search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் கூட்டம்"

    • நேற்று இரவு வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • நள்ளிரவு 2 மணிவரை பயணிகள் காத்திருந்து பயணம் செய்தனர்.

    வண்டலூர்:

    சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) 1,618 பஸ்களில் 84 ஆயிரத்து 936 பயணிகளும் நேற்று (சனிக்கிழமை) 1,753 பஸ்களில் 91 ஆயிரத்து 156 பயணிகள் என மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து உள்ளனர்.

    குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு 2 மணிவரை பயணிகள் காத்திருந்து பயணம் செய்தனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப இன்று அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
    • பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக அன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் என 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக இன்று மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பஸ்களும், பாரிமுனையில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பஸ்களும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பஸ்களும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பஸ்களும், பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பஸ்களும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதையடுத்து அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர்.

    மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மறு வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    • கடைவீதிகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துவிட்டு நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு கிளம்பினர்
    • பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருப்பூரில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. அவர்கள் கடைவீதிகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துவிட்டு நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். இதனால் திருப்பூர் பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கும், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கூட்ட ெநரிசலை கட்டுப்படுத்த பயணிகள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பஸ் நிலையங்களில் பஸ்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டது.

    அதுபோல் பஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் நிலையம் அருகே சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.

    அதுபோல் வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வெடி உள்ளிட்ட பொருட்களை பயணிகள் பயணத்தின் போது எடுத்து செல்கிறார்களா என்பதை போலீசார் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். இன்று காலை முதலும் திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரண்டு சென்றனர்.

    திருப்பூரில் இருந்து சென்னை மற்றும் தென் மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணம் செய்தனர். அதேபோல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் குடும்பமாக தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட செல்வதால் திருப்பூர் மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • போனஸ் வாங்கிய தொழிலாளர்கள் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
    • திருப்பூர் கடை வீதிகளில் பொதுமக்கள், பனியன் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகைையயொட்டி பனியன் தொழில் நகரான திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு உள்ளது. போனஸ் வாங்கிய தொழிலாளர்கள் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக நேற்றிரவு முதல் திருப்பூரில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சில தொழிலாளர்கள் இன்று இரவு முதல் செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை திருப்பூரில் உள்ள ஜவுளிக்கடைகள், ஸ்வீட் கடைகளில் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூர் கடை வீதிகளில் பொதுமக்கள், பனியன் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குமரன் சாலையில் முக்கிய ஜவுளிக்கடைகள், ஜூவல்லரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக குமரன் சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறியது.

    கடைகளுக்கு வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேப்போல் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு மற்றும் இன்று காலை பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏறினர்.

    கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல ரோந்துப்பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    • 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.
    • பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதால் நெரிசல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடிகிறது. முதல் கட்ட மெட்ரோ ரெயில்கள் 2 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

    தற்போது சராசரியாக தினமும் 2½ லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    54 கி.மீ. தூரமுள்ள முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவையில் 4 பெட்டிகளை கொண்ட 54 ரெயில்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 48 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

    நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. 2028-ம் ஆண்டில் பயணிகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.

    கூடுதலாக ரெயில்கள் வாங்கி சேவையை அதிக ரித்தால் தான் நெரிசலை குறைக்க முடியும் என ஆய்வு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் 6 கார்களை கொண்ட 28 ரெயில்களை ரூ.2820 மதிப்பீட்டில் வாங்க திட்ட மிடப்பட்டு உள்ளது. தற்போது 6 பெட்டிகளை கொண்ட 5 ரெயில்களை வாங்க முடிவு செய்துள்ளது.

    இதற்காக ரூ.300 கோடி கடன் வாங்குகிறது. இதற்கான ஆவண பணிகள் தொடங்கி உள்ளன. கடன் வாங்கக்கூடிய டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளது. 30 ரெயில் பெட்டிகளை வாங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கையினை மேற் கொண்டு வருகிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், தற்போது உள்ள 4 பெட்டிகள் கொண்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க முடியாது. ஏன் என்றால் இந்த செயல்முறை தினசரி செயல்பாடுகளை பாதிக்கும். பல தரப்பு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

    • பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால் அவதி
    • படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்

    வேலூர்:

    தமிழகத்தில் பள்ளிகளில் 5 நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு செல்ல மூட்டை முடிச்சுகளுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்தனர்.

    பின்னர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். இதனால், வேலூர் புதிய பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. குறிப்பாக, சென்னை, சேலம், பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர்.

    பஸ்சில் இடம் கிடைக்காததால் இரவு முழுவதும் பலர் புதிய பஸ் நிலையத்திலேயே காத்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வேலூர் புதிய பஸ் நிலைய பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. அதேபோல் இன்று காலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    சென்னை பெங்களூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் பஸ்சில் இருக்கைகள் கிடைக்காததால், படிக்கட்டுகள் மற்றும் இடைப்பட்ட இடங்களில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    • தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது.
    • தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர்.

    சேலம்:

    தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறையை யொட்டி வெளியூர்களில் தங்கி பணி செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், உறவினர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    தற்போது பொங்கல் விடுமுறை முடிந்தது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று மாலை முதல் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையத்தில் பஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மிக அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர். நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

    இதேபோல் இன்று அதிகாலை வெளியூரில்களில் இருந்து வந்த பயணிகளின் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. விடுமுறைக்கு சென்றவர்கள் பணிக்கு திரும்பியதால், புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் விற்பனை களைக்கட்டியது. 

    • சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • .போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தருமபுரி,

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரிமண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தருமபுரியில் இருந்து சென்னை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சேலத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இதுபோல் பாலக்கோடு, அரூா், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, கிருஷ்ணகிாி, ஓசூா் பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தருமபுரி மண்டலத்தில் இருந்து மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல அதிகாாிகள் தொிவித்தனா்.

    இந்நிலையில் வெளியூர் செல்வதற்காக தருமபுரி பஸ் நிலையத்தில் இரவிலிருந்தே பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பல பஸ்களில் நின்றவாறே கூட பயணித்து சென்றனர்.இதனால் தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பும் பயணிகள் கூட்டத்தால் திருச்சி பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன
    • இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார்

    திருச்சி:

    தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமும், இடையூறும், சிக்கலும் இன்றி கொண்டாடிடும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செம்மையாக செய்து தரப்பட்டு இருந்தன.

    இதில் வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலை நிமித்தம் தங்கியிருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

    கூடுதல் கட்டணத்தை மையமாக கொண்டு செயல்பட்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு கடிவாளம் போடும் வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு பயணிகளுக்கு நிம்மதியை அளித்தார்.

    கடந்த 21-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களும், அடுத்ததாக தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊர் திரும்புவர்களின் வசதிக்காக மேலும் 3 நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களில் இருந்து தங்களது பணியிட ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அங்கு டிக்கெட் வழங்கும் இடம், சென்னை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    பயணிகளிடம் பஸ்கள் இயக்கப்படுவது மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் வந்ததை அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்களிடம் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து 3 நாட்கள் வரும் 30-ந்தேதி பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இரவு நேரம் என்றும் பாராமல் 11.30 மணி வரை ஆய்வு நடத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பயணிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகமாக இருந்தபோதிலும் சிரமமின்றி பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணித்தனர்.

    இதேபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை செல்லும் அனைத்து ரெயில்களிலும் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர்.

    மொத்தத்தில் தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் பயணிகள் கூட்டத்தால் சற்றே திணறியது.

    • ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்ல நேரடி ரெயில் வசதி இல்லை. புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல 2 ரெயில்கள் மட்டுமே தினசரி சேவையாக உள்ளது.

    இந்த 2 ரெயில்களை நம்பி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்ட பயணிகள் உள்ளனர். இதன் காரணமாக இந்த ரெயிலில் தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பயணிகள் ஆபத்தான நிலையில் சரக்கு பெட்டிகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.

    ரெயில் நிலையங்கள் இல்லாத ஊர்களான இளையான்குடி, கமுதி, சாயல்குடி, பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் சென்னை செல்ல மானாமதுரை ரெயில் நிலையம் வந்து சென்னை-திருச்சி செல்லும் ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணம் செய்கின்றனர்.

    சென்னை-ராமேசுவரம் மார்க்கத்தில் பல ஆண்டுகளாக கூடுதல் ரெயில்களோ, பகல் நேரசிறப்பு ரெயில்களோ இதுவரை இயக்கப்படவில்லை. பயணிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் சிவகங்கை மாவட்ட பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை சென்னை மார்க்கத்தில் இயக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×