஎஸ்' கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல் உண்டாக்குகிறது. வீடுகளையும், சுற்று புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
- காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம், மூட்டு வலியால் அவதி.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால்கள் வீக்கம் அடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த வைரஸ் காய்ச்சல் சிக்குன் குனியாவை ஒத்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் மச்சர்லா மற்றும் பல்நாடு பகுதிகளில் பரவி வருகிறது.
வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும் மற்ற அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் குண்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3,4 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையவில்லை. 4 முதல் 6 வாரங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.
காய்ச்சல் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2 வாரங்களுக்கு மேல் மூட்டு வலி இருந்தால் குறைந்த அளவு ஸ்டீராய்டு மருந்தை கொடுத்தால் நிவாரணம் பெறலாம் என நுரையீரல் நிபுணர் டாக்டர் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது ஆந்திராவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
- வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும்.
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா காய்ச்சலும் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.
டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல வகை காய்ச்சல் மக்களுக்கு பரவி வந்தாலும் சிக்குன் குனியா காய்ச்சல் வந்தவர்கள் மிகவும் முடங்கி விடுவார்கள்.
காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடையும் உடம்பு நெருப்பால் கொதிக்கும் எனவும் சாப்பிட படிக்காது. பசியின்மை அடித்து போட்டது போல் உடம்பு வலி ஏற்படும். காய்ச்சலில் பல வகைகள் இருந்தாலும் சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். பொதுவான வைரஸ் காய்ச்சல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். இந்த வகை காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்.
ஆனால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் என்பது ஏ.டி.எஸ். கொசு கடிப்பதால் வருகிறது.
கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்பு புள்ளிகள், தோன்றும்.
இந்த காய்ச்சல் தீவிரமாகி விட்டால் உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். மூட்டு வலியும் அதிகமாகும். ரத்தத்தின் தட்டையணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும்.
எனவே சிக்குன் குனியா நோய் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் சிக்குன் குனியா காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1,451 பேருக்கு சிக்குன் குனியா அறிகுறி இருந்தது. அதில் 331 பேருக்கு சிக்குன் குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.
இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-
பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.
கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.
பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
- டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* தமிழகத்தில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை.
* மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
* உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.
- சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறது. பகலில் சில நேரங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி அடித்து வருகிறது.
அத்துடன் இரவில் குளிர்வாட்டி வதைப்பதுடன் அதிகாலை பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்தக் காலநிலை மாற்றத்தால் ஈரோடு மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சளி, இருமலுடன் கூடிய ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
குழந்தைகள், வாலிபர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது.
உடல் சோர்வு, தொண்டைவலி, சளி இருமலுடன் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சாதாரண வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் குணமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது. வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற காய்ச்சல்கள் வருவது இயல்புதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுபோன்ற காய்ச்சல், சளி வராமல் இருக்க மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காட்சி குடிக்க வேண்டும். 3 நாளைக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
தன்னிச்சையாக மருந்தகங்களில் சென்று மாத்திரை வாங்கக்கூடாது. முக்கியமாக வீடுகளை சுற்றி நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், உரல்கள் பாத்திரங்களை மூடி வைப்பது நல்லது.
வீடுகளில் கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் அருந்தலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல், மெட்ராஸ் ஐ மற்றும் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சீனாவில் பரவும் வைரஸ் ஹெச் 9 என் 1 இன்ப்ளூயன்ஸா, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துபோவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகளின் விபரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது இடங்களில் நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு அதிகளவு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு ஒரு சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். இந்த நடைமுறை தனியார் பள்ளிகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. எனவே இதனை அரசு பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.
திருச்சி:
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 34 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 83 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தை களாவர். இதற்கிடையே நேற்று 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
- சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.
சேலம்:
நடப்பாண்டில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல், சளி காய்ச்சல் அதிக அளவில் பொது மக்களை தாக்கி வருகிறது.
நிரம்பி வழியும் கூட்டம்
இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்தி ரிகளில் காய்ச்சல் பாதித்தவர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சேலம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு வழக்கமாக வெளி நோயாளிகளாக 10 முதல் 20 பேர் காய்ச்சல் சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால் தற்போது இது தினசரி 150 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி வெளி நோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்து நின்று நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
மேலும் உள்நோயா ளிகளாக காய்ச்சல் சிறப்பு வார்டில் 30 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதில் 2 பேர் டெங்கு காய்ச்சலாலும், 2 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களும் அடங்குவர், இதே போல புறநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 20-க்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
கை, கால் , தலை வலி
தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகு பவர்களுக்கு கை, கால் வலி, தலை வலி, குளிர், இருமல், சோர்வு என பல்வேறு பாதிப்புகள் ஒரே நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதித்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகி றார்கள். எனவே காய்ச்சலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் வரும் என சுகாதாரத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
மேலும் வரும் நாட்களில் மழை அதிகம் பெய்யும் போது காய்ச்சல் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் குளிர்ந்த உணவுகளை தவிர்த்து சூடான உணவுகளை சாப்பிடு வதுடன், தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ், சளி காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்