என் மலர்
நீங்கள் தேடியது "அன்புமணிராமதாஸ்"
- இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
- புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.
பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்சுகளும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதேபோல, மாநாட்டு திடலுக்கு வருபவர்களின் வசதிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் முழு கட்டுப்பாடுடன், போலீசாரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அமைதியான முறையில் வாகனத்தில் வர வேண்டும். அதேபோல், மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் அமைதியான முறையில் ஊர் திரும்ப வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்படும். பின்னர், மாலை 6.10 மணியளவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டு திடலுக்கு வருகிறார். அப்போது, மேடையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து, வன்னியர் சங்க கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றி வைக்கிறார். பின்னர், டாக்டர் ராமதாஸ் குறித்த வரலாற்று குறும்படமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மாநாட்டில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மதுவிலக்கு உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்தப்பட இருக்கிறது. பின்னர், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மாநாட்டின் நிறைவாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- குடும்பத்தினர் டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
- சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார் .
அப்போது கட்சி நிறுவனரான நான் இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட போவதாக அறிவித்தார். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் பா.ம.க. வின் பல்வேறு நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் கட்சியில் தலைவராக தொடர வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோ சனை நடத்துவதற்காக டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் இளைஞர் அணி தலைவர் முகுதனின் தாயாருமான காந்தி, இளைய மகள் கவிதா, மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்,மயிலம் எம்.எல்.ஏ.சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி,முன்னாள்எம்.பி. செந்தில்குமார், பா.ம.க. மாநில நிர்வாகி வக்கீல் பாலு ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்திக்க வந்தனர்.
இதில் பா.ம.க. பொரு ளாளர் திலகபாமாவிற்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. மற்றவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
இன்று காலை பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும்பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்திக்க உள்ளனர். அதில் சுமூகமான முடிவு ஏற்படும் என பா.ம.க. வட்டாரம் தெரிவிக்கிறது.
டாக்டர் ராமதாஸ் மகள்கள் மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோர் கட்சியினர் வெளியே சென்ற பிறகு மீண்டும் ஆலோசனை ஈடுபட்டனர்.
இரவு வரை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முடிவும் ஏற்படாமல் சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
ராமதாசை சந்தித்து விட்டு வந்த வக்கீல் பாலுவிடம் நிருபர்கள், ஆலோசனையில் என்ன பேசினீர்கள் என்று கேட்டனர். அதற்கு பாலு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இது வழக்கமான நிகழ்வு தான் எனக் கூறிவிட்டு எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.
3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை முடிந்த நிலையில் டாக்டர் ராமதாசின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்தி, இளைய மகள் கவிதா மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் ஆகியோர் மட்டுமே டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வக்கீல் பாலு,முன்னாள் எம்.பி. செந்தில்குமார்,தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்ஆகியோர் டாக்டர் அன்புமணி ராமதாசை இன்று சென்னையில் சந்திக்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
- ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட காலத்திற்கும் இன்றைக்கும் இடையிலான சூழல்கள் மிகப்பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது.
அதானி குழும நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியான முடிவு தானே என்று தோன்றலாம். ஆனால், ஸ்மார்ட் மீட்டர் குறித்த முழுமையான விவரங்களை நன்றாக அறிந்தவர்களுக்குத் தான் இதன் பின்னணியில் உள்ள குறைகள் தெரியும். ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தத்துவமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதானி குழுமம் ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு எவ்வளவு விலை குறிப்பிட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் துல்லியமாக வெளியாகவில்லை.
ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் 7 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒருவேளை ஒப்பந்தக்காலம் 7 ஆண்டுகளாக இருந்து, ஒரு மீட்டருக்கு வசூலிக்கப்படவிருக்கும் தொகை ரூ.125 என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்பணமாக வழங்கப்பட்ட தொகை இல்லாமல், ஒவ்வொரு மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10,500 வசூலிக்கப்படும். அதுவே ஒப்பந்தக்காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், ரூ.15,000 ஆகும். மாதாந்திர தொகையை குறைப்பது குறித்து அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி 10 சதவீதம் குறைக்கப்பட்டாலும் கூட, அதானி குழுமத்திற்கு செலுத்தப்படும் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கும். இதை நேரடியாக நுகர்வோரிடமிருந்து மின் வாரியம் வசூலிக்காவிட்டாலும், கட்டண உயர்வு உள்ளிட்ட மறைமுக வழிகளில் வசூலித்து விடும்.
ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு மத்திய அரசின் சார்பில் சராசரியாக ரூ.900 மானியம் வழங்கப்படும் நிலையில், அத்துடன், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள மீட்டருக்கான கட்டணத்தையும் சேர்த்து கழித்து விட்டால், ஒவ்வொரு ஸ்மார்ட் மீட்டருக்கும் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை ரூ.2000 முதல் ரூ.2500 என்ற அளவில் தான் இருக்கும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையே காரணம் காட்டி, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது.
எனவே, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும்.
அதற்கு மாறாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாமக இளைஞர் சங்கத் தலைவராக பரசுராமன் முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
- இது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருது முரண்பாடு எழுந்தது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை நியமனம் செய்தது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
- ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் கிழக்குக் கடற்கரையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் நாள் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கும் செங்கை மாவட்ட ஆட்சியருக்கும் நான் கடிதம் எழுதினேன், அதைத் தொடர்ந்து சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல், கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அதன் பயனாகவே சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதைக் காரணம் காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலாவை தடை செய்துள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அதன் கோவளம் அலுவலகத்திற்கு தடை விதித்திருக்கிறார். அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது போதுமானதல்ல. கிழக்குக் கடற்கடைச் சாலையில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற தத்துவத்திற்கே முடிவு கட்டினால் தான் சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாக்க முடியும்.
இயற்கையின் கொடையாக, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகிய பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வலசை வரும் பகுதி ஆகும். இயற்கையாக நமக்கு கிடைத்த இந்த வரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஆனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிர்காலத்தில் இதே நிறுவனத்திற்கோ அல்லது வேறு நிறுவனத்திற்கோ ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த அனுமதி அளிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகள் அகற்றப்பட வேண்டும்.
கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன் கிழக்குக் கடற்கரைச் சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
- வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?
மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முறையே 210*4 மெகாவாட், 600 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 1500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மூன்றாம் நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்கள் அனைவரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக 10 முதல் 13 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தவிர அவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான எந்த உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பணி நிலைப்புக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பணி நிலைப்பு என்பது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை. அதை தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் மறுப்பது பெரும் சமூக அநீதி ஆகும்.
பத்தாண்டுகள் பணி செய்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கின்றன.
அதுமட்டுமின்றி, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்த தொழிலாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை.
தனியார் நிறுவனங்கள் அத்தகைய கடமையை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசே, இத்தகைய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது சிறிதும் நியாயமற்றது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 153-ஆம் வாக்குறுதியாக, "அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததன் மூலம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு திமுக அரசு பெருந்துரோகம் செய்துவிட்டது.
மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இவர்களுக்கு முன் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1998-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கி போராடியது. போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், பா.ம.க. மற்றும் தொழிலாளர்கள் அமைப்புடன் பேச்சு நடத்திய கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தது.
அன்று தந்தை கலைஞர் காட்டிய மனிதநேயத்தையும், தொழிலாளர்கள் மீதான அக்கறையையும் இன்று தனயன் மு.க.ஸ்டாலின் காட்ட மறுப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. எழுப்ப விரும்பும் வினா.
திமுக தொழிலாளர்களின் உழைப்பில் வளர்ந்த கட்சி. அப்படிப்பட்ட கட்சி தொழிலாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு துணைபோவது எந்த வகையில் நியாயம்? குறைந்தது பத்தாண்டுகள் பணி செய்தால் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் கால் நூற்றாண்டுகளுக்கு முன் அவர்களுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றதைப் போலவே இப்போதும் மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக களமிறங்கி போராடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோயம்பேடு பஸ் நிலையம் பூங்காவாக மாற்றப்படும்.
- 158 நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதிலும் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற 2003-2004-ம் ஆண்டு முதல் பா.ம.க. சார்பாக பொது நிழல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பொது நிழல் நிதி நிலை அறிக்கையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,91,602 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப் பான முறையில் கையாளு வதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,02,010 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்ப தால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,68,978 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,97,123 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்ப தற்காக அசலாக செலுத்தப் படும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அவற்றை நிரப்ப நடப்பாண்டில் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும்.
அடுத்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மொத்தம் 7.5 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்
தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
தமிழ்நாட்டில் ஜூலை 25-ந்தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்பு களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஜனவரி 25-ந்தேதி உலக தமிழ் மொழி நாளாக கடைபிடிக்கப்படும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
மே 1-ந்தேதி முதல் மது விலக்கு அமுலுக்கு வரும். மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும். புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.318-க்கு வழங்கப்படும்.
பெண்கள் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லாத இளைஞர் களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்து இருந்தால் ரூ.1000, தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.2000, பிளஸ்-2 தேறியிருந்தால் ரூ.3 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
சென்னையில் அனைத்து பஸ்களிலும் இலவச பயணம், கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்கா வாக மாற்றப்படும். விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படும். மின்சார கட்டணம் குறைக்கப்படும்.
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கடைவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 என்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாநில இணை செயலாளர் புருஷோத்தமன், கிரீஸ் சரவணன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசியதாவது:-
தமிழகத்தில் மக்களை கடுமையாக பாதிக்கின்ற வகையில் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின் கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சாதாரணமாக இருநூறு ரூபாய் கட்டிய பொதுமக்கள் இன்று 500 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால், கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்காது. எனவே தமிழக அரசு மின் கட்டணத்தை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்த வேண்டும்.நீர் வீணாகும்போது காவிரியில் ஏன் தடுப்பணைகளை கட்டவில்லை. தடுப்ணைகளை கட்டி விட்டால் மணல் திருட முடியாது. இதனாலே தடுப்பணைகளை கட்டவில்லை.
அவினாசி அத்திக்கடவு திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்காக மக்கள் போராட்டம் நடத்திய போது இரண்டு முறை வந்து நானும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டேன். இப்படி நல்ல விஷயங்களுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும்.மக்கள் வளர்ச்சியை மட்டுமே வைத்து பா.ம.க. செயல்படகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்லடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. உதாரணமாக மத்திய அரசின் கல்வி நிலையங்களில் தகவல் தொடர்பு மொழியாக உள்ள ஆங்கிலத்திற்கு பதிலாக இனி இந்தியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனக்கு தாய் மொழி தமிழ், நான் விருப்பப்பட்டு மற்ற மொழிகளை கற்கலாம். ஆனால் நீ இந்தி தான் கற்க வேண்டும் என சொல்வது போல உள்ளது.
மத்திய அரசின் இந்த செயல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வானொலி நிலையத்தில், தமிழ் நிகழ்ச்சிகளை 4 மணி நேரம் ரத்து செய்துவிட்டு அதில் இந்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறார்கள். அதை எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? இப்படி இந்தி திணிப்பு செயலில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தினால் இதுவரை 80 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மிகக் கடுமையான நடவடிக்கை அவசியம். அதேபோல போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் கடுமையாக பின்பற்ற வேண்டும். தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடுநிலையோடு நடக்க வேண்டும். அது இ.பி.எஸ். பிரச்சினையாக இருந்தாலும் சரி ஓ.பி.எஸ்.பிரச்சினையாக இருந்தாலும் சரி.
இவ்வாறு அவர் கூறினார்.