search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டி"

    • 2 பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக அவர் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
    • உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

    கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 82 வயது மூதாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி, முதல் முயற்சியிலேயே 5-ம் இடத்தை பெற்று அசத்தியுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோருடன் கிட்டம்மாள் வசித்து வருகிறார்.

    இவரது பேரன்களான ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தனது பேரன்களை பார்த்து தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கிட்டம்மாள் ஆசைபட்டுள்ளார்.

    2 பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக அவர் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதன்பின் உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

    கிட்டம்மாளின் ஆர்வத்தைக் கண்டு உடற்பயிற்சியாளர் சதீஷ், கோவையில் கடந்த மே 1-ம் தேதி "Indian fitness federation" சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய கிட்டம்மாள், "பெண்கள் எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும். எனது ஆர்வத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எனது உணவு முறையே காரணம். பேரன்கள் மற்றும் உடற்பயிற்சியாளரின் துணையோடு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றேன். எனது கணவர் ஊட்டசத்து உணவுகளை எனக்கு வாங்கி கொடுத்து வெற்றி பெற ஊக்கமளித்தார்" என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய கிட்டம்மாளின் கணவர் வெட்கட்ராமன், "பெண்கள் சமைத்து தரும் உணவை சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என அறிந்து நடப்பதுதான் நல்ல கணவரின் கடமை. தனது மனைவி இன்னும் பல சாதனைகளை படைப்பார்" என்று அவர் தெரிவித்தார்.

    • டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
    • மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

    அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


    இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.

    அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.

    • சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.

    சென்னை:

    ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி தலையில் காயத்துடன் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மயங்கி கிடந்தததாகத் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்துக்கு தையல் போடப்பட்டு சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதில் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவரது முகவரி, குடும்பத்தினர், சொந்த ஊர் எதுவுமே அவருக்கு நினைவில் இல்லை.

    அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.

    அதற்கு மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வந்த போது திடீரென ஒரு நாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைகள் அவ ருக்கு அளிக்கப்பட்டு பாதிப்பு குணப்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சாந்தி, முதுநிலை மருத்துவர் டாக்டர் பிரவீண் குமார், டாக்டர் குடியரசு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனிடையே, அவரது விவரங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து மூதாட்டியின் உறவினர்களைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டோம்.

    அதன் பயனாக, அவரின் பேத்தி தேன்மொழி அதைப் பார்த்து மருத்துவமனைக்கு வந்தார். அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மூதாட்டி அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி விடுவதாக அவர் அப்போது கூறினார்.

    இதையடுத்து, அந்த மூதாட்டியை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தன் நிலை மறந்த மூதாட்டிக்கு மனித நேயத்தோடு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    • ‘ஹெல்பேஜ்’ இந்தியா அமைப்பின் மூலம் முதியோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    கடந்த கால நினைவுகள் என்பது நடந்தது. அது எளிதாக மனதில் வந்து நிழலாடும். மகிழ்வை தரும்.

    நடக்கப் போகும் நினைவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது முதுமை. அது இளமையை போல் இனிமையாக இருக்காது என்பதன் அடையாளங்களாக நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் முதியவர்கள்.

    நமக்கும் நாளை முதுமை வரும் இப்படி ஒரு நிலமை வரும் என்ற நினைப்பு இல்லாமல் பெற்ற பிள்ளைகள், சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டவர்கள் பலர் முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    குடும்பம் கைவிட்டாலும், சமூகம் கைவிடவில்லை என்பதன் அடையாளமாக சர்வதேச முதியோர் தினமான இன்று 'ஹெல்பேஜ்' இந்தியா அமைப்பின் மூலம் முதி யோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    இதில் சென்னையின் பல்வேறு இல்லங்களில் பராமரிக்கப்படும் 500 தாத்தா-பாட்டிகள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். எல்லோரும் புத்தாடைகள் அணிந்து முகத்தில் கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அரங்கத்தில் அமர்ந்து இருந்தார்கள்.

    இந்த காலத்தில் அறுபதை தாண்டுவதே பெரும்பாடு என்ற நிலையில் தொண்ணூறை கடந்தும் நம்பிக்கையோடு பல தாத்தா-பாட்டிகள் நடந்து வந்தார்கள். அவர்களில் 5 பேரை தேர்வு செய்து விழாக் குழுவினர் கவுரவித்துள்ளார்கள்.

    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தாத்தா-பாட்டிகளின் நடன நிகழ்ச்சியும், ஆடை அலங்கார போட்டியும் நடந்தது.

    பாட்டி நீ இந்த வயசுலேயும் இப்படி ஆடி கலக்குறியே... இளமையில் எப்படி கலக்கி இருப்பாய்? என்று பார்வையாளர் கைகளால் திருஷ்டி சுற்றி விரல்களால் தலையில் சொடுக்கி கொண்டார்கள்.

    எத்தனை ஆசைகள்.. எத்தனை எத்தனை கனவுகள்... அத்தனையும் கலைந்து போய் இல்லங்களில் தஞ்சமடைந்து இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தியதும் உற்சாகமாகிவிட்டார்கள்.

    தங்களை மகிழ்வித்தவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள்.

    சித்தாந்தம் 97 வயது தாத்தா! ராஜா உடையில் ராஜா மாதிரி கம்பீரமாக மேடையில் தோன்றினார். அவர் அருகில் பசிந்தா மேரி 94 வயதான இந்த பாட்டி ராணியின் ராஜ உடையுடன் ராணி போல் நின்றார்.

    வாவ்... தாத்தா... வாவ் பாட்டி என்று அரங்கில் திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் எழுப்பிய விசில் சத்தம் அரங்கையே தெறிக்கவிட்டது.

    தொலைத்துவிட்ட மகிழ்ச்சியை மீட்டெடுத்த உணர்வுடன் நெகிழ்ந்த அவர்களின் குழி விழுந்த கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீர் வெடித்து சிதறிய விளை நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல் கன்னத்து சுருக்கங்களில் அங்கும் இங்குமாக உருண்டோடியது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹெல்பேஜ் இந்தியா அமைப்பின் இயக்குனர் எட்வின்பாபு செய்து இருந்தார்.

    • ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள அம்மாக்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி பெரம்பாயி (வயது 78). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது பேரன் சூர்யா (25) என்பவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பெரம்பாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாட்டி வீட்டிற்கு சென்று தகராறு செய்வது வழக்கம்.
    • கொலை செய்யப்பட்ட தங்க பழத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    நாகர்கோவில் :

    கருங்கல் அருகே மங்கலக்குன்று பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தங்கப்பழம் (வயது 78).

    இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்கள். 2-வது மகள் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் சஜின்( 25 ). இவர் அடிக்கடி அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று தகராறு செய்வது வழக்கம்.

    அவ்வப்போது வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடி வந்தார். இந்த நிலையில் இன்று காலை சஜின் பக்கத்தில் உள்ள பாட்டி தங்கப்பழம் வீட்டிற்கு சென்றார்.அங்கு மீண்டும் பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை பாட்டி கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சஜின், வீட்டில் இருந்த ஓடு மற்றும் மரக்கட்டையால் பாட்டி தங்க பழத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தங்கபழம் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தங்க பழம் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். பிணமாக கிடந்த தங்க பழத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சஜினை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.. விசாரணையில் சஜின் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கொலை செய்யப்பட்ட தங்க பழத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர்.பாட்டியை பேரன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொது மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
    • கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் வயதான பாட்டியிடம் 2 வாலிபர்கள் வாக்கு வாதம் செய்வதை சிலர் பார்த்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரித்த போது, 2 வாலிபர்களும் போதையில் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பாட்டியிடம் விசாரித்தபோது, அவர் ஒரு உணவகத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது இந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மூதாட்டியிடம் வாக்கு வாதம் செய்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்ததும் இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×