search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம்"

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.
    • புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 55-ன் விதிகளின்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுக்கு 45 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவும் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் 16.6.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும்.

    அதே நேரத்தில் 201-300 யூனிட் வரை நிர்ணயித்த கட்டணமான யூனிட்டுக்கு ரூ. 6-ம், 300 யூனிட்டுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50-ம் என்பது அப்படியே தொடரும்.

    மேலும் தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் வீட்டு நுகர்வோர்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரியில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ 7.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ 9.65, 400 யூனிட்களுக்கு மேல் ரூ 10.70, 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 11.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    எனவே புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தனது அறிக்கையில், புதுச்சேரி, தமிழக மின் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட்டு அமைச்சர் ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா கூட்டணி கட்சியினர் மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இதனை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

    • வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கு எப்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை.
    • 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுகிறது.

    தமிழகத்தில் புதிய முறையில் மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்வாரியம், ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாகக் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இதன்படி, ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில், இரண்டு மின் இணைப்புகள் இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாகக் கருதி, மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

    ஆனால், இந்த முறையில், வாடகைக்குக் குடியிருப்போர்களுக்கு எப்படி மின்கட்டணம் கணக்கிடப்படும் என்ற தெளிவு இல்லை. மேலும், இரண்டு மின் இணைப்புகள் என்பது, பெயர் அடிப்படையிலா அல்லது முகவரியின் அடிப்படையிலா, எதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கமும் இல்லை.

    இதனால், வாடகைக்குக் குடியிருப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமோ என்ற கேள்வி எழுகிறது.

    மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நிறைவேற்றாமல், பொதுமக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

    இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படுவதால், ஏற்கனவே 50% அதிகமாக மின்கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கும் பொதுமக்கள், தற்போது இந்த புதிய நடைமுறையில் உள்ள தெளிவின்மை காரணமாக, மேலும் மின்கட்டண உயர்வுக்கு ஆளாக நேரிடுமோ என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனைத் தெளிவுபடுத்துவது தமிழக அரசின் கடமை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.5 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
    • ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

    சென்னை:

    தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. அதில் சுமார் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை என இதர இனங்களை சேர்ந்தவையாகும்.

    இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது.

    இந்த மின் கட்டணத்தை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு (2023-24) மட்டும் மின்சார வாரியம், மின்பயன்பாடு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் ரூ,60 ஆயிரத்து 505 கோடி வசூல் செய்துள்ளது.

    அதில் ஆன்லைன் மூலமாக மட்டும் ரூ.50 ஆயிரத்து 217 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதாவது மொத்த வசூலில் இது 83 சதவீதமாகும். இது 2022-23-ம் ஆண்டு இருந்த 52 சதவீதத்தில் இருந்து 31 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது. எனவே தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ,20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்பின் இது ரூ,10 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 83 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ,10 ஆயிரம் என்ற ரொக்கம் இனி ரூ.5 ஆயிரமாக அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    அதன்படி மின் அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

    ஆனால் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இருப்பிமும் ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தும் போது சில வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    அதற்கு பதிலளித்துள்ள மின்சார வாரிய அதிகாரிகள், ஆன்லைனில் யுபிஐ, நெட் பேங்கிங் ஆகியவை மூலம் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் கிடையாது.

    அதே போல் மத்திய அரசின் பீம் (BHIM) செயலி மூலம் கட்டணம் செலுத்தினால் சில சமயங்களில் ஒரு சதவீதம் முதல் 3 சதவீத கட்டணம் வரை சலுகை வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

    820 யூனிட்டுக்கு மேல்…

    இதுவரை 2 மாதத்தில் 1,275-க்கும் மேல் யூனிட் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு ரூ,10 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வந்தது. அவர்கள் தான் மின்சார அலுவலக கவுண்ட்டர்களில் காசோலை, டி.டி. அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வந்தனர். அவர்கள் ரொக்கமாக செலுத்த முடியாத நிலை இருந்தது.

    ஆனால் இனி 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவரும் ஆன்லைன் அல்லது மின் அலுவலகங்களில் காசோலை, டி.டி. மூலம் தான் பணம் செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்கு தான் 820 யூனிட். மற்றபடி வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு இந்த யூனிட் இன்னும் குறையும்.

    • மத்திய மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி RDSS திட்டத்தின் கீழ், நிதியை பெறுவதற்காக மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.
    • தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.

    மத்திய மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும் என மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக தன்கேட்க்கோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 2011-12ம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டமொத்த நிதி இழப்பானது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.94,312 கோடி மேலும் அதிகரித்து 31.03.2021 வரை ரூ.1.13,266 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை 2021-22ம் ஆண்டில் இருந்து 100 சதவீதம் முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால் தமிழ்நாட மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்த கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

    இதன் விளைவாக 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-2022) வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக கடந்த 2011 -12ம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259 சதவீதம் அதிகரித்து 2020-21ம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக உயர்ந்தது. இவ்வாறு அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடுசெய்ய அப்போதைய மின்வாரிய கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயரவினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய சுமையினை கருத்தில் கொண்டு இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டுதோறும் சிறிய அளவில் மின்கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது. மத்திய மின் அமைச்சகத்தின் வழிக்காட்டுதல்களின்படி விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின்கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.

    இந்த வகையில் 2022-23 நிதி ஆண்டிற்கான மின்கட்டண உயர்வானது 01.04.2022க்கு மாறாக 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது. மேலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின்கட்டண வீத ஆணையின் படி கடந்த 01.07.2023 முதல் நகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில் அனைத்து மின்னிணைப்பகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வம் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீத வரை மின்கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 2024 ஜுலை மாதத்தை பொறுத்த வரையில் 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால் 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

    இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் ஆணையம் கட்டணத்தை முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை எண் 6/2024 வெளியிட்டுள்ளது.

    இந்த மின் கட்டண உயர்வின் முக்கிய அம்சங்கள்

    தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.

    1. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்த்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

    2. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிஎண்.222-ன்படி நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயன் அடைவர்.

    3. தற்பொழுது குடிசை. விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள், மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    4. இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5/- வரை மட்டுமே உயரும்.

    5. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15/- வரை மட்டுமே உயரும்.

    6. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25/- மட்டுமே உயரும்.

    7. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 13 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்.

    8. 2.19 இலட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.

    9. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 20 பைசா. 150 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 25 காசுகள் மட்டுமே உயரும்.

    10. தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த அளவில் யூனிட் ஒன்றிற்கு 35 பைசா மட்டுமே உயரும்.

    11. 22.36 இலட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15/- மட்டுமே உயரும்.

    12. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு 35 பைசா மட்டுமே உயரும்.

    16. உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும்.

    14 நிலையான கட்டணங்கள் (Fixed Charges) கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும்.

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன.
    • உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு.

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.

    ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.

    ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்" தெரிவித்துள்ளார். 

    • 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 6.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 6.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 8.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 8.55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்ததற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

    வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 400 யூனிட் வரை 4.60 ரூபாய் பெறப்பட்டு வந்தது. தற்போது 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 6.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 6.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 8.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 8.55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 9.20 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 9.65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 10.20 ரூபாய் பெறப்பட்டது. இருந்து 10.75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.80 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    • வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயருகிறது.
    • மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25ல் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு உள்ளதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
    • தமிழக சட்டசபை கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளதால் மின் கட்டணம் குறித்த அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை அப்போது அமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது.

    சென்னை:

    அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணம் 5 சதவீதம் உயரும் என தெரிகிறது. அதாவது யூனிட்டுக்கு 23 பைசா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் வினியோகம் செய்வது முதல், மின்சாரம் தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மின் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்த நிறுவனங்களின் வருவாய், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தற்போதைய நிலவரப்படி ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின் வாரியம் செயல்படுகிறது.

    இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது.

    இது தொடர்பான ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் அதாவது அடுத்த மாதம் (ஜூலை) மின் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளன.

    அதன்படி நடப்பாண்டில் ஏப்ரல் மாத பண வீக்க அளவான 4.83 சதவீதம் அளவுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

    அதன்படி இப்போது ரூ.4.60 ஆக இருக்கும் ஒரு யூனிட் மின்சார கட்டணம் இனிமேல் ரூ.4.83 ஆக உயரும் என தெரிகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இந்த கட்டண உயர்வு 5 சதவீதம் வரை அமல்படுத்தப்படும் என தெரிகிறது. இதன் மூலம் யூனிட்டுக்கு 23 பைசா வரை உயரும்.

    கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாநில அரசு நுகர்வோர்களுக்கான கட்டண உயர்வை மானியமாக ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை மாநில அரசு மானியம் தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.

    இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு உள்ளதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

    வழக்கம் போல வாரியத்தின் வரவு-செலவு விவரங்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. எனவே மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கவில்லை.

    தமிழக சட்டசபை கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளதால் மின் கட்டணம் குறித்த அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை அப்போது அமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.
    • மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை செலுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலின் மேல் பகுதியில் 1914 ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரெயில் பயணத்தை மட்டுமே நம்பி பயணித்து வந்தனர்.

    இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு கப்பல்கள் பேருந்து பாலம் கீழ் பகுதியில் தடையின்றி கடந்து செல்லும் வகையில் பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பேருந்து பாலத்தின் அழகை ரசிக்கும் வகையில் 181 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அனைத்து கம்பத்திலும் அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டது. ராமேசுவரத்திற்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பாலத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளின் அழகை தொலைவில் இருந்து பார்த்து ரசித்தனர்.

    இந்நிலையில் பாலத்தில் வழியாக ராமேசுவரம் செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண்டபம் தோணித் துறை பகுதியில் தடுப்பு அமைத்து வசூல் செய்யப்பட் டது. இதன் பின்னர் அந்த உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டது. மேலும் பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.

    இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தோணித்துறையில் இயங்கி வந்த சுங்க கட்டணம் வசூல் மையம் 2017-ல் அகற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, பாம்பன் பேருந்து பாலத்தின் பரமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் உயர்கோபுர விளக்கு உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மீண்டும் புதிய கம்பங்கள் மாற்றப்பட்டு எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தத்தப் படவில்லை.

    தற்போது வரையில் ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து பாலத்தில் ஒரு நாள் கூட 181 விளக்குகளும் எரிந்தது கிடையாது. பெரும்பாலான நேரங்களில் பாலம் முழுமையாக இருளில் தான் காணப்படும். மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை செலுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.

    அதே வேளையில் மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு பாம்பன் ஊராட் சியில் பணம் கட்ட நிதி இல்லை என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமேசுவரம் நகராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைத்து அனைத்து வானகங்களுக்கும் ரூ.100 முதல் ரூ.150 வரை வசூல் செய்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வசூல் செய்து வருகின்றனர். பாம்பன் பேருந்து பாலத்தின் முழு பயனும் ராமேசுவரம் நகராட்சிக்கு மட்டுமே கிடைப்பதால் மின் கட்டணத்தை ராமேசுவரம் நகராட்சியே செலுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பாம்பன் பேருந்து பாலத்திற்கு மின் கட்டணம் செலுத்துவது, மின்பாக்கியை செலுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பாம்பன் பேருந்து பாலத்தின் அனைத்து மின்விளக்கும் எரிவதற்கான நடவடிக்கையை காலதாமதம் இன்றி எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
    • நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும்.

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இரு மாவட்ட மக்களுக்கும் ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 4 மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும்.
    • அபராத தொகை இல்லாமல் வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு.

    மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும்.

    அபராத தொகை இல்லாமல் வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மின் கட்டண கால அவகாசம் நிறுவனங்களுகு்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    • மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம்.
    • மிச்சாங் புயலால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிச்சாங் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களிலும் வரும் 18ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.

    மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் தமிழக அரசு அவகாசம் வழங்கியது.

    ×