search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவ ஆலயம்"

    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உள்ள தூய பவுலின் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டின் ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில், பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசைவ அசனவிருந்து நடைபெற்றது.

    இதில் இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த ஆலயத்தில் நடைபெறும் அசன விருந்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் பங்கேற்று ஒற்றுமையாக உணவருந்தி வருவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

    • ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது.
    • சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தருவை குளம் பகுதியில் தூய மிக்கல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது. இதில் வலது புறம் உள்ள ஏஞ்சல் சிலையில் இடது விரல்களில் இருந்து தண்ணீர் போன்ற ஒரு திரவம் வழிந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆச்சர்யம் அடைந்தனர்.

    இந்த செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.
    • சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி அவர் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது பொம்மிடி என்ற பகுதியில் பி.பள்ளி பட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.

    அவரை உள்ளே விடாமல் வாலிபர்கள் சிலர் வழி மறித்து தகராறு செய்தனர். மணிப்பூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும், அன்னையின் சிலைக்கு மாலை அணி வித்து வணங்கக்கூடாது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பொம்மிடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அண்ணாமலையுடன் தகராறு செய்து மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.

    மணிப்பூர் சம்பவத்தை ஏன் இங்கு தொடர்புபடுத்தி பேசுகிறீர்கள். அது வேறு, இது வேறு என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டதை தொடர்ந்து வாலிபர்கள் கலைந்து சென்றனர்.

    பின்னர் அண்ணாமலை கிறிஸ்தவ ஆலயத்துக்குள் சென்று வழிபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவர் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ சாதி மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 504-அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், 505 (2), வழிபாட்டு தலங்களில் வெறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குமரி கடற்கரை கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
    • கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது

    நாகர்கோவில் :

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் இன்று மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களில் இன்று மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து காலையில் அந்தந்த பகுதியில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. உலக மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகு வள்ளங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

    குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் துறைமுகங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விசைப்படகுகளுக்கு பங்கு தந்தைகள் அர்ச்சிப்பு செய்ததுடன் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். குளச்சல் காணிக்கை அன்னை ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

    தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இன்று நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டிகள் நடந்தது. கொட்டில்பாடு கிராமத்தில் கடல் மீன் சமையல் போட்டியும் நடத்தப்பட்டது. மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணியப்பன் தலைமையில் இன்று காலை திருப்பலி நடந்தது.

    பங்கு தந்தை யூஜின் தாமஸ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பங்கு மக்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளம் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. கடலில் மீனவர்கள் மலர் தூவியும் வழிபட்டனர்.

    பள்ளம் புனித மத்தேயூ ஆலயத்தில் பங்குத்தந்தை சகாய ஆண்டனி தலைமையில் திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. அன்னை நகர் அற்புதநாயகி ஆலயத்தில் பங்கு ரேமண்ட் தலைமையில் திருப்பலி நடந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    உலக மீனவர் தினத்தையொட்டி இணையம் புத்தன்துறையில் உலக மீனவர் தின பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை, கனிமொழி எம்.பி., விஜய்வசந்த் எம்.பி., அமைச்சர்கள் மனோதங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் மைக்கேல் நியூமேன் (வயது 34). இவர் கன்னியாகுமரி புதுக்கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி ஆலயத்தின் இணை பங்கு தந்தை அந்தோணி பிச்சை கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

    • மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர்
    • ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் செப்டம்பர் மாதம் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலயத்தின் முன் பகுதியில், பங்கு பேரவை நிர்வாகிகள் கூட்டம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர். இரு தரப்பி னரையும் போலீசார் சமாதா னம் செய்தனர். ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • மின்விளக்கு அலங்காரம் செய்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரை பகுதியில் குருசடி உள்ளது. இங்கு திருவிழாவை யொட்டி கோபுரத்தின் உச்சியில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்தது.

    இந்த பணியில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆபிரகாம் (வயது 45) என்பவர் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது அவர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபிரகாம் உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும்.
    • கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

    எத்தியோப்பியாவின் அம்காரா நகரில் லலிபெலா என்ற இடத்தில் அமைந்துள்ளது, இந்த புனித ஜார்ஜ் தேவாலயம். இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும்.

    இந்த ஆலயம் ஒருவித ஒன்றை சுண்ணாம்புக்கல் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. 12 அல்லது 13-ம் நூற்றாண்டில், கெம்ரே மெஜ்கல் லலிபெலா அரசின் கீழ் இந்த தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம், கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதியில் சிலுவை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதையும் நாம் பார்க்க முடியும்.

    • அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது.
    • 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.

    குளச்சல் அருகே உள்ள கோடிமுனையில் புனித பர்த்தலோமையார் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை மறுநாள் காலை 6.15 மணிக்கு தற்காலிக ஆலயத்தில் வைத்து திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு பால் காய்ச்சுதல், மாலை 5 மணிக்கு கொடிமரம் மற்றும் புதிய ஆலயம் அர்ச்சிப்பு நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார்.

    இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து பங்கு குடும்ப விழா தொடங்குகிறது. விழாவையொட்டி 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    15-ந் தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல், 10 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவையினர் மற்றும் பங்குத்தந்தையர்கள் செய்து வருகிறார்கள்.

    • கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர்.
    • இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த புனித ஆரோபண அன்னை ஆலயம் அமைந்துள்ள இடம் தான் மாத்திரவிளை என்று அழைக்கப்படும் அன்றைய பட்டங்காடு. மாதாவின் அன்பையும், அரவணைப்பையும் உணர்ந்த மக்கள் இவ்விடத்தை மாதா யாத்திரை செய்யும் விளை என்று அழைப்பார்கள். அது மருவியே நாளடைவில் மாத்திரவிளை என பெயர் பெற்றது.

    புனித தோமாவின் வருகை

    புனித தோமா இயேசுவின் சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் உயிர்ப்புக்கு பின் இந்தியாவுக்கு வந்து இறை போதனைகளிலும், சிற்பக்கலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இவரது வருகைக்கு பிறகு தான், இவரது போதனையால் நம்பிக்கை பெற்ற மக்கள் சிலர் சிலுவையை மையமாக வைத்து வழிபட தொடங்கினார்கள். கி.பி.1435-க்கு முன் இந்த தோமையார் வழி கிறிஸ்தவர்கள் திறந்த வெளி ஜெபக்கூடம் அமைத்து சுற்றிலும் தீப்பந்தங்கள், விளக்கு தூண்கள் அமைத்து வழி பட்டனர்.

    ஆலயம்

    கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர். கி.பி.16-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் குமரிக்கு வந்தார். சவேரியார் ஊர்-ஊராக சென்று கிறிஸ்தவத்தை போதித்தார். இதனால் உற்சாகமடைந்த மாத்திரவிளை வட்டாரப்பகுதி மக்களும் வழிபாட்டில் முன்னேற்றம் அடைகின்றனர். கி.பி.1555-ல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்ட கற்சுவர் ஆலயமாக உருவாக்கி வழிபாடு நடத்தினார்கள்.

    16-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு சேரநாட்டில் தங்களது அரசை நிலைநாட்டுகிறது. இந்த கால கட்டத்தில் தான் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஆலயம் தீக்கிரையாக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் உள் பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதா சொரூபம் எங்கும் காணப்படவில்லை. அந்த சமயம் எங்கும் கொள்ளை நோய் பரவியது. ஒரு நாள் காலை வேளையில் காணாமல் போன மாதா சொரூபம் ஆலய சுவர்களின் உள்ளே நடுப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு மக்கள் திகைப்புற்றனர். அன்றைய நாளில் இருந்து கொள்ளை நோயின் வேகம் குறைய தொடங்கியது. எனவே மீண்டும் ஆலயப்பணி தொடங்கப்பட்டு கி.பி. 1615-ல் ஓட்டுக்கூரையிலான சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட கற்சுவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

    வேத சாட்சி

    திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் சிறை அதிகாரியாக இருந்த நட்டாலம் நீலகண்டர், டச்சுப்படை தளபதி டிலனாயின் அறிவுரையால் தேவசகாயம் என்று பெயரில் கிறிஸ்தவரானார். அவர் மதம் மாற காரணமாக இருந்ததாக மாத்திரவிளை,மாங்கோடு பகுதியை சேர்ந்த மரிய அருளப்பன், முத்தப்பன், ஞானப்பிரகாசம், மரிய செபஸ்தியான், சாமியப்பன், ராயன் என்பவர்கள் மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த மண்ணின் மைந்தர்கள் அன்றே வேத சாட்சியாக உயிர் தியாகம் செய்து மாத்திரவிளை மண்ணுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

    அவர்களின் நினைவாக டிலனாய் தான் வழிபட்டு கொண்டிருந்த மாதா சொரூபத்தை மக்களிடம் வழங்கினார். அந்த சொரூபத்தை தேரில் வைத்து மக்கள் வழிபட்டனர். 1752-ல் சிறிய கோபுரத்துடன் ஆலயத்தை மக்கள் உருவாக்கினார்கள். 1780-ம் ஆண்டிற்கு பின் இவ்வாலயம் ஒரு பணித்தளமாக உயர்ந்து காரங்காடு பங்கின்கீழ் செயல்பட தொடங்கியது. 1825-ம் ஆண்டு அழகிய கோபுரத்துடன் இணைந்த பெரிய ஆலயமானது.

    தனி பங்கு

    1886-ல் ஒரு பங்கு தளமாக உயர்ந்து, முளகுமூட்டின் கிளை பங்காக செயல்பட தொடங்கியது. பரலோக அன்னை என்ற பெயருடன் விளங்கிய இவ்வாலயத்தை 1906-ல் கொல்லம் மறை மாவட்ட ஆயர் பென்சிகர் தனி பங்காக உயர்த்தினார். முதல் பங்குத்தந்தை வின்சென்ட் பெர்னாண்டஸ். ஆலயத்தில் உள்ள புனித ஆரோபண அன்னை சொரூபம் பன்னிரு விண்மீன் முடிசூட ரோமிலிருந்து கொண்டு வரப்பட்டது. இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் பெனடிக்ட் அலெக்சாண்டர் காலத்தில் ஆயர் ஆரோக்கியசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 30-ந்தேதி ஆயர் ஆரோக்கியசாமி அர்ச்சித்தார்.

    புனித ஆரோபண அன்னையின் விழா திருக்கொடியேற்ற நிகழ்ச்சியானது ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடைபெறும். 15-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. அதன் இறுதியில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள். இந்த பங்கின் கீழ் 37 அன்பியங்கள், 1,500 குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாளை பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    குழித்துறை அருகே உள்ள திருத்துவபுரத்தில் மூவொரு இறைவன் பேராலயம் குழித்துறை மறைமாவட்ட தலைமை பேராலயமாக உள்ளது. இந்த பேராலயத்தின் திருவிழா நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த பேராலயத்தில் வைத்து உறுதிபூசுதல் வழங்கும் அருள் அடையாள நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு உறுதிபூசுதல் வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்குதந்தை பீட்டர் முன்னிலை வகிக்கிறார்.

    நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு முளகுமூடு மறை வட்டாரத்தில் இருந்து பவனியாக கொண்டுவரப்படும் கொடி பேராலயம் வந்தடைகிறது. தொடர்ந்து முன்னாள் பங்குதந்தை யேசுதாசன் தாமஸ் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவடட குருகுல முதல்வர் ஹிலேரியுஸ் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதில் முளகுமூடு மற்றும் காரங்காடு மறை வட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மரிய ராஜேந்திரன் மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மறை மாவட்ட தொடர்பாளர் பேரருட்தந்தை இயேசுரத்தினம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றுகிறார். மறை மாவட்ட செயலாளர் பேரருட்தந்தை ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார். மறைமாவட்ட நிதிக்காப்பாளர் அருட்தந்தை அகஸ்டின், பணி குழுக்களின் இயக்குனர் அருட்தந்தை ஜெலஸ்டின் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.

    விழாவில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி காலை 9 மணிக்கு பேராலய பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 4-ந்தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6.30 மணிக்கு கொடிஇறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்குதல் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்துவபுரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பேரருட்பணியாளர் புஷ்பராஜ், பேராலய பங்குதந்தை, அருட்சகோதரிகள், அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    ×