search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்கள் போராட்டம்"

    • 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.
    • குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அங்கன்வாடி முதல் எட்டாம் வகுப்புகள் வரை சுமார் 220- மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சிதிலமடைந்து விட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்டிடத்தை இடித்து, அந்த இடத்தில் தற்போது ஒரு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளிக்கு 3 -வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் லேப் கட்டிடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த 2 கட்டிடம் கட்டுவதற்கு தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.

    ஆனால் ஊருக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிய கட்டிடங்களைக் கட்டினால் மாணவர்களுக்கு போதிய இடவசதி கிடைப்பதோடு மட்டும் அல்லாமல விளையா ட்டு மைதானமும் அமைக்கலாம். பள்ளி, தற்போது ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ளதால் கிழக்கு பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் ஆபத்தான சூழ்நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், புதிய இடத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஆகியோர்களுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மீண்டும் பள்ளி வளாகத்தில் உள் பகுதியில் கட்டிடம் கட்ட வேலைகள் ஆரம்பித்ததால் ஆத்திரமடைந்து வயலப்பாடியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் கண்ணதாசன், ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மாணவர்களை அழைத்தபோது பெற்றோர்கள் அனுப்ப மறுத்துள்ளனர். பள்ளி திறந்து 2 மணி நேரம் ஆகியும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டாச்சியர் கோவிந்தம்மாள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் இன்னும் சில நாட்களில் வேறு இடத்தை தேர்வு செய்து அங்கு புதிய கட்டிடம் கட்டி இந்த பள்ளியை மாற்றி தருவதாக உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

    • பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட பூசாரிப்பட்டி, குருந்த ம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் குருந்தம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூசாரி ப்பட்டி பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து மாண வர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கையில்,

    தங்கள் குழந்தைகள் குளிக்காமலும், சரியான உடைகளை உடுத்தி வராமலும் பள்ளிக்கு வருவதால் அவர்கள் மீது துர்நாற்றம் வீசுவதாக ஆசிரியர்கள் கேலி, கிண்டல் பேசி உள்ளனர். இதனால் மற்ற மாணவர்களிடமும் அவர்கள் சேர்ந்து விளையா டவோ, சாப்பிடவோ முடியாமல் தனித்து விடப்பட்டுள்ளனர்.

    கிராமப்புரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நாகரீகமான உடை அணிந்து எப்படி வருவார்கள். சாதாரண உடையில் தான் பள்ளிக்கு வரமுடியும். ஆனால் அவர்களை ஆசிரியர்களே கேலி செய்தால் மாணவர்கள் எவ்வாறு நடத்துவார்கள்.

    எனவே சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனையடுத்து புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்களிடம் விசா ரணை நடத்த அதிகாரி களுக்கு பரிந்துரைக்கப்டும் என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களை பள்ளிக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.

    இதனையடுத்து கிராம மக்கள் குழந்தைகளை பள்ளி அனுப்ப ஒத்து க்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதம்
    • காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக புகார்

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று, பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று கொணவட்டம் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு ஏன் மாற்றுச்சான்றிதழ் வழங்கினீர்கள்? என கேட்டு தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கொணவட்டம் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அணைக்கட்டு அருகே உள்ள இலவம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த, தலைமை ஆசிரியர் உள்பட 14 பேர் பணியாற்றுகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரனை கடந்த ஏப்ரல் மாதம் பேரணாம்பட்டு அருகே உள்ள அரவட்லாவுக்கு பணியிடம் மாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    வேறு பள்ளிக்கு செல்ல மறுத்த கஜேந்திரன், இளவம்பாடியிலேயே பள்ளி தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் தற்போது மருத்துவ விடுப்பு எடுத்து, பள்ளிக்கு வருவதையும் தவிர்த்து விட்டார்.

    தலைமை ஆசிரியர் இல்லாததால் மாணவர் சேர்க்கை மற்றும் அத்தியாவசிய பணிகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து, அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். தங்களது பிள்ளைகளின் மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பூங்குழலியிடம் வழங்கினார். மேலும் மாற்றுச் சான்றிதழ் தரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சமரசம் பேசினார்.

    உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நெடிமோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடி மோழியனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள நீலதொட்டி அரசு பள்ளிக்குச் சென்று பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன், கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நெடுமொழியனூர் கிராமத்தில் அரசு பள்ளி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இந்த கல்வியாண்டில் நெடிமோழியனூரில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. இக்கிராம மாணவர்கள் மீண்டும் நீலதொட்டி அரசு பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், நெடிமோழியனூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் வந்து நெடி மோழியனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அதுவரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், தங்கள் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டுமென கிராம மக்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அடிப்படை வசதிகள் இல்லை என்று புகார் கூறினர்.
    • தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்துள்ள இலக்கியம்பட்டியில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு சுமார் 385 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இன்று காலை பள்ளி முன்பு பள்ளி மேலாண்மை குழுவினர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாணவிகளுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பராமரிப்பின்றி உள்ளது. கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது.

    தலைமை ஆசிரியை உள்பட 19 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் 7 ஆசிரியர்கள் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் உள்ளதால் கல்வி கற்பித்தல் பாதிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து பேசினர்.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்று கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    ×