search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 சதவீத இடஒதுக்கீடு"

    • வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தோவாளை சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 28-வது முதலாம் ஆண்டு புதிய மாணவர்களை வர வேற்கும் விழா, சி.எஸ்.ஐ மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் பென்சர் பிராதாப்சிங் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஞானம், அறிவு, புத்தி குறித்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தெரிவித்த கருத்துக்கள் சிறப்பானவை, உண்மையானவை.கல்வி யின் முக்கியத்துவத்தை அறிந்து எதிர்கால நலன் கருதி நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற மாணவ-மாண விகள் முன்வர வேண்டும்.

    தற்போது கணிணி படிப்பிற்கு அதிக முக்கிய த்துவம் உள்ளது. இதற்கு இடம் கிடைப்பது அரிது. முந்தைய காலத்தில் கலை மற்றும் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இதுதான் கல்வி. வாழ்க்கையில் முன்னேற கல்வி இருந்தால் மட்டுமே முடியும்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பினை தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன்.

    மாணவ, மாணவிகள் நேரத்தை வீணடிக்காமல் சிறந்த முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறி சாதனைகளை படைக்க வேண்டும். நாட்டிற்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டிற்கும் பயன் உள்ளவர்களாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர்மகேஷ், நிர்வாக செயலாளர் வக்கீல் தினேஷ், சி.எஸ்.ஐ டயோ சிசன் வளர்ச்சி திட்ட இயக்குனர் லாரன்ஸ், செண்பக ராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம், சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தாளா ளர் எபனேசர் ஜோசப், சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி நிதி காப்பாளர் பொன் சாலமன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தலைமை பேராசிரியர் டாக்டர்நாக்சன் நன்றி கூறினார்.

    • எங்கள் கட்சியின் தேசிய கொள்கை 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் வேறுபட்டதாகவே உள்ளது.
    • முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் தமிழக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.

    முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தே கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் காங்கிரஸ், 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தே கருத்துக்களை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    எங்கள் கட்சியின் தேசிய கொள்கை 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் வேறுபட்டதாகவே உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டின் நீதிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் தமிழக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது.
    • சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து ஆராய 2006-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியிலான மத்திய அரசு.

    அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-தி.மு.க. மத்திய கூட்டணி அரசு. அப்போது, திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.

    இந்த சட்டத்தைத்தான் தற்போதைய பா.ஜனதா அரசு 2019-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

    தி.மு.க. தலைமை, தற்போது பா.ஜனதா தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது.

    இன்றைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தி.மு.க.வின் தயவால் அங்கு இடம்பெற்றவை. அவைகளில், இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான, இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டை மனமுவந்து வரவேற்பதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிசன் பரிந்துரை அடிப்படையில் பிரச்சினை வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார்.

    மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் இதை சேர்த்து அதை உறுதிப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தினார்.

    ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்ட மன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கவர்னர் விளக்கம் கேட்கும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்கப்படும்.
    • கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதா மீது கவர்னர் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை.

    மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கவர்னர் விளக்கம் கேட்கும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்கப்படும். கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் . 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
    • அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு

    சென்னை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு, வில்சன் எம்.பி., தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில், 10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்காக 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் 12ம் தேதி காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    • தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவர உமா பாரதி கோரிக்கை
    • எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை சாதி.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பின் கட்டமைப்பை மீறவில்லை என்று, தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஒரு உறுதியான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

    ஆனால் தமது கேள்வி என்னவென்றால், நாடு முழுவதும் வேலை பற்றாக்குறை நீடிக்கும் இந்த மோசமான சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய அரசால் செயல்படுத்த முடியுமா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி அரசு பணிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியிருப்பது வரவேற்கதக்கது என்றும், தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ஏழை என்ற சாதி. இந்த இடஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும், அனைத்து ஏழை மக்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான சிறந்த வாழ்க்கைக்காக போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.
    • பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:-

    ஜன-8, 2019: அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஜன-9: மேல்சபையில் 103-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஜன-12: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக சட்ட அமைச்சகம் அறிவித்தது.

    பிப்: இந்த புதிய சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    பிப்-6: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    பிப்-8: 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது.

    செப்-8, 2022: மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.

    செப்-13: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

    நவ-7: பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    • அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தகவல்.
    • சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒருங்கிணைய வேண்டும்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

    எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

    சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்.எஸ்.பாரதி, திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
    • 10 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளை மீறப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

    புதுடெல்லி:

    பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

    இது பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலில் உள்ளது.

    இதனை எதிர்த்து யூத்பார் ஈகூவாலிட்டி என்ற அமைப்பு உள்ளிட்ட பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தி.மு.க.வின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திரபட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் கொண்ட 5 பேர் அமர்வு விசாரித்து வந்தது.

    10 சதவீத இடஒதுக்கீட்டிற்காக மத்திய அரசு கொண்டு வந்த 103-வது சட்ட திருத்தம் அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மையை மீறியுள்ளதா? அல்லது அடிப்படை தன்மை மாறாமல் அதை ஒட்டியே நிறைவேற்றப்பட்டதா? என்ற கோணத்தில் 1973-ம் ஆண்டு கேசவா நந்தபாரதி வழக்கு தீர்ப்பை கருத்தில் கொண்டு விசாரித்தது.

    அதே போல் இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரத்தை அளவுகோளாக வைப்பது முறையா? என மண்டல் வழக்கு தீர்ப்பளித்த இந்திர ஷாவ்னே வழக்கையும் கருத்தில் கொண்டு விசாரணை நடந்தது.

    அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி சட்டத் திருத்தம் முறையானது என வாதாடினர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 பேர் அமர்வு இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

    அதன்படி பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்திவாலா ஆகிய 3 பேரும் தீர்ப்பு அளித்துள்ளனர்.

    பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    ஆனால் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட விரோதம் என்று நீதிபதி ரவீந்திரபட் கூறியுள்ளார். நீதிபதி ரவீந்திரபட்டின் கருத்தை ஆதரிப்பதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறியுள்ளார்.

    இதன்படி நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பார்தி வாலா ஆகிய 3 பேரும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திரபட் ஆகிய இருவரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீர்ப்பு அளித்துள்ளனர். தீர்ப்பு விவரம் வருமாறு:-

    நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில் கூறியதாவது:-

    இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது அடிப்படை அரசியல் சாசன கட்டமைப்பை மீறுகிறதா என கேள்வி எழுகிறது. ஆனால் இந்த சட்ட திருத்தம் அடிப்படை அரசியல் சாசனத்தை மீறவில்லை. வளர்ச்சி என்பது அனைவருக்கும் ஒருமித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    மேலும் இடஒதுக்கீடு முறை 50 சதவீதத்திற்கு மேலாக இருக்கக்கூடாது என்பதை மீறவில்லை. ஏனெனில் இந்த இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதால் எந்த அடிப்படை கட்டமைப்புகளையும் மீறவில்லை.

    இடஒதுக்கீடு என்பது சமமான சமுதாயத்தின் இலக்குகளை நோக்கி அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான உறுதியான நடவடிக்கையின் ஒரு கருவியாகும்.

    குறிப்பாக சமூகத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் அனைத்து வகுப்பினரையும் முன்னேற்றுவதே ஆகும். எனவே அந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிய சட்ட திருத்தம் செல்லும்.

    பொருளாதார ரீதியிலான வகைப்படுத்தலை வைத்து வழங்கப்பட்ட இந்த 10 சதவீத இடஒதுக்கீடு சரியானதே.

    மேலும் இந்த இட ஒதுக்கீடு சமத்துவத்துக்கான குறியீட்டை மீறவில்லை. ஏற்கனவே உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற கட்டமைப்பையும் மீறவில்லை.

    மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு பொருளாதார அளவுகோலை வைத்து சிறப்பு ஒதுக்கீடு முறையை உருவாக்குவது அடிப்படை கட்டமைப்பை மீறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீதிபதி பேலா திரிவேதி தனது தீர்ப்பில் கூறியதாவது:-

    பாராளுமன்றம் மக்களின் தேவைகளை அறிந்து இருக்கிறது. குறிப்பாக இட ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார ரீதியில் மக்களை ஒதுக்கி வைப்பதை அறிந்து தான் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை தவிர்த்து பிற பிரிவினருக்கும் சிறப்பு சலுகை வழங்க இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்துள்ளது. பாராளுமன்றத்தின் இந்த செயல் நியாயமான வகைப்பாடு ஆகும்.

    சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் பொதுவாக உள்ள அனைத்து இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே வேளையில் இ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு இடஒதுக்கீடு என்பது எந்த விதிகளையும், அடிப்படைகளையும் மீறவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீதிபதி பார்திவாலா தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    10 சதவீத இட ஒதுக்கீடு என்பதை ஏற்கிறேன். 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்ட திருத்தம் சரியே, அது செல்லும்.

    இடஒதுக்கீடு முறை குறிப்பிட்ட நலனுக்கானது என்பதை அனுமதிக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் கல்வி, முன்னேற்றம் ஆகியவை பல்வேறு சமூக நிலையில் இருக்கும் மக்களிடையேயான இடைவெளியை குறைத்துள்ளது.

    எனவே முன்னேற்றம் அடைந்தவர்களை பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டும். அப்படி என்றால் தான் உண்மையாக பின் தங்கியவர்கள் பயன் பெறுவர்.

    பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் என்ற பிரிவை வகுக்கும், தீர்மானிக்கும் முறைகளை இன்றைய கால கட்டத்திற்கேற்ப மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு என்பது காலவரையறை இல்லாமல் தொடரக்கூடாது.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரியானதே, எனவே 103-வது சட்ட திருத்தம் செல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீதிபதி ரவீந்திர பட் கூறியதாவது:-

    இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் வழங்கிய சட்டத் திருத்தம் செல்லும் என்ற பிற நீதிபதிகள் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன்.

    10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் 103-வது சட்ட திருத்தம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கியுள்ள இட ஒதுக்கீடு தான் அவர்களை சிறப்பான உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

    தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் இதயத்தையே தாக்குவதாக உள்ளது.

    இட ஒதுக்கீடு 50 சதவீத்தை மீறக்கூடாது. ஆனால் தற்போது அதனை தாண்டி இட ஒதுக்கீட்டை அனுமதிப்பது என்பது மேலும் மீறல்களுக்கு வழி வகுக்கும்.

    தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது அங்குள்ள எஸ்சி, எஸ்.டி, ஓ.பி.சி உள்ளிட்ட மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பின்பற்றுவது ஆகும்.

    எஸ்.சி, எஸ்.டி , ஓ.பி.சி பிரிவினரை புறந்தள்ளி விட்டு இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தில் அனுமதிக்காத ஒரு விசயம் ஆகும்.

    மேலும் சின்ஹோஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் மொத்த எஸ்.சி மக்கள் தொகையில் 38 சதவீதம் பேரும், மொத்தமுள்ள எஸ்.டி, மக்கள் தொகையில் 48 சதவீதம் பேரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர் என கூறுகிறது. அப்படியெனில் இந்த பிரிவினரே பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் ஆவர்.

    இந்த இ.டபிள்யூ.எஸ். 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசன இதயத்தின் மீதான தாக்குதல். 10 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு எதிராக உள்ளது.

    அதேபோல் 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய உரிய அங்கீகாரம் இல்லாதவர்களுக்கானது என்பதை விடுத்து பொருளாதார அடிப்படையிலான நோக்கத்தை மாற்றுவதாக உள்ளது.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை அரசுகள் அறிமுகப்படுத்தலாம் என்பது செல்லாது. அந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு அளிக்கிறேன்.

    பொது நன்மைக்காக பொருளாதார அளவு கோல்கள் அனுமதிக்கப்படுவதாலும், இதில் பாகுபாடு காட்டப்படுவதாலும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக உள்ளதாலும் இந்த சட்டத்தை ரத்து செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    சட்ட திருத்தம் செல்லாது என்ற நீதிபதி ரவீந்திர பட் வழங்கிய தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன். இந்த சட்ட திருத்தம் செல்லாது என்பதே எனது தீர்ப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தீர்ப்பில் 3 நீதிபதிகள் சட்டத்துக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

    எனவே பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×