search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அந்தஸ்து"

    • ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வென்று உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி ஏற்றார்.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

    இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்ட சபை தொகுதிகள் உள்ளன. லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவி ஏற்றார்

    மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து [சட்டப்பிரிவு 370] ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு- காஷ்மீர், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற மன்ற தேர்தல் இதுவாகும்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    • மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இல்திஜா தெரிவித்துள்ளார்.
    • கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டடு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் 63.45 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. முன்னதாக யாருக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தன.

    ஆனால் தற்போது அதை பொய்யாகும் விதமாக காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது .

    அதேவேளையில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி [பிடிபி] 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. முன்னதாக கருத்துக்கணிப்புகளின்படி மெகபூவாவின் கட்சி 7 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் அவர் கிங் மேக்கராக இருப்பார் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

    இதனால் என்சிபி தலைவர் பரூக் அப்துல்லாவும் நேற்றைய தினம் மெகபூபா கட்சிக்கு தங்களுடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரங்கள் பிடிபி கட்சி தோல்வி முகத்தில் இருப்பதையே பிரதிபலிக்கிறது.

     

    குறிப்பாக பிடிபி கட்சி சார்பில் ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்ட மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா [36 வயது] தோல்வி முகத்தில் உள்ளார். தான் கடுமையாக உழைத்ததாகவும், இருப்பினும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இல்திஜா தெரிவித்துள்ளார். இல்திஜாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி உள்ள பஷீர் அமது வீரி வெற்றி முகத்தில் உள்ளார்.

    பஷீர் அமது வீரி 31292 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 22534 வாக்குகள் பெற்று அவரை விட 8758 வாக்குகள் வித்தியாசத்தில் இல்திஜா பின்தங்கியுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட நபர் வெரும் 3468 வாக்குகள் மட்டுமே பெற்று 27824 வாக்குகள் பின்தங்கியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 5 இடங்களைத் தாண்டி மெகபூபாவின் பிடிபி கட்சி வெற்றி பெறாது என்று கூறப்படுகிறது.

    இதற்கு முற்றிலும் மாறாகக் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. 25 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்து மெஹபூபா முதலமைச்சர் ஆனார். ஆனால் அதற்கு பின்னர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கி சிறப்பு அந்தஸ்தை பாஜக நீக்கியதே இந்த தேர்தலில் இரண்டு கட்சிக்கும் பலத்த அடியாக அமைந்துள்ளது.

    • இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
    • பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுவார்கள்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இது காஷ்மீர் மக்களின் நலனை பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறன. இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது கட்டத் தேர்தல் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் - என்சிபி கூட்டணி ஆகியவை பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் காஷ்மீரிலும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காகவும் பிரச்சார சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    அரியவாவில் பரிதாபாத் நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2 நாட்களாக நான் ஜம்மு காஷ்மீரில் இருந்தேன். அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. எனவே நான் விமான நிலயத்தினுள் சென்றேன். அப்போது ஒரு மனிதர், 'யோகி சாஹேப் ராம் ராம்' என்று கூறி என்னை வரவேற்றார். அந்த மனிதர் ஒரு மௌலவி [இஸ்லாமிய மத போதகர்] என்று பின்னரே உணர்ந்தேன். ஒரு இஸ்லாமிய மத போதகரிடம் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது குறித்து ஆச்சர்யம் அடைந்தேன். சிறப்பு அந்தஸ்தை [சட்டப்பிரிவு 370 ஐ] நீக்கியதன் தாக்கமே இது. இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.

    பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] தெருக்கள் தோறும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கூட கோஷமிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். யோகிஆதித்யநாத்தின் பேச்சைக் கேட்டு பிரச்சார கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பினர். மேலும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த 7 வருடங்களாக எந்த போராட்டங்களும் கலவரங்களும் நடக்கவில்லை என்றும் யோகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.

    இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    அப்போது, மத்திய பட்ஜெட்டில் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று நேற்று தெரிவித்த மத்திய அரசு தற்போது பீகார் மாநிலதிக்ரு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நான் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தேன். எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரினேன்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் முன்னரே அது கிடைக்காது என்று பலரும் பேசினார்கள். இப்போது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசியுள்ளார்.

    • பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்து மோடி மூன்றாவது முறையாக பிரதமரானார். இந்த கூட்டணியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராளுமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

    மத்திய அரசின் இந்த முடிவை பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், நிதிஷ்குமார் மற்றும் அவரது கட்சியின் தலைவர்கள் மத்திய அரசின் அதிகாரத்தை அனுபவித்து கொண்டு, சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தொடர்பான பாசாங்குத்தனமான அரசியலை தொடரலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 11 மாநிலங்களுக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களது அடிப்படை கோரிக்கை என்று மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும். மாநிலக் கட்சிகள் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் கவலையில்லை. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல" என்று அவர் தெரிவித்தார். 

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பீகார் மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் நிதிஷ் குமார்தான் காரணம் என்றார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. பீகார் முதல் மந்திரியும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மூத்த தலைவர்கள் லாலன் சிங், அசோக் சவுத்ரி, தேவேஷ் சந்திர தாகூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம் செய்யப்பட்டார். சஞ்சய் ஜா தற்போது மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தள குழு தலைவராக உள்ளார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ஜா, கட்சியின் செயல் தலைவராக நியமித்ததன் மூலம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் என்னிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடன் இணைந்து மேலும் ஒருங்கிணைப்புடன் செயல்பட முயல்வோம். நிதிஷ் குமார் பீகாரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். பீகார் மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் அவர்தான் காரணம்.

    வரும் 2025-ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். 19 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும் நிதிஷ் குமாருக்கு எதிராக மாநிலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதை உணர்த்தி உள்ளன என தெரிவித்தார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    • சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டும்.
    • அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும்.

    பிரிவினை மறு சீரமைப்பு சட்டம் 2014-ன் படி அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாகப் பிரித்தது.
    • காஷ்மீர், லடாக் என புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.

    16 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

    அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர்.

    இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளிக்கவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
    • சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அரசு கூறியது. எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், பீகார் அமைச்சரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதை முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் மாநிலத்தில் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், மத்திய அரசு உதவினால் இந்தப் பணிகளை செய்துமுடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    • பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தினார்.
    • சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கினால், பீகாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற சிறிது காலம் போதும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, லாலு பிரசாத் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    • ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும்.
    • ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான்.

    புதுடெல்லி:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

    காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகியுள்ளார். மத்திய அரசு சார்பில் சொல்சிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடி வருகிறார்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த தயார் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம்தான் இனி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

    வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த பணி முடிவடைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஜம்மு-காஷ்மீர் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். முதலில் பஞ்சாயத்து அளவிலும், அதை தொடர்ந்து நகராட்சி அளவிலும் பின்னர் சட்டசபை தேர்தலும் நடைபெறும்.

    லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் லே பகுதியில் முடிந்து விட்டது. கார்கில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும்.

    ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என காலவரையறை சொல்ல முடியாது. முழு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான்.

    370-வது பிரிவை நீக்கிய பிறகு 2018 உடன் ஒப்பிடும்போது தீவிரவாதம் தொடர்பான செயல்கள் 45.2 சதவீதம் குறைந்துள்ளது. ஊடுருவல் 90.2 சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா கூறினார்.

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில்சிபல் பயங்கரவாதிகள் தொடர்பான மத்திய அரசின் தவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பயங்கரவாத சம்பவங்கள் குறித்த மத்திய அரசின் தகவல்கள் 370-வது பிரிவின் அரசியலமைப்பின் தீர்ப்பில் சிக்கலை ஏற்படுத்தாது என்று கபில் சிபலிடம் உறுதி அளித்தனர்.

    ×