என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி உத்திர திருவிழா"

    • மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
    • பழனியாண்டவர் குடும்பத்தினர் தேங்காயை ஏலம் எடுத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் 350 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் சுற்றப்பட்டு வைத்திருந்த தேங்காய் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ரூ.52 ஆயிரத்தில் நிறைவடைந்தது.

    போடி குளாளர் பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் குடும்பத்தினர் நீண்ட போட்டிக்கு பின்பு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட ரூ.22 ஆயிரம் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பூஜிக்கப்பட்ட இந்த தேங்காயை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகுவதுடன் குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    • இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் விதமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஈரோடு, கொடுமுடிக்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து பழனி முருகன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினர். வேல், மயில், சேவல் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்தது.

    கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு காலை 10.45 மணிக்கு மிதுன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர். அதனை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் பங்குனிஉத்திர திருவிழாவில் தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நாளை வெள்ளிகாமதேனு, நாளை மறுநாள் வெள்ளிஆட்டுகிடா, 3-ம் நாள் தங்கமயில், 4-ம் நாள் தங்ககுதிரை போன்ற வாகனங்களில் முருகப்பெருமான் வீதிஉலா வருகிறார். 6-ம் நாள் திருவிழாவாக ஏப்ரல் 3-ந்தேதி மாலை 5.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து 8.30 மணிக்குமேல் வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 4-ந்தேதி முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும். ஏப்ரல் 7-ந்தேதி இரவு கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

    • தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 6-ந் தேதி வரை நடக்கிறது.
    • 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.

    மதுரை

    மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுத பாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காலை யில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூக்கூடாரம் நிகழ்ச்சியும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.

    விழாவில் நாளை (2-ந் தேதி) மூலவருக்கு நேர்த்திக்கடன் பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர். வருகிற 5-ந் தேதி உத்திர தினத்தன்று காலை 4 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், ருத்ர ஜெப விசேஷ அபி ஷேக ஆராதனை, தங்க கவச சாத்துப்படி நடக்கிறது. அன்று இரவு பூ பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 6-ந் தேதி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.

    விழா நடக்கும் 7 நாட்களி லும் தினசரி காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • 2 பேர் எலுமிச்சம்பழம் உடல் முழுவதும் குத்திக்கொண்டு வந்திருந்தனர்.
    • சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் பங்குனி உத்திர விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அரூர் அடுத்த கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டியில், உள்ள ஸ்ரீ முருகர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் அலகு குத்தி கொண்டு முதுகில் பொக்லின், வேன், டெம்போ, உரல் இழுத்தல் போன்ற வற்றை நேர்த்தி கடனாக நிறைவேற்றினார்கள்.

    பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுமார் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் விதவிதமாக அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தனர்.

    பக்தர்கள் சிலரை சுவாமிக்கு முன்பு படுக்க வைத்த நெஞ்சின் மேல் உரல் வைத்து மஞ்சள் போட்டு உலக்கையால் இடித்து தூளாக்கி பக்தர்களுக்கு கொடுத்தனர். 2 பேர் எலுமிச்சம்பழம் உடல் முழுவதும் குத்திக்கொண்டு வந்திருந்தனர்.

    இது போன்ற பல விதமான நேர்த்தி கடன்களை செலுத்தியது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. விழாவில் கெளாப்பாறை, கீரைப்பட்டி, நாதியானூர், கம்மாளம்பட்டி, வேப்பம்பட்டி, பொன்னேரி உள்பட சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வெங்கட்ரா மன், சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். காலை முதல் மாலை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் நிர்வாகிகளால் 500 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    இதில் காலையில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேகமான பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், குங்குமம், தேன், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், உள்ளிட்ட 25 -திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் மாரண்டஅள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகளால் 500 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.
    • பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகியவற்றின் போதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

    மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. 25-ந் தேதி 10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.

    • பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை மறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை நாளை (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு இரவில் நடை சாத்தப்படும்.

    பின்பு மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதிஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது.

    அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப் பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை(14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடி வடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சி யாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    • ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக் காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக் குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதி உலா நடைபெறும். அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 23-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்ச்சியானதேரோட்டம் 24-ந்தேதி மாலை 4 மணிக்கு கிரிவீதியில் நடைபெறுகிறது. 27-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று முதலே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா கோஷம் முழங்க பழனி கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பழனி கோவில் அடிவாரம், கிரி வீதி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது.
    • பங்குனி திருவிழா 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சோழிங்கநல்லூர்:

    திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்கோவில் சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 26-ந்தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவைமுன்னிட்டு தினந்தோறும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு விடையூர்திக் காட்சி (ரிஷபவாகனம்), பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை சந்திரசேகரர் தேர் திரு விழாவும், பிரம்மனுக்கு காட்சி அருளலும் நடைபெற உள்ளது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி காலை 9 மணிக்கு சந்திர சேகரர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.

    24-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னி மரக்காட்சி நடைபெறுகிறது. 25-ந்தேதி திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திர சேகரர் கடல் நீராடல், இரவு 8 மணிக்கு திரிபுர சுந்தரி, தியாகராஜர் சுவாமி திருமண விழா, இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் நடக்கிறது.

    தெப்பத்திருவிழா

    26-ந்தேதி மாலை சந்திர சேகரர் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இரவு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, தியாகராஜர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு அருளல், அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடன காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்த சுவாமி நெல்லையப்பர் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது.

    இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று பங்குனி மாதம் பிறந்ததை யொட்டி அதன் ஒரு நிகழ்வாக இன்று பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிப்பட்டம் வீதிஉலா நடைபெற்றது. கொடிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டதும் சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்துக்கு மாப்பொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    விழாவில் திரளாக பக்தா்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளன்று ஆலயம் உருவான வரலாற்றுத் திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா வும், 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழாவும் நடைபெறும்.

    • பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

    இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை போட்டு தங்கியிருப்பார்கள்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல், பந்தல் போடுதல் உள்ளிட்ட பணிகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி வல்லநாடு மணக்கரை, மணத்தேரி, நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சி, கடையம் அருகே பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாஸ்தா கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகரில் சந்திப்பு மேகலிங்க சாஸ்தா கோவில், டவுன் பாரதியார் தெரு முருங்கையடி சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி, பாளை சாந்தி நகர் நடுக்காவுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், அம்பை வைராவிகுளம் இரண்டிலாம் உடையார் சாஸ்தா, வெட்டுவான்களம் அகத்தீஸ்வரர் சாஸ்தா, வள்ளியூர் ஊரணி சாஸ்தா கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், அன்னதானம் நடக்கிறது.

    தென்மாவட்டங்களை பொறுத்தவரை மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலிலும் உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாளை திருவிழா நடக்கிறது.

    பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த திருவிழாவையொட்டி நாளை மறுநாள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×