search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வினி வைஷ்ணவ்"

    • தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம்.

    சென்னை:

    தமிழக ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கேள்விகள் எழுப்பி நேற்று கடிதம் எழுதினார். அதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தனது எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வெளியிட்ட பதிவு வருமாறு:-

    தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை முந்தைய ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரெயில்வே மேம்பாட்டிற்கு 2 அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • நிதிப் பற்றாக்குறை காரணமாக முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

    2024-2025 நிதியாண்டில் வழக்கமான ரெயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்திருப்பதால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

    2024-2025 நிதியாண்டுக்கான இந்திய ரெயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.

    கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கணக்குத் தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை-தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும்.

    அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும். அந்த வகையில், விழுப்புரம்-திண்டுக்கல், திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஓமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும்.

    மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு ரெயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித ரெயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அப்பணிகளின் விவரங்களை விவரித்துள்ளார்.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • விமான நிலையங்களுக்கு இணையாக 77 ரெயில் நிலையங்கள் அதி நவீனமயமாக்கப்படுகிறது.
    • காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன. சுமார் 1,302 கி.மீட்டர் தொலைவிற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    விமான நிலையங்களுக்கு இணையாக சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரெயில் நிலையங்கள் அதி நவீனமயமாக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.

    தமிழகத்தில் பல்வேறு ரெயில் திட்டங்களை நிறைவேற்ற 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படுகிறது.

    ரெயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    • மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
    • காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

    இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.

    மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.

     இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் உள்ள வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.

    அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஹிசாரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

    காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர்.

    • வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    • இந்திய உணவு கழகத்திடம் 53.4 மில்லியன் டன் நெல் கையிருப்பில் உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 3-வது முறையாக மோடி அரசு அமைந்த பிறகு எடுக்கப்பட்ட முதலாவது மந்திரிசபை முடிவு இதுவே ஆகும்.

    இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2024, 2025 கோடை கால சாகு படிக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தப்படுகிறது. இதனால், சாதாரண ரக நெல் விலை, குவிண்டாலுக்கு ரூ.2,300 ஆகவும், முதல்ரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,320 ஆகவும் உயரும்.

    வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கான உற்பத்தி செலவைப்போல் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை 2018-ம் ஆண்டு பட்ஜெட்டில் இருந்து கடைபிடித்து வருகிறோம்.

    இந்திய உணவு கழகத்திடம் 53.4 மில்லியன் டன் நெல் கையிருப்பில் உள்ளது. இது, ஜூலை 1-ம்தேதிப்படி தேவையானதை விட 4 மடங்கு அதிகம். புதிதாக கொள்முதல் செய்ய தேவையின்றி, ஓராண்டுக்கு நலத்திட்டங்களுக்கு வழங்குவதற்கும் போதுமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளை ரூ.2,869 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதில், புதிய முனைய கட்டிடம் கட்டுதல் மற்றும் ஓடுதள விரிவாக்க பணிகள் செய்யப்படும்.

    காற்றாலை மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும்வகையில், ரூ.7, 453கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இவற்றில், ரூ.6,853 கோடி செலவில், 1 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதும் அடங்கும்.

    அதாவது, குஜராத் கடலோர பகுதியிலும், தமிழ்நாட்டு கடலோர பகுதியிலும் தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் திட்டங்கள் நிறுவப்படும்.

    • ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
    • உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் சங்கல்தான் - ரியாசியை இணைக்கும் வகையில் உலகின் மிக உயரமான சென்னாப் ரெயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமாக முதல் ரெயில் நேற்று இயக்கப்பட்டுள்ளது. இந்த சென்னாப் ரெயில்வே பாலம் (359 மீட்டர்கள்) பாரிஸில் உள்ள உயரத்துக்கு பிரசித்தி பெற்ற ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.

    தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டம் குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், இந்த பாலத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், சுரங்கப்பாதை எண் ஒன்றில் மட்டும் மிச்சமுள்ள மீதி வேலைகள் முடிந்ததும் இன்னும் நான்கைந்து மாதத்துக்குள் சென்னாப் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சென்னாப் பாலம், சுமார் 272 கிலோமீட்டருக்கு போடப்படும் உத்தம்பூர் -ஸ்ரீநகர் - பாரமுல்லா (USBRL ) ரெயில்வே தடத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரெயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது. இதற்கிடையில் இந்த ரயில் பாலம் இணையும் ரியாசி மாவட்டத்தில் சமீபத்தில் பக்தர்கள் சென்ற பேருந்தின்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 520 மீட்டர் நீளத்திற்கு ஹூக்ளி நதியின் கீழே இந்த சுரங்கப் பாதை அமைகிறது
    • செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா நகரை 27 நிமிடத்தில் அடைந்து விடலாம்

    மெட்ரோ ரெயில் சேவை திட்டங்களில் ஒன்றாக இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ பாதையை, கொல்கத்தாவில், பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 6 அன்று தொடங்கி வைக்கிறார் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    நதிக்கு அடியில் ரெயில்களில் பயணிக்கும் புதிய அனுபவத்தை நாட்டிலேயே முதல் முறையாக, கொல்கத்தா நகர மக்கள் பெற உள்ளனர்.

    520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழே இந்த சுரங்க பாதை அமைகிறது.

    இந்த சுரங்கப்பாதையின் உள்-விட்டம் 5.55 மீட்டராகும்; வெளிப்புற விட்டம் 6.1 மீட்டராகும். ஹூக்ளி நதியில் 32 மீட்டருக்கு கீழே இதை உருவாக்கி உள்ளனர்.

    பயணிக்கும் போது சுமார் 1 நிமிடத்திற்கும் குறைவாகவே பயண நேரம் அமையும்.


    கொல்கத்தா மக்களுக்கு இது கணிசமாக பயண நேரத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, கிழக்கு கொல்கத்தாவில் இருந்து செக்டார் வி (Sector V) எனும் இடத்திலிருந்து ஃபூல்பகன் (Phoolbagan) எனும் இடத்திற்கு இடைப்பட்ட 6.97 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள பசுமை தட (Green Line) மெட்ரோ சேவை, இப்புதிய நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதும், ஹூக்ளி நதியின் கீழே, செக்டார் வி பகுதியிலிருந்து ஹவுரா (Howrah) நகரை 27 நிமிடத்தில் அடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஹூக்ளி நதிக்கு 35 மீட்டருக்கு கீழே தடையில்லாத இணைய சேவை வழங்கப்படும் என இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் (Airtel) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவை நடைமுறைக்கு வந்ததும் இந்தியாவிலேயே ஆழமான மெட்ரோ சேவை தரும் ரெயில் நிலையமாக ஹவுரா ரெயில் நிலையம் உருப்பெறும். அத்துடன் ஒரு நதியின் கீழ் செயல்படும் முதல் மெட்ரோ சேவையாகவும் இது விளங்கும்.

    • சுவிஸ் ரெயில்வே 5,200 கி.மீ. தட நீளத்துடன் சேவை செய்கிறது
    • இந்தியாவில் ஒரே ரெயில் நீண்ட தூர சேவை வழங்கும் கட்டமைப்பு உள்ளது

    உலகளவில் சிறப்பான ரெயில்வே சேவைக்கு சுவிட்சர்லாந்து புகழ் பெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டு ரெயில் சேவையின் காலந்தவறாமை மிகவும் பிரபலமானது.

    ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து கட்டமைப்புகளில், சுவிட்சர்லாந்தின் ரெயில் பாதை கட்டமைப்பு 5,200 கிலோமீட்டர் ஆகும்.

    சுவிட்சர்லாந்தின் ரெயில் கட்டமைப்பு "ஹப் அண்ட் ஸ்போக் மாடல்" (hub and spoke model) எனப்படும்.

    இந்த அமைப்பில் ஒரு நகர் "ஹப்" என இயங்கும். அந்த நகருக்கு ஒரே நேரத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்து பல ரெயில்கள் பல தடங்களில் (spokes) வந்து சில மணி நேரங்கள் நிற்கும்.

    இதன் மூலம் ஒரே ரெயில் நிலையத்தில், ஒரே நேரத்தில், பயணிகள் வேண்டிய ரெயில்களில் ஏறவும், மாறி கொள்ளவும் முடியும்.

    பிறகு அனைத்து ரெயில்களும் ஒரே நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு செல்லும். இந்த வடிவத்தின் மூலம் பல பயணிகள் மிக சுலபமாக வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கின்றனர்.

    அந்நாட்டில் 6 ஹப்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்து ரெயில்களும் நேரந்தவறாமல் சிறப்பாக இயங்குகின்றன.

    இதை தவிர, ஒவ்வொரு ஹப்-பில் இருந்தும் வேறொரு ஹப்-பிற்கு செல்ல சிறப்பான உள்ளூர் போக்குவரத்தும் உள்ளது.

    ஆனால், இதற்கு நேர்மாறாக இந்தியாவில் ஒரு ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள வேறொரு ஊருக்கு ஒரு ரெயில் எனும் வகையில் ரெயில்வே கட்டமைப்பு உள்ளது.

    இந்திய ரெயில்வே சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து ரெயில்வே துறையிடம் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற இந்தியா திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


    உதாரணத்திற்கு, சுவிஸ் மாடலில் திருச்சி ரெயில் நிலையம் "ஹப்" போன்று இயங்கும்.

    சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து ரெயில்கள் ஒரே நேரம் திருச்சியில் வந்து நிற்கும். சில மணி நேரம் கழித்து, அங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு ஒரே நேரம் ரெயில்கள் புறப்பட்டு செல்லும்.

    இத்திட்டத்தின்படி குறைந்த தூரத்திற்கு பல ரெயில்கள் இயக்க முடிவதால், ரெயில்களில் இடம் கிடைப்பதும் பயணிகளுக்கு சுலபமாக இருக்கும்.

    • வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது
    • இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.

    அகமதாபாத்:

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் "இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரெயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரெயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என கூறினார்.

    • டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு.

    திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரெயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.
    • இரட்டை என்ஜின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 160 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    இந்நிலையில், இரட்டை என்ஜின் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் கிடைத்த வெற்றி இது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். பா.ஜ.க. அரசு வேலை செய்துள்ளது. இரட்டை என்ஜின் அரசு, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
    • போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும்.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரபலங்களை போன்ற போலி வீடியோக்கள் (டீப் பேக்ஸ்) தயாரித்து வெளியிடப்படுகின்றன. பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையை பொருத்தி, இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின. பிரதமர் மோடி போன்ற போலி வீடியோவும் வெளியானது. இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இந்நிலையில், போலி வீடியோக்கள் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் சம்மதித்துள்ளன.

    போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும். விதிமுறை வகுப்பதற்கான பணிகள் இன்றே தொடங்கப்படும். குறுகிய காலத்தில், புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

    ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் அல்லது புதிய விதிமுறைகளோ, புதிய சட்டமோ கொண்டு வரப்படும்.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும். இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக அக்கூட்டம் இருக்கும். மேலும், புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×