என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டினி"

    • மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    உலகெங்கிலும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை.

    உயர்ந்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, பிரிட்டனில் கடந்த ஆண்டு 7 பேரில் ஒருவர், உணவு வாங்க போதிய பணமில்லாததால் பசியுடன் இருந்ததாக உணவு வங்கி தொண்டு நிறுவனமான, "ட்ரஸ்ஸல் டிரஸ்ட்" எனும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இந்த புள்ளி விவரத்தின்படி, அந்நாட்டின் மக்கள் தொகையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் வாடி வருவதாகவும், இந்த நிலை ஒரு செயலிழந்த சமூகப் பாதுகாப்பு முறையாலும், வாழ்வதற்கான செலவுகள் உயர்வதனாலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.

    பிரிட்டனின் பொருளாதாரம் உலகில் 6வது இடத்தில் உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    ட்ரஸ்ஸல் டிரஸ்ட் அமைப்பின் உணவு வங்கிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஐந்தில் ஒருவர், வேலை செய்யும் குடும்பத்தில் இருப்பதாகவும், மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1950களில் பதிவுகள் தொடங்கியதில் இருந்து, பிரிட்டனின் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து வரும் உணவு விலைகள் தற்போதுதான் மிக பெரிய அழுத்தத்தை தருகின்றது.

    இந்த நிலைக்கு யார் பொறுப்பு என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், பல்பொருள் அங்காடிகளின் நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

    பிரிட்டன் முழுவதும் உள்ள 1,300 உணவு வங்கி மையங்களை கொண்ட ட்ரஸ்ஸல் டிரஸ்டின் நெட்வொர்க், 3 மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது.
    • எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும்.

    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்தது. சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர்.

    குறிப்பாக போர் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர வானிலை நிகழ்வுகள் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023-ம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர். 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 2.40 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா, சிரியா மற்றும் யோமன் ஆகிய நாடுகளில் நீடித்த பெரும் உணவு நெருக்கடிகள் தொடர்கின்றன.

    ஹைட்டி நாட்டில் மோசமான அரசியல் ஸ்திரமின்மை மற்றும் விவசாய உற்பத்தி குறைந்ததால் பட்டினி ஏற்பட்டுள்ளது. எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும். 13.50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லது பிரதேசங்களில் கடுமையான பட்டினிக்கு மோதல் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலைகள் முக்கிய காரணமாக உள்ளன.

    வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் 18 நாடுகளில் 7.20 கோடி மக்களின் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும். பொருளாதார பாதிப்புகளால் 21 நாடுகளில் 7.50 கோடி மக்கள் பட்டினி பாதிப்பை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
    • மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

    சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,




    உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.




    மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.




    உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

    • மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகின்றனர்
    • கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைப்படங்கள் காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன

    போர்

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் [அக்டொபர் 7] ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க இஸ்ரேல் போரைத் தீவிரப்படுத்தியது.

    ஆனால் இந்த போரில் உயிரிழந்த பால்ஸ்தீனியர்களின் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். காசாவில் வாழ்ந்த சுமார் 23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மனித உரிமை உதவிகள் எட்டாத துண்டிக்கப்பட்ட பிரதேசமாகக் காசா திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் வீசும் குண்டுகளை விட உணவுத் தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுமே அம்மக்களின் கொடுங்கனவாக மாறியுள்ளது. கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைப்படங்கள் காண்போர்  நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன

     

    சாலா 

    குழந்தைகள், கர்ப்பிணிகள் மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறனர். இந்த அசாதார சூழ்நிலையில் குழந்தையை பிரசவிக்கும் தாய்மார்கள் நிர்கதியில்  விடப்பட்டுள்ளனர்.

    சொந்த நாட்டில் அகதியாக மத்திய காசாவில் டெய்ர் அல் பாலாஹ்[Deir al-Balah] பகுதியில் டென்ட் முகாம் ஒன்றில் கையில் தனது ஒருமாத பெண்குழந்தை மிலானா [Milana]  - வை ஏந்தியவாறு பேசும் ராணா சாலா [Rana Salah] என்ற தாய், இவளை [குழந்தையை] இந்த போருக்கும், துன்பத்துக்கும் மத்தியில் பெற்றது என்னை குற்றவுணர்வில் தள்ளியுள்ளது. முடிவெடுக்கும் உரிமை எனக்கு இருந்திருந்தால் நான் இவளை பெற்றிருக்கவே மாட்டேன்.

     

    மிலானா 

    இதற்கு முன் நாங்கள் இது போன்றதொரு அவலம் நிறைந்த வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. நான் இந்த குழந்தைக்கு துரோகம் செய்வதாகவே உணர்கிறேன். இதை விட மேம்பட்ட சூழலில் இவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாலா வாழும் இதே டெய்ர் பகுதியில் மருத்துவமனை அருகில் இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

    அதில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். ஐநா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின்[UNICEF] அறிக்கைத் தரவுகளில் படி சாலாவின் குழந்தை மிலானா காசாவில் கடந்த ஒரு வருடத்தில் போருக்கு மத்தியில் பிறந்து அவதிப்படும் 20,000 குழந்தைகளில் ஒருவள் ஆவாள்.

     மரண வியாபாரம் 

    கணவனை இழந்து தனியே குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டுகளுக்கு பயந்து முகாம்களுக்கு முகாம் இடம்மாறி வரும் தாய்மார்கள் காசாவின் துயரத்துக்கு சாட்சிகளாக உள்ளனர். தற்கொலை எப்படி எதற்கும் தீர்வாக இருக்காதோ அதுபோல போர்களும் எதற்கும் தீர்வு கிடையாது என்பதை  ஆயுதங்களை கொண்டாடும், வியாபாரம் செய்யும் மரண வியாபாரிகள் மக்களிடம் இருந்து மறைத்து  வருகின்றனர். 'ஆயுதம் வாங்குற காசுக்கெல்லாம் அரிசி வாங்கியிருந்தா?' என்ற 'தம்பி' பட  வசனமே  தற்போதைய சூழலுக்கு பொருத்தமானதாக இருக்கக்கூடும்.

    • உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்கின்றனர்.
    • 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை

    உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும் பசி, பட்டினியை போக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தான் 1979 ஆம் ஆண்டிலிருந்து உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் "ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு" என்பதாகும்.

    உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்வதாகவும் கிட்டத்தட்ட 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு இந்த நிலைமை மோசமடைந்துள்ளது.

    உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நடப்பு ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு அறிக்கையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

    19 வது உலக பட்டினி குறியீட்டு அறிக்கையான இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது.

    • போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார்.
    • சல்மானை கட்டிப்பிடித்து DSP சந்தோஷ் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    மத்தியப்பிரதேசத்தில் 14 வருடங்களுக்கு பிறகு காய்கறி வியாபாரம் செய்யும் தனது நண்பரை சந்தித்தது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் படேல் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் படேல் தனது போலீஸ் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு காய்கறி கடையில் வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார்.

    போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார். அப்போது என்னை நியாபகம் இருக்கிறதா என்று சந்தோஷ் சல்மானை பார்த்து கேட்டுள்ளார். அதற்கு தலையை அசைத்த சல்மான் உங்களை என்னால் மறக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். உடனே சல்மானை சந்தோஷ் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் போபாலில் பொறியியல் படிக்கும் போது கையில் காசில்லாமல் இரவு உணவு கூட வாங்க முடியாத நிலையில் இருந்தேன். அந்த சமயத்தில் தான் காய்கறி கடை நடத்தி வரும் சல்மான் கானை சந்தித்தேன். என்னுடைய நிலையை உணர்ந்து அவர் எனக்கு இலவசமாக காய்கறிகளை கொடுத்தார். ஒவ்வொரு இரவும் கத்தரிக்காயையும் தக்காளியையும் எனக்கு கொடுத்தார். அதனை சமைத்து எனது பசியை நான் போக்கிக்கொண்டேன்.

    14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாங்கள் எதிர்பாராத விதமாக சந்தித்தோம். இதனால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்தோம். நம்முடைய கடினமான காலங்களில் துணை நின்ற ஒருவரை மறப்பது பாவமாகும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்
    • தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

    ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர்.

    இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

     

     

    இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.

    இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார். 

    ×