என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் ராமச்சந்திரன்"
- காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது.
- அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் மறுவிசாரணை நடத்தி வந்தனர். இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி தலைமையிலான ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் கடந்த 26-ந்தேதி கொடநாடு எஸ்டேட்டில், 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.
அப்போது காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது. அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.
கொடநாடு வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சாட்சிகளை கலைத்தது போல் அந்த மரத்தை எஸ்டேட் ஊழியர்கள் வெட்டி உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதா என ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, வனத்தில் வெட்டப்படும் மரங்கள் குறித்து வனத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். கொடநாட்டில் மரம் வெட்டப்பட்டதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
- சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்பாக்கம் அருகே உள்ளது முதலியார்குப்பம் படகு குழாம். இங்கிருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது.
- இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தருகின்றனர்.
செங்கல்பட்டு:
கல்பாக்கம் அருகே உள்ளது முதலியார்குப்பம் படகு குழாம். இங்கிருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது.
படகுகள் மூலம் இந்த கடற்கரை தீவுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இது சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
இந்த நிலையில் முதலியார்குப்பம் படகு குழாமினை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப்நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளதால், ஆண்டு தோறும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், படகு குழாம்களான முட்டுக்காடு, முதலியார் குப்பம், ஊட்டி, பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், கோவை மாவட்டம் வாலாங்குளம் மற்றும் குற்றாலம் ஆகிய 9 இடங்களில் செயல்படுத்தி வருகின்றது.
முதலியார்குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமையப் பெற்றது. பறவைகளைப் பார்வையிடுவோர்களின் சொர்க்கமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெறும் தலமாகவும் விளங்குகிறது.
ஓடியூர் ஏரியை ஒட்டியுள்ள வண்ணமயமான கடற்கரை தீவிற்கு எந்திர படகு மூலம் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் இந்த தீவில் சில மணி நேரம் தங்கி இயற்கை சூழலை கண்டுகளிக்க வசதி உள்ளது இந்த படகு குழாமின் சிறப்பம்சமாகும்.
படகில் பயணிக்கும் போது புலம்பெயர் பறவைகளை கண்டுகளித்தும் மற்றும் படகு குழாம் உணவகத்தில் சுவையான கடல் உணவுகளை உண்டு சுவைத்தும் மகிழலாம்.
நீர் விளையாட்டு வசதிகள் கொண்ட முதலியார்குப்பம் படகு குழாமில் விசைப்படகு, மிதிப்படகு, ஓரிருக்கை படகு, வாழைப் பழ வடிவிலான படகு, வாட்டர் ஸ்கூட்டர், எந்திர படகு, அதிகவேக ஜெட்ஸ்கி போன்ற படகுகள் உள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வண்ணம், சுற்றுச் சூழலுக்கு உகந்த நீர் விளையாட்டுகள் அமைக்கப்பட்டு முதலியார்குப்பம் படகு குழாமானது தனித்துவமான பொழுது போக்கு தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
முதலியார்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது.
ஊட்டி:
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது.
மேலும் பரதநாட்டியம், சிலம்பாட்டம், பறை சாற்றுதல், குச்சி பிடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களையும் வளர்க்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற கலைகளை வளர்ப்பதன் மூலம் தமிழ்மொழி வளரும்.
அனைத்து துறைகளையும் சிறந்த துறைகளாக கொண்டுவர முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் 2019-20-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.
தமிழகத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி. சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஊட்டி:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தி.மு.க. சார்பில் பிரசார கூட்டம் நடந்தது.
இந்த பிரசாரத்தின் போது தி.மு.க சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும்.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார பேனர் வைக்கப்பட்டதாக தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அப்போதைய கோத்தகிரி தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணையும் நடைபெற்றது.
மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ் இனியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய சாட்சிகள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா என அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
- சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகள் சுற்றுலாத்துறை மூலமாக செய்யப்படும்.
சென்னை:
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா? என அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் கூறியதாவது:-
சிறுமலை பகுதி மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதி எனவும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகள் சுற்றுலாத்துறை மூலமாக செய்யப்படும்.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் மொத்த மதிப்பீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஆராய்ந்து, வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வரும் காலங்களில் சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது.
- கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
ஊட்டி:
குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களை தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேயிலை விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.
நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியை குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தேயிலை கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை. இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தொடா்ந்து, தமிழக அரசு தேயிலை தோட்டக் கழக (டேன் டீ) வளாகத்தில் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினருடன் நடைபெற்ற மனித சங்கலி விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா்.
இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்து குமாா், மலைப் பகுதி சிறப்பு திட்ட அதிகாரி ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- நாளை திருவாரூரில் கலைஞர் கோட்டகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
- தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தை இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நாளை திருவாரூரில் கலைஞர் கோட்டகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.
இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதேபோல் உலக அளவில் விளையாட்டு துறையை முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு ஓயாமல் உழைத்து வருகிறார். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது. அதுவும் மிகக் குறைந்த விலையில் உயர்தர மருத்துவம் கிடைக்கிறது.
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பண்டைய கால தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வருங்கால சந்ததியருக்கு மிகவும் பயனுள்ளதாக அருங்காட்சியகம் உள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூருக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கை பூங்கா இன்னும் இரண்டு மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் ஆய்வு செய்து சுற்றுலா துறைக்கு என்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சரவணகுமார், மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையையும் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வைகை அணை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முன்னணியில் உள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு சுமார் ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.
சுற்றுலாத்துறை மக்களின் முக்கிய தேவையாக இன்றைய காலகட்டத்தில் மாறியுள்ளது. வேலைப்பளுவின் காரணமாக மன அமைதிக்கு ஓய்வு எடுக்கவும் மறுபடியும் ஊக்கத்துடன் பணிகளை மேற்கொள்ளவும் சுற்றுலா உதவுகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை மன அழுத்தத்தை போக்க சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
கொரோனா காலத்தில் சுற்றுலாத்துறை முடக்கி இருந்தது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது மீண்டும் சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது.
சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக சாத்திக்கூறுகள் உள்ள சுற்றுலாத்தளங்களில் புதிய படகு சவாரிகளை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டதாக வாதம்.
விருதுநகர்:
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார்.
கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் 27ம் தேதியும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
- 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்:
கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுலா கொள்கை 2023-யை வெளியிட்டு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை சலுகைகளை அறிவித்துள்ளார்.
- வாட்டர் ஸ்கூட்டர், மோட்டார் படகுகள், விரைவு படகுகள், மிதி படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள் என மொத்தம் 588 படகுகள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மண்டல மேலாளர் அளவிலான ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
இதில் முதன்மை செயலாளர் க.மணிவாசன், சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் காகர்லா உஷா மற்றும் பொது மேலாளர் கமலா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை சுற்றுலா பயணிகளை அதிகம் வரும் வகையில் கவர்ந்திழுக்கும் மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சுற்றுலா கொள்கை 2023-யை வெளியிட்டு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை சலுகைகளை அறிவித்துள்ளார்.
முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம், வாலாங்குளம் உள்ளிட்ட 9 இடங்களில் படகு குழாம்களை சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.
வாட்டர் ஸ்கூட்டர், மோட்டார் படகுகள், விரைவு படகுகள், மிதி படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள் என மொத்தம் 588 படகுகள் இயக்கப்படுகின்றன.
இதில் இந்த ஆண்டு 42 லட்சத்து 23 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
2023-2024-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதத்தில் மட்டும் 27 லட்சத்து 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கா.ராமச்சந்திரன் கூறினார்.