search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தாரம்மன் கோவில்"

    • வாகனம் காத்த விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    • நாளை பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆவணி திருவிழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு குலசை முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம் காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பின்பு அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்றனர். அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நையாண்டி மேளத்துடன் அம்பாள் வீதியுலா வந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படை கஞ்சி வார்த்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழாவையொட்டி வில்லிசை, கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (31-ந்தேதி) பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது
    • 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடம் போடும் திரு.கந்தசாமி

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அருளைப் பெற வித, விதமாக வேடம் போட்டு தர்மம் எடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. ஆனால் அந்த பழக்கம் கடந்த நூற்றாண்டில் மற்ற ஊர்களுக்கும் பரவி தசரா திருவிழாவாக உருவெடுத்தது.

    அதன் பிறகு கால மாற்றங்களுக்கு ஏற்ப வேடமிடுவதில் எத்தனையோ மாற்றங்களும், புதுமைகளும் வந்து விட்டன. என்றாலும், "முத்தாரம்மன் அருள் பெறுவது ஒன்றே இலக்கு" என்ற தசரா குழுவினரின் பாரம்பரிய மரபு மட்டும் மாறவே இல்லை.

    அதற்கு இன்று நம்மிடையே உதாரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கந்தசாமி.

    குலசேகரன்பட்டினம் காவடி பிறைத் தெருவில் வசித்து வரும் இவர் நாடார் மைனர் தசரா குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். குலசை ஆலயத்துக்கு வேடமிடும் பக்தர்களில் இவர் அளவுக்கு, இத்தனை ஆண்டுகள் வேடமிட்டவர் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய கந்தசாமியிடம் இருந்துதான் வேடம் போடுவது, வேடம் போடுவதற்கான பொருட்கள் தயாரிப்பது உள்பட பல விஷயங்கள் மற்ற ஊர் தசரா குழுவினரிடம் பரவியதாக சொல்கிறார்கள்.

    நல்ல ஆஜானுபாகுவான, கட்டான உடலமைப்புடன் கம்பீரமாக காணப்படும் கந்தசாமி தன் உயிர் இறுதி மூச்சு உள்ள வரை குலசை முத்தாரம்மனுக்காக வேடமிட சபதம் எடுத்துள்ளதாக கூறினார். எப்படி உங்களால் 60 ஆண்டுகளுக்கு மேலாக வேடமிட முடிந்தது? என்றதும், கந்தசாமி மலரும் நினைவுகளில் மூழ்கியபடி சரளமாக மடை திறந்த வெள்ளமென சொல்லத் தொடங்கினார்.,

    எனக்கு அப்போது 10 வயது இருக்கும். குலசேகரன்பட்டினம் முழுவதும் காலரா பரவி இருந்தது. நிறைய பேர் சிகிச்சை எடுக்க வழியில்லாமல் செத்துப் போனார்கள். எங்கள் குடும்பத்தில் எனக்கு உள்பட என் அக்கா & தம்பி 7 பேருக்கு காலரா பாதித்தது. 7 பேரும் பிழைப்பார்களா? என்று எல்லாருக்கும் சந்தேகம் வந்து விட்டது. அப்போது எனது தாயார், குலசை முத்தாரம்மனை நோக்கி கும்பிட்டப்படி, "தாயே 7 பேருக்கும் குணமாகி விட வேண்டும். அதற்கு காணிக்கையாக என் மகன் கந்தசாமி அவன் ஆயுள் முழுவதும் வேடம் அணிந்த தர்மம் எடுத்து உடன் சன்னதிக்கு வருவான்" என்று வேண்டி கொண்டார்.

    மறுநாளே மருந்து, மாத்திரை இல்லாமல் நாங்கள் 7 பேரும் பிழைத்து கொண்டோம். இதனால் மறு ஆண்டு முதல் நான் வேடம் போட தொடங்கினேன். என் 19வது வயதில் சீதாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 1 மகன், 2 மகள்கள் பிறந்தனர். யாரும் நான் வேடம் போடுவதை தடுக்கவில்லை. மாறாக ஆண்டு தோறும் உற்சாகப்படுத்தினார்கள். 1986ம் ஆண்டு மகன் மரணம் அடைந்ததால் அந்த ஆண்டு மட்டும் என்னால் வேடம் போட இயலவில்லை. இத்தனை ஆண்டுகளில் 6 ஆண்டுகள் ராஜா வேடம், 7 ஆண்டுகள் பெண் வேடம், 6 ஆண்டுகள் குறத்தி வேடம் போட்டேன்.

    கிருஷ்ணர் வேடத்தை அதிகபட்சமாக 14 ஆண்டுகள் போட்டேன். 10 ஆண்டுகள் கர்ணன் வேடம், 4 ஆண்டுகள் எமதர்மர் வேடம் போட்டேன். 3 ஆண்டுகள் இசக்கியம்மன் வேமணிந்தேன். 2 ஆண்டுகளாக இந்திரன் வேடம் போட்டேன். நான் போடும் வேடங்களுக்குரிய பொருட்களை மிகவும் அழகாக நானே தயாரித்து கொள்வேன்.

    வேடப்பொருட்களை தசரா குழுவினரே தயாரித்துக் கொள்ளும் பழக்கத்தை நான்தான் ஏற்படுத்தினேன். என்னிடம் கற்றவர்கள் மற்ற ஊர்களில் அதை பரப்பினார்கள். என் பேரனுக்கு இப்போது 17 வயதாகிறது. முத்தாரம்மன் அருள் பெற வேடம் போடு என்று சொன்னேன். கல்லூரியில் படிப்பதாலோ., என்னவோ, அவன் வெட்கப்படுகிறான். என் காலத்துக்கும், இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    நான் சிறுவனாக இருந்த போது 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். இப்போது 21 நாட்கள், 11 நாட்கள் என்று சுருக்கி விட்டார்கள். அந்த காலத்தில் முத்தாரம்மனை நினைத்து பயந்து, பயந்து விரதம் இருந்தனர். விரதம் தொடங்கியதும் கட்டிலில் படுக்க மாட்டார்கள். நாற்காலியில் உட்கார மாட்டார்கள். வெளியில் சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்கு கூட போகாமல் தனி குடிலில் இருப்பார்கள். ஆனால் இன்று வேடம் அணிபவர்கள் சர்வ சாதாரணமாக புகை பிடிக்கிறார்கள். விரத நெறியை மீறும் இச்செயல் பாவம் சேர்க்கக் கூடியது. தர்மம் எடுத்து அதை ஆலயத்தில் சேர்ப்பதிலும் ஒழுங்கு இல்லை. 7 வீடுகளில் தர்மம் எடுத்தாலே போதும் என்று முத்தாரம்மன் கூறி இருக்கிறாள்.

    அது போல காப்பு கட்டிய பிறகுதான் வேடம் போட வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக காப்பு கட்டும் முன்பே பலரும் கம்மல் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் பெண் வேடம் போடப் போகிறார்கள் என்று ஒரு மாதத்துக்கு முன்பே தெரிந்து விடுகிறது. இதெல்லாம் ரொம்ப தப்பு. காளி வேடும் போடும் சிலரும் விதியை மீறுவது மனதுக்கு வேதனை தருகிறது. சூரசம்ஹாரம் முடிந்து விட்டால் அம்மன் சாந்தம் ஆகி விடுவாள். ஆனால் அதன் பிறகும் காளி வேடம் போட்டு இருப்பவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை ஏற்க இயலாது. நான் வாலிப வயதில் இருந்த போது வேடம் போடுவதற்கு நிறைய செலவு செய்ய மாட்டோம். மாட்டு வண்டி சக்கரத்தில் உள்ள கருப்பு கிரீஸ் மையை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தகர டப்பாவை கழுத்தில் தொங்கப் போட்டு கொண்டு வீடு, வீடாக சென்று தர்மம் எடுப்போம்.

    "அம்மா..... தாயே.... உன் அருளைப் பெற பிச்சை எடுக்கும் இழி நிலைக்கும் கீழாக என்னை நான் தாழ்த்திக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் பயப்பக்தியுடன் வேண்டியபடி ஒவ்வொருவரும் நடந்து கொள்வார்கள். ஆனால் இப்போது வேடம் போடுபவர்கள் தங்களை அலங்கரிக்கும் ஆடைகளுக்கு மட்டுமே பல ஆயிரம் செலவு செய்வது பிரமிப்பாக உள்ளது.

    அந்த காலத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் அலங்காரப் பொருட்கள் கிடைக்கவில்லை. உருளைக் கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை கயிறில் கட்டி, கழுத்தில் தொங்க விட்டிருப்போம். காதில் கம்மலுக்கு பதில் வததலை கட்டி அணிந்திருப்போம். எங்களது இந்த வேடங்களை மக்கள் ஆர்வமாக வந்து பார்ப்பார்கள். குலசை கோவிலுக்கு வேடம் போட்டிருப்பவர் ஊர் எல்லையில் வந்து இருக்கிறார் என்றால் ஊரே திரண்டு வரும். வீடு தவறாமல் தர்மம் தருவார்கள். அந்த நிலை இப்போது இல்லை.

    15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காளிவேடம் அணிந்து இருப்பவர் ஒரு ஊருக்குள் சென்றால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனே நம் வீட்டுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். பணிவோடு அருள்வாக்கு கேட்பார்கள். காளி என்ன காணிக்கை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பார்கள். இப்போது காணிக்கை கேட்டால் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்கிறார்கள். தசரா குழுக்களிடம் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்தான் மக்கள் மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மற்றபடி முத்தாரம்மனுக்குரிய பணிகள் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாகவே நடக்கிறது. அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் அன்று போல இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஒரு தடவை நான் இலங்கை செல்ல ராமேசுவரம் சென்றிருந்தேன். கள்ளத்தோனி ஏற முயன்ற சமயத்தில் ரோந்து பணியில் உள்ள போலீஸ்காரர்கள் வந்து விட்டனர். அப்போது நான் சட்டை பைக்குள் வைத்திருந்த குலசை முத்தாரம்மன் படத்தை தொட்டப்படி அம்மா நீதான் என்னை காப்பாத்தணும் என்று வேண்டினேன். அம்மன் அருளால்தான் அன்று நூலிழையில் தப்பினேன்.

    குலசை முத்தாரம்மனை நம்பியவர்கள் வாழ்வில் நல்லதே நடந்துள்ளது. குலசை சுற்றுப் பகுதியில் ஒரு வாய் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் இருந்தவர்கள் இன்று குபேரனாக இருக்கிறார்கள் என்றால் அது முத்தாரம்மன் அருளால் நடந்த மகிமைதான் என்றார்.

    • கதவை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லு விளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூசாரியாக சமுத்திரராஜன் உள்ளார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலின் கதவை பூட்டி சென்றார். நேற்று காலை வழக்கம் போல் 7.30 மணி அளவில் பூஜை செய்வ தற்காக சமுத்திரராஜன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கோவி லுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு முத்தாரம்மன் நெற்றியில் உள்ள 4 கிராம் எடை கொண்ட 2 தங்க பொட்டுகளும், 8 கிராம் எடை கொண்ட 2 தங்க தாலி செயினும், கோவிலில் இருந்த 8 வெண்கல குத்து விளக்குகளும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்தின் தலைவர் நாகராஜனுக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவிலுக்கு வந்த அவர், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் கோவில் முழுவதையும் சுற்றி பார்த்தனர். கொள்ளை சம்பவம் குறித்து கூறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள பத்திர காளியம்மன் கோவிலின் முன்பக்க கதவையும் கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 2 கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் மூன்று முகம் கொண்ட முத்தாரம்மன் கோவில் அமைந்துஉள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது.பின்னர் இரவு7-மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.

    அதன் பிறகு இரவு 8மணிக்கு விநாயகர், முத்தாரம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களான ஸ்ரீ உச்சினி மாகாளிஅம்மன், சுடலை மாடசாமி, பலவேசக்கார சாமி, முண்டன் சாமி, பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டிக் கொள்வார்கள்.
    • ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள்.

    கோவிலில் தசரா பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன், விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.

    இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள்.

    அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.

    பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும் தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது.

    விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டிக் கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்ப தில்லை. அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது.

    முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள். அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

    • வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான்.
    • அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

    தசரா விழா தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் புராணக்கதை ஒன்று உண்டு.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன் தான் பெற்ற தவத்தின் பயனாக வலிமை மிக்கவனாகி ஆணவத்தால் தன் அறிவுக்கண்ணை இழந்திருந்தான். ஒரு நாள் இவனது இருப்பிடம் வழியாக மகா மகத்துவம் பொருந்திய அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது அவரை மதிக்கத்தவறியதுடன் அவமரியாதையும் செய்தான், இதனால் அகத்தியர் மனம் நொந்து வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலைவாயாக என்று சாபம் கொடுத்தார்.

    செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய உடன், சாப விமோசனமாக இறைவியின் கையால் உன் உடல் அழிந்து சாபவிமோசனம் கிடைக்கும் என்றார்.

    எருமைத்தலை பெற்ற வரமுனி மீண்டும் கடுமையான தவங்கள் பல புரிந்து மூன்று உலகங்களையும் ஆளும் வல்லமை பெற்றிருந்தான். இதனால் பூமியில் தவம் புரியும் முனிவர்கள் முதல் தேவர்கள் வரை அனைவருக்கும் எல்லையில்லா துன்பம் கொடுத்து வந்தான்.

    வரமுனி முழுமையான அசுரனாக மாறி மகிஷாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான்.

    தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட, அவர் அன்னை பார்வதியை நோக்கி தவம் செய்யுங்கள் உங்களுக்கான தீர்வை அன்னை தருவாள் என்றார் சிவன். தேவர்களும் அன்னையை நோக்கி விடா முயற்சியுடன் கடும் தவம் புரிந்தனர்.

    முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாய அரண் ஒன்றை உருவாக்கி எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேள்வியை நடத்தும்படி கூறினாள். அவர்கள் நடத்திய வேள்வியில் பெண் குழந்தை ஒன்று தோன்றியது.

    இந்த குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது. 9 நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10 நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப்புறப்பட்டாள்.

    மகிஷாசூரனை அழித்த 10- ம் நாள் தசரா பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

    முதல் மூன்று நாட்கள் மலைமகளாகவும், அடுத்து வரும் மூன்று நாட்கள் அலைமகளாகவும், இறுதியில் வரும் மூன்று நாட்கள் கலைமகளாகவும் காட்சி அளிக்கிறாள் அன்னை. மகிஷாசூரணை வதைத்ததால் அன்னை மகிஷாசூரமர்த்தினி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

    • அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் அதனால் ஏற்படும் பலன்கள் அளவிடற்கரியது.
    • இறைவனை தீ வடிவில் வழிபாடு செய்தால் அனைத்து நலன்களையும் பெற்றுய்யலாம் என்பதே இதன் தத்துவம்.

    பொங்கல் வைத்து வழிபடுவது குலசையில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவென்றால் ஆன்மாவினுள் புகுந்து நம்மைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் அகங்காரம், ஆணவம், கோபம், மோகம் உள்ளிட்டவைகளை அன்னமாக வேகவைத்து இறைவனுக்குச் சமர்ப்பனம் செய்வது என்பதே.

    இதன் மூலம் தோஷங்கள் எல்லாம் நீங்கி நமது ஆன்மா சுத்திகரிக்கப்பட்டு தூய்மை பெறுகிறது என்பது நம்பிக்கை. அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் அதனால் ஏற்படும் பலன்கள் அளவிடற்கரியது.

    எண்ணெய், மாப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சபொடி பஞ்சகவ்வியம் பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கும்.

    விளக்கு வழிபாடும் இங்கு நடைபெறுகிறது. ஐம்பூதங்களில் நெருப்பும் ஒன்று. இறைவனை தீ வடிவில் வழிபாடு செய்தால் அனைத்து நலன்களையும் பெற்றுய்யலாம் என்பதே இதன் தத்துவம். எனவே தான் பவுர்ணமி திதியில் இத்திருத்தலத்தில் பக்தர்கள் திருவிளக்கு பூஜை செய்கின்றனர்.

    • கடும் நோன்பு மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தைப் புனைவோரை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.
    • பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்ந்து, புனைந்து கொள்கின்றனர்.

    வேடம் புனைதல் 'மாறுவேடத் திருவிழா' என்று இங்குக் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக 'வேடம்புனைதல்' உள்ளது. தனது உண்மை உருவத்தை, உண்மையான இயல்புகளை மறைத்துத் தனக்கு முற்றிலும் மாறுபட்ட வேடத்தை அணியும் போது சில நாட்களுக்கேனும் தனது இயல்பு நிலையிலிருந்து மாறி, புதியதொரு வாழ்வை வாழும் வாய்ப்பு மனிதனுக்குக் கிடைக்கிறது. அதனாலேயே வேடம்புனைதல் நிகழ்ச்சி பக்தர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இத்தகைய நிலையைக் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா விழாவிலும் காணமுடிகிறது. தசரா விழாவன்று வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகுதலை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

    தசரா வழிபாட்டுச் சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதைக் குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம். காளிவேடம் புனைவோர் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்கின்றனர். ஒவ்வொரு தசராக் குழுவிலும் காளிவேடம் புனைவோர் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் உள்ளனர். காளி இல்லாத தசராக் குழுக்கள் காணப்படவில்லை. சூரசம்ஹாரத்தன்று இக்காளிவேடம் புனைந்தோர் அனைவரும் தேர்மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்கின்றனர். அம்மன் மகிசனைக் கொல்ல புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருகின்றனர். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துகின்றனர். இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் புனைந்தோர் அம்மனைச் சூழ்ந்து நிற்கின்றனர்.

    காளி வேடம் புனைதல் மிகக் கடுமையான நோன்புக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் நோன்பு மேற்கொள்கின்றனர் அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு உண்கின்றனர். தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து, இரு பொழுது குளித்து நோன்பு மேற்கொள்கின்றனர். இவ்வாறு நோன்பு மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாட்கணக்கில் காளிவேடம் புனைகின்றனர்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், பெண் மார்பகத்துக்கான துணிப்பந்துகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் & இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும். இப்பொருட்களின் மொத்த அளவு இருபது கிலோ வரை இருக்கும்.

    கடும் நோன்பு மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தைப் புனைவோரை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.

    குலசை முத்தாரம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வேடங்களைப் புனைந்திடினும், காளிவேடம் புனைந்தால் அம்மனே வந்ததாகப் பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கையளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி வருவதால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை உருவாகிறது. எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை சமீப காலங்களில் மிக அதிகமாகி வருவது மேற்குறித்த கருத்தினை உறுதிசெய்வதோடு அதற்கு ஒரு சமூக மரியாதை இருப்பதையும் அடையாளம் காட்டுகிறது. காளி வேடத்தை ஆண்களே புனைகின்றனர். பெண்கள் புனைவதில்லை. இதில் உள்ள கடுமையான விரதமும் அருள் பெற்று ஆடும் கருணையும் எதையும் தாங்கும் மனப்பக்குவமும் அம்மன் மீதுள்ள அச்சமும் மாதவிடாய் உள்ளிட்ட தீட்டுப் பண்புகள் ஏற்படாத் தன்மையும் 'காளி' தவ வேடத்தைப் பெண்கள் ஏற்காமைக்குக் காரணங்கள் ஆகும்.''

    கடுமையான இக்காளி வேடத்தைப் பல பக்தர்கள் விரும்பி ஏற்கின்றனர். காளியை அம்மன் அவதாரம் என்று எண்ணுவதும் நோய் தீர்த்த அம்மனுக்குத் தம் நன்றியை வெளிப்படுத்த உகந்தது கொடூரமான அவளது காளி வேடமே என்று எண்ணுவதுமே இதற்குக் காரணம் ஆகும்.

    காளி வேடம் புனைவோர் நேர்ச்சையின் பொருட்டு அவ்வேடத்தைப் புனைவதாகத் தாமே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால் பிற வேடங்களைப் புனைவோர் தம் ஊர்களில் உள்ள கோவில் பூசாரிகளிடமோ சாமியாடுபவரிடமோ கணக்குக் கேட்டு, தாம் புனையவிருக்கும் வேடம் குறித்து முடிவு செய்கின்றனர். இதுவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபாகும். ஆனால் இம்மரபு சில ஆண்டுகளாக மாறி வருகிறது. தற்போது பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்ந்து, புனைந்து கொள்கின்றனர்.

    எந்த வேடத்தை ஏற்றாலும் நோன்பிருத்தல் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காளி வேடம் தவிர, பிற வேடங்களைப் புனைவோர் கொடியேற்றத்திற்குப் பின், பத்துநாள், ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் என்ற கணக்கில் அவரவர் வசதிக்கேற்ப நோன்பு இருக்கின்றனர். இவர்கள் தங்கள் ஊர்களில் தசராக் குழுக்களை அமைத்துக் கொள்கின்றனர்.

    கிருஷ்ணன், பரமசிவன், இந்திரன், சூரியன், யமன், சந்திரன், இராமர், ஆஞ்சநேயர், பஞ்சபாண்டவர், அரசன், அரசி, குறவன், குறத்தி, காவலர், மோகினி, அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், கரடி, குரங்கு, புலி, பேய் போன்ற ஏராளமான வேடங்களைத் தசரா நாட்களில் காணமுடிகிறது.

    சிலர் ஆண்டுதோறும் ஒரே வேடத்தைத் தொடர்ந்து புனைகின்றனர். வேறு சிலர் தாம் விரும்பிய பலவித வேடங்களை ஆண்டுதோறும் மாற்றி மாற்றிப் புனைந்து கொள்கின்றனர். எந்த வேடம் புனைவதற்கும் யாருக்கும் தடை இல்லை என்பதால், எல்லா வேடங்களையும் பக்தர்கள் புனைந்து கொள்கின்றனர்.

    பல்வேறு வேண்டுதல்களை நிறைவு செய்ய நேர்த்திக் கடனாகப் பக்தர்கள் இந்த வேடங்களைப் புனைகிறார்கள். இவர்கள் தங்களுக்குப் பிடித்த வேடம் புனைந்து, ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெறுகிறார்கள். தனியாகவோ, குழுக் குழுவாகவோ செல்கிறார்கள். இவர்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வலம் வருவதைத் தசரா நாட்களில் பரவலாகக் காணமுடிகிறது.

    தம் அழகைக் குலைத்து, தம் கர்வத்தைப் பங்கப்படுத்தவே நோன்பு இருந்து, திருக்காப்புக் கட்டி, வேடம் புனைந்து, தனியாகவோ அணி அணியாகவோ தர்மம் எடுத்துக் கோயிலில் கொண்டு சேர்ப்பது தான் குலசை முத்தாரம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வேடம் புனைவோர் பெரும்பாலும் குழுக்களாக வருகின்றனர். இக்குழுக்களில் வயது வரையறையின்றி எல்லோரும் இடம் பெறுகின்றனர். இவை இன அடிப்படையிலும் ஊர் அடிப்படையிலும் அமைகின்றன. ஊர்க்குழுவில் ஓர் ஊரைச் சார்ந்த பல இனத்தவரும் கலந்து கொள்கின்றனர். தசராக் குழுவினர் அணி அணியாக ஊர்தோறும் சென்று சூரசம்ஹாரத்தன்று கோவிலுக்கு வந்து சேர்கின்றனர். முத்தாரம்மன் கோவில் வழிபாட்டுச் சிறப்பைப் பெறத் தொடங்கிய நாளிலிருந்தே தசராக் குழுக்களும் கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளன.

    வேடம் புனையும் தசராக் குழுக்கள் சில விதிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடித்தல் வேண்டும். இக்குழுக்களில் பத்து வயதுக்கு மேற்பட்ட, ஐம்பது வயதிற்கு உட்பட்ட பெண்கள் இடம்பெறுதல் கூடாது. வேடம் புனைவோர் கொடியேறிய நாளிலிருந்து நோன்பு மேற்கொள்ள வேண்டும். காளிவேடம் புனைவோர் நாற்பத்தொரு நாட்கள் நோன்பு மேற்கொள்ள வேண்டும். தசராக் குழுக்கள் தங்கள் ஊரிலுள்ள கோவில் அல்லது பொது இடம் ஒன்றில் விழா முடியும் நாள் வரையிலும் தனி இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றனர். அங்கேயே சமைத்து உண்கின்றனர்.

    வேடம் புனையத் தொடங்கும் நாளன்று குழுவில் உள்ள அனைவரும் குலசேகரன்பட்டினம் வந்து, கடலில் குளித்து விட்டு, கோவிலுக்குச் சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். பின் குழுவாக ஊருக்குத் திரும்பியதும். வேடம் புனையத் தொடங்குகின்றனர், வேடம் புனைந்ததும் தம் இருப்பிடத்தில் அல்லது கோவிலில் உள்ள அம்மனுக்குப் பூசை செய்து, தமது ஆட்டத்தைத் தொடங்குகின்றனர். சூரசம்ஹாரம் வரை இவர்கள் குழுவாகவே செயல்படுகின்றனர்.

    வேடம் புனைவோர் நாள்தோறும் இருவேளை குளித்து, தூய்மையை மேற்கொள்கின்றனர். ஒரு வேளை மட்டுமே உண்கின்றனர். அசைவ உணவு, மது, புகை ஆகியவற்றைக் கைவிடுகின்றனர். வேடம் அணிவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை யாரும் தொடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்கின்றனர். தீட்டு எனக் கருதப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்வதில்லை.

    தசராக் குழுக்களின் தேவையை உணர்ந்து ஊர்மக்களும் நடத்துகொள்கின்றனர். அவர்களுக்கு இடையூறு நேராத வகையிலும் அவர்களின் பக்திக்கு ஏற்ற முறையிலும் ஊர்மக்களின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தசராக் குழுவினர் தங்கியிருக்கும் இடம் ஊரிலுள்ள பெண்களால் தூய்மை செய்யப்படுகிறது. தசராக் குழுவினர் நடத்தும் பூசைகளிலும் ஆட்டங்களிலும் ஊர் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொள்வதையும் காணமுடிகிறது.

    தசராக் குழுவினர் ஒவ்வொரு நாளும் தாம் தங்கியிருக்கும் கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்கின்றனர். கோவில் அல்லாத தனியிடத்தில் தங்குபவர்கள் விளக்கு அல்லது அம்மன் படம் ஒன்றை வைத்து அதை அம்மனாகப் பாவித்து வழிபாடு செய்கின்றனர். காலையில் குளித்து இவ்வழிபாட்டைச் செய்தபிறகே, தம் அன்றாடப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

    தசராக் குழுவினர் நோன்பைத் தொடங்கிய நாள் முதல் வேடம்புனைதல், ஊர் ஊராகச் செல்லுதல், காணிக்கை வசூலித்தல், அருள் வாக்குக் கூறுதல், மேளதாளங்களுடனும் கலைஞர்களுடனும் இணைந்து ஆட்டங்களை நிகழ்த்துதல் போன்றவற்றைச் செய்கின்றனர்.

    பண்டைய காலத்தில் பக்தர்கள் தங்கள் முகங்களில் வண்ணப்பொடிகளைப் பூசியும், வண்ணப்புள்ளிகளை வைத்தும் வேடமிட்டு நேர்த்திக்கடனைச் செலுத்தி வந்தனர்.

    இந்நாளில் பெரும்பான்மையான பக்தர்கள் பல்வேறு உருவ முகமூடிகளைக் கொண்டும் அவ்வுருவத்திற்கேற்ப அலங்கரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும் வேடம் புனைகின்றனர். பக்தர்கள் வேட ஒப்பனைகளுக்காக ரூ.150லிருந்து ரூ.1500 வரையிலும் செலவு செய்கின்றனர். மிகச் சிலர் மட்டும் முகத்தில் வண்ணமிட்டும் புள்ளிகள் வைத்தும் வேடமிட்டு வேண்டுதலைச் செலுத்துகின்றனர். இப்புள்ளியிடும் முறையினைப் பழைய வேடம் புனைதலில் எச்சமாகக் கருதலாம். இம்முறை பக்தர்களுக்கு அலங்கரித்தலிலும் பொருட் செலவிலும் சிக்கனமாக உள்ளது.

    பக்தர்கள் காலையில் பூசை முடித்ததும் ஒப்பனை செய்து கொள்ளத் தயாராகின்றனர். ஒவ்வொரு தசராக் குழுவினரும் ஒப்பனை செய்வதற்கென்று ஓர் ஒப்பனையாளரை நியமித்துக் கொள்கின்றனர். தசரா விழா முடிந்ததும் அவருக்கு அத்தொழிலுக்குரிய தொகை கொடுக்கப்படுகிறது. முக அலங்காரமும் உடை அலங்காரமும் செய்யப்பட்டதும் கோவில் பூசாரி அல்லது குழுவில் உள்ள பெரியவர் ஒருவர் தெய்வங்களின் வேடங்களைப் புனைந்தோருக்கு அத்தெய்வங்களுக்குரிய ஆயுதங்கள், கிரீடம் ஆகியவற்றைக் கொடுக்கிறார். அவற்றைப் பெற்றுக் கொண்டதும், பக்தர்கள் அருள் வரப்பெற்று ஊர்ஊராகச் செல்லத் தயாராகின்றனர்.

    வேடம் புனைந்த நாள் முதல் தசரா விழா முடியும் நாள் வரை இக்குழுவினர் ஊர்தோறும் சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். பின்னர் லாரி வேன், ட்ரக்கர் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பல ஊர்களுக்குச் செல்கின்றனர். முதலில் தாங்கள் செல்லும் ஊர்களில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, அங்கேயே மேளதாளம் முழங்க ஆடுகின்றனர். அதன் பின்னரே வீதிவீதியாக, வீடுவீடாகச் சென்று காணிக்கை பெறுகின்றனர். மக்கள் கூடும் வீதிகளிலும் சந்தைகளிலும் கடைகளின் முன்பும் இவர்கள் கூட்டமாக ஆடித் தம் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்துகின்றனர்.

    தசராக் குழுவினர் கிராமங்களுக்கும் பெருநகரங்களுக்கும் செல்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்கள் மட்டுமன்றி, சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களிலும் இக்குழுவினர் காணிக்கை பெற்று வருகின்றனர்.

    தசராக் குழுவினர் ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெறுவதோடு, நன்கொடைச் சீட்டுக்கள் மூலமும் காணிக்கை வசூலிக்கின்றனர். இக்காணிக்கைத் தொகை குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் குழுவினர் செல்லும் ஊர்களைப் பொறுத்தும் ஆயிரம் முதல் இலட்சக்கணக்கான தொகை வரை வசூலாகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் தொகையினைக் குழுவினர் தங்களது வேடம் புனைதலுக்கான செலவுக்கும் மேளதாளம், கரகாட்டம், உணவு, வாகன வாடகை போன்ற செலவுகளுக்கும் பயன்படுத்துகின்றனர். எஞ்சியிருக்கும் தொகையினை முத்தாரம்மன் கோவிலில் காணிக்கையாகச் செலுத்தி விடுகின்றனர்.

    சில தசராக் குழுவினர் காணிக்கையாகப் பெறும் பெரும் தொகையினைத் தசரா விழாச் செலவுகளுக்கும் கோவில் காணிக்கைக்கும் கொடுத்தது போக, மீதியைத்தம் ஊர்க்கணக்கில் வங்கியில் வைப்பு நிதியாகச் சேமித்து வைக்கின்றனர். இத்தொகையினைக் கொண்டு அடுத்த ஆண்டு தசரா விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்தகையோர் முத்தாரம்மன் கோவிலில் காணிக்கையாகச் செலுத்துகிற தொகை ரூ.11, ரூ.21, ரூ.101 என்ற அளவில் காணப்படுகிறது.

    காணிக்கைத் தொகையை வங்கியில் வைப்பு நிதியாகச் சேமிப்பது முன்னாளில் இல்லாத நடைமுறையாகும். இது இந்நாளில் பரவலாகி வருகிறது. இப்புதிய முறை பக்தியில் வாணிக நோக்கம் படர்வதைப் புலப்படுத்துகிறது.

    ஒவ்வொரு குழுவினரும் ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரையிலும் தசரா விழாவிற்காகச் செலவு செய்கின்றனனர்.

    • கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள்.
    • முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடி மரமண்டபம், பிரகாரம், தேர்மண்டபம். கலையரங்கம் போன்ற அமைப்புக்களுடன் காணப்படுகிறது.

    கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள். அம்மன், சுவாமி இருவரின் சுயம்புவாகத் தோன்றிய பாறை வடிவங்களும் அவற்றின் பின்புறம் பீடத்தின் மேல் இருவரின் உருவச் சிலைகளும் அமைந்துள்ளன.

    கருவறையினை அடுத்து அர்த்தமண்டபமும் அதன் இருபுறமும் வழிபாட்டுக்குரிய பொருட்கள் வைக்கும் அறைகள் இரண்டும் அமைந்துள்ளன.

    அர்த்த மண்டபத்தினை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபம் கம்பித் தடுப்பால் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பிரிவில் பேச்சியம்மனும் கருப்பசாமியும் இரண்டாவது பிரிவில் பைரவரும் காணப்படுகின்றனர்.

    மகாமண்டபத்தை அடுத்துக் கொடிமர மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் மூன்று அடி உயரத்தில் பலிபீடமும் அதன் பின்புறம் கொடிமரமும் உள்ளன. பலிபீடத்தின் முன்பு சிம்மவாகனம் ஒன்று கருவறையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐந்து அடி உயரச் சூலம் ஒன்று தரையில் பதிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் மகா வல்லப விநாயகரும் வாயிலின் இருபுறங்களிலும் இரு பூதத்தார்களும் உள்ளனர்.

    கொடிமர மண்டபத்தின் நடுவில் பலிபீடத்தை அடுத்து முப்பத்திரண்டு அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் பொதியப்பட்டுக் காட்சியளிக்கிறது. அடிப்பாகச் செப்புத் தகட்டில் வடபுறம் அம்மனும் சுவாமியும் தென்புறம் சூலமும் கீழ்ப்புறம் விநாயகரும் மேற்குப் பகுதியில் பாலசுப்பிரமணியரும் உருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளனர்.

    கொடிமரம் சந்தனமரத்தால் ஆனது. இது பதினெட்டுப் பாகங்களைக் கொண்டது. பதினெட்டு ஆகமங்கள் என்பதன் அடையாளமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

    முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் முன்பக்கம் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கோவில் மண்டபங்களின் கிழக்கு, தெற்கு, மேற்குச் சுவர்களில் அர்த்தநாரீசுவரர், மீனாட்சியம்மன், துர்க்கை அம்மன் ஆகியோரின் புடை சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பிரகார மண்டபத்தில் அழகிய தெய்வங்களின் ஓவியங்களும் துர்க்கையம்மன், மீனாட்சியம்மன் சிலைகளும் உள்ளன. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகருக்கெனத் தனிச் சந்நிதி உள்ளது.

    கருவறையின் மேல் சிறிய விமானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது முப்பத்தைந்து அடி உயரமாகும். இதில் அம்மன், சுவாமி சிற்பங்களும் காவல் தெய்வங்கள், சிம்மம் ஆகியவற்றின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் உச்சியில் மூன்று கும்பங்கள் உள்ளன.

    கோவில் முன்மண்டபத்தின் மேலே சிறிய மூன்று கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் அம்மன், சுவாமி உருவங்கள், மகிசாசுரமர்த்தினி, முருகன், விநாயகர், காவல் தெய்வங்கள், காளி, யானை, சிம்மன் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலுக்கு வடபுறம் சிறிது தொலைவில் மேற்கு நோக்கிய வண்ணம் தேர்மண்டபம் தேர் ஒன்று உள்ளது. விழா நாட்களில் அம்மன் இந்தத் தேரில் வீதி உலா வருகிறாள். இத்தேர் தவிர, சூரனைச் சுமந்து செல்வதற்குரிய சப்பரம் ஒன்றும் உள்ளது.

    தேர் விலை உயர்ந்த தோதகத்தி மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இரு குதிரைகள் தேரினை இழுத்துச் செல்லும் தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சாரதியாகப் பிரம்மனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறமும் இரு மங்கையர் உருவங்கள் கவரி வீசுவது போன்று அமைக்கப்பட்டுள்ளன. அழகிய சிறிய தூண்களும் சிறிய கோபுர அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளன.

    முத்தாரம்மன் கோவிலின் மேற்கில் கிழக்கு நோக்கிய வண்ணம் கலையரங்கம் ஒன்று உள்ளது. இதனைக் கட்டிய நன்கொடையாளரின் பெயரால் 'சௌந்திர பாண்டிய நாடார் கலையரங்கம்' என்று இது வழங்கப்படுகிறது. இக்கலையரங்கில் கோவில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிளக்குப் பூசையும் தசரா விழாவில் சூரனை வதம் செய்த பிறகு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. தவிர பொதுமக்கள் திருமணம், சடங்கு, பிறந்தநாள் விழாப் போன்ற தம் இல்ல நிகழ்ச்சிகளை இக்கலையரங்கில் குறைந்த வாடகையில் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

    முத்தாரம்மன் கோவிலுக்குக் கீழ்ப்புறம் மேற்கு நோக்கி வண்ணம் பெரிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பல தூண்களுடன் கூடிய இம்மண்டபத்தின் உட்சுவரில் பார்வதியின் திருக்கல்யாணக் காட்சி அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இது திருமண மண்டபமாகவும் ஒவ்வொரு மாதப் பவுர்ணமியன்றும் திருவிளக்குப்பூசை நடத்துவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    தசரா விழாவின் போது சூரனைச் சம்ஹாரம் செய்வதற்காக முத்தாரம்மன் இம்மண்டபத்திலிருந்தே புறப்பட்டுச் செல்கிறாள்.

    கோவிலுக்கு வரும் மேற்குத்திசைச் சாலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தோரண வாயில் ஒன்று காணப்படுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு முழுமையாக ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது.

    • நாளை காலை பால்குடம் எடுத்து பவனிவருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 3-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடைவிழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த வருட திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வருசாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டடது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி வழிபாடு செய்யும் திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு இளையபெருமாள் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    நாளை மே (1-ந்தேதி) காலை 8 மணிக்கு மேளதாளம், வாண வேடிக்கையுடன் பால்குடம் எடுத்துபவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதிஉலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நடக்கிறது.

    3-ந் தேதி (புதன்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல், 4-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்குதல், இரவு 8 மணிக்கு கேரளா புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

    5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபி ஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம் தீபாராதனை, இரவு 12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • நண்பகல் 12 மணிக்கு அஷ்டாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.
    • மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பறக்கையை அடுத்த மதுசூதனபுரத்தில் இந்து நாடார் சமுதாய வகை தேவி முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (24-ந்தேதி) தொடங்கி ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 50 நாட்கள் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு மங்கள இசை, ஆச்சர்ய வர்ணம், கணபதி ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து பஞ்சகவ்வியம் பூஜை, பீட பூஜை, வாஸ்து பூஜை, ஹோமம் பரிகார பூஜை நடந்தது.

    நாளை (25-ந்தேதி) காலை கணபதி ஹோமம், பீட சுத்தி, பிம்ப சுத்தி, கலச பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன பூஜை ஆகியவை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு லட்சுமி நரசிம்ம ஹோமம், அகோர ஹோமம் நடக்கிறது.

    26-ந்தேதி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், அதிவாச ஹோமம், கலசபூஜை, தொடர்ந்து காலை 6 மணிக்கு பறக்கை ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், காலை 9 மணிக்கு முத்தாரம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அஷ்டாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர். காந்தி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி 51-வது வார்டு கவுன்சிலர் முத்துராமன், இந்து மகாசபா மாநில தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட பாரதிய ஜனதா தர்மலிங்க உடையார், முன்னாள் பஞ்சா யத்து தலைவர் சிதம்பரம், பறக்கை ஊராட்சி தலைவர் கோசலை சிதம்ப ரம், துணை தலை வர் கலா செல்வன், சிவராமமங்கலம் துரையப்பா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி வரை தினமும் சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது.

    ஒவ்வொரு நாளும் அன்னதானம், சிறப்பு வழிபாடு மற்றும் தீபாரா தனை ஆகியவை நடக்கிறது. ஜூன் மாதம் 11- ந்தேதி சக்தி வினாயகருக்கு சிறப்பு பூஜை, உச்சகால தீபாரா தனை, நண்பகல் 12.30 மணிக்கு மகா அன்னதானம், திருவிளக்கு வழிபாடு, இரவு அன்னதானம், நடக்கிறது.

    12-ந்தேதி புனித நீர் கொண்டு வருதல், தீபாராதனை, வில்லிசை, 13-ந்தேதி அபிஷே கம், வில்லிசை, அம்ம ன்மார்கள் புனித நீராடுதல், உச்சகால் தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா, மதியம் 1.35 மணிக்கு அன்னதானம், வில்லிசை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 1.30 மணிக்கு சுடலை மாட சுவாமி வீதி உலா வருதல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 14-ந்தேதி நையாண்டி மேளம், வில்லிசை, சிறப்பு தீபாராதனை, மகா அன்னதானம், தீபாராதனை, பெரிய பலவேசம், சின்ன பலவேசம் சுவாமிகள் வீதி உலா வருதல் , மங்கள தீபம் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடு களை ஊர் தலைவர் வடிவேல், செயலாளர் அய்ய ப்பன், பொருளாளர் மணி கண்டன் மற்றும் நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், கண்ணன், செந்தி ல்வேல்,ஊர் பொது மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேக விழா நாளை தொடங்குகிறது.
    • முத்தாரம்மன் தேர் பவனி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர், ஸ்ரீராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள், ஸ்ரீ முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழுவினர் இணைந்து நடத்தும் 1008 பால்குட அபிஷேக விழா நாளை தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 5 மணிக்கு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர், சமேத ஸ்ரீமுத்தாரம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடை பெறும்.

    இரவு 7மணிக்கு அலங்கார மஹாதீபாராதனை, 8.30 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு கற்பூரஜோதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 6 மணிககு மஹாகணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், காலை 6.20 மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, 6.30 மணிக்கு 108 கலசபூஜை, உலக நன்மை வேண்டிய மஹாதீபாராதனை நடைபெறும்.

    காலை 6.45 மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை, காலை 7மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், 9 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு மகாதீபா ராதனை நடைபெறுகிறது.

    காலை 9.30 மணிக்கு குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க 1,008 பால்குட பவனி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வந்து சேரும்.

    பிற்பகல் 12 மணிக்கு விவசாயம் தழைக்கவும், மழைவேண்டியும் 1008 பால்குட அபிஷேகம், 108கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மதியம் 3மணிக்கு 108சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு

    1, 008 மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு முத்தாரம்மன் தேர் பவனியும், இரவு 8.30மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடைமாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    இந்த 2 நாள் நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×