search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்டு"

    • நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.
    • மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர்.

    நாகப்பட்டினம்:

    கடல் நீர் மற்றும் நன்னீரில் வாழும் உயிரினம் நண்டு. நண்டுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். கடல் உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் நண்டு நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு உதவி செய்கிறது. குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நண்டு ஒரு நல்ல உணவாக உள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நேற்று மீனவர்கள் வலையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு சிக்கியது.

    மீனவர்கள் அந்த கல்நண்டுடன் கரைக்கு வந்தனர். அந்த நண்டை அவர்கள் சோதனை செய்தனர். நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    உடனே மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர். தொடர்ந்து இந்த கல் நண்டு குஞ்சு பொரிப்பதற்காக அந்தமான் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு விமானத்தில் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

    குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து ஒரு வாரத்தில் குஞ்சுகள் பொரித்தவுடன் நண்டு குஞ்சுகள் பத்திரமாக கடலில் விடப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    குஞ்சு பொரிப்பதற்காக நண்டு ஒன்று அந்தமானுக்கு விமானத்தில் பறக்க இருப்பது மீனவர்களிடம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
    • ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடல் நண்டு - 5

    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு

    பிரிஞ்சி இலை - 1

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தக்காளி - 2

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    * முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

    * இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.

    * அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

    * பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

    * பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

    * இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

    • பொறித்து வைத்திருந்த நண்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.
    • வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை பொடியான நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    நண்டு - 10

    தக்காளி - 6

    காஷ்மீர் மிளகாய் - 50 கிராம்

    குடமிளகாய் - 4 வண்ணங்களில்

    வெங்காயம் - 2

    இஞ்சி - 2 துண்டு

    பூண்டு - 15 பல்

    வெண்ணெய் - தேவையான அளவு

    எண்ணெய் - பொறிக்க

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதன் ஓடை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    • தக்காளி மற்றும் காஷ்மீர் மிளகாய் இரண்டையும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு விழுதாக அறைத்துக் கொள்ளவும்.

    • வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை பொடியான நறுக்கி கொள்ளவும்.


    • ஒரு வாணயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் சுத்தம் செய்து வைத்திருந்த நண்டை அதன் ஓடுடன் பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

    • வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

    • பின்னர் பொறித்து வைத்திருந்த நண்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.

    • பிரட்டிய நண்டில் அரைத்து வைத்திருந்த தக்காளி காஷ்மீர் மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.

    • இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு நண்டு மற்றும் அதன் ஓடு இரண்டு ஒன்றாக வைத்து பாறிமாறுங்கள் சுவையோ ஆஹா... ஓஹோ... என்று இருக்கும்.

    • 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.
    • பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.

    இங்கு 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள்,இறால்,நண்டுகள், பிடிபட்டு வருகிறது. பழவேற்காடு மீனுக்கு என்று தனி மவுசு உண்டு. பெரும்பாலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனைக்கு கரைக்குகொண்டு வரப்படுவதால் ஐஸ்கட்டிகளில் பதப்படுத்தாமல் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் பழவேற்காடு மீன்களை வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் பழவேற்காட்டில் மீன்விற்பனை களைகட்டி காணப்படுகிறது.

    மேலும் பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு. இதனால் இங்குள்ள நண்டு, இறால்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஏரியில் பிடிக்கப்படும் நண்டுகள் சணல் மூலம் உயிருடன் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டு நண்டு மிகவும் பெயர் போனவை. ஒரு நண்டு 50 கிராம் முதல் 11/2 கிலோவிற்கு மேல் இருக்கும்.

    பழவேற்காடு நண்டுக்கு தற்போது மவுசு மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பழவேற்காடு பகுதிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான பெரிய நண்டுகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிேலா நண்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.

    ஒரு கிலோவுக்கு மேல் உள்ள நண்டு ரூ.2 ஆயிரத்து 200 வரை விலை போகிறது.

    இதுகுறித்து நண்டு வியாபாரி ராஜா, சங்கீதா ஆகியோர் கூறும்போது, பழவேற்காடு நண்டுக்கு என தனி சுவை உண்டு. இதனால் இங்கு பிடிபடும் நண்டுகளை அதிகம் பேர் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இப்போது பழவேற்காடு நண்டுகளை வாங்க அதிகாமானோர் வந்து செல்கிறார்கள். நண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் நாள்பட்ட சளி குறையும்.ஒரு நண்டு ஒரு கிலோவிற்கு மேல் இருந்தால் கிலோ 2200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பெரியவகை நண்டுகளின் கொடுக்குகளை அதன் உடம்புடன் சனலை வைத்து கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தானது. விரலை கடித்தால் துண்டாகி விடும் ஆபத்து உள்ளது. பழக்கம் உள்ளவர்கள் இதனை எளிதில் கையாள முடியும் என்றனர்.

    • லுா உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவருடைய மனைவி மருத்துவர்களிடம் கூறினார்.
    • லுா மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்தவர் லுா,39. இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு உயிருடன் நண்டுகள் வாங்கி வந்துள்ளார். அப்போது, நண்டு அவரது மகளை கடித்துள்ளது. இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது.

    பின்னர் ஆத்திரம் அடைந்த லுா குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து உயிருடனேயே கடித்து தின்று விழுங்கியுள்ளார்.

    இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு லுாவிற்கு கடும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதற்கு காரணம் தெரியாமல் டாக்டர்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், லுா உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவருடைய மனைவி மருத்துவர்களிடம் கூறினார்.

    இதன்பின், மருத்துவர்கள் லூவிற்கு ரத்தப் பரிசோதனைகள் செய்தனர். இதில் லுா மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பின் இதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லுா கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • முன்பு கிலோ 700 ரூபாய்க்கு விலை போன நீலக்கால் நண்டு தற்போது 300 ருபாய்க்கு விலை போகிறது.
    • நாள் ஒன்றுக்கு 2 டன் முதல் 5 டன் வரை மீன்கள் இறால், நண்டு கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கிய நிலையில் நாகை, தஞ்சை , காரைக்கால் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சை உட்பட பல்வேறு மாவட்ட மீனவர்கள் வரும் மார்ச் மாதம் வரையுள்ள சீசனை யொட்டி தொழில் செய்ய படகுகள் மற்றும் குடும்பத்துடன் வரத்தொடங்கியுள்ளனர்.

    தற்போது வெளியூர் மீனவர்களுடன் உள்ளுர் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடி தொழிலுக்கு செல்கின்றனர். மீனவர்கள் வலைகளில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் மட்லீஸ்மீன் காலா, ஷீலா, வாவல், திருக்கை, மற்றும் சிறிய வகை மீன்களான தோளி, வெள்ளம் தோகை பொடி, பன்னாஉட்பட பல்வேறு வகை மீன்களுடன் வகை வகையான நீலக்கால்நண்டு, புள்ளிநண்டு, கல்நண்டு, சிலுவை நண்டு மற்றும் இறால் வகைகள் கிடைக்கிறது.

    நாள் ஒன்றுக்கு 2 டன் முதல் 5 டன் வரை மீன்கள் இறால், நண்டு கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அதிக அளவில் நீலக்கால் நண்டு கிடைப்பதால் அந்த நண்டுகள் கோடியக்கரை கடல் பகுதியிலேயே வைத்து அவிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஐஸ்கீரிம் செய்ய அனுப்பி வைக்கபடுகிறதுஇது குறித்து கோடியக்கரை மீனவ நல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேல் கூறியதாவது,

    தற்போது நீலக்கால் நண்டு அதிக அளவில் கிடைப்பதால் அதை கடற்கரையிலேயே அவித்து் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கபடுகிறது. வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டத்திற்கும் நீலக்கால் நண்டு அனுப்பிவைத்தாலும் சரியான விலை கிடைக்கவில்லை.

    முன்பு கிலோ 700 ரூபாய்க்கு விலை போன நீலக்கால் நண்டு தற்போது 300 ருபாய்க்கு விலை போகிறது. இதற்கு காரணம் கோடியக்கரையில் கிடைக்கும் நீலக்கால் நண்டு தற்போது இந்தோனேசியா நாட்டிலும் அதிக அளவில் கிடைக்கிறது.

    இங்கு விற்பனையாவதை விட இந்தோனேசியாவில் பல மடங்கு விலை குறைவாக உள்ளதால் அங்கிருந்து பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தற்போது இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீலக்கால் நண்டு கிலோ ரூ. 750 விற்ற நிலையில் தற்போது கிலோ 350- க்கு் விலை போகிறது.

    இதனால் அதிகப்படியான நண்டுகள் கிடைத்தாலும் விலை கிடைக்காததால் மீனவர்கள் நண்டு பிடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இந்த விலை வீழ்ச்சி ஓரிரு மாதத்தில் சரியாகும் என தெரிவித்தார்.கோடியக்கரையில் வலைகளில் அதிகளவில் சிக்கும் நீலக்கால், புள்ளி நண்டுகள்

    • மீனவர்கள் வலையில் சிக்கும் ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
    • மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    பக்கிங்காம் கால்வாயில் இணையும் கடற்கரை முகத்துவார பகுதிகளில் உயிர் வாழும் ஆற்று நண்டுகள் கடலின் சீற்றம், கடல் உள்வாங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின்போது கால்வாயில் இருந்து கடலுக்குள் சென்றுவிடும். பின்னர் இந்த வகை நண்டுகள் 3 முதல் 5 மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மேல் வளர்கிறது.

    இந்த வகை நண்டுகளுக்கு சிங்கப்பூர், மலேசியா, அரேபியா, போலந்து போன்ற வெளிநாடுகளில் அதிக விலை கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் வலையில் சிக்கும் இந்த ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த ஆற்று நண்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

    மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர். இதனால் இவ்வகை நண்டுகள் 48 மணி நேரம் வரை உயிருடன் இருப்பதாகவும், பின்னர் அதை பாதுகாப்பாக விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    மாமல்லபுரம், கொக்கிலமேடு, தேவநேரி, கோவளம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வலையில் இந்தவகை ஆற்று நண்டுகள் தற்போது பெருமளவில் பிடிபடுவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×