என் மலர்
நீங்கள் தேடியது "ஜனாதிபதி திரவுபதி முர்மு"
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.
- பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் மாதம்தோறும் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்தபடி உள்ளனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற மே மாதத்தின் மத்தியில் மாதாந்திர பூஜை நடைபெறும் போது சபரிமலைக்கு வர திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
சபரிமலை செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி, பின்பு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நிலக்கல்லுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்லும் அவர், பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள், திருவிதாங்கூர் தேவசம்போர்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
மேலும் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர்.
- புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது.
- புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது. இது சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் கருணை ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
இந்த பண்டிகை சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கிறது மற்றும் அமைதியான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். மேலும் நேர்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை வலுப்படுத்தட்டும்.
இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ரம்ஜான் பண்டிகை நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் பகிரப்பட்ட பிணைப்புகளில் அதன் வலிமையை நினைவூட்டுகிறது.
"ஈத்தின் சாராம்சம் வெறும் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டது; இது ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் நமது அரசியலமைப்பு லட்சியங்களை உள்ளடக்கியது.
இந்த புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
- கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு 2018-2019, 2019-2020-ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா நடத்தி சென்றுள்ள நிலையில் தற்போது காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிருநாளில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.
ஜனாதிபதியாக பதியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதால் மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு தெலுங்கானா மாநிலத்துக்கு 26ம் தேதி வருகிறார்.
- ஐந்து நாள் பயணம் செய்யும் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஐதராபாத்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு வரும் 26-ம் தேதி வருகிறார்.
ஐதராபாத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார் என தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தெரிவித்தார்.
- உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் டிஜிட்டல் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஒரு மைல்கல் நிகழ்வான ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும்போது இது மிகவும் பொருத்தமானதாகிறது.
டெல்லியில் நடந்த 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இதில் டிஜிட்டல் நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கிய 22 அரசு நிறுவனங்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி, இந்தியா, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் என கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- உலக அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் டிஜிட்டல் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மைல்கல் நிகழ்வான ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும்போது இது மிகவும் பொருத்தமானதாகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா தொடங்கி இருக்கிறது.
இது நிர்வாகத்தையும் மாற்றும். மக்களை மையமாக கொண்ட நிர்வாகத்துக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, குறிப்பாக தொற்றுநோய்களின் போது, இது உலகின் பிற பகுதிகளுக்கும் பயனளிக்கிறது.
இந்தியா, மென்பொருள் துறையில் தனது சக்தியை நிரூபித்திருப்பதை தொடர்ந்து, மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும்.
நாம் நடைமுறையில் உள்ள கொள்கைகளைப் பயன்படுத்தி, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளின் உலகளாவிய சக்தியாக நாட்டை நிலைநிறுத்துவதற்கு சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் உள்ளூர்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்க அதைப் பயன்படுத்தும் வகையில், அரசாங்கத் தரவை ஜனநாயகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
- அமைச்சர் ரகுபதியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார்.
- கடிதத்தில், 9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் உரையில் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். தமிழ்நாடு, திராவிட மாடல், சட்டம்-ஒழுங்கு, முதலீடு தொடர்பான பத்திகளை கவர்னர் படிக்கவில்லை.
சில பக்கங்களையும் கவர்னர் படிக்காமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி சில விஷயங்களை சேர்த்து வாசித்தார். இறுதியில் கவர்னர் உரையில் இல்லாத ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்வு சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் எழுந்து 2 பக்க அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கவர்னர் உரையில் சில பத்திகள் வாசிக்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்தார்.
கவர்னர் உரையில் தவிர்த்தவற்றை சேர்த்தும், புதிதாக சேர்த்து வாசித்தவற்றை நீக்கியும், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் அறிவித்தார். இதை அவர் சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதை அறிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பாகவே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
சட்டசபையில் கவர்னர் உரையாற்றிய விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது.
இதற்கிடையில், கடந்த 9-ந்தேதி இரவு சட்ட நிபுணர்கள், தி.மு.க. சட்டப்பிரிவினர், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கவர்னர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்பதற்காக டெல்லி சென்றனர். ஆனால் ஜனாதிபதி மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்ததால் அதில் தாமதம் ஏற்பட்டது.
டெல்லி திரும்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு தி.மு.க.வின் வேண்டுகோளை ஏற்றார். இன்று பகல் 11.45 மணிக்கு தி.மு.க. தலைவர்கள் 4 பேர் தன்னை வந்து சந்திக்கலாம் என்று அனுமதி வழங்கினார். இதையடுத்து சென்னையில் இருந்து சட்ட அமைச்சர் ரகுபதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீல் வைத்த கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், '9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் உரையின் போது சில பகுதிகள் தவிர்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு. ஆ.ராசா, ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்கள்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பியிருந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்தனர். ஜனாதிபதி அதை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அவரிடம் விடைபெற்று தி.மு.க. தலைவர்கள் திரும்பினார்கள்.
இதற்கு முன்பு கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் உரசல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தி.மு.க. தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படும்.
ஆனால் தற்போது முதல் முறையாக கவர்னருக்கு எதிராக தி.மு.க. தரப்பில் ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம்.
- வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
சென்னை:
தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதற்கு முன்பு இருந்த கவர்னர்கள், கவர்னர் உரையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படிப்பார்கள். ஆனால் கவர்னர் உரையில் உள்ள வரிகளை இப்போதைய கவர்னர் படிக்கவில்லை. பேராவை நீக்கினார். சில வரிகளை அவரே சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்தும், சில வரிகளை நீக்கியும் படித்தது தவறு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
கவர்னர் உரையில் எது அச்சிடப்பட்டுள்ளதோ? எதற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளாரோ அது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தான் நடந்த உண்மைகள்.
இதை விளக்கமாக குடியரசு தலைவரிடம் எடுத்து கூறியுள்ளோம். மிக மிக கூர்ந்து கவனித்த குடியரசு தலைவர் எங்கள் கடிதத்தை படித்து பார்த்தார். படித்து முடித்ததும் அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சட்டசபையில் நடந்த விஷயங்களை மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம். வழக்கத்துக்கு மாறாக, மரபுகளுக்கு மாறாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
கவர்னர் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
அந்த கடிதத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது. ஏனென்றால் இந்த கடிதத்தை தமிழக முதல்-அமைச்சர், ஜனாதிபதியிடம் கொடுக்க சொல்லி சீலிடப்பட்ட உறையில் எங்களிடம் கொடுக்கப்பட்டது.
அது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளே என்ன எழுதி இருக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது.
கேள்வி: நீங்கள் ஜனாதிபதியிடம் என்ன கருத்தை முன் வைத்தீர்கள்?
பதில்: இதை மொத்தமாக படித்து பார்த்து சரி என்று என்ன தோன்றுகிறதோ? என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களோ அதை எடுங்கள் என்று கூறியுள்ளோம்.
கேள்வி: அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?
பதில்: ஜனாதிபதியை பார்க்கும் முன்பு அவரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. ஜனாதிபதியை பார்ப்பது தான் எங்கள் நோக்கம். அவரை பார்த்து விட்டோம். எனவே அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறீர்களா?
பதில்: இது அரசியலில் நெளிவு சுளிவாக, மிகவும் கவனமாக எடுக்கக்கூடிய முடிவுகள். ஜனாதிபதி என்ன முடிவு எடுப்பார் என்பதை நான் சொல்ல முடியாது.
தேசிய கீதம் பாடும் முன்பு கவர்னர் எழுந்து போனதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கேள்வி: கவர்னர் ஏன் தொடர்ந்து தமிழக அரசுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்?
பதில்: அவரது நோக்கம் என்பது மொத்தமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சனாதன கொள்கைகளை புகுத்த வேண்டும் என்பது தான். இதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. இது பெரியார், அண்ணா, கலைஞரின் தேசம். இதில் யாரும் புதிதாக ஒரு செடியை வளர்த்து விட முடியாது. 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் இருந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மாறான கொள்கைகளை யாரும் திணிக்க முடியாது.
கேள்வி: இந்த பிரச்சினை பாராளுமன்றத்தில் எழுப்பப்படுமா?
பதில்: நிச்சயமாக தி.மு.க. சார்பில் இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
- நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஆலந்தூர்:
தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொண்ட குழுவினர் அளித்தனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது.
சமூகநீதி குறித்து நாங்கள் 100 ஆண்டு காலமாக செய்து வருகிறோம். சமூகநீதி பற்றி பேசும்போது, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், உச்சநீதி மன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றால் சேது சமுத்திர திட்டம் வந்துவிடும். எனவே முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வந்து, அது பற்றி பேசட்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு உண்மையில் இருக்குமேயானால், முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.
திராவிடமாடல் என்பது இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் இருக்கிறது. இதுபற்றி எல்லாம் புரியாதவர்கள் ஏதாவது பேசுவார்கள், உளறுவார்கள். அவர்களுடைய உளறல்களுக்கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.
- மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார்.
இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதற்கிடையே சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கொடுத்தனர்.
அக்கடிதத்தில் அரசியல் சாசன பகுதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அவர் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதுபற்றி பார்ப்பதாக தி.மு.க. குழுவினரிடம் தெரிவித்தார்.
கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.
- பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
- விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:
மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது.
தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), துணிச்சல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிக்ழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
- நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள்
புதுடெல்லி:
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசு தினத்தை கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் எதை அடைந்தோமோ, அதை கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றியடைந்துள்ளோம்.
பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, மாறாக ஒன்றிணைத்துள்ளன. உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்று இந்தியா. அம்பேத்கர் உள்ளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடுகளால் இது சாத்தியமானது. 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை வெறும் கோஷங்கள் அல்ல. சமீப ஆண்டுகளில் இந்த லட்சியங்களில் நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாளைய இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
- குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
- முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்பு
புதுடெல்லி:
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னர்களும் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். மாநில கவர்னர்கள் அளிக்கும் தேநீர் விருந்துகளில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.