search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழச்சி தங்கபாண்டியன்"

    • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.
    • உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இதுவரையிலும் கள்ளச் சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 55தாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் தி.முக. எம்.பி தமிழச்சி தங்கபாண்டின் வருத்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    "கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் அந்தக் குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நேற்றைய உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

    சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று 'எதிர்காலத்தில் நடக்காது' என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு!" என்று கூறியுள்ளார்.

    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.
    • தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது...

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று காலையில் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. அதிகமாக வாக்குகள் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இடங்கள் கிடைக்கவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாக பார்க்கிறேன். எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் அதிக இடம் கிடைத்திருக்கிறது என்பதுதான் கவலை என கூறியிருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...

    அப்படியில்லை...

    1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

    2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.

    3. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

    4. இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

    5. ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

    ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்...

    தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது...

    அதனால்தான் இதன் பெயர் 'நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது'

    இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.


    • தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல்‌ கொடுத்திருக்கிறேன்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்துள்ள நிலையில் அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி, தென்சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று தியாகராயர் நகரில், 142-வது வட்டத்திற்கு உட்பட்ட சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், கடந்த மூன்று நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறேன்; செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்களும், கழகத்தினரும், தோழமைக் கட்சியினரும் அளிக்கும் வரவேற்பையும், அன்பையும், எழுச்சியையும் பார்கின்ற போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார்.

    இதனிடையே, ரெயில்வே துறையில் தொகுதிக்காக நீங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் உள்ள ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக நான் 2019-ல் வெற்றி பெற்றது முதல் 2024 வரை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு குறைகளை மனுவாக அளித்துள்ளேன்.

    ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து ரெயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன். அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை ரெயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது. தரமணி ரெயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 லட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் முண்டக்கன்னியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது; வேளச்சேரி - புனித தோமையர் மலை MRTS இணைப்பிற்காக, பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரெயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது; மெட்ரோ ரெயில் குறித்தும் பல முறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன் என கூறினார்.

    • தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முனைவர். த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தொகுதியில் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், சைதாப் பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு தோழமைக் கட்சி களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தொகுதியில் வீதி வீதியாக இல்லம் தோறும் சென்று வாக்குகள் சேகரித்து, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைத்து பணிகளையும் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    நிறைவாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், "தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழச்சி தங்கபாண்டியன் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் தொகுதியின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்திருக்கிறார். கழகத் தோழர்கள், தோழமைக் இயக்கத் தோழர்களின் எழுச்சியை பார்க்கும் போது நமது வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார்.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • 2009ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியும் நடைபெற்றது
    • முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன் என்றார் தி.மு.க. எம்.பி.

    கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஈழப்போரின் கடைசி கட்டத்தில், இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    எல்.டி.டி.ஈ. அமைப்பினருக்கு எதிராக இந்திய அரசாங்கம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்ததாக அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

    இந்தியாவில் அப்போது காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான தி.மு.க.வும் அங்கம் வகித்தது. இது மட்டுமின்றி தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சியே  அப்போது நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் ராணுவ உதவி அப்போதைய தி.மு.க. அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததாகவும், அன்றைய முதல்வர் கருணாநிதி இதனை அறிந்திருந்தும் தடுக்க தவறியதால்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று அதில் அப்பாவி இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியது. தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பல கட்சிகளும் அப்போது தி.மு.க.வை இதே காரணத்திற்காக குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த சச்சரவுகள் இன்று வரை ஓயவில்லை.

    இந்நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம், "வரலாற்று சிறப்புமிக்க ஒரு நபருடன் உணவு உண்ண வேண்டுமென்றால், யாருடன் உண்ன விரும்புகிறீர்கள். அந்த நபரிடம் என்ன கேட்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "மேதகு தலைவர் பிரபாகரன் உடன் உணவருந்தி, அவரிடம் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன்" என பதிலளித்தார்.

    இரு தலைமுறைகளாக தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவரான தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த பதில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தி.மு.க. தடுக்க தவறிய குற்றத்தை தாமாக முன் வந்து ஒப்பு கொண்டதாக ஆகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, பிரபாகரனை ஒரு மாவீரனை போல் சித்தரித்து தமிழச்சி பேசியிருப்பதை, தி.மு.க.வுடன் கூட்டணி ல் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் பல கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் எனும் பின்னணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸின் இந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • தமிழச்சி தங்கபாண்டியன் ஓமன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • சமூகவலைதளத்தில் அவரை பலர் பாராட்டி உள்ளனர்.

    சென்னை :

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஓமன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய மசூதியான சுல்தான் காபூஸ் மசூதிக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடை அணிந்து தமிழச்சி தங்கபாண்டியன் சென்றார்.

    ஹிஜாப் உடையுடன் அவர் மசூதிக்கு சென்றதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹிஜாப் உடை அணிந்து சிரித்தபடி இருக்கும் புகைப்படத்துடன் கூடிய அவரது பதிவை பலர் வரவேற்று தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

    சாதி, மதம், இனம் பார்க்காத தமிழ் திராவிட பெண் தமிழச்சி தங்கபாண்டியன் என அவரை பலர் பாராட்டி உள்ளனர்.

    ×