search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோல்"

    • செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு.
    • நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

    மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான மதுரை எம்பி சு.வெங்கடேசன் உரையாற்றினார். அப்போது செங்கோல் குறித்து, தமிழக மன்னர்கள் குறித்தும் அவர் அவதூறாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

    மேலும் மதுரை மேயரின் கையில் கொடுத்த என்ன? என போட்டோவைக் காட்டி கேள்வி அவர் எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு சு.வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "அண்ணாமலை அவர்கள் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரைகுறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்.

    "செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் உ. பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள்தானே நீங்கள்" என்று பேசினேன்.

    ஆனால் நீங்களோ "செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு" என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு மன்னராட்சியின் குறியீடு என்பதையும் மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்தனர் என்பதையும் மட்டும் விமர்சித்திருக்கிறீர்கள்.

    செங்கோல், அறத்தின், நேர்மையின் குறியீடு என்பதைப்பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பா.ஜ.க.வின் நேர்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

    அதிகாரத்தில் இருப்பவர்களை அறவழிப்படுத்துவதும் நீதியின்பால் ஆட்சிசெய்ய வைப்பதும்தான் காலங்காலமாக இருந்துவரும் பெரும்பிரச்சனை. அதனால்தான் அறத்தின் குறியீடாக செங்கோலைத் தமிழ் இலக்கியங்கள் பேசின. "வம்ப வேந்தர்களாகவும், பிறர் மண் உண்ணும் செம்மல்களாகவும்" மன்னர்கள் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தியபோது அவர்களை கொடுங்கோல் ஆட்சி நடத்தாதீர்கள் என இலக்கியங்கள் இடித்துரைத்தன. நீதி மற்றும் அறத்தின் குறியீடாக "செங்கோல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

    மன்னராட்சிக் காலம் முடிந்துவிட்டது. ஜனநாயக காலத்திற்கு வந்துவிட்டோம். நமக்கான நீதியின் அடையாளமாகவும் அடிப்படையாகவும் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.

    நாடாளுமன்ற வாசலில் இருந்த தேசத்தந்தை காந்தியின் சிலையையும் அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் அகற்றிவிட்டு, எங்கோ ஓர் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோலை எடுத்துவந்து அவையின் மையத்தில் நிறுவுகிறீர்கள்.

    நாடாளுமன்றத்தில் நாற்பதடி உயரத்திற்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும் நாடாளுமன்றத்தின் ஆறு வாசலுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர்சூட்டுவதும் தற்செயலல்ல. உங்களது இந்துத்துத்துவா மதவெறித்தத்துவம் உங்களை வழிநடத்துகிறது. அதற்குத் தடையாக இருக்கும் அரசியல் சாசனத்தை நீங்கள் அகற்ற நினைக்கிறீர்கள்.

    இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டங்கள் இயற்றப்படும் மாமன்றத்தில் நமது அரசியல் சாசனமும் அது சார்ந்த அடையாளங்களுமே கோலோச்ச வேண்டும். அங்கே மன்னராட்சிக்கால அடையாளத்தைக் கொண்டுவந்து நிறுவுவது நமது ஜனநாயக அமைப்பின் மீதான திட்டமிட்ட கருத்தியல் தாக்குதல் ஆகும்.

    எனவேதான் நாங்கள் அரசியல் சாசனத்தைக் கைகளில் ஏந்தி 18ஆவது நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தோம். அதனை உயர்த்திப்பிடித்துப் பதவி யேற்றுக்கொண்டோம். "நீங்கள் அழிக்க நினைப்பதை காப்பாற்றத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்" என்று நாடாளுமன்றத்தில் முழங்கினோம்.

    அண்ணாமலை அவர்களே,மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பேற்ற பொழுது அவரிடம் கொடுக்கப்பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச்சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ளதைப்போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல.

    நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சியின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்துவதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.

    பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும்விடப் பெரியவர் அவைத்தலைவர்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது வேறு. பண்பாட்டின் பெயரைச்சொல்லி சட்ட விதிகளை நிராகரிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் கையிலெடுத்தால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?

    எல்லாவற்றையும்விட உயர்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கியுள்ள ஜனநாயக விதிகளும்தான் என்பதை ஏற்றுக்கொளாதவர்கள் சாணக்கியனின் மூலமும், செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகிறார்கள்.

    அந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயக்த்திற்கு உண்டு. அதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.

    ஆனால் இந்த 18 ஆவது நாடாளுமன்றத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்சனை வந்து நிற்கிறது. தெய்வப்பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக்கால அடையாளத்தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக்கிறார்.

    ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத்தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.

    நீங்கள் எனது எழுத்தின் வாசகர் என்று கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. எனது இரண்டு நாவல்களிலும் காலம்தான் கதாநாயகன்.

    "அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்துகொண்டு நான்தான் எல்லாமுமாக இருக்கிறேன் என உலகுக்கு அறிவித்துக்கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது".

    வரலாற்றுச் சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தை பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது.
    • அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள்.

    பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    'செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது' 'செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்' எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை.

    இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். ஆக பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரத பிரதமர் அதை நிறுவினார்.

    கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

    சமாஜ்வாதி காட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம். ஆனால் நம் தமிழகத்தைச் சார்தவர்கள் எதிர்க்கலாமா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் இன்று கிழித்தெரியப்பட்டிருக்கிறது.

    தமிழும் தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல!.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.
    • 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று.

    செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

    இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

    'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    • பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.
    • செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை வைக்க ஆரம்பத்தில் இருந்தே எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், இன்று கூடிய முதல் மாநிலங்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பாராளுமன்றத்தில் செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர்.

    பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தியது. செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதியின் ஆலோசனை நல்லது. சமாஜ்வாதி எம்.பி. கூறியது நல்ல ஆலோசனையே என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.

    இது ஜனநாயக நாடு, செங்கோலை அகற்ற வேண்டும். செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மிசா பார்தி கூறி உள்ளார்.

    பாராளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு அதிகாரம் செல்வதின் அடையாளம் தான் செங்கோல் என்று பாராளுமன்றத்தில் திரவுபதி முர்மு கூறினார்.

    • சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.
    • பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன்பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரி கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,

    * சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.

    * பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோல்.

    * செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பாஜக ஒரு இடங்களில் வெல்லவில்லை
    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

    மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர்.

    கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளது.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பாஜக ஒரு இடங்களில் வெல்லவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெறாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள்.
    • எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர்.

    ஊட்டி:

    புதிய பாராளுமன்றம் திறந்தபோது அங்கு தமிழகத்தின் செங்கோலை நிறுவியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

    இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய பாராளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.


    நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்புப் பெருமைக்குரிய நாள்.

    தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    இதேபோல சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அவரது படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-


    பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்ரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்.

    எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும் என கூறி உள்ளார்.

    • வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.
    • செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

    இங்கே வரவேற்கும் போதும் சிலர் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்தீர்கள். அதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. 'சின்னவர்' என்று கூப்பிடுகிறீர்கள். வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.

    அதற்காக சின்னவர், இளைய கலைஞர், வாலிபப் பெரியார் என்றெல்லாம் அழைப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். சட்ட மன்ற உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர்… என்ற இந்தப் பொறுப்பெல்லாம் இன்றைக்கு வரும் நாளைக்குப் போய்விடும். ஆனால் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதுதான் நிரந்தரம். இப்போது அமைச்சராக இருப்பதால் கொஞ்சம் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருக்க முயற்சிக்கிறேன். தயவுசெய்து பட்டப்பெயர் வைத்து அழைப்பதை தவிர்த்து விடுங்கள்.

    தேர்தல் பணியை நம்முடைய தலைவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். மூன்று குழுக்கள் அமைத்தார். அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் நான் இருக்கிறேன்.

    ஒவ்வொரு தொகுதியாகச் சந்தித்து அதில் இருக்கக் கூடிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் வரச் சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகளைச் சந்திக்கிறோம். தொகுதியில் இருக்கக் கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள், மனக் கசப்புகள், தொகுதிப் பிரச்சினைகள், வெற்றி வாய்ப்புகள் என்று இப்படி தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்.

    இன்றோடு 36 தொகுதி முடித்துவிட்டோம். மீதியுள்ள 4 தொகுதிகளையும் முடித்து விடுவோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால் நிச்சயம் 40க்கு 40ஐ நாம்தான் வெற்றி பெற போகிறோம்.

    நம்முடைய தலைவர் யாரை முடிவு செய்கிறாரோ, தி.மு.க. யாரை முடிவு செய்கிறதோ அவர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

    சமீபத்தில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்தார்கள். இந்த நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், கணவரை இழந்தவர். அந்தக் காரணத்திற்காக அவரை அழைக்கவில்லை. ஆனால் செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    10 நாட்களுக்கு முன்பு இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. எந்த மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ எதிரான கட்சியல்ல. எங்களுக்கு ''ஒன்றே குலம், ஒருவனே தேவன்''. நீங்கள் கோவில் கட்டினால் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக வழிபடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் உதய சூரியன் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    இந்த ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சாமியார்கள் யாருமே செல்லவில்லை. மோடி வருகிறார், அதனால் நாங்கள் யாரும் வரமாட்டோம் என்று சங்க ராச்சாரியார்கள் சொல்லிவிட்டார்கள். இதைத்தான் 4 மாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன். அனைவரும் சமம் என்று அப்போது நான் பிரதமருக்கும் சேர்த்துப் பேசியிருக்கிறேன்.

     

    அதற்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, ''மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் கலைஞரின் பேரன். சொன்னால் சொன்னது தான்!'' என்று சொல்லிவிட்டேன். என் மீது தவறு இல்லை, பிறப்பால் அனைவரும் சமம். இங்கு ஜாதி, மத பாகுபாட்டுக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இங்கே ஒரு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது. ஓ.பி.எஸ்.தான் முதலில் கைதாவார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் கைதாவார் என்று அதேநாள் மாலையில் ஓ.பி.எஸ். சொல்கிறார். இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கைதாகப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். கைதாகி சிறைக்குப் போகும்போதாவது தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டாம், கால் வலி வரும் என்ற கோரிக்கையை மட்டும் நான் அவர்களுக்கு வைக்கிறேன்.

    2021-ல் அடிமைகளை விரட்டி வீட்டுக்கு அனுப்பினோம். இப்போது இந்தத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நமக்கு இருக்கிற ஒரே குறிக்கோள் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி. நாற்பதும் நமதே, நாடாளுமன்றமும் நமதே.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்துவைத்தார்.
    • மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்து வைத்தார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது. நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.


    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தன.

     


    • தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது.
    • பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது. கோவில் என்பது தாயின் கருவறை போன்றது. அந்த கோவில் கருவறையில் பூஜை செய்வதற்கு தீட்சிதர்கள் தகுதி உடையவர்கள். பூஜை காலங்களில் அவர்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

    தமிழகத்தில் 6-ல் 4 பாகம் நிலங்கள் ஆதீனத்திற்கும், திருக்கோவில்களுக்கும் உள்ள நிலங்கள் ஆகும். அவற்றிற்கு ஆர்.டி.ஆர். என்கிற உரிமை உண்டு. அந்த உரிமையின் பேரில் நஞ்சை, புஞ்சை நிலங்கள், அடிமனை வாடகை, தென்னை மர குத்தகை போன்ற பல வகையான நிலங்கள் உண்டு. அவற்றில் 90 சதவீதம் வருவாய் வரக்கூடிய ரீதியில் தான் உள்ளது.

    பெரும்பாலான கோவில்கள் அதற்குரிய இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சில கோவில்கள் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ளன. மேலும் பயன்படாத இடத்தில் கட்டப்படும் போது அதற்கு கோர்ட் அனுமதியுடன் தான் அரசு அவற்றிற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இன்று நடைபெற்ற மாநாட்டில் கோவில்களை சிறந்த முறையில் வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும். இந்து கோவில்களான சிவம், வைணவம், சைவம், சமணம், பவுத்தம் போன்ற கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10 வரையிலும் கட்டணம் வாங்கப்பட்டு வருகிறது. அவற்றை குறைத்து கட்டணம் வசூலிக்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    1947-ம் ஆண்டு சுதந்திரம் பெறப்படும் போது யாரிடம் இருந்து சுதந்திரம் பெறுவது என்ற கருத்தானது வெளிப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சோழவள நாட்டிலே திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக பெறலாம் என்கிற யோசனையை ராஜகோபாலாச்சாரியார் முன்வைக்கிறார். 70 ஆண்டுகளாக நேருவின் அலகாபாத் இல்லத்தில் இருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வைத்து தமிழ் ஆதீனங்களுக்கும், தமிழ் சைவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    மத்தியில் கூட்டாட்சி தத்துவம், மாநிலத்தில் சுயாட்சி தத்துவம் தான் நமது கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன் பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் தனி விமானத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினர்.

    ஆனால், 1947-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்றும் பல்வேறு தரப்பினர் சர்ச்சைகள் எழுப்பினர்.

    இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையிலும் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளிச்சுவற்றில் கல்வெட்டாக பொறித்து அதனை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தனது ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதியான நேற்று அந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.
    • ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    குத்தாலம்:

    இந்திய சுதந்திரத்தின் போது, ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்சிப் பரிமாற்றத்தைக் குறிப்பிடும் வகையில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் நிறுவப்பட்டது.

    இதுகுறித்து திருவாவடு துறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பல வாண தேசிய பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது:-

    1947-ம் ஆண்டு நிகழ்ந்த செங்கோலை அளிக்கும் நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்து பெருமையடைகிறோம். திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.

    பின்னர், அந்த செங்கோல் திரும்பப் பெறப்பட்டு, கங்கை நீரால் மந்திரம் ஏற்றப்பட்டது. நிறைவாக, பண்டித ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது.

    அண்மையில் பதிப்பிக்கப் பெற்ற திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில், 'செங்கோல் சிறப்பு' என்னும் அத்தியாயத்தில் இதுகுறித்து விவரமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும், அப்போதைய ஆதீனர்த்தர் 20-வது மகா சன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்த மாசிலாமணிப் பிள்ளை (96), இந்த நிகழ்வு குறித்து நேரடி சாட்சியாக உள்ளார்.

    மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுத்து வாங்கிய பணியை ஆதீன குழுவினர் செவ்வனே செய்தார்கள் என்பதையும், ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கியதையும், மூதறிஞர் ராஜாஜி ஏற்பாட்டில் இது நடைபெற்றதையும், மதராஸ் ஆட்சியர் ஆதீனத்துக்கு வருகை புரிந்ததையும், செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றதையும் மாசிலாமணிப்பிள்ளை நினைவு கூர்கிறார்.

    ஆதீன குழுவினர் புகைப்படக் கருவியோடு செல்லாத காரணத்தால், மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக, மங்கல நாதமும், திருமுறைத் தமிழும் ஒலிக்க, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஆதீன குழுவினர் முறையாக நிறைவேற்றினர்.

    இவையெல்லாம் பல இடங்களில், ஊடகங்கள் உள்பட பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்க வரலாற்றைத் திரித்து, ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்து உள்ளார்.

    ×