search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் உறுப்பு தானம்"

    • மருத்துவ பணியாளர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.
    • அனைத்தும் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக உடல் உறுப்பு தானம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்தாலும் அதனை சரியான நேரத்தில் கொண்டு சென்று பொருத்துவதில் மருத்துவர்களின் பணி போற்றுதலுக்குரியது.

    அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. 13.கி.மீ தொலைவை 13 நிமிடங்களில் சென்று இதயத்தை உரிய நேரத்தில் பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர் மருத்துவ பணியாளர்கள். அவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பெரும் உதவி புரிந்துள்ளது.

    எல்.பி. நகரின் காமினேனி மருத்துவமனையில் பெறப்பட்ட இதயத்தை லக்டிகாபுலில் உள்ள க்ளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். போக்குவரத்து மிகுந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் உதவி உள்ளது.

    13.கி.மீ. தொலைவை 13 நிமிடங்களில் சென்று அடைவதற்கு ஐதராபாத் மெட்ரோ ரெயில் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு இடையேயான கவனமான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமானது. இவை அனைத்தும் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இச்சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 


    • சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார்.
    • வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே மாதம்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (வயது 65). மத்தூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார். அவர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கோட்ட வருவாய் ஆய்வாளர் ஷாஜகான், போச்சம்பள்ளி தாசில்தார் சத்தியா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.

    மத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவுதம், ஒட்டப்பட்டி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
    • சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜசுதா. குடும்ப தலைவியாக உள்ளார். இவர்களுக்கு ஹரீஸ் (வயது 13), கிஷோர் (11), ஆகிய 2 மகன்கள் உள்ளனர். எம்.எம்.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் மகன் 8ம் வகுப்பும், கிஷோர் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். முதலில் காய்ச்சல் மட்டும் இருந்த நிலையில் பின்னர் வலிப்பு நோய் ஏற்பட்டு மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து கிஷோர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமக உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கிஷோரின் உடல் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

    அங்கு சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சிறுவயதில் தனது மகன் இறந்த சூழ்நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயன் அடைய உள்ளனர்.
    • சிறுநீரகங்கள் ஆகியவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியை சேர்ந்தவர் எமிலி (வயது63).

    உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது உறவினர்கள் முன்வந்தனர். இது தொடர்பாக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த எமிலியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை தனியாக பிரித்து எடுத்தனர்.

    பின்னர் தானமாக பெறப்பட்ட கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.


    கல்லீரல் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், கண்கள் சங்கரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இவரது உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயன் அடைய உள்ளனர்.

    ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் உறுப்பு தானம் இதுவாகும். மேலும் இறக்கும் முன்பு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில், முதல்முறையாக உடல் உறுப்பு தானம் செய்த எமிலியின் உடலுக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. மேலும் கலெக்டர் அருணா நேரில் சென்று உடல் உறுப்பு தானம் செய்த எமிலியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், உதவி இருப்பிட மருத்துவ அலுவலர்கள் வினோத்குமார், மணிகண்டன், மயக்கவியல் மருத்துவர் கார்த்திக், ஊட்டி தாசில்தார் சரவண குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
    • தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாமரத்துபாளையம் அருகே கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (46). கூலித் தொழிலாளியான துளசிமணிக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் துளசிமணி கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.

    அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துளசிமணியை பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 21-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து துளசி மணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உடல் உறுப்புகளை பெறுவதற்காக காத்திருந்த உறுப்பு மாற்ற ஆணையத்தின் விதிமுறைப்படி 21-ந் தேதி மாலையில் துளசிமணியின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து துளசிமணியின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் தோல் ஆகியவை பாதுகாப்பாக எடுக்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தானம் பெறுவதற்காக காத்திருந்த ஒருவருக்கும், 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவருக்கும், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளிக்கும் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. அதேபோல தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    உடல் உறுப்பு தானம் வழங்கிய துளசிமணியின் குடும்பத்தாருக்கு அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வள்ளி சத்யமூர்த்தி நன்றி தெரிவித்ததுடன் துளசி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்படுவது 9-வது முறை என மருத்துவக் கல்லூரி சேகர் தெரிவித்தார்.

    • புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.
    • சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது.

    திருவனந்தபுரம்:

    உடல் உறுப்பு தானம் பற்றி மக்களிடம் தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளைச்சாவு நிலைக்கு சென்ற பலரின் உடல் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினர், உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்குகிறார்கள்.

    இதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதித்து அவதிப்படும் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், நுரையீரல் உள்ளிட்ட மனிதன் வாழ அவசியமான முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. அது மட்டுமின்றி எலும்புகள், எலும்பு மஜ்ஜை, தோல் உள்ளிட்டவைகளும் தானமாக வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு உடல் உறுப்பு தானம் பெற்றதன் மூலம் மறுவாழ்வு பெறுபவர்கள், தங்களுக்கு உடல் உறுப்பு வழங்கியவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்துவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ஆனால் அதனையும் தாண்டி சில உணர்வு பூர்வமான சம்பவங்களும் அரங்கேறும்.

    அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தனக்கு இதய தானம் வழங்கிய ஒரு வாலிபரின் தாய் இறந்து விட்ட நிலையில், அவருக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்குள் அனைத்தையும் மகன் ஸ்தானத்தில் இருந்து செய்துள்ளார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி ஷாஜி-சஜனா. இவர்களது மகன் விஷ்ணு, மகள் நந்தனா. இந்நிலையில் விஷ்ணு விபத்தில் சிக்கினார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு நிலைக்கு சென்றார்.

    இதனால் அவரது குடும்பத்தினர் துடித்து போகினர். விஷ்ணு தங்களு டன் வாழப்போவதில்லை எனபதை நினைத்து மனம் உடைந்தனர். அந்த நேரத்தில் விஷ்ணுவின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவுக்கு வந்தனர். அதன்படி விஷ்ணுவின் சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தானமாக வழங்கப்பட்டது.

    மேலும் உறுப்புகளை தானம் பெறுபவர்கள் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விஷ்ணுவின் குடும்பத்தினர் வைத்தனர். விஷ்ணுவின் உடல் உறுப்பு கள் 4 பேருக்கு பொருத்தப்பட்டன. விஷ்ணுவின் இதயம் பத்தினம்திட்டாவை சேர்ந்த அசோக் நாயர்(வயது44) என்பவருக்கு பொருத்தப்பட்டது.

    அவர் அறுவை சிகிச்சை நாளில் விஷ்ணுவின் தாய் சஜனாவை சந்தித்தார். அப்போது தான், சஜனா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததை அசோக் நாயர் அறிந்துகொண்டார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையிலும், தனக்கு தன்னுடைய மகனின் இதயத்தை தானமாக வழங்கியதை நினைத்து அசோக் நாயர் நெகிழ்ந்து போனார்.

    தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து வழக்கம்போல் வாழ தொடங்கிய அசோக் நாயர், சஜானாவை தவறாமல் சந்தித்து வந்தார். மேலும் தனக்கு இதயத்தை தானமாக வழங்கிய விஷ்ணு பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

     

    சஜனா மற்றும் அவரது மகன் விஷ்ணு

    சஜனா மற்றும் அவரது மகன் விஷ்ணு

    அப்போது விஷ்ணுவுக்கு அவரது தாய் சஜனாவை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டார். இதனால் சஜனாவுக்கு தேவையான அனைத்தையும் செய்து மகனாகவே அசோக் நாயர் மாறினார். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.

    சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது. சஜனாவுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டும் என்று விஷ்ணுவின் தந்தை கேட்டுக்கொண்டார்.

    அதன்பேரில் சஜனாவின் இறுதிச்சடங்கை மகன் ஸ்தானத்தில் இருந்து அசோக் நாயர் செய்தார். மேலும் சஜனாவின் உடலுக்கு அவரே தீ மூட்டினார். இது சஜனாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற விஷ்ணுவின் குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரையும் கண்கலங்க செய்தது. 

    • உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா அறிவித்தது.
    • நன்கொடையாளர்களின் தைரியம், தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என தெரிவித்தது.

    புவனேஷ்வர்:

    தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது:

    உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.

    மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும்.

    நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம்.

    உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதாவது கைதிகளுக்கு யோகா, ஓவியம், சிற்பம் ஆகிய பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் உடற் பயிற்சி மற்றும் நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறை சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கரில் கைதிகளால் துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டு, 60 வகையான பழம், மூலிகை , காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவர்கள் இது தொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகரை சந்தித்து பேசினர்.


    இது குறித்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜிப்மர் டாக்டர்கள், காலாப்பட்டு சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்து பேசினர். அப்போது 57 தண்டனை கைதிகள், 89 விசாரணை கைதிகள் என 146 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் 2 அதிகாரிகளும் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட ஜிப்மர் டாக்டர்கள் அவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

    உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    • பைக்கை விக்னேஷ்குமார் ஓட்டி சென்றுள்ளார்.
    • பலத்த காயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    நத்தம்:

    மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக்ராஜா (வயது23). இவர் தனது நண்பர் விக்னேஷ்குமாருடன் சம்பவத்தன்று பைக்கில் நத்தம் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். பைக்கை விக்னேஷ்குமார் ஓட்டி சென்றுள்ளார்.

    இந்நிலையில் பரளிபுதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக்ராஜா இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கார்த்திக்ராஜாவின் உடல் மதுரைராஜாஜி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    • மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காமராஜ் பேட்டையை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சவுண்டப்பன் (55). இவரது மனைவி ருக்மணி (52).

    இவர்களுக்கு பிரியா (26), என்ற மகளும், தினேஷ் குமார் (24), கார்த்தி (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் தினேஷ்குமார் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி தினேஷ்குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதில் மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. இதையடுத்து தினேஷ்குமார் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேச்சேரி நெசவாளர் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பொன்மணி, தாசில்தார் சுமதி, மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மயானத்திற்கு தினேஷ்குமார் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டது.

    • 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.
    • சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கலைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி பரிமளா. இத்தம்பதியின் மகனான ராகவேந்திரா 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 18-ந்தேதி இரவு நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு-ஆரணி சாலையில் ராகவேந்திரா சென்றார். அப்போது, எதிரே வந்த நபர்கள் மீது சிறுவன் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ராகவேந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.

    மகன் இறந்துவிட்ட துக்கம் தாங்காமல் பெற்றோர் உடைந்து போக… அவர்களை அழைத்து உடலுறுப்பு தானம் குறித்தும், சிறுவனின் உறுப்புகள் மூலம் பலர் புதுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர். இதற்கு சிறுவனின் பெற்றோர் சம்மதிக்க, மின்னல் வேகத்தில் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை அகற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

    இதையடுத்து, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் சென்றனர். அப்போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுவனின் பெற்றோர், தங்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றி எதுவும் தெரியாது, மருத்துவர்கள் சொன்னதால் விழிப்புணர்வு பெற்றதாக அழுதபடி அமைச்சரிடம் கூறினர். இதனால், உருக்கமாக இருகரம் கூப்பி வணங்கிய அமைச்சர், கண்ணீர் சிந்தியபடி, அவர்களின் காலில் விழவும் முயன்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


    • ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ராஜ்குமார்(41). இவர் கடந்த 26-ந் தேதி வேலகவுண்டன்பட்டியில் இருந்து பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ராஜ்குமார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    மூளை சாவடைந்து உறுப்பு தானம் செய்த அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.10 மணிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா, திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மதுரா செந்தில் மற்றும் போலீசாரால் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக மேலகவுண்டன்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

    ×