search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கட்டணம் உயர்வு"

    • தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.
    • பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 4.83 விழுக்காடு. அதாவது யூனிட்டுக்கு 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இரு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதே அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு குறைந்தது 6% அல்லது அந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம். இவற்றில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்த ஆணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நான். இனிவரும் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினேன். அதையும் மீறி தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.

    பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், அதை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களில் 80%க்கும் கூடுதலானவர்கள் அமைப்புசாரா தொழில்களை நம்பியிருப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அவர்களின் வருவாய் பணவீக்கத்திற்கு இணையாக உயருவதற்கு வாய்ப்பே இல்லை. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி கடந்த 100 மாதங்களுக்கு மேலாக உயர்த்தப்படவில்லை. இத்தகைய சூழலில் பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது ஏழைகளின் வாழ்நிலையை அறியாத மன்னர் வாழ்க்கையை வாழும் ஆட்சியாளர்களால் மட்டுமே சாத்தியமானதாகும்.

    மின்சாரக் கட்டண உயர்வும். அது அறிவிக்கப்பட்டுள்ள நேரமும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக கருதுகின்றனர் என்பதையே காட்டுகிறது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கான மின்கட்டண உயர்வை அதற்கு முன்பாகவே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்து அறிவித்திருப்பதிலிருந்தே அவர்களின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இதிலிருந்து தமிழக அரசும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தப்ப முடியாது.

    ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்பதால் அந்தக் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று மே மாதத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நலனின் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வீடுகளுக்கான 2.18% மின்கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டதைப் போல இப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கலாம்; இல்லாவிட்டால் ஜூன் 10-ஆம் நாள் விக்கிரவாண்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கட்டண உயர்வை அறிவித்திருக்கலாம். ஆனால். மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கட்டண உயர்வை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இம்முறை கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளாததும், விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு கட்டண உயர்வை அறிவிப்பதும் மக்களை அரசு எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இனியாவது அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

    2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. 2022-23ஆம் ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23.863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதற்கு முன் மின் வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10.000 கோடியாக அதிகரித்தது. 2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், கடந்த ஆண்டும் மின்சார வாரியம் கடும் இழப்பை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. மின்வாரியத்தின் இழப்புக்கு அங்கு நிலவும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. அதை சரி செய்யாமல் மின்கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் நீர் பிடிப்பதற்கு ஒப்பான செயல் ஆகும்.

    மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.000 மிச்சமாகும் வகையில் மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் 3 முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.15,000 கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலையை திமுக அரசு உருவாக்கியிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய. பகுதி. நகர. பேரூர். வட்ட, கிளை நிர்வாகிகளும், இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற்பர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர்.
    • தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் குறைந்து விட்டது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நிறுவனங்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதையும் அரசு திரும்பப்பெற வேண்டும் என்று எட்டாவது முறையாக அந்த அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க தமிழக அரசு மறுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசு அறிவித்த நேரடியான மற்றும் மறைமுகமான மின்கட்டண உயர்வைத் தாங்க முடியாமல் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர். தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் குறைந்து விட்டது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வரும் 27-ம் நாள் நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கிறது. பா.ம.க.வினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். அதேநேரத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் மனிதச்சங்கிலி போராட்டத்தை தமிழக அரசு கைவிடச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
    • நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்,ஜூலை.5-

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர்.

    இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று சென்னையில் மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை சந்தித்து விசைத்தறி மின் கட்டணத்தை 8 மாத தவணையில் செலுத்த கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மின்கட்டண குறைப்பை விடுபட்ட 6 மாதங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராதம் இன்றி 8 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    ஜூலை1ந்தேதி முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை ரத்து செய்து, இனி வரும் ஆண்டுகளிலும் மின் கட்டண உயர்வில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மின்கொள்முதல் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் வினியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.
    • மின்கட்டண உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

    டெல்லியில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்து இருக்கிறது. அந்த வகையில் மின்கொள்முதல் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் வினியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சார கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.
    • விரைவில் மின் கட்டணங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக மின்சார வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜூலை 18-ந்தேதி சமர்ப்பித்து இருந்தது.

    இந்த மனுக்கள் தொடர்பாக ஆணையம் பொதுமக்களிடம் கடந்த மாதம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி கோவையிலும், 18-ந்தேதி மதுரையிலும், 22-ந்தேதி சென்னையிலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்றவர்கள் மின் கட்டணங்களை உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு பொதுமக்களிடம் கட்டணத்தை உயர்த்தி கேட்பதா? என்று கேள்வி எழுப்பினர்.

    சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம் அதை நிர்வகிப்பவர்கள்தான். இதற்கு பொதுமக்களிடம் அதிக கட்டணம் கேட்பது எந்த வகையில் நியாயம் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    சாதாரண பொதுமக்கள் மின் கட்டணத்தை தவறாமல் செலுத்தி வரும் நிலையில் மின்வாரிய நஷ்டத்திற்கு பொதுமக்களை எப்படி பலிகடா ஆக்க முடியும்? என்றனர்.

    மின்வாரியம் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை ஏற்பட்டதற்கு யார் காரணம்? அவர்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டும். அல்லது சரிவர நிர்வாகம் செய்யாத மின்வாரிய சேர்மன் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்கள்.

    இதற்கு அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்து விட்டு சென்றுவிட்டனர். பொதுமக்கள் சொன்ன கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த விபரங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்காதது தொடர்பாக சில தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை விசாரித்த நீதிமன்றம் ஆணையத்தில் சட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதித்தது. இதனால் திட்டமிட்டபடி இந்த மாதம் 1-ந்தேதி முதல் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டது.

    நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மின்கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்க விதித்த தடையை விலக்கிக்கொண்டது.

    இந்த நிலையில் மின்சார கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதனால் விரைவில் மின் கட்டணங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மாநில அம்மாபேரவை இணை செயலாளர் காந்தி, தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் மருத்துவ கல்லூரி பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் இன்று 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட தலைவர் கபிலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன் படி 60 கட்சி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னையில் இன்று 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட தலைவர் கபிலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர்கள் எஸ்.முத்தையா, ஆர்.பி.சரவணன், இளமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ்நிலையம் அருகே சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், செயலாளர் சதீஷ்குமார், பாஸ்கரன், நடிகை ஜெயலட்சுமி, பொது செயலாளர்கள் தியாகராஜன், சுப்பிரமணிய ரெட்டியார், சுஜாதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தண்டையார்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில பிரசார பிரிவு தலைவர் குமரிகிருஷ்ணன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.பி. சுந்தரராஜன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முருகவேல் மற்றும் நிர்வாகிகள் ஆர்.யு.எஸ்.ரெட்டி, கோவிந்தராஜன், ராமையா, வன்னியராஜன், டில்லி பாபு, சுரேஷ்குமார், பூபால குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் வேளச்சேரி காந்தி ரோட்டில் மாவட்ட தலைவர் சாய் சத்யன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் சுமதி வெங்கடேசன், பொதுச் செயலாளர் முத்து மாணிக்கம், வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு மாவட்ட தலைவர் திருப்புகழ், கேன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வில்லிவாக்கம் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.

    மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர், செயலாளர் பரிமளா சம்பத், மாவட்ட பொதுச்செயலாளர் லதா சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் வினோஜ் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் சார்பில் அதற்கான செலவுகளை ஏற்க தயாராக உள்ளோம்.
    • மின்கட்டண உயர்வை மக்கள் தாங்கும் நிலையில் இல்லை.

    நெல்லை:

    நெல்லை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றில் காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிமைகளுக்காக போராடியவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    அவர்கள் நினைவாக நினைவு மண்டபம், நினைவு தூண் அமைக்க வேண்டும். காங்கிரஸ் சார்பில் அதற்கான செலவுகளை ஏற்க தயாராக உள்ளோம்.

    மின்கட்டண உயர்வை மக்கள் தாங்கும் நிலையில் இல்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசின் உதய்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அதில் கையெழுத்திடவும் மறுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு உதய் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோடு அதற்கு கையெழுத்துமிட்டனர். இதனால் மாநில உரிமை பறிபோனதோடு எந்தவிதமான கடனும் வாங்க முடியவில்லை.

    நீட் தேர்வு, உதய்திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு ஆதரவு தெரிவித்தது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டதுக்கு முழுக்க முழுக்க அ.தி.மு.க. தான் காரணம்.

    கள்ளக்குறிச்சி மாணவியை எங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அப்போது சரியான நடவடிக்கை எடுத்தார்.

    பெரிய வன்முறைகள் நடந்த போதும் போலீசார் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை நடத்தாமல் நிலைமையை சரியாக கையாண்டனர்.

    இதற்காக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். எது எப்படியோ மாணவிக சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.
    • கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும்.

    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் வந்தே மாதரம் ரதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கு சென்று அதன் பிறகு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ரத யாத்திரை வந்தது. நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் வந்து பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதரம் ரத யாத்திரையானது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி வேலூர் கோட்டையில் இருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த ரத யாத்திரை செல்ல இருக்கிறது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

    ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த மண்ணான சென்னிமலைக்கு சென்று வந்தோம். இதைத்தொடர்ந்து கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும். போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்று உள்ளனர். மின் கட்டண உயர்வுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×