search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் கடத்தல் வழக்கு"

    • ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னை பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
    • என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்

    இயக்குநர் அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அரசியல் நையாண்டிப் படமான இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

    அந்நிகழ்வில் பேசிய அமீர், "ஜாபர் சாதிக்கை எனக்கு தெரியும், அவருடன் பழகியிருக்கிறேன். ஆனால், அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவர் தொழில்கள் என்னென்ன, அவருக்கு எப்படி பணம் வருகிறது என்றெல்லாம் நான் ஒரு நாளும் கேட்டதில்லை. நம்முடன் நிறைய பேர் பழகுவார்கள் அவரின் பின்னணியெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது.

    'லைகா' நிறுவனம் மீது பல வழக்குகள் இருக்கிறது. 'லைகா' தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கிறார். என்றாவது ரஜினியிடம், லைகா நிறுவனத்தின் வழக்குகள் குறித்து யாரும் கேட்டிருக்கிறீர்களா. ஆனால், ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னைப் பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.

    என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது.

    இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார். நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்.

    நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விளக்கமளித்த பின்பும் என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படுகிறது. என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்.

    இந்த அவதூறுகள் எல்லாம் என்னை பாதிப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பாதிக்கிறது. அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.

    அமலாக்கத்துறை என்னை விசாரித்தது, நானும் முழு ஆதரவுக் கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் எனக்கு எந்தப் பயமுமில்லை. என் மீது சந்தேகப்படுவது, கேள்வி கேட்பதையெல்லாம் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால் அவதூறு பரப்புவது சரியானதல்ல. சிலர் அதைத் திட்டமிட்டுச் செய்கின்றனர்" என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

    • டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
    • அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருவதாக கூறிக் கொண்டு 'சூட்டோ பெட்ரின்' போதைப் பொருளை கடத்திய ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சுருட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த 5 பேரை தவிர போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டது.

    இது தொடர்பாக அவரோடு தொடர்பில் இருந்தவர்களை அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2-வது முக்கிய புள்ளிக்கும் அமலாக்கத்துறையினர் குறி வைத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த மேலும் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அடுத்த கட்ட விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    அமீரை தொடர்ந்து அடுத்து சிக்கப்போகும் நபர் அரசியல் பிரமுகர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக்குக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படும் அந்த அரசியல் பிரமுகரிடம் அமலாக்கத்துறையினர் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பிட்ட அந்த அரசியல் பிரமுகரிடம் முறைப்படி விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அவருக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர். அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த விசாரணையின் போது ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் இருக்கும் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 5 பேர் மீதான காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களின் நீதிமன்ற காவலை மே 1-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சதானந்தம் ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 5 பேர் மீதான காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களின் நீதிமன்ற காவலை மே 1-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீதான காவலை மே 1-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    • என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
    • ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

    மதுரை:

    திரைப்பட இயக்குனர் அமீரை ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லி என்.சி.பி. போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இரண்டாவது முறையாக ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்.சி.பி. அதிகாரிகள் என்னை இரண்டாவது முறையாக ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரை இது ஒரு புது அனுபவம்தான். என்னோடு பயணித்த நபர் ஒருவர் மீது இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கும்போது, அந்த குற்றத்திற்கான சந்தேக நிழல் என்மீது விழுவதில் தவறில்லை. இதில் என்மீது சந்தேகமே படக்கூடாது என்று நான் கூறமுடியாது. அவர் மீது குற்றப்பின்னணி இருப்பதால் அவருடன் பயணித்தவர் என்ற முறையில் என்னிடம் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது.

    ஆனால் அதே நேரத்தில் என்னை மட்டுமே மையமாக வைத்து விசாரணை நடத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. வழக்கு குறித்தும், விசாரணை குறித்தும் எந்தவித முழுமையான தகவலை அறியாதவர்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு கருத்து சொல்வதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வரும்.

    என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக முதன்முறையாக என்னுடைய அறிக்கையில், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும். ஆரம்பம் முதல் குற்றம் சாற்றப்பட்ட நபர் ஜாபர் சாதிக்கை தற்போது வரை யாரும் பார்க்கவில்லை. அவர் சிறைக்கு சென்று விட்டார்.

    எனவே அவரைப்பற்றியோ, அவர் தொடர்பான வழக்கு பற்றியோ எதுவும் தற்போது கூறமுடியாது. அவரோடு பயணித்தவன் என்ற முறையில் என்மீது சந்தேக நிழல் விழுவதை நான் தட்டிக்கழிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். விசாரணை முடிந்ததும் முழுமையாக என்னுடைய பங்களிப்பு என்ன என்பதை தெளிவாக கூறுவேன். எனவே ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை நான் கடந்து தான் செல்ல வேண்டும், சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்தரப்பில் இருந்து இந்த வழக்கில் நல்ல முடிவு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது அவர் சிறையில் உள்ளார்.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களையும் திரட்டி வந்தனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் நண்பரும், தொழில் பங்குதாரருமான டைரக்டர் அமீரிடம் கடந்த 2-ந்தேதி டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி அமீரை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். 10½ மணி நேர விசாரணைக்கு பிறகு அமீர் விடுவிக்கப்பட்டார்.

    இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்களது நேரடி விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படை பாதுகாப்புடன் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


    ஜாபர் சாதிக்குடன் இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்த இயக்குனர் அமீர் 'இறைவன் மிகப்பெரியவன்' என்கிற சினிமா படத்தையும் எடுத்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர்சாதிக்கும், இயக்குனராக அமீரும் இருந்தனர். இந்த படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார்.

    இதனால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கும் தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தங்களது முதல்கட்ட விசாரணையை நடத்தி முடித்து உள்ள நிலையில்தான் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் 7 அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். தி.நகரில் உள்ள அமீரின் அலுவலத்திலும் சோதனை நடந்தது.

    இந்த சோதனையின் போது அமீரின் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவைகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர்சாதிக்கின் சாந்தோம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வீட்டை பூட்டி 'சீல்' வைத்திருந்தனர்.

    கோர்ட்டு உத்தரவின்பேரில் 2 நாட்களுக்கு முன்பு தான் 'சீல்' அகற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையிலும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள புகாரி ஓட்டல் உரிமையாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    பெரம்பூர் பொன்னப்பன் தெருவில் உள்ள முகேஷ், யுகேஷ், லலித்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் நிதி நிறுவனத்தையும், கெமிக்கல் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள்.

    புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஓட்டலில் ஜாபர் சாதிக் பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தொழில் அதிபர்கள் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்தக்கட்டமாக அமலாக்கத்துறையினர் மேலும் பல முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
    • ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை :

    டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் அவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
    • மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு டெல்லியில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் கடந்த மாதம் 15-ந்தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப்பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) முக்கிய மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தி.மு.க. அயலக அணியிலும் பொறுப்பில் இருந்தார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்காக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரை தேடினார்கள்.

    ஆனால் போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினார்கள். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகளையும் கைப்பற்றினார்கள். அப்போது அவர் 3 செல்போன்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த போன்களுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவ்வப்போது போனை ஆன் செய்து ஒரு சிலருடன் பேசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை தென் மாநிலங்களில் தேடினார்கள். மேலும் மற்றொரு தனிப்படையினர் அவரை வடமாநிலங்களில் தேடினார்கள். அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கென்யா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்து உள்ளார்.

    எனவே அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களில் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டினார்கள். இதையடுத்து ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாத வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடி இறுகியது.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அந்த வீட்டை டெல்லியை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். பின்னர் நள்ளிரவில் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவரை டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக இன்று பிற்பகலில் டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பத்திரிகையாளர்களிடம் விரிவான தகவல்களை வெளியிட உள்ளனர். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு யார் யார் பின்னணியில் இருந்தனர் என்பது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா். இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா்.

    இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து, உயா் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018ல் தீா்ப்பு அளித்தது.

    தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26ம் தேதி (இன்று) நிறைவேற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தங்கராஜுசுப்பையா இன்று தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இந்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையா (46), இன்று சாங்கி சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்று கூறினார்.

    போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ×