search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வவ்வால்"

    • இரவு ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது.
    • அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் தனலட்சுமி மில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த இந்த மில் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பூட்டி இருக்கும் இந்த மில் காம்பவுண்டில் ஏராளமான மரங்கள்,செடிகள் வளர்ந்து புதர்க்காடாக மாறி உள்ளது.

    காம்பவுண்டில் உள்ள கட்டிடங்களும் பாழடைந்து கிடக்கின்றன. திருப்பூர் மாநகரின் மத்தியில் உள்ள போதும், இந்த மில் காம்பவுண்ட் மட்டும் முழு காடாகவே இருக்கிறது. இதனால் இங்குள்ள மரங்களில் ஏராளமான வவ்வால்கள் கூடுகட்டி வசிக்கின்றன.

    பல்லாயிரக்கணக்கான ராட்சத வவ்வால்கள் பகல் முழுக்க இங்குள்ள மரங்களிலும், கட்டிடங்களிலும் தலைகீழாக அமைதியாக தொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன.

    ஆனால் இரவு தொடங்கினால் ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது. இரவாக தொடங்கும் போதே பெருங்கூச்சலுடன் கூட்டம் கூட்டமாக கிளம்பும் இந்த ராட்சத வவ்வால்கள் அருகில் உள்ள கொங்கு மெயின்ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், கே.பி.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு படையெடுத்து விடுகின்றன.

    வீடுகளில் உள்ள அறைகள், பார்க்கிங் பகுதிகள், வளாகங்கள் என அனைத்துப்பகுதிகளிலும் சாரைசாரையாக பறந்து வட்டமிடும் இந்த வவ்வால்கள் இந்த பகுதி வீடுகளை எச்சங்களால் நிரப்பி துர்நாற்றம் வீசச் செய்கின்றன.

    மேலும் பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன. மாலை மங்கினாலே பெண்கள், குழந்தைகள் வீடுகளை விட்டு வாசலுக்கு கூட வர அஞ்சும் அளவுக்கு இந்த பகுதிகளின் நிலை உள்ளது.

    எனவே வவ்வால்களில் எச்சத்தால் குடியிருப்பு பகுதிகள் துர்நாற்றம் வீசுவதுடன், வவ்வால்களால் பரவக்கூடிய நிபா உள்ளிட்ட கொடூரமான வைரஸ் நோய்கள் பரவக்கூடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வவ்வால்களை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
    • மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியபோது, அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது.நிபா வைரஸ் பாதித்து 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் சிலருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நிபா தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.

    அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்தனர். அந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

    புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் தங்கியிருக்கும் வவ்வால்களின் மாதிரிகளை சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    அவற்றில் சில வவ்வால்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் வவ்வால்கள் மூலமாகவே கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதற்கு வவ்வால்கள் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதனை உறுதிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி உள்ளது" என்று தெரிவித்தார்.

    • ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.
    • இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் பழந்தின்னி வவ்லால்களும் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.

    மேலும், சோனகன்விளை, சாத்தான்குளம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த வவ்வால்கள் காணப்படுகின்றன. இந்த வவ்வால்கள் உயரமான மருதமரங்களில் வசித்து வருகின்றன.

    இந்த வவ்வால்கள் அனைத்தும் பகல் முழுவதும் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு கிடக்கும். இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.

    இந்த பகுதியில் உள்ள வவ்வால்கள் கூட்டமாக இரவு நேரங்களில் கடல் கடந்து இலங்கை அவுனியா காடுகளுக்கு சென்று இரைதேடி விட்டு அதிகாலையிலேயே தங்களது இருப்பிடங்களுக்கு வந்துவிடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பாலுட்டி இனத்தை சேர்ந்த இந்த அரிய வகை பழந்தின்னி வவ்வால்கள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன. தற்போது மீதமிருக்கும் பழந்தின்னி வல்லால்களும் மின் கம்பிகளில் சிக்கி பலியாகி வருகின்றன. அண்மை காலமாக இந்த பகுதியில் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் பழந்தின்னி வவ்லால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக மட்டும் புதுக்குடி, சாத்தான்குளம், சோனகன்விளை பகுதியில் பல வவ்வால்கள் மின் கம்பிகளில் இறந்த நிலையில் தொங்குவதை காண முடிகிறது. இது இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

    இது குறித்து சிவகளை காடுபோதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று இந்த பழந்தின்னி வவ்வால்கள். சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, உயிரின பெருக்கம் போன்றவற்றில் இந்த வவ்வால்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    அண்மை காலமாக இந்த வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றன. தற்போது ஆடி மாத காற்று மிகவும் வேகமாக வீசி வருவதால் இரவில் இரைதேடி சென்றுவிட்டு அதிகாலையில் திரும்பி வரும் வவ்வால்கள் மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. மெல்லிய இறகுகளை கொண்டதாக இருப்பதால் வவ்வால்கள் எளிதாக மின் கம்பியில் சிக்கி கொள்கின்றன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை விட, இரு கம்பிகளுக்கு இடையே இறக்கை சிக்கி உயிரிழக்கும் வவ்வால்களே அதிகமாக உள்ளன.

    மேலும், இறந்த வவ்வால்கள் மின் கம்பியில் அப்படியே தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை காணும் மற்ற வவ்வால்களும் அந்த பகுதிக்கு வந்து உயிரை விடுகின்றன. தினமும் பல வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்து தொங்குவதை ஆங்காங்கே காண முடிகிறது. இந்த அரிய வகை வவ்வால்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் பகுதியில் காணப்படும் மின் கம்பிகளில் பிவிசி குழாய்களை மாட்டிவிட வேண்டும். அதன் மூலம் வவ்வால்கள் கம்பிகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கலாம். மேலும், இறந்து தொங்கும் வவ்வால்களை உடனுக்குடன் அகற்றினால் மற்ற வவ்வால்கள் அந்த பகுதிக்கு வந்து உயிரிழப்பதை தடுக்க முடியும்.

    பழமையான மரங்கள் பல தீவிபத்தில் அழிந்து வருவதால் வவ்வால்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, தீவிபத்துக்களில் மருதமரங்கள் அழிவதை தடுக்க வேண்டும். மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைத்தது போல, ஸ்ரீவைகுண்டம் பகுதியை பழந்தின்னி வவ்வால்கள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன.
    • போக்குவரத்துதுறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் வவ்வால்கள் தலைகீழாகதொங்கி வருகிறது. பகல் நேரங்களில் தலைகீழாக தொங்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் பறந்து திரியும்.நாகர்கோவில் ராணி தோட்டம் டெப்போ பகுதியில் 3 பழமை வாய்ந்த மரம் உள்ளது.

    இந்த மரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால்கள் தொங்குவது வழக்கம். இதனால் இங்கு இரவு நேரங்களில் வவ்வால்கள் சத்தம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல் ஏராளமான வவ்வால்கள் தொங்கிக்கொண்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை மரத்திலிருந்து வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன. ஒன்றன்பின் ஒன்றாக வவ்வால்கள் இறந்து விழுந்து கொண்டே இருந்தது.சுமார் 50-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் இறந்து கீழே விழுந்தன. கீழே விழுந்த வவ்வால்களை அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் தூக்கி சென்றது. இதை பார்த்த போக்குவரத்துதுறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் போலீசுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மேலும் சில வவ்வால்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மரத்திலிருந்து வவ்வால்கள் திடீரென இறந்து விழுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். வெப்ப தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் வவ்வால்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்து விழுந்த வவ்வால்களை வனத்துறை அதிகாரிகளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    ×