search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைபொருள்"

    • சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மங்கலம்

    சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணிக்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வனிதா, வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பேரணியில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவ,மாணவிகள் சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.இந்த பேரணியானது சாமளாபுரம் -லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் பள்ளி வளாகத்தில் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப்பொருளின் தீமைகள் குறித்து மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, மைதிலிபிரபு , லிட்ரசி பள்ளியின் ஆசிரியர்கள் , ஏ.வி.ஏ.டி.பள்ளியின் ஆசிரியர்கள் , மங்கலம் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி பாலக்கரையில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்

    திருச்சி,

    திருச்சி மாநகரில் பள்ளி,கல்லூரி பகுதிகளில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பீமநகர் நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஹவுஸ் அருகில் சிலர் போதை மாத்திரை மற்றும் ஊசி விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் சம்பல இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு மூன்று சிறுவர்கள் கையில் போதை ஊசி மற்றும் மாத்திரை வைத்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து சிறுவர்கள் மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது மூன்று சிறுவர்களும் போதை மாத்திரை மற்றும் ஊசியை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விற்க முயற்சி செய்தது தெரிய வந்தது.இது குறித்து திருச்சி கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் குமார் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த சச்சின், சதீஷ், சாம்ராஜ் ஆகிய மூன்று சிறுவர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மூன்று சிறுவர்களிடம் போதை மாத்திரை மற்றும் ஊசியை கொடுத்தது யார்,யாரிடம் வாங்கினார்கள்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500-க்கு என அதிக லாபத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    கோவை,

    கோவையில் போதைபொருள் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே 7 பேர் கும்பல் போதைப்பொருள் விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கும்பல் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் 7 பேரையும் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சுஜிமோகன், அஸ்வின் என்ற அஸ்வின் குமார், அமர்நாத், பிரசாந்த், ராஜேஸ், புள்ளி பிரவீன் என்ற பிரவீன்ராஜ், பிரதீப் என்பதும், இவர்கள் கோவையில் ரவுடிகளாக வலம் வந்தது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

    சுஜிமோகன் உள்ளிட்ட 7 பேர் கும்பலும் பெங்களூருவில் இருந்து மெத்தாபெட்டமைன் என்னும் போதைப்பொருளை கடத்தி வந்து கோவையில் அதனை விற்பனை செய்துள்ளனர்.

    குறிப்பாக கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்களை குறிவைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டதும், ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500-க்கு என அதிக லாபத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேர் மீதும் சரவணம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் கைதான சுஜிமோகனிடம் இருந்து 55 கிராம் போதை பொருளும், அஸ்வினிடம் இருந்து 1.2 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    கைதான 7 பேர் மீதும் கோவையில் உள்ள சரவணம்பட்டி, ரத்தினபுரி, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், பீளமேடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் இவர்கள் 7 பேரும் கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 50 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் எச்சரிக்கை

    நெமிலி:

    ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55). இவர் அதே பகுதியில் பங்க்கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் விற்பதாக அவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் சென்று பங்க் கடையில் சோதனை செய்தனர்.

    அப்போது கடையில் இருந்த குட்கா போன்ற 50 போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பரசுராமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மேலப்புலம், மாமண்டூர், பெரும்புலி பாக்கம், பொய்கைநல்லூர் பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று அங்குள்ள பங்க்கடைகளில் சோதனை செய்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடைக்காரர்களுக்கு இதுபோன்ற போதை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

    • சிறையில் அடைத்தனர்
    • 52 பாக்கெட்டுகள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து நாட்டறம்பள்ளி போலிஷ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 52 பாக்கெட் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் கடந்த 11- ந்தேதி முதல் வருகின்ற 18- ந்தேதி வரை போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம்  கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் சுமார் 145 ஆட்டோக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி ஏமப்பேரில் நிறைவடைந்தது.

    முன்னதாக ஆட்டோ பேரணியில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ்,மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு) விஜய கார்த்திக்ராஜ், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்துஅலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர காவல் போதை தடுப்பு பிரிவு சார்பில் பனியன் நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாநகர காவல் துணை ஆணையர் அபிநவ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில், போதைப் பொருளால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து விளக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளரும் முதல்வருமான ஜெயாசண்முகம் பேரணியை தொடங்கி வைத்தார்.
    • மாணவ, மாணவிகள் காமராஜ்நகர், மூன்றாம் மைல் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் உலக போதைபொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஜெயாசண்முகம் விழிப்புணர்வு பேரணிக்கு தலைமை தாங்கி மாணவ, மாணவிகளிடம் போதை பொருளால் வீடுகளில் அமைதி குலைந்து சந்தோஷம் குறைவதையும், பொருளாதார சீர்கேடு நடப்பதையும், உடல்நலம் பாதிக்கப்படுவதையும் விளக்கினார்.

    மேலும் போதை பொருளை பயன்படுத்தாத புதிய சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் என்ற உறுதி கூறுவோம் என்று மாணவ, மாணவிகளை உறுதிமொழி கூறச்செய்தார்.

    அதன்பின் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் "போதை போதை என்று அலைபவர் குடும்பம் கெடும்" "போதையற்ற நல்வழிப்பாதையை உருவாக்குவோம்", "புகையிலை திண்ணாதே, புற்றுநோய்க்கு உள்ளாகாதே" போன்ற பல பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் காமராஜ்நகர், மூன்றாம் மைல் ஆகிய பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேரணியில் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணைமுதல்வர் ரூபிரத்னபாக்கியம் செய்திருந்தார்.

    ×