search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் தீ விபத்து"

    • கடந்த மாதமும் இதுபோன்று ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் பலி.
    • தேர்தலை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு.

    வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்து மளமளவென நான்கு பெட்டிகளில் பரவியது.

    இதனால் பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். இருந்த போதிலும் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நாளை வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறிவரும் எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் இதுபோன்று நடைபெற்ற ரெயில் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசார் மற்றும் அரசு எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசியவாத கட்சி மீது குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதேவேளையில் வங்காளதேச தேசியவாத கட்சி குற்றச்சாட்டை மறுத்திருந்தது. ஆளும்கட்சியின் அடக்குமுறைக்கு சாக்குபோக்கான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்திருந்தது.

    வங்காளதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த வருடம் போராட்டம் செய்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    • ஒரு பெட்டி சக்கரத்தில் தீ எரிவதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • தீயணைப்பு கருவி மூலம் சக்கரத்தில் பற்றிய தீயை ஊழியர்கள் அணைத்தனர்.

    டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இரு அடுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. டவுகா ரெயில் நிலையத்தை நெருங்கும் போது அந்த ரெயிலின் ஒரு பெட்டி சக்கரத்தில் தீ எரிவதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு கருவி மூலம் சக்கரத்தில் பற்றிய தீயை ஊழியர்கள் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. ரெயில் சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்த அதில் பயணம் செய்த பயணிகள் பீதி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    • தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர்.
    • சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர்.

    மதுரை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சிறப்பு சுற்றுலா ரெயில் பெட்டி மூலம் 63 பயணிகள் கடந்த 17-ந்தேதி ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர். கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு கடந்த 26-ந்தேதி அதிகாலை மதுரை வந்தனர்.

    அவர்கள் பயணித்த ரெயில் பெட்டி மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் போடி லைனில் நிறுத்தப்பட்டிருந் தது. அதிகாலை 5.15 மணிக்கு அந்த ரெயில் பெட்டியில் டீ போடுவதற்காக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 9 பேர் பலியானார்கள். பலத்த காயம் அடைந்த 8 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டியை தடயவியல் நிபுணர்கள் 2 முறை சோதனை நடத்தினர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய 2 சிலிண்டர்கள், விறகு, நிலக்கரி, மண்ணெண்ணை பாட்டில் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இந்த சம்பவத்தில் முறையான விதிகளை பின்பற்றாமல் ஏற்பாடு செய்த லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் உரிமையாளரை கைது செய்யவும் தெற்கு ரெயில்வே பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளரும், சுற்றுலா வழிகாட்டியுமான நரேந்திரகுமார், சமையல் பணியாளர் ஹர் தீப் சஹானி, சுற்றுலா உதவியாளர் தீபக், சமையல் உதவியாளர்கள் சத்ய பிரகாஷ் ரஸ்தோகி, கபம் கஸ்யப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி மதுரையில் 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அப் போது ரெயில்வே பாதுகாப்பு படையினர், தமிழக ரெயில்வே போலீசார், வர்த்தக பிரிவை சேர்ந்தவர் கள், சுற்றுலா ரெயில் பெட்டியை சோதனை நடத்த வேண்டிய கேட்டரிங் ஆய்வாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள், அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.

    பின்னர் அவர் கூறுகையில், நாகர்கோவிலுக்கு இந்த சுற்றுலா ரெயில் சென்ற போது, அங்கு சட்டவிரோதமாக சிலிண்டரில் கியாஸ் நிரப்பியுள்ளனர். அப்போது முதலே அதில் கியாஸ் கசிவு இருந்துள்ளது. அதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது என்றார்.

    தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிக்க தவறியதாக அதிகாரிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • மதுரை ரெயில் தீ விபத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழப்பு.
    • தீ விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை செய்ய இருக்கிறார்.

    மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மதுரை ரெயில் தீ விபத்து குறித்து எம்.பி. சு வெங்கடேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சு வெங்கடேசன் கூறியதாவது..,

    "ரெயில் தீ விபத்துக்கு ஆர்.பி.எஃப். தோல்வியே காரணம் என்று ரெயில்வே ஆலோசனை உறுப்பினர் என்ற அடிப்படையில் கூறுகிறேன். ரெயில்களில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல, அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்பதை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தான் வாகனம் ரெயிலில் அனுமதிக்கப்படுகிறது."

    "நாடு முழுக்க எந்த ரெயில் நிலையத்திலும் உள்ள கடைகளில் கியாஸ் அடுப்பு பயன்படுத்தக்கூடாது. மின்சார அடுப்பையே பயன்படுத்த வேண்டும். இத்தகைய கடுமையான விதிகள் அமலில் இருக்கும் போது, இந்த விபத்துக்கு சொல்லப்படும் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் கொண்டுவந்த ஒரு பொருளால் மட்டும் இந்த விபத்து ஏற்படவில்லை."

    "தீப்பற்றக்கூடிய பொருட்களை இரயிலில் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதி இருக்கும் போது பத்து நாட்களாக கியாஸ் சிலிண்டரோடு தென்னிந்தியா நெடுக ஒரு ரயில் பெட்டி பயணித்திருக்கிறது என்றால் ஆர்.பி.எஃப். சோதனைப்பணி என்பது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றே பொருள். இந்த விபத்து ரெயில் பயணத்தின் போது ஏற்பட்டு இருந்தால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரும் விபத்தாக மாறி இருக்கும். இந்த விபத்துக்கு முதல் காரணம் ரெயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வி தான் ஆகும்," என்று அவர் தெரிவித்தார்.

    • ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.
    • ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஐதராபாத்:

    மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.

    இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.

    இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வியாசர்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கியபோது என்ஜினில் தீப்பற்றியது.
    • உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்து வியாசர்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கியபோது என்ஜினில் தீப்பற்றியது. இதனையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. என்ஜின் பகுதியில் இருந்து நெருப்புடன் கரும்புகை எழுந்ததால் பயணிகள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

    விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
    • தென் மாநிலங்களில் அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துவதற்காகவே, டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளான்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 2-ந்தேதி இரவு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் டி1 பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. அந்த ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கருகி பலியானார்கள்.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசாரும், தேசிய புலனாய்வு முகமையினரும் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவன் டெல்லியை சேர்ந்த ஷாரூக் செய்பி (வயது 24) என தெரியவந்தது.

    ரெயிலில் தீ வைத்த அவன், பயணிகள் அங்கும் இங்கும் ஓடிய நேரத்தில் தப்பி சென்று இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டபோது மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ரத்தினகிரி பகுதியில் பதுங்கி இருந்த ஷாரூக் செய்பியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவன் கேரளா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனை கோழிக்கோடு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 11 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

    போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஷாரூக் செய்பி திட்டமிட்டு டி1 பெட்டியை தேர்ந்தெடுத்து தீ வைப்பு செயலில் ஈடுபட்டுள்ளான். அந்த பெட்டியை அடுத்து, ஏ.சி.பெட்டி உள்ளது. அந்த பெட்டிக்கு தீ பரவினால், அங்குள்ள திரைச்சீலைகள், போர்வை போன்றவையும் தீயில் எரியும். இதனால் ரெயில் முழுவதும் தீ பிடிக்கும் எனக்கருதியே டி1 பெட்டியை தேர்வு செய்ததாக ஷாரூக் செய்பி போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

    மேலும் அவன் தென் மாநிலங்களில் அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துவதற்காகவே, டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளான். கேரளா செல்லும் ரெயிலில் ஏறிய அவன் சொரனூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கி உள்ளான். பின்னர் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கேன்களில் பெட்ரோல் வாங்கி உள்ளான். அதன்பிறகு தான் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளான். அவனுக்கு வெளி மாநிலங்களில் இருந்து பலரும் உதவி செய்வதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீ விபத்து ஏற்பட்ட எஸ்-6 பெட்டியை கழற்றி விட்டு மற்ற பெட்டிகளுடன் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது.
    • தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்காக திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வரை திருமலா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    நேற்று இரவு 11 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பிய திருமலா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை திருப்பதி ரெயில் நிலையம் வந்தடைந்தது. திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு காலை 5.30 மணிக்கு திருமலா எக்ஸ்பிரஸ் புறப்படுவது வழக்கம். இன்று அதிகாலை 5 மணிக்கு பயணம் செய்வதற்காக ரெயிலில் பயணிகள் உட்கார்ந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எஸ்-6 பெட்டியில் உள்ள கழிவறையில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனைக்கண்ட ரெயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர்.

    இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

    இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட எஸ்-6 பெட்டியை கழற்றி விட்டு மற்ற பெட்டிகளுடன் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றது. தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீகார் மாநிலம் ரெக்சலில் இருந்து நர்காட்டி காகஞ்ச் என்ற இடத்துக்கு இன்று காலை பயணிகள் ரெயில் சென்றது.
    • சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் ரெக்சலில் இருந்து நர்காட்டி காகஞ்ச் என்ற இடத்துக்கு இன்று காலை பயணிகள் ரெயில் சென்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர் பெல்லா ரெயில் நிலையத்தில் நின்று விட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது.

    சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அதற்குள் என்ஜின் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தில் என்ஜின் சேதம் அடைந்தது.

    என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதும் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பயணம் செய்த அனைவரும் அவசரஅவசரமாக கீழே இறங்கி உயிர் தப்பினார்கள். தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×