என் மலர்
நீங்கள் தேடியது "யானை உயிரிழப்பு"
- பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் வனப்பகுதி மற்றும் அந்தியூர் வன சரகத்துக்குட்பட்ட பர்கூர் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே தற்போது 103 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு வருகிறது. இதையொட்டி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையொட்டி யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க ஒரு சில பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களையொட்டி மின் வேலிகள் அமைத்துள்ளனர். அந்த மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.
ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 58). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த விவசாய தோட்டத்தில் யானைகள் வராமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக வந்த ஒரு யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலியானது. இதையடுத்து அவர் இறந்த யானையை வனத்துறையினருக்கு தெரியாமல் அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து விட்டார்.
இந்த நிலையில் பர்கூர் வன சரகம் செங்குளம் பிரிவு பகுதியில் ஒரு யானையை விவசாயி ஒருவர் மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பர்கூர் வன சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் அவர் மின்சாரம் தாக்கி பலியான யானையை புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பணியாளர்கள் மூலம் வனத்துறையினர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டினர். அப்போது அங்கு யானையின் உடல் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானையின் உடல் பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.
இதையடுத்து வனத்துறையினர் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்று புதைத்தாக கூறி சடையப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி மாவட்ட கிளையில் அடைத்தனர்.
- யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது.
- டாக்டர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு, உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. பின்னர் அங்கு உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்த போதிலும் வனவிலங்குகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கூடலூர் அடுத்த புளியம்பாறை பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. பின்னர் அங்குள்ள விளைநிலங்களை நோக்கி சென்றது. அப்போது காட்டு யானை திடீரென தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது.
மேலும் அங்குள்ள மரம் ஒன்றையும் இழுத்து சாய்க்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக மரம் சாய்ந்து அங்குள்ள மின்கம்பியின் மீது விழுந்தது.
இதில் யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது. இதில் யானை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது.
இன்று அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த அப்பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மாவட்ட வனஅதிகாரி கவுதமன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை. யானை இன்று அதிகாலை இரைதேடி ஊருக்குள் புகுந்ததும், அப்போது மரம் ஒன்றை சாய்த்தபோது, மின்சாரம் தாக்கி பலியானது தெரிய வந்தது.
தொடர்ந்து அங்கு கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புளியம்பாறையில் மின்சாரம் தாக்கியதில் ஆண் காட்டு யானை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நள்ளிரவில் திடீரென கொட்டகையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
- யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் பிரசித்தி பெற்ற குன்றக்குடி சண்முகநாதர் மலைக்கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமையப் பெற்ற இந்த கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மதுரை மண்டலம் சிவகங்கை வனக்கோட்டம் திருப்பத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்டதாகும்.
இதன் அடிவாரத்தில் கோவில் யானை தங்குவதற்காக தகரத்தினாலான கொட்டகை போடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் கூரையும் வேயப்பட்டு இருந்தது.
இந்த கோவிலில் வளர்ப்பு யானை சுப்பு என்ற சுப்புலட்சுமி பெண் (வயது 54) கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் யானை தங்க வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டு மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.
இதில் யானையின் மீது எரிந்த கூரை விழுந்து தீக்காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த அந்த யானை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு கொட்டகையில் இருந்து வெளியேறியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் குன்றக்குடி உதவி கால்நடை மருத்துவர் சிரஞ்சீவி மற்றும் மதுரை, தேனி, நாமக்கல், ஒரத்தநாடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவக்கு ழுவினர் நேரில் சென்று தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
30 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. யானை சுப்புலட்சுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்றக்குடி சண்முகநாதன் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் கடந்த 1971 ஆம் ஆண்டு இந்த யானை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் மிகுந்த அன்பைப் பெற்றதாக திகழ்ந்தது.

தீ விபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.
உயிரிழந்த யானைக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மாவட்ட வன அலுவலர் பிரபா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் யானையின் உடலுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் கண்ணீருடன் வழிபட்டனர்.
யானை மறைவையொட்டி குன்றக்குடி கோவிலில் இன்று மணி அடிக்காமல் பூஜை நடத்தப்பட்டது. மேலும் குன்றக்குடி வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. யானையின் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
- குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம்.
- குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை, துடியலூர் அருகே பன்னிமடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியையொட்டி சில கி.மீட்டர் தூரங்களில் வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி, இந்த பகுதிக்குள் நுழைந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.
நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய யானை கூட்டங்கள் நேராக பன்னிமடை பகுதிக்குள் நுழைந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்த யானை கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.
இந்த நிலையில் இன்று காலை, அந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று ஊருக்குள் சுற்றுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர் வந்து, குட்டியானையை மீட்டு, அதனை அதன் தாயுடன் சேர்ப்பதற்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது பன்னிமடை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்தில், பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் காணப்பட்டது. எந்தவித அசைவுமின்றி இருந்ததால் வனத்துறையினர் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த யானை அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். யானை இறந்து கிடந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர்.
இந்த யானை எப்படி இறந்தது? யானை இறப்பிற்கான காரணம் என்ன? இறந்த யானை தான் குட்டி யானையின் தாயா? யானையை தேடி வந்தபோது இறந்ததா? அல்லது யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த வேறு யானையா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்
உயிரிழந்த யானையை வனப்பணியாளர்கள் மற்றும் வன கால்நடை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பிரேத பரிசோதனை செய்தனர்.
- பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
- வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே பெண் யானை ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த யானை திடீரென பாறை சறுக்கி மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அதனுடன் பாறைகளும், கற்களும் சேர்ந்து விழுந்ததால் யானை படுகாயம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். அதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து வனவிலங்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று அந்த இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பலியான யானையுடன் மேலும் சில யானைகள் இருந்துள்ளன. யானை பள்ளத்தில் விழுந்து இறந்ததும் மற்ற யானைகள் தூரத்தில் நின்றபடி வேதனையுடன் பார்த்துள்ளன. இதனால் அந்த யானைகள் தங்களை தாக்கி விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர்.
- யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 56 வயதுடைய காந்திமதி என்ற பெண் யானை உள்ளது.
வயது முதிர்வு காரணமாக இந்த யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக யானை கீழே படுத்து உறங்காமல் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் யானை திடீரென்று கீழே படுத்தது. ஆனால் அதன் பிறகு அதனால் எழுந்திருக்க முடியவில்லை.
யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது கைகொடுக்கவில்லை. இதுகுறித்து பாகன்கள் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை தலைமை டாக்டர் முருகன், நெல்லை வனகால்நடை டாக்டர் மனோகரன், மதுரை வனகால்நடை டாக்டர் கலைவாணன், நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் செல்வமணிகண்டன், நெல்லை வனச்சரகர் சரவணகுமார் ஆகியோர் உடனடியாக கோவிலுக்கு வந்து யானையை பார்வையிட்டனர். இந்த மருத்துவ குழுவினர் யானையின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலையில் 2 பெரிய கிரேன்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தினார்கள்.
சிறிது நேரம் நின்றிருந்த யானை மீண்டும் கீழே படுத்துக்கொண்டது. யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது.
யானையை எழ வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை உயிரிழந்தது.
- கேரள மாநிலம் வாளையார்-கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்திற்கு 17 யானைகள் வந்தது.
- ரெயில் அதிவேகமாக இயக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கோவை வழியாக தினசரி 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை 12 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக ரெயில் பாதை செல்கிறது. இதனால் தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரெயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான வாளையாறு அருகே ரெயில் மோதியது 3 யானைகள் உயிரிழந்தது. இதனையடுத்து யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரெயில்வே துறை சார்பில் ரெயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கேரள மாநிலம் வாளையார்-கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 17 யானைகள் வந்தது. இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த யானை கூட்டம் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது கண்இமைக்கும் நேரத்தில் ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கும் வனத்துறையினருக்கும் ரெயில் என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று பெண் யானை ரெயில் மோதி இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரெயில் அதிவேகமாக இயக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ரெயில்கள் மோதி யானைகள் உயிரிழந்து வருவது சூழலில் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குத்தியாலத்தூர் கிராமம் பெரிய குன்றி வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அடர்ந்த வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் கிராமம் பெரிய குன்றி வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அடர்ந்த வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதி, வன கால்நடை உதவி மருத்துவர் மற்றும் வனத்துறையினர் வந்தனர். பின்னர் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்தது தெரிய வந்தது.
- வனசரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பார்வையிட்டனர்.
- இறந்து கிடந்த குட்டி யானை பிறந்து 6 மாதமே ஆன ஆண் குட்டி யானை என்பது தெரியவந்தது.
சிறுமுகை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவது வழக்கம்.
இந்த நிலையில் சிறுமுகை வனப்பணியாளர்கள் நேற்று ஒடந்துறை காப்புக்காடு வனத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது வேடர் காலனி, ஏராக்குறை சரக வனப்பகுதி அருகே குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. உடனடியாக சம்பவம் குறித்து, சிறுமுகை வனசரகர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வனசரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பார்வையிட்டனர்.
அப்போது இறந்து கிடந்த குட்டி யானை பிறந்து 6 மாதமே ஆன ஆண் குட்டி யானை என்பது தெரியவந்தது. ஆனால் யானை இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று காலை வனசரகர் செந்தில்குமார் தலைமையில் கால்நடை டாக்டர்கள் வனத்திற்கு வந்து, இறந்த குட்டி யானையின் உடலை உடற்கூராய்வு செய்கின்றனர்.
உடற்கூராய்வுக்கு பின்னரே யானைக்குட்டி இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.