search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலப்பணி"

    • ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன்கோவில் முருகப்பெருமானின் 5-வது படைவீடாக உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களிலும், கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இதனால் திருத்தணி நகரின் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருத்தணி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம் 3.24 கி.மீ. தூரத்துக்கு ரூ.46 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் 2021-ம் ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலமும், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட பாலமும் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இதில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே கட்டப்படும் பாலப்பணியை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணி இன்னும் முடியவில்லை. ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் பணி முடிந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    ரெயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தை இணைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீண்டநேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறையினர் மேற்கொள்ளும் பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருத்தணியில் புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர். தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. இந்தப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் தவிப்பதால் நடவடிக்கை
    • ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதியாகிறது

    கோவை, 

    கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    கோவையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மாநகரில் நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, திருச்சி சாலை ராமநாதபுரத்தில் ரூ.250 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி சந்திப்பில் அவ்வப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் 1.14 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது ரூ.46.61 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும். அக்டோபர் மாதம் மேம்பாலப் பணிகளைத் தொடங்கிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    • செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
    • ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்து வருகின்றன.

    இதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் நீடித்து வருகிறது.

    சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்குள் வந்து செல்கின்றன.

    காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக மோசமாக இருக்கும்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெருங்களத்தூரில் கட்டப் பட்டு உள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து பெரும்பாலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் வாகன போக்குவரத்து எளிதாகும் வகையில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்து உள்ளன. ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    இதில் 6 வழித்தடங்கள் அமைய உள்ளன. பெருங்களத்தூரில் மேம்பாலம் தொடங்கி பரனூர் சுங்கசாவடியை தாண்டி இந்த பாலம் முடிவடையும். இதற்கான பணியை அடுத்த சில மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளது.

    இந்த மேம்பாலப் பணி முடிவடையும் போது தாம்பரம்-செங்கல்பட்டு இருவழித்தடத்திலும் குறைந்த நேரத்தில் விரைவாக வாகனங்களில் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயண நேரம் குறையும்.

    மேம்பாலத்தில் கிளாம் பாக்கம் பஸ் நிலையம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி, மகேந்திரா சிட்டி ஆகிய இடங்களில் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் படிகள் அமைய இருக்கிறது. வாகனங்கள் சுமார் 100 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் பாலம் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் செங்கல்பட்டு- திண்டிவனம், ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கப் பணியும் நடைபெற உள்ளது. 67.1 கி.மீட்டர் நீளமுள்ள செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை தற்போது 4 வழிச் சாலையாக உள்ளது. இதில் இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு இந்த சாலையை மேம்படுத்த தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது:- ஜி.எஸ்.டி. சாலையில் 94 கி.மீட்டர் தாம்பரம்- திண்டிவனம் பாதைக்கான விரிவாக்க திட்ட அறிக்கை நிறை வடைந்து உள்ளது. இதில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. இந்த வழித்தடத்துக்கான கட்டுமான பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்றார்.

    தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமையும்போது லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சுமார் 50 சதவீத வாகனங்கள் உயர்த்தப்பட்ட மேம்பால சாலையில் செல்லும் வகையில் மாறும். இதனால் வாகன நெரிசலும், விபத்துக்களும் குறையும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 12 இடங்கள் விபத்து அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. புதிய பாலத்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல் திண்டிவனம் வரையிலான வழித்தடத்தில் 20 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, சாரம் கிராமம் பகுதிகளில் 6 வழிச்சாலையுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் திட்டம் முன் மொழியப்பட்டு இருக்கிறது. மேல்மருவத்தூர், மற்றும் அச்சரப்பாக்கத்தில் தற்போது உள்ள சுரங்கப்பாதைக்கு மேல் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதேபோல் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர் வரை 23.2 கி.மீட்டர், சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை 10.4 கி.மீட்டர், திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திருச்சி- துவாக்குடி 14 கி.மீட்டருக்கு உயர்த்தப் பட்ட மேம்பாலம் அமைக்கவும் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முன் மொழிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலப்பணி மீண்டும் தொடங்குகிறது.
    • 1 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை செல்லும் வகையில், 2018-ம் ஆண்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

    இந்த பணிகள் 40 சதவீதம் முடிந்த நிலையில், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அகற்றினால் பாலம் முழுமையாக அமையும் நிலை ஏற்பட்டது. இதனால் மேம்பாலப் பணிகளுக்குத் தடை கோரி கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளாக பாலப் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில், ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் பாலப்பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டாா். தடை கோரி வழக்குத் தொடா்ந்தவா்களை அழைத்து கோட்டாட்சியா் சேக்மன்சூா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து நீதிமன்றத்துக்கு சென்றவா்கள், வழக்கை திரும்பப் பெற சம்மதித்தனர்,

    இது குறித்து த.மு.மு.க, மாநில செயலாளர் சலிமுல்லாகான் கூறியதாவது:-

    தற்போது மேம்பாலம் கட்டும் பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்தப் பகுதி அரசு நிர்ணயித்த தொகை குறைவாக இருந்தது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த வாரம் எனது நண்பர் கீழக்கரை ஹசன் சென்னையில் இருந்து ராமநாதபுரம் ரெயிலில் வந்தபோது பாலம் கட்ட தாமதமாவதால் மக்கள் படும் சிரமத்தை எடுத்துக் கூறி வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெற்று கைெயழுத்திட்டோம்.

    இடத்தின் மதிப்புக்கு பணம் கிடைக்கவில்லை.மக்களின் விலை மதிப்பற்ற மகிழ்ச்சியை உயர்வாக கருதுகிறேன். இன்னும் 1 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×