என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக கவுன்சிலர்கள்"
- தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
- ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா இன்று மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமாறு மனு அளித்துள்ளனர்.
தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரும்போது மாநகராட்சி கமிஷனர் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
தற்போது உள்ள கமிஷனர் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால் கண்டிப்பாக இதை செய்வார் என்று நம்புகிறோம்.
தற்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க கவுன்சிலர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள்.
மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியை முடக்கி வைத்து உடனடி தீர்வு காண வேண்டும்.
சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாநகராட்சியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள தி.மு.க அரசின் மாநகராட்சியை கலைக்க வேண்டும். தற்போது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான மனுவில் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கையெழுத்தும் இருக்கலாம்.
சந்திப்பு பஸ் நிலையம் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சரக்கு முனையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. ரூ.2.85 கோடி மதிப்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் அடித்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,தச்சை மாதவன், மாவட்ட இளைஞர் பாசறை முத்துப்பாண்டி, சம்சு சுல்தான் உள்பட பலர் இருந்தனர்.
- தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
- கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளனர்.
மேயர் சரவணனுக்கும், பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.
மேலும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசுவும் இரு தரப்பினரிடமும் பேசி மாநகராட்சி கூட்டத்தை சுமூகமாக நடத்த வலியுறுத்தினார்.
கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் நேற்று மாநகராட்சி கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவை சந்தித்து மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை வழங்கினர். ஆனால் அதனை வாங்க கமிஷனர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கடிதத்தை வாங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதால் அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு கமிஷனர் ஒப்புகை சீட்டு வழங்கினார்.
இத்தகவல் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவ் கூறும்போது, தி.மு.க. கவுன்சிலர்கள், மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் மாமன்ற கூட்டத்தை கூட்டி விவாதம் நடத்தி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.
- மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாகர். இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவருக்கும் 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், சுதாகர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனது ஓட்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது முருகன் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு வந்து சுதாகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும், இங்கும் தெறித்து ஓடினர்.
2 தரப்பினரும் பயங்கர சத்தத்துடன் மோதி கொண்ட சம்பவத்தால், அந்த இடம் பரபரப்பாக காட்சியளித்தது.
இந்த மோதலில் கவுன்சிலர் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதேபோல காயமடைந்த முருகனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலுார் வடக்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் காமராஜ், ஆணையர் அழகுமீனா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான அனுமதி கேட்டு மன்ற பொருள் வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு தி.மு.க.வில் ஒரு தரப்பினர் அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அனுமதி அளிக்க கூடாது என்றும் கூறி மாறி மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அ.தி.மு.க.கவுன் சிலர்கள் 9 பேர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் மக்களின் குறைகள் எதுவும் பேசாமல் ரியல் எஸ்டேட்டுக்காக தி.மு.க. உறுப்பினர்கள் மன்றத்தை நடத்த விடாமல் செய்வதாகவும், மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
- சேலம் மாநகரில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏற்கனவே பகுதிச் செயலாளராக இருந்த சர்க்கரை சரவணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சேலம்:
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி சேலம் வந்தார். அப்போது தி.மு.க நிர்வாகிகள் கூட்டம், 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.
இதில் நிர்வாகிகள் பலர் மனு கொடுத்தனர். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குறித்து முதலமைச்சரிடம் கொடுத்த புகார் மனு சமூக வலைதளங்களில் பரவியது.
அதேபோல் மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் சக்கரை சரவணன் மத்திய மாவட்ட செயலாளருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். இது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க தலைமைக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் சக்கரை ஆ.சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தி.மு.க பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பகுதிச் செயலாளராக இருந்த சர்க்கரை சரவணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கட்சியில் எந்த பதவியும் இல்லாத நிலையில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.
ஜெயக்குமார் மாநகர செயலாளராக இருந்த நிலையில் அதிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயக்குமார் மாநகராட்சியில் ஆளும்கட்சி தலைவர் பதவி வகித்து வருகிறார். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அந்த பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- அறிவாலயத்தில் உள்ள அரங்கில் அமர வைக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்பட்டன.
- கட்சியின் முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தை நடத்தினார்.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 153 பேர் உள்ளனர். இவர்களில் சில கவுன்சிலர்கள் தான் சிறப்பாக செயல்படுகின்றனர்.
ஒரு சில கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சினைகளில் சரிவர பணியாற்றவில்லை என்று கட்சியின் மேலிடத்துக்கு புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில் தி.மு.க. மேலிடம் இன்று 98 கவுன்சிலர்களை அண்ணா அறிவாலயத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கே தி.மு.க. கவுன்சிலர்கள் அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர். 15-க்கும் மேற்பட்ட பெண் கவுன்சிலர்களும் வந்திருந்தனர். மேயர், துணை மேயரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
அறிவாலயத்தில் உள்ள அரங்கில் அமர வைக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்பட்டன. கட்சியின் முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, கட்சியின் துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோரும் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் மத்தியில் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க பாடுபட்டு வருகிறார். அவர் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வருகிறது.
கவுன்சிலர்களும் சிலர் வார்டு பக்கம் முழுமையாக சென்று பணிகளை கவனிப்பதில்லை.
இவ்வாறு கூறிவிட்டு நடைமுறையில் உள்ள சில குறைபாடுகளை அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டி பேசினார்.
மழை காலம் வருவதால் கால்வாய் தூர்வாரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன் பிறகு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களை வைத்து கொண்டு அந்த பகுதி கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
சில வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு உள்ளது பற்றியும் விசாரித்தார். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். புகார்களுக்கு ஆளாக கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
பெண் கவுன்சிலர்களின் கணவர்களையும் அழைத்து உங்கள் தலையீடு இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும் சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வந்திருந்ததால் அந்த கவுன்சிலர்களிடமும் தனியாக விசாரணை நடத்தி அறிவுரை கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்