என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதுமலை புலிகள் காப்பகம்"
- கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
- தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகம் சென்று விட்டு திரும்புவது தான் வழக்கம்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளை பார்க்கவும், வனத்திற்கு நடுவே சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியிலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டியது.
கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை 3 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது.
மேலும் தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கூறுகையில், வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெப்பக்காட்டில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது என்றார்.
- பிரதமர் நரேந்திர மோடியும் பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி சென்றிருந்தார்.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர்.
பாகன் தம்பதியினர் மற்றும் யானை குட்டிகள் இடையேயான பாச உறவை மையமாக வைத்து தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் தயாரானது.
இந்த ஆவணப்படம் அண்மையில் ஆஸ்கர் விருதினையும் பெற்றது. இதையடுத்து அந்த படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி மற்றும் யானை குட்டிகள் உலகளவில் புகழ் பெற்றன. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி சென்றிருந்தார்.
இந்த நிலையில் பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி முதுமலைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து மைசூருக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மசினகுடி வந்து, அங்கிருந்து கார் மூலம் முதுமலைக்கு வருகிறார்.
அங்கு பாகன் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டுவதோடு, அங்குள்ள பழங்குடி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேச உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது. இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 6 நாட்கள் முகாம் மூடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தெப்பக்காடு யானைகள் முகாம் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.
யானைகள் முகாமுக்குள் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து கொள்ளலாம் என்றனர்.
- உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
- வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது.
இந்த வனச்சரகங்களில் ஆண்டு தோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கடந்த 23-ந்தேதி உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்றது.உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வன சகரங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.
இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.
அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டது.மேலும் யானைலத்தி, காட்டெருமைசாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரி மந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளான இன்று கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கணக்கெடுப்பு பணியில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் மேற்பார்வையில் வனச்சரகர்கள் சிவக்குமார் (உடுமலை), சுரேஷ் (அமராவதி), மகேஸ் (கொழுமம்), முருகேசன் (வந்தரவு) தலைமையிலான வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புகாவலர்கள் ஈடுபட்டனர்.
- மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது.
- மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஆகும். முதுமலை புலிகள் சரணாலயத்தில் வளைந்து நெளிந்து ஓடும் மாயாறு, வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே காட்டு விலங்குகள் தினமும் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அங்கு மற்றொரு யானையும் பிளிறியபடி வந்தது. அப்போது 2 யானைகளும் ஒன்றுக்கொன்று முறைத்து பார்த்தபடி இருந்தன. இந்த நிலையில் அவை திடீரென ஒன்றுக்கொன்று சண்டை போட தொடங்கின. எனவே அந்தப் பகுதியில் யானைகளின் பிளிறலும், தந்தங்கள் மோதிக் கொள்ளும் சப்தமும் பெரிதாக எதிரொலித்தது. இதனைக்கேட்ட பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்களில் ஒரு சிலர் காட்டு யானைகள் ஆக்ரோசத்துடன் மோதிக்கொண்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர்.
மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு 2 யானைகளும் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.
மசினகுடியில் காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை வீடியோ எடுத்த ஒருவர், அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுவும், மசினக்குடி காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை, டிவிட்டர் இணையதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.
- பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி வருகிறார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் மூலமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு செல்கிறார்.
அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிப்பதோடு, அவர்களை பொன்னாடை போர்த்தியும் கவுரவிக்க உள்ளார்.
தொடர்ந்து ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளையும் அவர் பார்வையிடுகிறார்.
பின்னர் யானைகள் முகாமுக்கு செல்லும் பிரதமர் மோடி, யானைகள் பராமரிக்கும் முறை, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
மேலும் யானை பாகன்களுடன் கலந்துரையாடி, வளர்ப்பு யானைகளுக்கு கரும்பும் வழங்குகிறார்.
பின்னர் முதுமலை வனத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு செல்லும் பிரதமர் புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.
இதற்கிடையே முதுமலைக்கு பிரதமர் வருவதையொட்டி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று முதுமலைக்கு வந்தனர்.
அவர்கள் முதுமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் மசினகுடியில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினர்.
இந்த ஆய்வின்போது நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், முதுமலை புலிகள் காப்பக கள துணை இயக்குனர் வித்யா உள்பட பலர் இருந்தனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் 7 எஸ்.பிக்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் முதுமலை மற்றும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து போலீசார் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ளனர்.
பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மைசூரில் இருந்து முதுமலை வர உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர சோதனை சாவடி, அடர்ந்த வனப்பகுதி, மலையேற்றம் செல்லும் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதுமலை வனப்பகுதி என்பதால் அதிவிரைவுப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.
மேலும் அங்குள்ள விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளை வனத்திற்குள் அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டது.
- நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
- முதுமலையில் தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:
பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி சென்னை வர உள்ளார். அன்று நடக்கும் விழாவில் அவர் சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.
அதற்கு அடுத்த நாள் 9-ந்தேதி மீண்டும் தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளதாக மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி 9-ந் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அதன் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரதமர் மோடி முதுமலைக்கு வரும் உறுதியான தகவல்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. டெல்லியில் இருந்து பிரதமர் வரும் விவரங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.
முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை.
தற்போது பிரதமர் வருவதாக வெளியான தகவலை அடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதுமலையில் தெப்பக்காடு முகாமுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர குட்டி யானைகள் பராமரிக்கப்படும் கரால் பகுதிக்கும் புதியதாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இங்கு எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து செல்வதுடன், மத்திய, மாநில அரசுகளின் வி.ஐ.பி.களும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் வருகை பற்றி இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றனர்.
- கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.
- வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் நுழைவதும், பயிர்களை சேதம் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, கரளவாடி, அக்கூர் ஜோரை, ஜோரா ஓசூர் உள்ள கிராம பகுதிகளில் வனப்பகுதியில் சுற்றி திரியும் கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. மேலும் வனத்துறையினரையும், விவசாயிகளையும் துரத்தி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி ஆனை மலையில் இருந்து முத்து, கபில்தேவ் என 2 கும்கி யானைகள் கருப்பனை பிடிக்க அழைத்து வரப்பட்டன.
ஆனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாததால் மீண்டும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சலீம் என்ற கும்கி யானை வந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் கருப்பன் யானை சென்று மறைந்து விட்டது.
இதனையடுத்து வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்கும் வகையில் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். எனினும் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மீண்டும் மறைந்து விட்டது. இதனைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. சில நாட்களாக கருப்பன் யானை தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தாளவாடி வனப்பகுதியில் உள்ள ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து கருப்பன் யானையை பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பொம்மன், சுஜய் ஆகிய 2 கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இரவு நேரத்தில் கும்கிகள் உதவியுடன் மீண்டும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். ஏற்கனவே 2 முறை கும்கிகள் கொண்டு வரப்பட்டும் பிடிக்க முடியாத நிலையில் தற்போது 3-வது முறையாக கும்கிகள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
- இறந்த பன்றிகளின் உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் இந்நோய் மேலும் பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் முதுமலை புலிகள் காப்பகமும் இணைந்து அமைந்துள்ளதால், இங்கும் பன்றிகள் அதிகளவு இறந்துள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 15 காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து இறந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
நேற்று மேலும் 2 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது. உடனடியாக அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கிடையே இறந்த பன்றிகளின் உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- மசினகுடியில் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
- பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஏராளமான புலிகள், யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இங்கு ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். பருவமழைக்கு முன்னரும், மழை ஓய்ந்த பின்னரும் என கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று தொடங்கிய இந்த பணி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மசினகுடியில் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அங்கு கணக்கெடுப்புக்காக சென்ற வன ஊழியர்கள் பாதுகாப்புக்காக கையில் தீப்பந்தங்களை ஏந்தி சென்றனர்.
- ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், பறவைகள், மான்கள், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், பறவைகள், மான்கள், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம், சீகூா் சரகத்தில் உள்ள ஆனைகட்டி பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அழுகிய நிலையில் யானையின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர்.
அப்போது யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது. தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
ஆனைகட்டி வனப்பகுதியில் யானை அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டோம். அப்போது இறந்து கிடந்த யானை 22 வயது பெண் யானை என்பது தெரியவந்தது. இருப்பினும் யானை இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
பிரேத பரிசோதனைக்குப் பின்னா் யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்