என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை தந்தம் கடத்தல்"

    • கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்றிரவு செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 2.3 கிலோ எடை கொண்ட யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானை தந்தத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த புதியவன் (வயது 32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நாகர் கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யானை தந்தம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் அவர் விற்பனைக்கு கொடுத்ததாகவும், இதை தூத்துக்குடியை சேர்ந்த இன்னொரு நபர் வாங்க வந்ததாகவும் தாங்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்கள்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறையினர் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்தால் தான் யானை தந்தம் எங்கிருந்து கிடைத்தது? எப்படி வந்தது? என்ற விவரம் தெரிய வரும்.

    • 2 தந்தங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார், தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியை சேர்ந்தவர் ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக 2 யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
    • 2 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடததினார்கள். அதில் 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை அருகே அனுமந்தபுரம் பக்கமுள்ள திப்பனூரை சேர்ந்த வெங்கடேஷ் (27), கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சம்மந்தூர் பக்க முள்ள மாரநாயக்கன அள்ளியை சேர்ந்த விஜயகுமார் (25), ஊத்தங்கரை தாலுகா நடுப்பட்டி அருகே உள்ள ஒந்தியம்புதூரை சேர்ந்த ஹரிபூபதி (39), ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்த பரந்தாமன் (27) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டரும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூரை சேர்ந்த முனிராஜ் (29), பெட்டமுகிலாளம் அருகே உள்ள தொளுவபெட்டா பழையூரை சேர்ந்த லிங்கப்பா (39), பசலிங்கப்பா (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதில் தொடர்புடைய பெட்டமுகிலாளம கிராமம் போப்பனூரை சேர்ந்த பசப்பா (40), ஜெயபுரத்தை சேரந்த மத்தூரிகா (39) ஆகிய 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

    கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.

    • யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார்.
    • வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனத்துறையினர் சோதனை சாவடி, வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதில் யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார். அவர் யானை தந்தம் கடத்தல் குறித்து திடுக்கிடும் தகவல் வனத்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க வனத்துறையினர் திட்டம் தீட்டினர்.

    அதன்படி அவர் மூலமாக வனத்துறையினர் தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் பேசி கடத்தல் கும்பலை கொளத்தூரை அடுத்த ஏழரை மரத்துக்காடு என்ற இடத்திற்கு வரவழைத்தனர்.

    இதையடுத்து சொகுசு காரில் யானை தந்தங்களை எடுத்துக்கொண்டு 3 பேர் ஏழரை மரத்துக்காடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக காருக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு சொகுசு கார் வந்தவுடன் மாறுவேடத்தில் நின்ற வனத்துறையினர் காரை நிறுத்தி யானை தந்தங்களை கொண்டு வருமாறு சைகை காட்டினர். இதையடுத்து யானை தந்தங்களுடன் காரும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் அருகில் வந்தனர்.

    அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ எடை கொண்ட 4 யானை தந்தம், ஒரு சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் தந்தங்களை காரில் கடத்தி வந்தவர்கள் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த பழனி (வயது 48), தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40), குரும்பனூரை சேர்ந்த பெருமாள் (50), ஏழரை மரத்துக்காடு பகுதியை சேர்ந்த ஒண்டியப்பன் (59), வாழப்பாடியைச் சேர்ந்த அருணாசலம் (45) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.

    இந்த வனப்பகுதியில் வீரப்பன் கும்பல் யானை தந்தம் கடத்தியதாக கூறுவது உண்டு.

    வீரப்பனுக்கு அடுத்து தற்போது மீண்டும் யானை தந்தம் கடத்தல் தலை தூக்கியுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டுபிடிக்க ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    • அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள அத்தியூர் என்ற பகுதியில் அழுகிய நிலையில் ஒரு யானை பிணமாக கிடந்தது.

    இதை ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனச்சரகர் இந்துமதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ஆண் யானை என்று தெரிய வந்தது.

    மேலும் அந்த யானையின் 2 தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர்கள் மூலம் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அத்தியூர் புதூரை சேர்ந்த செங்கோட்டையன் (40), சடையப்பன் (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்ததாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனாலும் வெட்டி எடுக்கப்பட்ட தந்தம் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. இதனால் தந்தத்தை கைப்பற்ற முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே 17 வயது சிறுவனை அழைத்து வந்ததால் அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் வனச்சரகர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் வனத்துறையினரிடம் சிறுவன் எங்கே என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

    வனப்பகுயில் யானை இறந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் யானை இறந்ததும் தெரிந்திருக்கும். தந்தங்களையும் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் ரோந்து பணியில் அலட்சியமாக ஈடுபட்டதால் யானை இறந்தது தாமதமாகத்தான் தெரிய வந்தது என்றனர்.

    • யானை தந்தம் கடத்தல் வழக்கில் தங்க இடம் கொடுத்த பெருமாள்மலையை சேர்ந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    • கும்பலுக்கு வனவிலங்குகள் வேட்டையாடி அதன் பாகங்களை விற்பனை செய்வதிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா, மதுரை பதிவெண் கொண்ட வாகனங்களில் மர்மநபர்கள் சுற்றி வந்தனர். வனத்துறையினர் சோதனை நடத்தியபோது தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் தங்கியிருந்து யானை தந்தங்களை விற்க முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 2 யானை தந்தங்கள், கார்கள், செல்போன், நாட்டுதுப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்தனர். இதில் கைதான கேரளாவை சேர்ந்த அப்துல்ரசீத், சிபின்தாமஸ் ஆகியோர் மீது கேரளாவில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சிபின்தாமஸ் பெருமாள்மலை அருகே தங்கும் விடுதி நடத்தி வருவதாகவும், அங்கு பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் தப்பிஓடிய பாலமலையை சேர்ந்த சார்லஸ் என்பவரை தேடி வந்த நிலையில் அவர்களுக்கு இடம் கொடுத்த பெருமாள்மலையை சேர்ந்த முகமதுசபிக்(30) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சார்லசிடம் கொடுத்து சமைத்து கொடுக்க சொன்னதால் அங்கு தங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக தெரிவித்தார். எனவே இந்த கும்பலுக்கு வனவிலங்குகள் வேட்டையாடி அதன் பாகங்களை விற்பனை செய்வதிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×