என் மலர்
நீங்கள் தேடியது "விவாகரத்து வழக்கு"
- கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த அகில்ராஜை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 26).
இவரது கணவர் அகில்ராஜ். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். கொட்டாரக்கரா ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக அகில்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆஜரானார்கள்.
அதன்பிறகு ஐஸ்வர்யா கோர்ட்டில் இருந்து ஸ்கூட்டரில், வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது பின் தொடர்ந்த அகில்ராஜ், தனது மோட்டார் சைக்கிளால், ஸ்கூட்டரை இடித்துள்ளார்.
இதனால் ஐஸ்வர்யா தனது வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது அவர் மீது பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி பெட்ரோலை அகில்ராஜ் ஊற்றியுள்ளார். பின்னர் அவர் மீது லைட்டரை பற்ற வைத்து நெருப்பை வீசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, அபயக்குரல் எழுப்பியவாறு சாலையில் ஓடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்,விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் தோள் மற்றும் கழுத்து பகுதியில் ஐஸ்வர்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அகில்ராஜை கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
- திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார்.
- நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர்.
சென்னை:
நெல்லையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவி. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நெல்லை குடும்பநல கோர்ட்டில் குமார் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ''திருமணத்துக்கு முன்பே தேவிக்கு புற்றுநோய் இருந்தது. அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, புற்றுநோய் பாதிப்பினால், அவரது கர்ப்பப்பையும் அகற்றப்பட்டு விட்டது. இதுபோன்ற செயல்கள் எல்லாம் என்னை கொடுமை செய்வதாகும். எனவே, எனக்கு விவகாரத்து வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த காரணத்துக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது என்று நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.எம்.டி. டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், 4 முறையும் கரு கலைந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த பின்னர்தான், அவர் புற்றுநோய் தாக்கி 3-வது கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உயிரை காப்பாற்ற கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது.
இவை எல்லாம் மனவேதனை தரும் கொடுமையாகும். அதே நேரம், இந்த காரணத்துக்காக விவாகரத்து வேண்டும் என்று குமார் கூறுவதை ஏற்க முடியாது. இவையெல்லாம் தேவி கணவனுக்கு கொடுத்த கொடுமை என்று சொல்ல முடியாது. 'எல்லாம் விதி' என்றுதான் சொல்ல வேண்டும்.
நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர். அதனால், இப்போது அவர் விவாகரத்து கேட்கிறார்.
கடவுளால் காப்பாற்றப்பட்ட தேவியை அவரது கணவனிடம் இருந்து பிரிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால், இவர்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி.
- 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக அவரது மனைவி பாயல் அப்துல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் அவர்களது திருமணம் முறிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திருமணங்களை கலைக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அவர் கோரினார்.
உமர் மற்றும் பாயல் அப்துல்லா செப்டம்பர் 1, 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இரு மகன்களின் பாதுகாப்பில் உள்ளனர்.
முன்னதாக, மேலும் அவரது மனைவிக்கு மாதம் 1.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் தலா 60,000 ரூபாய் வழங்கவும் தேசிய மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
சென்னை:
அமெரிக்காவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், அவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை என்று கூறி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய குடும்பநல கோர்ட்டு மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து மனைவி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், "குற்றவியல் வழக்குகளில்தான் விசாரணைக்கு நேரில் ஆஜராவது கட்டாயமாகும். இதுபோன்ற விவாகரத்து வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக வாய்ப்பு அளிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியிடம் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
- கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
- கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னை:
பணத்தை வாரி இறைத்து ஜாதகம், ஜோதிடம் என பொருத்தம் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மூலம் தீர விசாரித்து நடத்தப்படும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் இளம்ஜோடிகளில் சிலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில் கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டையோடு பிரிந்து செல்வதும் அரங்கேறி வருகிறது. காதல் திருமணம் செய்தவர்களிலும் சிலர் பிரிந்து விடுகிறார்கள்.
ஒளிவு மறைவு இல்லாத கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுக்குள் தனி உரிமை எனும் புது கலாசாரத்தை புகுத்தி விவாகரத்தில் கொண்டுபோய் நிறுத்தும் அளவுக்கு பல தம்பதியர் வந்து விட்டதும் வேதனைக்குரிய விஷயம்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
தமிழகத்தில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் செயல்படும் குடும்பநல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் எகிறிக் கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழலும் ஏற்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில்தான் சென்னையில் ஏற்கனவே இருந்து வந்த குடும்ப நல கோர்ட்டுகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் குடும்பநல கோர்ட்டுகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.
தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல கோர்ட்டுகளில் இந்த ஆண்டு (2024) வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாக சேர்த்து வைக்க கோருதல், பரஸ்பர விவாகரத்து என 33 ஆயிரத்து 213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 638 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் ஆனவை.
மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகளில், இந்த ஆண்டு மட்டும் 19 ஆயிரத்து 240 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு 2 ஆயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகளே தாக்கல் ஆகின.
ஆனால், தற்போது (2024) 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் 6-வது இடத்தில் இருக்கிறது.
2-வது இடத்தில் கர்நாடகாவும், 3-வது இடத்தில் உத்தரபிரதேசமும் உள்ளது. மேற்குவங்காளம் 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் இருக்கிறது.
இந்தியாவில் விவாகரத்து கோருவோரில் 25 முதல் 35 வயதுடையோர் 50 சதவீதமும், 18 முதல் 25 வயதுடையோர் 35 சதவீதமும், 35 வயதுக்கு மேல் 15 சதவீதமும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதியரை மீண்டும் பரஸ்பர புரிதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் குடும்பநல கோர்ட்டின் முக்கிய நோக்கம். தவிர்க்க முடியாத சூழலில் தான் விவாகரத்து என்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த கோர்ட்டின் மையக்கருத்து.
இந்த அடிப்படையில் தான் நன்கு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் விவாகரத்து கோரி வரும் தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், இருதரப்பும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.
படிப்பு, சம்பாத்தியம், யாருடைய துணையும் இன்றி வாழ முடியும் என்ற இளம்பெண்களின் அசட்டு தைரியம் திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிர் முளையிலேயே கருகும் அபாயத்தை உருவாக்கி விட்டது.
வாழ்க்கை வாழ்வதற்கே. சண்டை சச்சரவு எதுவானாலும் விவாகரத்து தீர்வு இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போது தான் விவாகரத்து எனும் நோயை விரட்ட முடியும்.
- ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
- நாணய மூட்டைகளை நோட்டாக மாற்ற நீதிபதி உத்தரவு.
கோவை:
கோவையை சேர்ந்த ஒரு தம்பதியர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பின்னர் அந்த நபர் உடனடியாக காருக்கு சென்று அங்கு பத்திரமாக வைத்திருந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்தார்.
அப்போது அவர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக மாற்றி சுமார் 20 மூட்டைகளில் கட்டிவந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அதிர்ச்சிக்குள்ளானார்.
பின்னர் நாணய மூட்டைகளை நோட்டாக மாற்றி கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதுடன் வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்திருந்த நாணயங்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.
- மனைவிக்கு மொத்தம் ரூ.73 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க கணவர் ஒப்புக்கொண்டார்.
- மகளுக்கு தனது கல்வியை தொடர அடிப்படை உரிமை உள்ளது.
புதுடெல்லி:
விவாகரத்து வழக்கு ஒன்றில், கடந்த நவம்பர் 28-ந் தேதி, கணவன்-மனைவி இடையே தீர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், அவர்களுடைய மகளும் கையெழுத்திட்டுள்ளார். அப்பெண் அயர்லாந்தில் படித்து வருகிறார்.
தீர்வு ஒப்பந்தத்தின்படி, மனைவிக்கு மொத்தம் ரூ.73 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க கணவர் ஒப்புக்கொண்டார். அதில், ரூ.43 லட்சத்தை மகள் தனது படிப்பு செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள மகள் மறுத்து விட்டார். ஆனால், பணத்தை திரும்பப்பெற அவருடைய தந்தை மறுத்து விட்டார்.
இதற்கிடையே, இந்த விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
மகள் என்ற முறையில், அந்த பெண் தனது கல்விச்செலவுக்கு பெற்றோரிடம் இருந்து பணம் பெற சட்டப்பூர்வ உரிமையும், இழக்க முடியாத உரிமையும் உண்டு. மகளுக்கு தனது கல்வியை தொடர அடிப்படை உரிமை உள்ளது. அதற்காக தங்களது நிதி ஆதாரத்தில் இருந்து போதிய நிதியை அளிக்க பெற்றோரை கட்டாயப்படுத்த முடியும்.
அந்த பெண், தனது கண்ணியத்தை காக்க பணத்தை வைத்துக்கொள்ள விரும்பாமல், திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டார். அந்த பணத்தை பெற மகளுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது.
ஜீவனாம்சமாக மனைவி ரூ.30 லட்சம் பெற்றிருப்பதாலும், இந்த ஜோடி கடந்த 26 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதை ஒப்புக்கொண்டதாலும் அவர்களுக்கு பரஸ்பர சம்மதத்தின்பேரில் விவாகரத்து வழங்குவதை தவிர்க்க முடியாது.
மேலும், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்தின்பேரில், இருவருக்கும் விவாகரத்து அளிக்கிறோம்.
தீர்வு ஒப்பந்தத்தின்படி, இருவரும் ஒருவர் மீது ஒருவர் கோர்ட்டு வழக்கு தொடரக்கூடாது. ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால், அது முடித்து வைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில், இருதரப்பினரும் எந்த உரிமையும் கோரக்கூடாது. தீர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
- ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
- வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
கர்நாடகா மாநிலத்தில் பெண் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய மனைவியின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் (HC) நிராகரித்துள்ளது.
ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
நீதிபதி சிலாகூர் சுமலதாவின் ஒற்றை நீதிபதி அமர்வு இதுகுறித்து கூறுகையில், " உண்மையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. எனவே, சமூகத்தில் பாலின-நடுநிலை அவசியம் உள்ளது."
விவாகரத்து மனுவை, சிக்கமகளூரு மாவட்டம், நரசிம்மராஜபுராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து, சிவமோகா மாவட்டம், ஹோசனகராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுதாரர் மனைவி கோரினார்.
அந்த மனுவில், "நீதிமன்ற விசாரணைகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்கு 130 கிலோமீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை எதிர்த்த கணவர்," தான் ஒன்பது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மைனர் குழந்தைகளையும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறேன்.
வழக்கை மாற்றுவது தனக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாடப் பொறுப்புகளை நிர்வகிப்பதில் தனது சிரமங்கள் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தைகளின் நலன் உட்பட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் நீதிமன்றம் மதிப்பிட்ட நிலையில், "மாற்று மனுவை ஒரு பெண் தாக்கல் செய்வதால் மட்டுமே, கோரப்பட்டபடி வழக்கை மாற்ற முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
"பிரதிவாதி- கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாலும், குழந்தைகள் அவரது பாதுகாப்பு இருப்பதாலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் கணவர் எதிர்கொள்ளும் சிரமம் மனுதாரர் மனைவியை விட அதிகமாக இருக்கும்" என்று கூறி கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
மேலும், "சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது. பெண்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நமது சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டதது.
இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.