என் மலர்
நீங்கள் தேடியது "சித்திரை தேரோட்டம்"
- தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மண்ணச்சநல்லூர்:
சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு 8 மணி அளவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார்.
நேற்று இரவு சமயபுரம் தெப்பக்குளம் அருகே உள்ள சூரப்பநாயக்கர் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மண்டகப்படி உபயம் கண்டருளினார். பின்னர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஆடை அணிந்த பெண் பக்தர்கள் திரண்டிருந்தனர். தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தேரோட்ட விழாவை காண நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து குவிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்களூக்கு திருவானைக்காவல், கொள்ளிடம் டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்ன தானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோவில் ராஜகோபுரம், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள், 1263 போலீசார், 275 ஊர்க்கால் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க 'பாக்ஸ் டைப்' அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். 2 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தது.

தேர் சுற்றி வரும்போது மின்வாரிய ஊழியர்களை ஆங்காங்கே நியமித்து மின்சாரத்தை உரிய நேரத்தில் தடை செய்தும், மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகளை அகற்றியும் எவ்வித இடையூறும் இல்லாமல் தேர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.
3 வெடிபொருள் சோதனை மற்றும் கண்காணிப்பு படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 4 டிரோன் கேமராக்கள் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி வெவ்வேறு பகுதிகளில் இருந்து கழுகு பார்வையின் மூலம் கண்காணிக்கப்பட்டது. 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைத்து கண்காணிக்கப்பட்டது.
மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் சக்திநகர், கரியமாணிக்கம் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார்.
18-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. தேர் முடிந்து எட்டாம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.
- தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர்.
- ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது.
அவிநாசி :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வருகிற 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர். கோவில் வளாகத்தில் தகர ஷெட்டால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ள தேரை தயார்படுத்து வதற்காக ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் தேர் விழாவிற்கான முகூர்த்த ஆயக்கால் பூஜை நடந்தது.
செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறிய போது,தொடர்ந்து தேரை தயார்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றார்.
- வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
- மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடிக்கம்பத்தில் ரிஷப வாகன கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினசரி காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
சித்திரை தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் புறப்பாடு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் திருத்தே ரோட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் முன்னிலையில் வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் உற்சவமூர்த்திகள் தேரில் அமர்த்தப்பட்டு மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் பவானி தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நாளை காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. அதேபோல் வருகின்ற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
- ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி அருகே பெரிய குரும்பட்டி அடுத்த மாதுப்பட்டியில் 100 ஆண்டு பழமையான ஸ்ரீ காளியம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது. பின்னர் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையடுத்து காளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) பந்தகாசி விழா நடக்கிறது.
இதையொட்டி காலையில் கங்கை பூஜையும், மேல்நாய்க்கம்பட்டியில் அண்ணாமலை கவுண்டர் தோட்டத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து அங்கிருந்து சாமி ஊர்வலமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டி தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலம்.
- தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், தந்தை சிவனுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதுமாகும். அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலமும் இதுவே.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா.. அரோகரா... பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேரானது அசைந்தாடியபடி 4 ரத வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்று, காவிரியில் தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது.
- மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
- தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.
கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.
பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.
நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.