என் மலர்
நீங்கள் தேடியது "குடியரசு தின விழா"
- மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அல்லது உழைப்பாளர் சிலை ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி ஜனவரி 26-ந்தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு நடைபெறுவது வழக்கம்.
இப்போது மெட்ரோ ரெயில் பணிகளுக்காக அந்த பகுதியில் வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குடியரசு தின விழாவை மெரினா கடற்கரை சாலையில் எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.
இதற்காக காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம், அல்லது உழைப்பாளர் சிலை ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடம் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த பாதுகாப்பான இடம் என்பதை இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.
- உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
- ஒத்திகை கடற்கரை சாலையில் 20, 22, 24 ஆகிய தேதியில் இருந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26-ம் தேதி உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை, மெரினா சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை ,மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல் துறை, தீயணைப்பு துறை அணிவகுப்பும் ஒத்திகையில் பங்கேற்க உள்ளனர். பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும்.
இந்த நிலையில், வழக்கமாக ஆண்டு தோறும் மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் மெட்ரோ பணிகள் காரணமாக இந்த ஆண்டு அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான ஒத்திகை கடற்கரை சாலையில் 20, 22, 24 ஆகிய தேதியில் இருந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பட்டியலின கிராம ஊராட்சி தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்.
- கிராம சபை கூட்டங்கள் முடிந்ததும், பிரச்சினையின்றி முடிந்ததா என உறுதி செய்ய வேண்டும்.
குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது உள்ளிட்ட 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும், இது குறித்து எடுக்கப்பட்ட அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருள் தொடர்பாக பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை களையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில், மேற்குறித்த பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் தொடர்பாக, அவரவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கைகள் பெறப்பட்டு, அரசால் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எவ்வித பிரச்சினைகளும் இனி வருங்காலங்களில் ஏற்படாத வாறு உரிய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தக்க ஆலோசனை/ பயிற்சி அளித்து எவ்வித புகார்களுமின்றி எதிர்வரும் 26-ந்தேதி அன்று அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், எதிர்வரும் 26-ந்தேதி அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும் பார்வை ஒன்றில் காணும் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை தொடர்ந்து கண்ணியத்துடன் நடத்தும் விதமாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கைகள் எடுத்து உறுதி செய்யுமாறும் இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்கு உடனுக்குடன் அனுப்புவதோடு எதிர்வரும் குடியரசு தினம் அன்று கிராம சபை முடிந்தவுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி நடைபெற்றுள்ளதா என்பதனை உறுதி செய்து விரிவான அறிக்கை அனுப்பவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது
- பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை,
நாட்டின் 74-வது குடியரசு தினவிழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கத்தை அணிவிக்கிறார். மேலும் சிறப்பாக பணியாற்றி யஅரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார். மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்துகிறார்.
பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப்பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
குடியரசு தின விழாவை நடைபெறும் வ.உ.சி. மைதானம் நாளை மறுதினம் முதல் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.
அங்கு 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளும் பணியினை தொடங்குவார்கள்.
மேலும் மாநகரில் குடியரசு தின நாளன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
கோவை ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
இதேபோல கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
- முதல் இரண்டு வருடங்கள் புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி துவங்கி 56 வருடங்கள் ஆகிறது. நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருந்து யாரும் புதுடில்லி மற்றும் சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கு தேர்வாகவில்லை. ஆனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2வில் இருந்து குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வாகி வருகிறார்கள். முதல் இரண்டு வருடங்கள் புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த வருடம் (2023) சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகளிலிருந்து 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து 9 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் அரவிந்தன் (மூன்றாமாண்டு விலங்கியல்) தேர்வாகி உள்ளார். இது ஹாட்ரிக் சாதனையாக உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
- சிறப்பு ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- தொடக்கம் முதலே டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
நெல்லை:
குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென்மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053) தாம்பரத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (06054) வருகிற 29-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம் -நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06021) தாம்பரத்தில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06022) நெல்லையில் இருந்து வருகிற 27-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
இந்த ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
- குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரெயில்களில் பார்சல் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரெயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகளும் நாளை (23-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
- விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு கழக செயலாளர் ஆர்.பி.கிஷ்ணமாச்சாரி சமூக சேவைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
- குடியரசு தினத்தன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்கண்ட விருதுகளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
சென்னை:
சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய விருது பெறுவோர் பெயர்களை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்.
இதன்படி விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு கழக செயலாளர் ஆர்.பி.கிஷ்ணமாச்சாரி சமூக சேவைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறுதுளி என்ற அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விருதுகளை பெறுவோருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்கண்ட விருதுகளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
- காவல்துறையின் பல்வேறு பிரிவினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்கிறது.
- அரசு துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கிறது.
புதுச்சேரி:
நாட்டின் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.
புதுவை அரசின் சார்பில் கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அங்கு கொடிக்கம்பத்துடன் மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபை, கவர்னர் மாளிகை, பாரதி பூங்கா, ஆயிமண்டபம், தலைமை செயலகம் ஆகியவை வண்ணவிளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு குடியரசு தினவிழா தொடங்குகிறது. 9.25 மணிக்கு கவர்னர் தமிழிசை கடற்கரை சாலைக்கு வருகிறார். மேடைக்கு செல்லும் அவர் தேசியக்கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார். மேடைக்கு திரும்பும் அவர் சாதனை படைத்த போலீசாருக்கு விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ், பரிசுகளை வழங்குகிறார்.
தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடக்கிறது. தொடர்ந்து அரசு துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கிறது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.
குடியரசு தின விழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-
வடக்கு பகுதி வழியாக விழா வரும் முக்கிய பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் அனுமதி பெற்றவர்கள் பழைய சாராய ஆலை, பிரமனைடு வழியாக வந்து விழா பந்தலின் வடக்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் கிழக்கு பகுதியில் நிறுத்த வேண்டும்.
மற்றவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை கொம்பாங்கி வீதி, செயின்மார்ட்டின் வீதி, லாதி லோரிஸ்தான் வீதியில் நிறுத்தி நடந்து வர வேண்டும். தெற்கு பகுதி பிரமுகர்கள் புஸ்சி வீதி வழியாக வந்து பந்தலின் தெற்கு பகுதியில் கடற்கரை ரோட்டில் நிறுத்த வேண்டும். மற்ற வாகனங்கள் சுய்ப்ரேன் வீதி வர்த்தக சபை அருகில் நிறுத்த வேண்டும்.
அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் வாகனங்களை ரோமன்ரோலண்ட் வீதி, கஸ்ரேன் வீதி, குர்கூப் வீதி, துமாஸ்வீதி, புஸ்சி வீதியில் தெற்கு நோக்கி பழைய துறைமுகம் வரை நிறுத்தலாம். பிற பகுதிகளில் எந்த வாகனங்களும் நிறுத்த அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் கலந்துகொள்கிறார்.
- எகிப்து அதிபர் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
நாட்டில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் (1950, ஜனவரி 26-ந் தேதி) குடியரசு தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா நாளை (26-ந்தேதி) கோலாகலமாக நடைபெறுகிறது.
இதற்கான ஒத்திகைகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது68) கலந்து கொள்கிறார்.
இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படை பிரிவும் கலந்துகொள்கிறது.
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மத்திய வெளியுறவு துறை ராஜாங்க மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பில் பாரம்பரிய நாட்டுபுற நடனமும் இடம்பெற்றது. எகிப்து அதிபருடன் அந்நாட்டின் 5 மந்திரிகளும், உயர்மட்டக் தூதுக்குழுவும் வந்துள்ளது.
இந்த நிலையில் எகிப்து அதிபர் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி பேண்டு வாத்தியம் மற்றும் வீரர்களின் அணிவகுப்புகளுடன் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
எகிப்து அதிபர் சிசியை ஜனாதிபதி திரவுபதி முர்மு கை குலுக்கி வரவேற்றார். அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இருவரும் கை குலுக்கி கொண்டனர். மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
பின்னர் எகிப்து மந்திரிகள் மற்றும் குழுவினர் ஜனாதிபதி மற்றும் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்த வரவேற்புக்கு எகிப்து அதிபர் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
அதன்பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் சிசி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக பேசப்பட்டது.
இதையடுத்து, 75 ஆண்டு கால நட்புறவை நினைவுகூரும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடியும் எகிப்து அதிபர் அல் சிசியும் இணைந்து வெளியிட்டனர். மேலும் இரு நாடுகளுக்கு இடையே கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
- பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார்.
பின்னர், ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து, பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இறுதியாக நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் கண்களுக்கு விருந்தளித்தன.
இந்த அணிவகுப்பில் "தமிழ்நாடு வாழ்க" என்ற வாசகத்துடன் கூடிய அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தன.
- பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை சென்றது.
நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். எகிப்து அதிபர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிய பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை செல்கிறது.