search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர்"

    • நண்பர் கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, அமரன் திரைப்படம் பார்த்தேன்.
    • நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட்.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

    அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

     

    அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன்.

    புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.

    மேஜர் முகுந்த் வரதராஜன்- திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும்- நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட் என பதிவிட்டிருந்தார்.

    • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
    • காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

    வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சொந்த ஊரான கூடலூருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.

    காளிதாஸ் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

    காளிதாசின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.
    • எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என்ற புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவுசார் மாநிலம் தான் தமிழ்நாடு. சமூக விரோதிகளை களை எடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அவரது ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியில் தொடர்பு உடையவை. ஆனால் தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.

    அதிமுக தொடர்பான சம்பவம் என்று எடுத்துக் கொண்டால் அது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவினுடய கேம்ப் அலுவலகமாக இருந்தது. அங்கு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது ஆட்சியாளரினுடைய திறமையின்மையை காண்பிப்பதாக இருந்திருக்கிறது அல்லது ஏதோ சதி திட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.

    அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். 13 பேர் உயிரிழந்தது டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் கூறியிருந்தார். அன்று அதை ஒப்பு கொள்ளவில்லை.

    ஆனால் எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற சம்பவங்களில் ஒன்று புதுச்சேரியை சேர்ந்தது. அதையும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருக்கிறார்.

    மீதம் உள்ள 4 வன்முறை சம்பவங்கள் எதுவும் அரசாங்கத்திற்கு தொடர்புடையவை அல்ல. இந்த சம்பவங்கள் அனைத்து அவர்களுக்குள் முன்விரோதம், பகைமை அடிப்படையில் ஏற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறதே தவிர இதில் எதுவும் சட்டவிரோதம் சம்பவம்மும் இல்லை.

    ஒரு காலத்தில் 4 கோடி மக்களுக்கு தலைவர் என்று தலைவர் கலைஞரை சொல்லுவோம். இன்றைக்கு 8 கோடி மக்களுக்கு தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் தொகையும் உயர்ந்திருக்கிறது இதுபோன்ற சம்பவங்களும் கூடவும் செய்யும் குறையவும் செய்யும். ஆனால் அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.

    அதே வேளையில் யார் யாருக்கு முன் விரோதம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ரவுடிகளின் பட்டியலை வைத்து அவர்களுக்குள் ஏதாவது விரோதம் இருக்கிறதா என்பதை குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு அப்படி ஏதாவது பிரச்சனை இருப்பின் அதை தீர்த்து வைக்க முன்நடவடிக்கை எடுப்பவதாக முதலமைச்சர் இருக்கிறார்.

    ஆகவே சட்டம் ஒழுங்கை நாங்கள் சிறப்பாக பேணி பாதுகாப்பதால் தான் இந்தியாவிலேயே முதன்மையாக மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது, மறுக்கவும் முடியாது

    அதனால்தான் நிறைய தொழிலதிபர்கள் நம்மை நாடி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் இதை வேறு கோணத்திலே மாற்றிவிட்டு இந்த சமூகத்தை பின்நோக்கி தள்ளிவிட முடியுமா என கனவு காண்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒரு காலத்திலும் பலிக்காது. இவை அனைத்தையும் முதலமைச்சர் வென்று காட்டுவார். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்கா என்பதை நிருப்பித்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது

    தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2024-ல், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை, அவ்வளவு ஏன்? தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை என்ற தனது கம்பிக் கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    நாட்டின் சுமூகமான நிர்வாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் கூட்டுறவும் மிக அவசியம். இரு தரப்பினரின் கூட்டுறவையும் மாநிலங்களின் சமூக பொருளாதரத்தையும் மேம்படுத்தும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல.

    தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழக மக்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் மூலம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.

    காரணம், நிதி ஆயோக் மூலம் தமிழகம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது. உதாரணமாக,

    *  தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், அடல் (ATAL) சமூக கண்டுபிடிப்பு மையம் தமிழகத்தில் துவங்கப்பட்டது.

    * 2021-ல் நிதி ஆயோக் நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை நடத்தியது.

    * தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், நிதி ஆயோக்குடன் இணைக்கப்பட்ட வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) ஆகியவற்றுடனான அறிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இவ்வாறு தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    • அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது
    • கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும்

    சமீபத்தில் பாஜகவில் இணைந்த சரத்குமார் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில்பாதை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும் கூட, சூழலியல் காரணங்களைக் காட்டி அத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. ரயில்வே திட்டங்களுக்கு 2749 ஹெக்டேர் நிலம் தேவையாக இருக்கும் போது, 807 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    அடிப்படைப் பணிகளை தாமதம் செய்துவிட்டு உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் போக்கை திமுக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    அரசியலை முன்வைத்து, ஒருபோதும் மக்கள் தேவைகளை புறக்கணிக்கக்கூடாது.

    மேலும், நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் நலன் கருதி, நமது உரிமையை பெற வேண்டும் என்றால், கூட்டத்தில் பங்கெடுத்து உரிமைகளை பெற போராடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'புதுமை பெண்' என்னும் உன்னதமான திட்டம் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர்.

    புதுமை பெண் திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் புதுமை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு கூறியிருப்பதாவது,

    பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து பெண் சமூகம் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பாளராகவும், கல்வி அறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக 'புதுமை பெண்' என்னும் உன்னதமான திட்டம் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக புதுமை பெண்' திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயன் பெற்றனர்.

    இதைத் தொடர்ந்து, வரும் 2024-25ம் கல்வியாண்டு முதல் 'புதுமை பெண்' திட்டத்தின் வாயிலாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் 'புதுமை பெண்' திட்டத்தில் பயன்பெற அந்தந்த கல்லூரியின் சிறப்பு அலுவலர் (நோடல் அலுவலர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • இருவர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    சிவகாசி அடுத்த காளையார் குறிச்சி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    சிவகாசி பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும், விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    • மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
    • மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்.

    மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா, 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம், 2023" என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

    அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    பாராளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது.

    நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (8-7-2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் அவர்கள் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்கள்.

    இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    • ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    சட்ட சபையில் துரை முருகன் பேச்சை கேட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    துரைமுருகன் டாஸ்மாக்கில் கிக் இல்லை, என்று கிறுக்குத்தனமாக அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது.

    "டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை..." என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்ட சபையில் முதலமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது, கிறுக்குத்தனமான ஒரு செயலாகத் தான் மக்கள் அனைவருமே பார்க்கிறார்கள். மூத்த அமைச்சர் இப்படியொரு பதில் அளிப்பது மிக மிகக் கண்டனத்திற்குறியது.

    டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை, என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசு தான் காரணம் என்பதை துரை முருகன் அவர்கள் தன் வாயினாலே ஒப்புக்கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது என்று கூறியுள்ளார்.

    • அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும்.
    • முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    தந்தை யர் தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் அவரது அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும். இந்த நாள் உங்கள் தந்தைக்கு, வாழ்க்கையில் அவர் உங்களுக்காக செய்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிட்டி நன்றி தெரிவிக்கலாம்.

    இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று கூறியுள்ளார்.

    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ₹30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ₹20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பும் நாள் இன்று.

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பும் நாள் இன்று. முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு வலுசேர்க்கும் விதத்தில், மாணவச்செல்வங்கள் கல்வியிலும் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.

    மாணவச்செல்வங்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் உறுதுணையாய் இருந்து கற்றல் சூழலை எளிதாக்கவும் இனிதாக்கவும் வேண்டுகிறேன். என்று கூறியுள்ளார்.

    ×