search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்வாருதல்"

    • பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
    • இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் முறையான பராமரிப்பின்றி கடந்த 30 ஆண்டுகளாக ஏரி மற்றும் பாசன வாய்க்கால் தூர்ந்து போய் காணப்பட்டது.

    மேலும் பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் பருவமழை காலங்களில் தொடர் கனமழை பெய்தால் கூட பாசன வாய்க்கால் வழியாக ஏரிக்கு முறையாக தண்ணீர் வரத்து இன்றி முழு கொள்ளளவை எட்டாமலேயே இருந்தது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகமும் பாசன வாய்க்காலை தூர்வார போதிய நிதி இல்லை என கைவிரித்து விட்டதாக தெரிகிறது. இதனால் கிராம மக்கள், தூர்ந்து போன பாசன வாய்க்காலை மீட்டெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஆதிவராகநல்லூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் ரூ.8 லட்சம் நிதி திரட்டினர்.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆதிவராகநல்லூர் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூர்வார தொடங்கினர். இதில் தற்போது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்காலை தூர்வாரி, இருகரைகளிலும் மண் கொட்டி பலப்படுத்தி உள்ளனர். மேலும் இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது. கிராம மக்களே ஒன்று சேர்ந்து நிதிதிரட்டி பாசன வாய்க்காலை தூர்வாரியதை அறிந்த சுற்று வட்டார பகுதி மக்கள் ஆதிவராகநல்லூர் கிராம மக்களை பாராட்டினர்.

    • வாணி ஊரணியை பொதுமக்கள் தூர்வாரினர்.
    • தூர்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த வாணி கிராமத்தில் மன்னர் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாணி ஊரணி பெரிய பரப்பளவை கொண்டதால் அதனை தூர்வார அதிகளவில் நிதி செலவினம் ஆகும். இதனால் தூர்வாறும் பணி தாமதமானது.

    இதுகுறித்து தற்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் சக்கரக்கோட்டை ஊராட்சி மூலம் ரூ.2 லட்சம் நிதி வழங்க பரிந்துரைத்தார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் செ.யாழினி புஷ்பவள்ளி நிதியை அனைத்து சமுதாய மக்களிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து வாணி கிராம ஜமாத்தார்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றி ணைந்து வாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 20 லட்சம் வரை திரட்டினர்.

    அதனை தொடர்ந்து ஊரணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொதுமக்களின் சீரிய முயற்சியால் தூர்வா ரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வை யிட்டு பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து மழை வேண்டி அனைத்து சமுதாய மக்களால் பிரார்த் தனை செய்யப்பட்டது.

    • விளைநிலங்களில் அதிகபட்சமாக தேங்கும் மழை நீரை எளிதில் வெளியேற்றி விடலாம்.
    • கோடை காலத்திலேயே இந்த 2 வாய்க்கால்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கோரைபள்ளம் மற்றும் கீழேரி ஆகிய 2 வாய்க்கால்கள் அப்பகுதியில் முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகின்றது.

    இந்த 2 வாய்க்கால்கள் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வடிகால் வசதியையும் பெறுகின்றன

    இந்த இரு வாய்க்கால்களும் அப்பகுதியில் உள்ள பிரதான கெண்டைமடை வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களாக பிரிந்து மாதிரவேளூருக்கு அருகில் கடந்த 1904-ம் ஆண்டு தெற்கு ராஜன் வாய்க்காலுக்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.

    இந்த வாய்க்கால்களை தூர்வாருவதன் மூலம் மழைக்காலத்தில் அப்பகுதியில் உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் அதிகபட்சமாக தேங்கும் மழை நீரை எளிதில் வெளியேற்றி விடலாம்.

    மேலும் அப்பகுதியில் நிலங்களுக்கு சீரான பாசன வசதியும் கிடைக்கும் எனவே கோடை காலத்திலேயே இந்த 2 வாய்க்கால்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    கோரிக்கையின் பேரில் மயிலாடுதுறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம் உத்தரவின் பேரிலும், சீர்காழி உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரிலும் நேற்று கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன், பாசன ஆய்வாளர்கள் சீனிவாசன், முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லின் எந்திரம் மூலம் கீழேரி மற்றும் கோரைபள்ளம் ஆகிய இரு பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை தொடங்கினர்.

    மேலும் இரண்டு தினங்களில் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள 2 வாய்க்கால்களும் முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது கோடைகாலத்திலேயே விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை
    • பறக்கின்கால் கால்வாய் பாறைக்காய் மடை, கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் மற்றும் வாகனங்கள் அதிகமாக சென்று வரும் முக்கிய பகுதியான பறக்கின்கால் கால்வாய் பாறைக்காய் மடை, கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் உள்ளது. இந்த கழிவுநீர் ஓடையானது பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஓடை இருப்பது கூட தெரியாத அளவிற்கு செடி, மரங்கள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து ஓடையே தெரியாத அளவுகாணப்படுகிறது.

    இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பலமுறை கோரிக்கைகள் வைத்த பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வரும் பகுதியில் உள்ள இந்த கழிவு நீர் ஓடையால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருவதால் இன்றுஎம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ நேரடியாக அந்த இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து உடனடியாக கழிவுநீர் ஓடையை தூர்வாரி சுத்தம் செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

    • சுரங்கப்பாதைகளில் மழைநீர் சேகரிக்கப்படும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும்.
    • மோட்டார் பம்புகளை இயக்கி சரிபார்த்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 2 ஆயிரத்து 71 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு பகுதியிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன் அந்த மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகளின்போது வண்டல் மண்ணை அகற்றி அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொட்ட வேண்டும்.

    கடந்த காலங்களில் மழை நீர் தேங்கும் 400 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 400 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    சுரங்கப்பாதைகளில் மழைநீர் சேகரிக்கப்படும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும்.

    மோட்டார் பம்புகளை இயக்கி சரிபார்த்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உபகரணங்களையும் முன்கூட்டியே பராமரித்து தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    புதிதாக அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகள், அதில் இருந்து மழைநீர் வடிகால்வாய்களுக்கு செல்ல இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்புகள் இல்லாமல் மழை நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

    அனைத்து மழைநீர் வடிகால்களும் நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் மழைநீர் தேங்காமல் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

    மழை காலங்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், அலுவலர்களை தொடர்பு கொள்ளவும், மாநகராட்சி மற்றும் இதர சேவை துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள் அடங்கிய கையேட்டை தயார் செய்ய வேண்டும். மேற்கண்ட பணிகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் செல்லும் குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் பகுதி அலுவலகம் 1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த தூர்வாரும் பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த பகுதி அலுவலகங்களுக்கு உட்பட்ட 1998 தெருக்களில் 282 தூர்வாரும் எந்திரங்கள், 161 ஜெர்ராடிங் எந்திரங்கள், 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் என மொத்தம் 500 எந்திரங்கள் மூலம் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, தெருவில் கழிவுநீர் வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை பகுதி அலுவலகம் மற்றும் பணிமனை அலுவலகத்தில் கொடுத்தால் உடனடியாக அவை சரிசெய்யப்படும்.

    இதற்கிடையே சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவு நீர் கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை தூர்வாரும் பணி கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 200 பணிமனைகளில் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளில் கசடுகளை அகற்றும் பணியில் 350 உதவி பொறியாளர்கள், 2 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 4 நாட்களில் 2,876 தெருக்களில் உள்ள கழிவு நீர் கட்டமைப்புகளில் கசடுகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ×