search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகசம்"

    • 2 பைக்கில் வந்த 4 இளைஞர்கள் மேம்பாலத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
    • அப்போது கத்தியை காட்டி கார் ஓட்டுனரை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

    பெங்களூருவில் உள்ள பிரபல மாரேனஹள்ளி - சில்க் போர்டு மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் அவ்வழியே வந்த காரை எட்டி உதைத்து, வரம்பு மீறிய செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    2 பைக்கில் வந்த 4 இளைஞர்கள் அந்த மேம்பாலத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அதே மேம்பாலத்தில் வந்த பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த காரை எட்டி உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது கத்தியை காட்டி கார் ஓட்டுனரை அவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் வீலிங் செய்தபடியே அங்கிருந்து சென்றனர்.

    இதனை காரில் பின்னாடி வந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். நகரில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

    அந்த வீடியோ வைரலான நிலையில் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்களின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
    • மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க ஆசைப்பட்டு இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து வீடியோக்களை வெளியிட வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனாலும் தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கான்பூர் நகரின் நவாங்கஞ்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதில், நவீன மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் வாலிபர் திடீரென அந்த மோட்டார் சைக்கிள் மீது நின்று பயணம் செய்கிறார். அப்போது டைட்டானிக் படத்தில் கதாநாயகன் கப்பலில் நிற்பதை போன்று 'போஸ்' கொடுத்தவாறு மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உன்னாவ் போலீசார் அந்த வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    • உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் உள்ள டால்பின் நீச்சல் குளம் ஒன்றில் நேற்று (மே 20) ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது இளைஞன் ஒருவன் சாகசம் செய்யும் நோக்கில் நீச்சல் குளத்துக்குள் குதித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகச் சாகசம் செய்யக் குதித்த இளைஞனின் முழங்கால் நீச்சல் குளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனின் முகத்தில் தாக்கவே மயக்கமடைந்த இளைஞன் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    சம்பவ நடந்த இடத்தில் அருகில் பலர் இருந்த போதும் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை. நீச்சல் குள லைப் கார்டும் ( உயிர்காப்பாளரும்) மிகவும் தாமதமாக அங்கு வந்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அவரின் அலட்சியத்தையும் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீச்சல் குளம் இயங்கி வந்ததே மற்றொரு உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

     

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நீச்சல் குளத்துக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி இதுபோன்ற பல நீச்சல் குளங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.  

    • பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரில் கண்டு களித்தனர்.
    • இதில் பங்கேற்ற வீரர்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்

    சூலூர்,

    கோவை சூலூர் விமான படைத்தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரில் கண்டு களித்தனர்.குறிப்பாக தேஜஸ், எம்.ஐ-17, சாரங் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.

    மேலும் விமானப்படையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்ற வீரர்கள் அவற்றின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.சூலூர் விமானப்படை தளத்தில் போர் விமான சாகச நிகழ்வை நேரில் கண்டு களித்த மாணவ மாணவிகள் கூறுகையில், விமானங்களை அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது புதிய அனுபவமாக இருந்தது. போர் விமானங்களில் வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தோம்.

    இந்திய விமானப்படையின் செயல்பாடுகளை அறிய இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. இது விமானப்படையில் சேர எங்களுக்கு உத்வேகம் அளித்தது என தெரிவித்தனர்.

    • வீடியோ வெளியிட்டு டெல்லி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார்.

    பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்துவிடும். எனவே தான் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார். அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து போலீசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர். அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • பைக் ஓட்டி சாகசம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் சிறுவன் உள்பட 3 வாலிபர்கள் பைக் ஓட்டி சாகசம் செய்து கொண்டிருந்தனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் இதுகுறித்து பொதுமக்கள், தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட காமராஜ் நகர் ஷரீப் மகன் நியாஸ் (வயது25), செல்லூர் சக்தி மாரியம்மன் கோவில் தெரு, குருநாதன் மகன் மீனாட்சி சுந்தரம் (21), மற்றும் 17 வயது சிறுவன்ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் ஓட்டிச்சென்ற 2 பைக்குகளையும், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சிக்கினர்
    • அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். வல்லபாய் மெயின் ரோட்டில் 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டி ருந்தனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 5 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் ஜம்புரோபுரம் பெருமாள்சாமி தெரு, அர்ஜுனன் மகன் சுப்பிரமணியராஜ் ( 20), பழனி மகன் பிரகாஷ் (20), செல்லூர் பாரதி தெரு சையதுஅலி மகன் அசாருதீன் (20), கோரிப் பாளையம் சோமசுந்தரம் தெரு சீனி சுல்தான் மகன் முகமது உமர் பாரூக் (23), செல்லூர் தியாகி பாலு தெரு தன பாண்டியன் மகன் ராமமூர்த்தி (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல சிந்தாமணி-பழைய குயவர்பாளையம் ரோடு சந்திப்பில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற காமராஜர்புரம், முத்துராமலிங்கம் தெரு சின்ன முனீஸ் மகன் சண்முகவேலை (19) கீரைதுறை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 9 பேர் சிக்கினர்.
    • தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    மதுரை

    தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டிருந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் 9 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

    அவர்கள் பரசுராம்பட்டி சிலோன் காலனி கனக சுந்தரம் மகன் ஜீவரஞ்சன் (வயது21), புதூர் வீரகாளி கோவில்தெரு சுரேஷ் மகன் வினோத் கமார்(20), செல்லூர் எலி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், மாட்டுத்தாவணி கருப்பையா மகன் விஜயசாரதி (21), நரிமேடு ஜீவா குறுக்குத்தெரு முத்துப்பாண்டி மகன் வினோத் (18), செல்லூர் 50 அடி ரோடு சரவணன் மகன் பிரதீப் (21), நரிமேடு, ஜீவா தெரு, செந்தில் குமார் மகன் மனோஜ் (19), அவரது சகோதரர் வேல் பிரபாகரன் (22), சுயராஜ்யபுரம் ராஜா மகன் நிரஞ்சன் (19) என்பது தெரியவந்தது. 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கயிற்றில் நின்றபடி சாகசம் செய்த சிறுமி தவறி விழுந்து பலியானார்.
    • 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கங்கையம்மன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாப்பிள்ளை. இவர் குடும்பத்துடன் துரையா ஊரணி பகுதியில் கலைக்கூத்து தொழிலில் ஈடுபட்டார்.

    அவரது மகள் கண்ணகி (வயது 15), 2 கம்புகளுக்கு நடுவே கட்டப்பட்டு இருந்த கயிற்றின் மீது ஏறி நின்றபடி சாகசம் செய்து கொண்டிருந்தார். அப்போது கண்ணகி எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கண்ணகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லல் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயிற்றுப்பிழைப்புக்காக கயிற்றில் நின்றபடி சாகசம் செய்த சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×