search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்பே"

    • ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
    • மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மனோஜ்(வயது52). இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தது.

    ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். அதன்படி அந்த ரிசார்ட் தகுதி சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தது. தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட மருத்துவ அதிகாரியான டாக்டர் மனோஜ் ரூ.1லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த ரிசார்ட்டின் மேலாளர், மனோஜை சந்தித்து பேசி ரூ.75ஆயிரம் தருவதாக கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவ அதிகாரி மனோஜ், அந்த பணத்தை தனது தனிப்பட்ட டிரைவர் ராகுல்ராஜிக்கு 'கூகுள்-பே' மூலமாக அனுப்புமாறு கூறியிருக்கிறார்.

    அதன்படி அனுப்புவதாக கூறிய ரிசார்ட் மேலாளர், அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கூறியதன்பேரில், குறிப்பிட்ட நேரத்துக்கு மருத்துவ அதிகாரியின் டிரைவரின் செல்போன் எண்ணுக்கு 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளர் பணத்தை அனுப்பினார்.

    அப்போது மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ஷாஜூ ஜோஸ், இன்ஸ்பெக்டர்கள் ஷின்டே, குரியன், பிலிப் சாம் உள்ளிட்டோர், அலுவலகத்துக்குள் அதிரடியாகசென்று மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களின் அலுவலகத்ததுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாவட்ட மருத்துவ அதிகாரி மனோஜ், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறையால் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். அதற்கு கேரள நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.

    இதையடுத்து மருத்துவ அதிகாரி தனது அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தனது டிரைவரின் 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளரிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.
    • கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.

    கூரியர் தபாலில் உங்கள் பெயரில் போதை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டி ஐ.டி. ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பது தொடர்ந்து வருகிறது.

    அதே நேரத்தில் உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகப் போகிறது, மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் என்பது போன்ற பொய்களை அள்ளி வீசியும் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் பொது மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சுருட்டுகிறார்கள்.

    இந்த நிலையில் கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் வியாபாரம் மூலமாகவும் உங்கள் வங்கி கணக்கில் தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள் எனக் கூறி கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஆன்லைனில் அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை சுருட்டி விடுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, `ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விட வேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் உங்களை பயன்படுத்தி நிச்சயம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

    கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வாரந்தோறும் ரூ.1500 கூடுதலாக பணம் தரவேண்டும் என்று சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
    • ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாத சாராய வியாபாரி தான் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு லஞ்சமாக வாரந்தோறும் அனுப்பிய கூகுள் பே விபரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    மதுராந்தகம்:

    செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் மோகனசுந்தரம், பாபு. இவர்கள் வெடால் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரியிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபான வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து லஞ்சமாக பணம் பெற்றனர்.

    இதற்காக வாரந்தோறும் இருவருக்கும் தலா ரூ.1000 சாராய வியாபாரி கொடுத்ததாக தெரிகிறது. இதனை அவர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன சுந்தரம் மற்றும் பாபுவுக்கு கூகுள் பே மூலம் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் வாரந்தோறும் ரூ.1500 கூடுதலாக பணம் தரவேண்டும் என்று சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாத சாராய வியாபாரி தான் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு லஞ்சமாக வாரந்தோறும் அனுப்பிய கூகுள் பே விபரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் வாங்கிய லஞ்ச பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியான சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சாராய வியாபாரியிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகனசுந்தரம், பாபு ஆகிய இருவரும் மாவட்ட ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சாராய வியாபாரியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாமலும், சாராய வியாபாரம் செய்ய முடியாமலும் வியாபாரி தவித்தார்.
    • தொடர்ந்து பணம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

    மதுராந்தகம்:

    செய்யூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் இது நிற்கவில்லை.

    இதனால் செய்யூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரிடம் செய்யூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் 2 பேர் கூகுள் பே மூலம் லஞ்சமாக எவ்வளவு பணம் பெற்றனர் என்ற பட்டியல் வெளியாகி சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    அந்த சாராய வியாபாரியிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் வாரம் ரூ.1000 லஞ்சமாக கூகுள் பே மூலம் பெற்று இருக்கிறார்கள். இதன் பின்னர் வாரத்துக்கு ரூ.1,500 தர வேண்டும் என்று அந்த சாராய வியாபாரிக்கு சப்-இன்ஸ்பெக்டர் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

    ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்க முடியாமலும், சாராய வியாபாரம் செய்ய முடியாமலும் அந்த வியாபாரி தவித்தார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

    இதைத் தொடர்ந்து அந்த சாராய வியாபாரி இதுவரை சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கும் எந்தந்த தேதிகளில், எவ்வளவு பணம் லஞ்சமாக கூகுள் பே மூலம் அனுப்பினார் என்ற விவரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    இந்த லஞ்ச பட்டியல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கிக் கொண்டு சாராய வியாபாரத்தை ஊக்குவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது அந்த சாராய வியாபாரி தலைமறைவாக உள்ளார். இந்த லஞ்ச பட்டியல், சப்-இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சாராய வியாபாரத்துக்கு லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    ×